Featured Posts

இஷா தொழுகையின் நேரம்..

372– இஸ்லாம் (நன்கு) பரவுவதற்கு முன்னர் நபி (ஸல்) அவர்கள் ஒரு இரவு இஷாவைப் பிற்படுத்தினார்கள். பெண்களும், சிறுவர்களும் உறங்கிவிட்டனர் என உமர் (ரலி) தெரிவிக்கும் வரை நபி (ஸல்) அவர்கள் (தொழுவிக்க) வரவில்லை. அதன் பின் வந்து பள்ளியிலுள்ளவர்களை நோக்கி இப்பூமியில் உள்ளவர்களில் உங்களைத் தவிர வேறு எவரும் இதை எதிர்பார்த்துக் காத்திருக்கவில்லை என்றார்கள்.

புகாரி-566: ஆயிஷா (ரலி)

373– நபி (ஸல்) அவர்கள் தம் அலுவல் காரணமாக ஒரு இரவு இஷாவைப் பிற்படுத்தினார்கள். நாங்கள் பள்ளியிலேயே உறங்கியப் பின்னர் விழித்து பின்னர் உறங்கியப் பின்னர் விழித்தோம். பிறகு எங்களிடம் நபி (ஸல்) அவர்கள் வந்து உங்களைத் தவிர பூமியில் உள்ளவர்களில் வேறு எவரும் இத்தொழுகைக்காக காத்திருக்கவில்லை என்றார்கள்.

புகாரி-570: இப்னு உமர் (ரலி)

374– ஹுமைத் இத்தவீல் (ரஹ்) அவர்கள் அறிவித்தார். அனஸ் (ரலி) அவர்களிடம், ‘நபி (ஸல்) அவர்கள் மோதிரம் எதையேனும் தயாரித்(து அணிந்)திருந்தார்களா?’ என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ‘நபி (ஸல்) அவர்கள் ஓர் இரவில் இஷாத் தொழுகையைப் பாதி இரவு வரை தாமதப்படுத்தினார்கள். (பின்னர் தொழுகை நடத்தினார்கள்.) பிறகு அவர்கள் எங்களை நோக்கித் திரும்பினார்கள். இப்போதும் நான் அவர்களின் (கல்) மோதிரம் மின்னுவதைப் பார்ப்பது போன்றுள்ளது. அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘மக்கள் தொழுதுவிட்டு உறங்கிவிட்டார்கள். (ஆனால், நீங்கள் இவ்வளவு நேரம் காத்திருந்து தொழுதிருக்கிறீர்கள்.) நீங்கள் ஒரு தொழுகையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் வரை அந்தத் தொழுகையிலேயே உள்ளீர்கள். (அது வரை அதன் நன்மை உங்களுக்குக் கிடைத்துக் கொண்டேயிருக்கும்)” என்றார்கள்.

புஹாரி:5869 ஹூமைத் (ரலி)

375– நானும் என்னுடன் கப்பலில் வந்த என் தோழர்களும் புத்ஹான் எனும் தோட்டத்தில் தங்கினோம். நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் இருந்தனர். ஒவ்வொரு இரவும் இஷாத் தொழுகைக்கு எங்களில் ஒரு (சிறு) கூட்டத்தினர் முறை வந்து நபி (ஸல்) அவர்களிடம் செல்பவர்களாக இருந்தோம். நானும் என் தோழர்களும் (எங்கள் முறையின் போது) நபி (ஸல்) அவர்களை சந்தித்தோம். அவர்கள் தமது காரியத்தில் ஈடுபட்டு இருந்ததால் நள்ளிரவு நேரம் வரை இஷாவைத் தாமதப்படுத்தினார்கள். பின்னர் புறப்பட்டு வந்து மக்களுக்குத் தொழுவித்தனர். தொழுது முடித்ததும் வந்திருந்தோரை நோக்கி அப்படியே இருங்கள்! நற்செய்திப் பெற்றுக் கொள்ளுங்கள்! இந்த நேரத்தில் உங்களைத் தவிர வேறு எவரும் தொழவில்லை. இது அல்லாஹ் உங்களுக்குச் செய்த அருட்கொடைகளில் ஒன்றாகும் என குறிப்பிட்டார்கள். நபி (ஸல்) அவர்களிடமிருந்து இதைக் கேட்டதனால் நாங்கள் மகிழ்வுற்றோம்.
புகாரி-567: அபூ மூஸா (ரலி)

376– நபி (ஸல்) அவர்கள் ஒரு இரவு இஷாவை தாமதப் படுத்தினார்கள். மக்கள் எல்லாம் உறங்குவதும் விழிப்பதும், மீண்டும் உறங்குவதும் விழிப்பதுமாக இருந்தனர். அப்போது உமர் (ரலி) எழுந்து தொழுகை எனக் கூறினார்கள். உடன் நபி (ஸல்) அவர்கள் தலையிலிருந்து நீர் சொட்டத் தம் கையை தலையில் வைத்தவர்களாகப் புறப்பட்டதை இன்று பார்ப்பது போல் உள்ளது. என் சமுதாயத்திற்கு சிரமமாகாது என்றால் அவர்களை இந்த நேரத்தில் தொழுமாறு கட்டளையிட்டு இருப்பேன் என்று அப்போது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு தம் கைகளை தலையில் வைத்தார்கள் என்று நான் அதா அவர்களிடம் விளக்கம் கேட்டபோது அவர்கள் தம் விரல்களை சற்று விரித்து, விரல்களின் முனைகளைத் தலை உச்சியில் வைத்து அவர்களின் பெரு விரல், காது ஓரங்கள், நெற்றிப் பொட்டு, தாடியின் ஓரங்கள் ஆகியவற்றில் படுமாறு அழுத்தித் தடவி, இப்னு அப்பாஸ் (ரலி) செய்து காட்டியது போல் செய்து காட்டினார்கள். என்று இப்னு ஜுரைஜ் குறிப்பிடுகிறார்.

புகாரி-571: இப்னு அப்பாஸ்(ரலி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *