Featured Posts

குர்ஆனை செவி தாழ்த்தி கேட்டல்..

257– (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் தம்மிடம் ‘வஹீ’யைக் கொண்டு வரும்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தம் நாவையும், இரண்டு உதடுகளையும் (எங்கே மறந்து விடப்போகிறதோ என்ற அச்சத்தினால், மனனமிடுவதற்காக ஓதியபடி) அசைத்துக் கொண்டிருப்பார்கள். இது அவர்களுக்குச் சிரமமாக இருந்தது. அது அவர்களின் வதனத்திலேயே காணப்படலாயிற்று. எனவே, அல்லாஹ், ‘லா உக்ஸிமு பி யவ்மில் கியாமா” என்று தொடங்கும் (75 வது அத்தியாயத்திலுள்ள) ‘இந்த வஹீயை (வேத அறிவிப்பை) அவசர அவசரமாக மனனம் செய்வதற்காக, உங்கள் நாவை அசைக்காதீர்கள். அதை (உங்கள் மனத்தில்) ஒன்று சேர்த்து, அதை (நீங்கள்) ஓதும்படி செய்வது எம்முடைய பொறுப்பாகும்” எனும் (திருக்குர்ஆன் 75:16,17) வசனங்களை அருளினான். அதாவது, ‘உங்கள் நெஞ்சத்தில் பதியச் செய்வதும் அதை உங்கள் நாவால் ஓதும்படிச் செய்வதும் எம்முடைய பொறுப்பாகும்” என்று இறைவன் கூறினான். மேலும், ‘நாம் இதனை ஓதிவிட்டோமாயின், நீங்கள் ஓதுவதைத் தொடருங்கள்” என்ற (திருக்குர்ஆன் 75:18 வது) வசனத்தையும் அருளினான். அதாவது, ‘நாம் (வானவர் மூலம்) அருளும்போது, அதனைக் கவனத்துடன் கேளுங்கள்” என்று கூறினான். ‘பின்னர், அதனை விளக்குவதும் எம்முடைய பொறுப்பாகும்” எனும் (திருக்குர்ஆன் 75:19 வது) வசனத்தையும் அருளினான். அதாவது, ‘உங்கள் நாவினால் அதனை(ப் பிறருக்கு) விளக்கித் தரும்படி உங்களை (ஆயத்தம்) செய்வது நம்முடைய பொறுப்பாகும்’ என்று கூறினான். (இந்த வசனங்கள் அருளப்பட்ட பின்னர்) தம்மிடம் ஜிப்ரீல் (அலை) அவர்கள் (‘வஹீ’ கொண்டு வரும்போது,) தலையைத் தாழ்த்தி (அருளப்படுவதை நபி(ஸல்) அவர்கள் மௌனத்துடன் கேட்டு)க் கொண்டிருப்பார்கள். (வசனங்களை அருளிவிட்டு) ஜிப்ரீல் (அலை) அவர்கள் சென்று விடும்போது, அல்லாஹ் வாக்களித்த பிரகாரம் நபி (ஸல்) அவர்கள் அவற்றை ஓதினார்கள்.

புகாரி: 4929 இப்னு அப்பாஸ் (ரலி).

258. அவசரப்பட்டு நீங்கள் உங்கள் நாவை அசைக்கவேண்டாம் (75:16) என்ற திருக்குர்ஆன் வசனத்தை இப்னு அப்பாஸ் (ரலி) விளக்கும் போது நபி (ஸல்) அவர்களுக்கு இறைச் செய்தி அருளப்படும் போது மிகுந்த சிரமம் ஏற்பட்டது இது அவர்களின் உதடுகளை அவர்கள் அசைப்பதன் முலம் புலனாயிற்று. வஹீயை (மனனம் செய்ய) அவசரப்பட்டு நீங்கள் உங்கள் நாவை அசைக்க வேண்டாம். (உங்கள் நெஞ்சில்) ஒன்று சேர்ப்பதும் (உங்கள் நாவின் முலம்) ஓத வைப்பதும் நமது பொறுப்பாகும். எனவே நாம் அதனை ஓதும்போது ஓதுவதிலேயே நீர் கவனம் செலுத்துவீராக. அதாவது மவுனமாக இருந்து அதனைச் செவி தாழ்த்திக் கேட்பீராக – பின்னர் நீர் அதனை ஓதும்படிச் செய்வதும் நமது பொறுப்பாகும். (75:16.19) என்ற வசனங்களை அப்போது அல்லாஹ் அருளினான் என்று கூறிவிட்டு நபி (ஸல்) அவர்கள் தமது இருஉதடுகளை அசைத்தது போன்று நான் அசைக்கின்றேன் என்று சொல்லித் தங்கள் இரு உதடுகளையும் இப்னு அப்பாஸ் (ரலி) அசைத்துக் காட்டினார்கள். இந்த ஹதீஸை இப்னு அப்பாஸ் (ரலி) இடமிருந்து அறிவிக்கும் ஸயீது பின் ஜுபைர் அவர்கள் இப்னு அப்பாஸ் (ரலி) தமது இரு உதடுகளையும் அசைத்தது போன்று நான் அசைக்கின்றேன் என்று கூறி அசைத்துக் காட்டினார்கள். மேலும் இப்னு அப்பாஸ் தொடர்ந்து, அதன் பின்னர் நபி (ஸல்) அவர்களிடம் ஜிப்ரயீல் (அலை) வரும்போது (அவர்கள் ஓதுவதை) செவிதாழ்த்திக் கேட்பதை வழக்கமாக்கிக் கொண்டார்கள். ஜிப்ரில் சென்றதும் அவர்கள் ஓதியது போன்றே நபி (ஸல்) அவர்களும் ஓதினார்கள் என்று கூறினார்கள்.

புகாரி-5: ஸயீது பின் ஜுபைர் (ரலி).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *