380– ஒருவர் தனியாக தொழுவதை விடக் கூட்டாகத் தொழுவது இருபத்தைந்து மடங்கு சிறப்புடையதாகும். ஸுப்ஹுத் தொழுகையின் போது பகல்நேர மலக்குகளும் இரவுநேர மலக்குகளும் ஒன்று சேருகிறார்கள். இதை அபூஹுரைரா (ரலி) அறிவித்து விட்டு, நீங்கள் விரும்பினால் நிச்சயமாக ஸுப்ஹு நேரத்தில் ஓதப்படும் குர்ஆன் சாட்சி கூறக்கூடியதாக இருக்கிறது (17:78) என்ற வசனத்தை ஓதுங்கள் என்றார்கள்.
381– தனியாகத் தொழுவதை விட ஜமாஅத்தாகத் தொழுவது இருபத்தேழு மடங்கு சிறந்ததாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
382– எனது உயிர் எவனது கரத்திலிருக்கிறதோ அந்த அல்லாஹ்வின் மீது ஆணையாக! விறகுகளைக் கொண்டு வருமாறு நான் கட்டையிட்டு அதன்படி விறகுகள் கொண்டு வரப்பட்டுப் பின்னர் தொழுகைக்கு அழைக்குமாறு நான் உத்தரவிட்டு, அதன்படி அழைக்கப் பட்டு பின்னர் ஒருவரை மக்களுக்குத் தொழுவிக்குமாறு கட்டளையிட்டு, அதன்படி அவர் தொழுகையை நடத்திய பின்னர் தொழுகைக்கு வராமலிருக்கின்ற ஆண்களின் வீடுகளுக்குச் சென்று வீட்டோடு அவர்களை எரிப்பதற்கு நான் நினைத்ததுண்டு. என்னுடைய உயிர் யாருடைய கையில் இருக்கிறதோ அவன் மீது ஆணையாகப் பள்ளியில் ஒரு துண்டு இறைச்சி, அல்லது ஆட்டுக் கால்களின் இரண்டு அழகிய குளம்பு கொடுக்கப் படுகிறது என்று அவர்கள் யாராவது அறிவார்களானால் நிச்சயமாக இஷா தொழுகைக்காக ஜமாஅத்திற்கு வந்து விடுவார்கள்.
383– அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஸுப்ஹு, இஷா ஆகிய தொழுகைகளை விட முனாஃபிக் (வேடதாரி)களுக்குப் பாரமான தொழுகை வேறு எதுவும் இல்லை. அந்த இரு தொழுகைகளையும் (ஜமாஅத்தாகத்) தொழுவதில் உள்ள நன்மையை மக்கள் அறிவார்களானால் தவழ்ந்தாவது அத்தொழுகைக்கு வந்து சேர்ந்து விடுவார்கள். இகாமத் சொல்லுமாறு முஅத்தினுக்கு நான் கட்டளையிட்டுப் பின்னர் ஒருவரை இமாமாக நின்று தொழுவிக்குமாறு கூறி, அதன் பின்பு யாராவது தொழுகைக்கு வராமல் இருந்தால் அவர்களைத் தீயிட்டுக் கொளுத்த நான் நினைத்தேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.