334– தொழுகைக்காக பாங்கு சொல்லப்பட்டால் பாங்கு சப்தம் தனக்குக் கேட்காமலிருப்பதற்காக ஷைத்தான் பின் துவாரத்தின் வழியாகக் காற்றுவிட்டவனாக ஓடி விடுகிறான். பாங்கு முடிந்ததும் திரும்பி வந்து இகாமத் கூறப்பட்டதும் மீண்டும் ஓடுகிறான். இகாமத் முடிந்ததும் மீண்டும் வந்து தொழுபவரின் உள்ளத்தில் ஊடுருவி ‘இதை இதையெல்லாம் நினைத்துப்பார்’ எனக் கூறி, அவர் இதுவரை நினைத்துப் பார்த்திராதவற்றையெல்லாம் நினைவூட்டி அவர் எத்தனை ரக்அத்கள் தொழுதார் என்பதை மறக்கடிக்கிறான். உங்களில் ஒருவருக்குத் தாம் தொழுத ரக்அத்களில் மூன்றா அல்லது நான்கா என்று தெரியாவிட்டால் (கடைசி) இருப்பில் இரண்டு ஸஜ்தாச் செய்து கொள்ளட்டும்’ இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்” என அபூஹுரைரா (ரலி) அறிவித்தார்.
335– அப்துல்லாஹ் இப்னு புஹைனா (ரலி) அறிவித்தார். நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு ஏதோ ஒரு தொழுகையைத் தொழுகை நடத்தினார்கள். (அத்தொழுகையில்) இரண்டு ரக்அத்தை முடித்தபோது அமரால் (மூன்றாவது ரக்அத்துக்காக) எழுந்துவிட்டார்கள். எனவே, மக்களும் நபி (ஸல்) அவர்களோடு எழுந்துவிட்டார்கள். தொழுகை முடியும் தருவாயில் நாங்கள் நபி (ஸல்) அவர்கள் ஸலாம் கொடுப்பதை எதிர்பார்த்திருந்தபோது, அந்த இருப்பிலேயே ஸலாத்திற்கு முன் தக்பீர் கூறி, இரண்டு ஸஜ்தாக்கள் செய்துவிட்டு ஸலாம் கொடுத்தார்கள்.
336– நபி (ஸல்) அவர்கள் ஒரு தடவை தொழுதார்கள்–கூட்டினார்களா குறைத்தார்களா என்பது எனக்குத் தெரியாது என இப்ராஹிம் கூறுகிறார்– தொழுகையை முடித்து ஸலாம் கூறிய பின் அல்லாஹ்வின் தூதரே! தொழுகையில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டுள்ளதா? என்று கேட்கப்பட்டது. அது என்ன? என நபி (ஸல்) அவர்கள் வினவினார்கள். உடனே நீங்கள் இப்படியல்லவா தொழுதீர்கள், என அங்கிருந்தோர் கூறினர். (நீட்டியிருந்த) தமது கால்களை நபி (ஸல்) மடக்கி, கிப்லாவை முன்னோக்கி இரண்டு ஸுஜுது செய்துவிட்டு பின்னர் ஸலாம் சொன்னர்கள். இதன் பின்னர் அவர்கள் எங்களை முன்னோக்கித் திரும்பியமர்ந்து, தொழுகையில் ஏதாவது மாற்றங்கள் செய்யப் படுமானால் அதை நான் உங்களுக்குத் தெரிவித்து விடுவேன். என்றாலும் நானும் உங்களைப் போன்ற ஒரு மனிதன் தான். நீங்கள் மறந்து விடுவதைப் போன்று நானும் மறந்து விடுவேன். நான் (எதையாவது) மறந்து விட்டால் எனக்கு ஞாபகப் படுத்துங்கள். உங்களில் ஒருவர் தமது தொழுகையில் சந்தேகித்தால் உறுதியானதை அவர் தீர்மானிக்கட்டும். அத்தீர்மானத்தின் அடிப்படையில் தொழுகையைப் பூர்த்தி செய்து ஸலாம் சொல்லிய பின் இரண்டு ஸுஜுது செய்யட்டும் என கூறினார்கள்.
337-(ஒரு நாள்) நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு (நான்கு ரக்அத் தொழுகையான) லுஹ்ர் தொழுகையை (மறந்து) இரண்டு ரக்அத்களாகத் தொழுகை நடத்திவிட்டு ஸலாம் கொடுத்துவிட்டார்கள். பிறகு எழுந்து பள்ளிவாசலின் தாழ்வாரத்திலிருந்த (பேரீச்சங்) கட்டையினை நோக்கிச் சென்று அதன் மீது தம் கையை வைத்து (நின்று) கொண்டார்கள். அன்று (பள்ளிவாசலில் இருந்த) மக்களில் அபூபக்ர் (ரலி) அவர்களும் உமர் (ரலி) அவர்களும் இருந்தனர். ஆனால், அவர்கள் இருவரும் நபி (ஸல்) அவர்களிடம் (அது குறித்துப்) பேச அஞ்சினர். மக்களில் சிலர் வேகமாக வெளியேறிச் செல்லலாயினர். அப்போது அவர்கள் ‘(தொழுகை(யின் ரக்அத்) குறைந்துவிட்டதா?’ என்று பேசிக்கொண்டனர். மக்களில் (‘ம்ர்பாக்’ எனும் இயற்பெயருடைய) ஒருவரும் இருந்தார். அவரை நபி (ஸல்) அவர்கள் ‘இரண்டு கைக்காரர்’ (துல் யதைன்) என்று அழைப்பது வழக்கம். அவர், ‘அல்லாஹ்வின் நபியே! தாங்கள் மறந்து விட்டீர்களா? அல்லது தொழுகை(யின் ரக்அத்) குறைந்துவிட்டதா?’ என்று கேட்டதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘(என் எண்ணப்படி) நான் மறக்கவுமில்லை. தொழுகை குறைந்துவிடவுமில்லை” என்று கூறினார்கள். அவர், ‘இல்லை தாங்கள் மறந்துவிட்டீர்கள், இறைத்தூதர் அவர்களே!” என்று கூறினார். ‘இரண்டு கைக்காரர் (துல்யதைன்) சொல்வது உண்மையா?’ என (மக்களிடம்) நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். (மக்களும் உண்மையே என்று தெரிவித்தனர்.) பிறகு நபி (ஸல்) அவர்கள் எழுந்து இன்னும் இரண்டு ரக்அத்கள் தொழுகை நடத்தி ‘ஸலாம்’ கொடுத்தார்கள். பிறகு தக்பீர் (‘அல்லாஹு அக்பர் -அல்லாஹ் மிகப் பெரியவன்’ எனக்) கூறி ‘முன்பு செய்ததைப் போன்று’ அல்லது ‘அதை விடவும் நீண்ட’ (மறதிக்கான) சிரவணக்கம் (சஜ்தா) செய்தார்கள். பின்னர் (சிரவணக்கத்திலிருந்து) எழுந்து ‘தக்பீர்’ கூறினார்கள். பின்னர் மீண்டும் ‘முன்பு செய்ததைப் போன்று’ அல்லது ‘அதைவிட நீளமாக’ சிரவணக்கம் செய்தார்கள். பின்னர் தலையை உயர்த்தி ‘தக்பீர்’ கூறினார்கள்.
The last hadeeth is incomplete. Please complete it.