278– நபி (ஸல்) அவர்கள் பெருநாள் அன்று (தொழுவிப்பதற்காகத் திடல் நோக்கிச்) செல்லும் போது ஈட்டியை எடுத்து வருமாறு கூறுவார்கள். அவர்களுக்கு முன்னால் அது நாட்டப் பட்டதும் அதை நோக்கித் தொழுவார்கள். மக்கள் அவர்களுக்குப் பின்னே இருப்பார்கள். பயணத்தின் போதும் இவ்வாறு செய்பவர்களாக இருந்தனர். இதனால் தான் (நமது) தலைவர்களும் அவ்வாறு செய்கின்றனர்.
புகாரி-494: இப்னு உமர் (ரலி)
279- நபி (ஸல்) அவர்கள் தமது ஒட்டகத்தைக் குறுக்கே நிறுத்தி அதை நோக்கித் தொழுவார்கள் என்று இப்னு உமர் (ரலி) கூறினார்கள்.
புகாரி-507: நாஃபிவு
280- பிலால் (ரலி) பாங்கு சொல்லும் போது (பாங்கை நீட்டிச் சொல்வதற்காக) தமது வாயை அங்கும் இங்குமாக அசைப்பதைப் பார்த்தேன்.
புகாரி-634: அபூஜுஹைஃபா (ரலி)
281- தோலினால் செய்யப் பட்ட சிவப்பு நிற மேலங்கியை நபி (ஸல்) அவர்கள் அணிந்திருக்க நான் பார்த்தேன். மேலும் நபி (ஸல்) அவர்கள் உளூ செய்த தண்ணீரை பிலால் (ரலி) எடுத்துச் செல்வதையும் அந்த தண்ணீரை எடுப்பதில் மனிதர்கள் போட்டி போட்டுக் கொள்வதையும் நான் கண்டேன். யாருக்குத் தண்ணீர் கிடைத்ததோ அவர் அதை தமது உடம்பில் தடவிக் கொண்டார். யாருக்கு தண்ணீர் கிடைக்கவில்லையோ அவர் தண்ணீர் கிடைக்கப் பெற்ற தமது நண்பனின் கையில் உள்ள ஈரத்தைத் தொட்டு(த் தடவி)க் கொண்டார். பிலால் (ரலி) ஒரு கைத்தடியை எடுத்து நாட்டினார்கள். நபி (ஸல்) அவர்கள் ஒரு சிவப்பு நிற மேல் அங்கியை அணிந்து ஆயத்தமாகி அந்தத் தடியை(த் தடுப்பாக) வைத்து இரண்டு ரக்அத் ஜமாஅத்தாகத் தொழுதார்கள். அந்தக் கம்பிற்கு அப்பால் மனிதர்களும் ஆடு மாடுகளும் குறுக்கே செல்வதை நான் பார்த்தேன்.
புகாரி-376:அபூ ஜுஹைஃபா (ரலி)
282- நான் பெண் கழுதை ஒன்றின் மீது சென்று கொண்டிருந்தேன். அந்நாளில் நான் பருவ வயதை நெருங்கிக் கொண்டிருந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மினாவில் தடுப்பு எதையும் முன்னோக்காதவர்களாகத் (திறந்த வெளியில்) தொழுது கொண்டிருந்தார்கள். கழுதையை மேய விட்டு விட்டு (தொழுவோரின்) வரிசையினூடே கடந்து சென்று ஒரு வரிசையில் நானும் புகுந்து கொண்டேன். எனது அந்தச் செயலை யாரும் ஆட்சேபிக்கவில்லை.
புகாரி-76: இப்னு அப்பாஸ் (ரலி)