Featured Posts

12] இறைதூதர் முகம்மது

நிலமெல்லாம் ரத்தம் – பா. ராகவன் 12

முகம்மது என்கிற மனிதரின் பிறப்பு, அவர் ஓர் இறைத்தூதர் என்று அறியப்பட்ட தருணம் – இந்த இரண்டுமே அரேபியர்களின் சரித்திரத்தில் மிக முக்கியமான அம்சங்கள்.ஒரு மனிதரின் பிறப்பே எப்படி முக்கியத் தருணமாகும்? என்கிற கேள்வி எழலாம். மற்ற இறைத்தூதர்களைப் பற்றிய தகவல்களுக்கு நாம் புராணக் கதைகளையே ஆதாரங்களாகக் கொள்ள வேண்டியிருக்கிற நிலையில், இவர் ஒருவரைக் குறித்த விவரங்களை மட்டும்தான் கதைகளிலிருந்து அல்லாமல், சரித்திரத்தின் பக்கங்களிலிருந்தே நாம் பெற முடிகிறது. காலத்தால் நமக்கு மிகவும் நெருக்கமானவர் என்பது மட்டுமே இதற்குக் காரணமல்ல. அவரது காலத்தில் வாழ்ந்தவர்கள், அவருடன் நேரில் பழகியவர்கள், அவரது பிரசங்கங்களை, போதனைகளைக் கேட்டவர்கள் எழுதிவைத்த குறிப்புகள் ஏராளமாக இருக்கின்றன. முகம்மது குறித்த ஒவ்வொரு தகவலும் பல்வேறு நிலைகளில் சரிபார்க்கப்பட்டு, ஒப்புநோக்கப்பட்டு, அவருடன் நேரடியாகப் பழகியவர்கள் விவரித்துள்ளவற்றுடன் பொருந்தினால் மட்டுமே அச்சேறின. இதனால், முகம்மது குறித்த விவரங்களின் நம்பகத்தன்மை பற்றிய அத்தனை கேள்விகளும் அடிபட்டுப் போய்விடுகின்றன. ஆதாரம் இல்லாத ஒரு குட்டிக்கதை, கதையின் ஒருவரி… ஒரு சொல் கூடக் கிடையாது.இதன் அடிப்படையில்தான் இப்படியொரு முடிவுக்கு வரவேண்டியிருக்கிறது. முகம்மது பிறக்கும் முன்னரே அவரது தந்தை இறந்துவிட்டார். பிறந்த சிலகாலத்துக்குள்ளாகவே தாயையும் இழந்தவர் அவர். ஏழை வியாபாரியான அபூதாலிப் என்கிற தமது பெரியப்பாவின் அரவணைப்பில்தான் அவர் வளர்ந்தார்.இந்தப் பின்னணியை ஒரு காரணமாகக் கருதிவிட முடியாது என்றாலும், மிக இளம் வயதிலேயே கேளிக்கைகளையும் விளையாட்டுப் பேச்சுகளையும் அறவே தவிர்க்கக் கூடியவராக இருந்திருக்கிறார். இளம் வயதென்றால் பத்துப் பன்னிரண்டு வயதுகளிலேயே. அபூதாலிப்பால் முகம்மதுவுக்குச் சரியான பள்ளிப்படிப்பைத் தர இயலவில்லை. அவரது ஏழைமை அதற்குப் பெரும் தடையாக இருந்தது. அன்றைய தினம் அரேபியாவின் பெரும்பான்மை மக்களின் நிலைமை இதுதான். வளமை என்பது மிகச்சிலருக்கே உரிய விஷயமாக இருந்திருக்கிறது. கல்வியும் அத்தகையவர்களுக்கே உரித்தானதாக இருந்திருக்கிறது. படிப்பில் ஈடுபடாத அரபுக் குழந்தைகள், இளம் வயதிலேயே முரட்டு விளையாட்டுகளில் ஈடுபடுவதும், வாலிப வயதில் வாளேந்துவதும் சர்வ சாதாரணமாக இருந்திருக்கிறது. முகம்மதுவின் வயதில் இருந்த அத்தனை பிள்ளைகளும் வீதியில் ஆடிப்பாடி, அடித்துப் பிடித்து விளையாடிக்கொண்டிருந்த காலத்தில், முகம்மது மட்டும் தனியே எதையோ சிந்தித்தபடி அமர்ந்திருப்பவராக இருந்திருக்கிறார். அதைப் பார்த்து கேலி செய்யும் பிள்ளைகளிடம் “பிறவி எடுத்ததன் நோக்கம் இந்தக் கேளிக்கைகளில் இருப்பதாக நான் கருதவில்லை” என்று சொல்லக்கூடியவராக இருந்திருக்கிறார். அவரது தனிமை விரும்பும் சுபாவத்தையும், எப்போதும் சிந்தித்தபடி இருக்கும் இயல்பையும் மிகச்சிறிய வயதிலிருந்தே மற்றவர்கள் கவனித்து வந்திருந்தாலும், அதை ஆன்மிகத்துடன் தொடர்புபடுத்தி அப்போதே யாரும் யோசித்ததில்லை.அன்றைய அரேபியர்களின் இயல்புக்குச் சற்றும் நெருக்கமில்லாதது அது. அவர்கள் பக்திமான்களாகத்தான் இருந்திருக்கிறார்கள். இப்ராஹிம் (ஆபிரஹாம்) நபி கட்டுவித்த “கஃபா” என்கிற பல நூற்றாண்டுகள் புராதனமான வணக்கஸ்தலத்தை பயபக்தியுடன் வலம் வந்து வணங்குபவர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள். எங்கெங்கிருந்தோ முந்நூற்று அறுபது இறை உருவங்களை எடுத்துவந்து அங்கே பிரதிஷ்டை செய்து தினமொரு கடவுளை பிரார்த்திப்பவர்களாகவும் இருந்திருக்கிறார்கள்.ஆனால், இந்த பக்திப்பாதை, முகம்மதுவின் ஆன்மிகப் பாதைக்குச் சற்றும் சம்பந்தமில்லாததாக இருந்தது. துளியும் படிப்பறிவில்லாதவராக இருந்த முகம்மது, தமக்குள் ஒடுங்கி, அதன்மூலம் பெற்றிருந்த ஆன்மிகத் தேர்ச்சியை அநேகமாக யாராலுமே உணர இயலவில்லை. ஆனால், அவர் மீது அனைவருக்குமே ஒரு மரியாதை இருந்தது. பண்பான இளைஞர், பக்தி மிக்க இளைஞர் என்கிற அளவில் ஏற்பட்டிருந்த மரியாதை. ஏழைகளுக்கு வலிந்து போய் உதவக்கூடியவராக இருக்கும் இளைஞர் என்பதால் உண்டாகியிருந்த மரியாதை.தாம் ஓர் இறைத்தூதர் என்பதை அவர் அறிவதற்கெல்லாம் பல்லாண்டுகளுக்கு முன்பே உருவாகியிருந்த மரியாதை அது. என்ன வித்தியாசம் என்றால், அரேபியர்களிடம் அன்று பக்தி உண்டே தவிர, “ஆன்மிகம்” என்பது அவர்களுக்கு அந்நியமானதொன்று. தமது குழுச் சண்டைகளுக்கும் இனப்போர்களுக்கும் கடவுளர்களைத் துணைநிற்கச் சொல்லி வேண்டுவார்களே தவிர, உள்ளார்ந்த அன்பை விதைத்து, சகோதரத்துவம் பயிரிடும் உத்தேசம் யாருக்கும் கிடையாது.இந்தக் காரணத்தினால்தான் அரேபியர்களிடையே சுலபமாக கிறிஸ்தவம் ஊடுருவ முடிந்தது. இதே காரணத்தினால்தான் யூதர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் அடுத்தபடியாகவே அவர்கள் பொருட்படுத்தப்பட்டார்கள். இதனாலேயேதான் “காட்டரபிகள்” என்றும் அவர்கள் அன்று வருணிக்கப்பட்டார்கள்.இப்படிப்பட்டதொரு இனத்தில்தான் முகம்மது பிறக்கிறார். ஒன்றல்ல; இரண்டல்ல; முந்நூற்று அறுபது கடவுள்களை சிலைகளாகச் செய்துவைத்து வணங்கும் இனம். உழைத்துச் சாப்பிட்டு, சந்ததி பெருக்கி, மாண்டுபோய்க்கொண்டிருந்த இனம். பெண்கள் படைக்கப்பட்டதே, சந்ததி பெருக்குவதற்குத்தான் என்று உறுதிபட நம்பியதோர் இனம். ஏராளமான மூட நம்பிக்கைகளுடன் முட்டிமோதிக்கொண்டிருந்த இனம். படிப்பறிவில்லாத இனம். முரட்டு இனம். யுத்தவெறி பிடித்த இனம். தமது பெருமை என்னவென்றே உணராமல் காலம் காலமாக வீணடித்துவிட்ட இனம்.ஒரு சம்பவம் நடந்தது. கடும் மழை. பெரிய வெள்ளம். மெக்கா நகரின் மத்தியில் இருந்த “கஃபா” ஆலயத்தின் புராதனமான சுவர்கள் வெள்ளத்தில் இடிந்து விழுந்துவிட்டன. ஏற்கெனவே மிகவும் பழுதாகியிருந்த ஆலயம் அது. இடித்துவிட்டுப் புதுப்பிக்கலாம் என்று நினைத்த அரேபியர்களுக்குக் கொஞ்சம் பயம் இருந்தது. இறைவனின் ஆலயத்தை இடிப்பதன்மூலம் ஏதாவது அபவாதம் நேருமோ என்கிற பயம். ஆனால், அந்த வெள்ளத்தில், ஆலயத்தின் சுவர்கள் தாமாகவே இடிந்ததில் மிகவும் நிம்மதியடைந்தார்கள்.இனி பிரச்னையில்லை. இறைவனே உத்தரவு கொடுத்துவிட்டான்; ஆலயத்தை மீண்டும் திருத்தமாக எழுப்பிவிடலாம் என்று முடிவு செய்தார்கள். பல்வேறு இனக்குழுவினராகப் பிரிந்து இருந்த அரேபியர்கள் இந்த ஒரு விஷயத்தில் ஒன்றுசேர்ந்து, நிதி சேர்த்து, ஆலயப் புனரமைப்புப் பணியில் ஈடுபடத் தொடங்கினார்கள்.ஆரம்பத்தில் எல்லாமே சிறப்பாகத்தான் இருந்தது. கட்டுமானப்பணி வேகமாகத்தான் நடைபெற்று வந்தது. ஆனால், ஒரு குறிப்பிட்ட கட்டம் வந்தபோது, அவர்களின் இயல்பான முரட்டு சுபாவம் மேலோங்கி, அடித்துக்கொள்ளத் தயாராகிவிட்டார்கள்.விஷயம் இதுதான். “கஃபா”வின் இடிக்கப்பட்டதொரு சுவரிலிருந்து, “ஹஜ்ருல் அஸ்வத்” என்ற கல் ஒன்றை எடுத்து பத்திரப்படுத்தி வைத்திருந்தார்கள். கொஞ்சம் விசேஷமான கல் போலிருக்கிறது. அதைத் திரும்பப் பதித்தாகவேண்டும். ஆனால் யார் பதிப்பது? எத்தனையோ இனக்குழுவினர் (கோத்திரத்தார் என்று அவர்களைக் குறிப்பிடுவது இஸ்லாமியர் வழக்கம்.) சேர்ந்துதான் கோயிலைக் கட்டிக்கொண்டிருந்தார்கள். கோயிலைச் சேர்ந்து கட்டுவதும் ஹஜ்ருல் அஸ்வத்தைத் திரும்பப் பதிக்கும் பணியை மேற்கொள்வதும் ஒன்றல்ல. இது பெருமை சம்பந்தப்பட்டது. கௌரவம் தொடர்பானது.ஆகவே, நீயா நானா போட்டி எழுந்துவிட்டது. எந்தக் கணமும் மோதல் யுத்தமாகி, ரத்தம் பெருகலாம் என்கிற நிலைமை. முன்னதாக, இதேபோல் எத்தனையோ பல உப்புப்பெறாத காரணங்களுக்காக வாளேந்தித் தலைசீவியவர்களே அவர்கள். சமாதானமல்ல; சண்டையே அவர்களின் அடையாளமாக இருந்தது. ஒரு சிறு வாய்ப்புக்கிடைத்தாலும் அடித்துக்கொண்டு மடிவதற்கு அத்தனை பேருமே தயாராக இருந்தார்கள்.இவர்களின் இத்தகைய இயல்பையும், “கஃபா” மறுகட்டுமானம் தொடர்பாக எழுந்துள்ள பிரச்னையையும் நன்கறிந்த மெக்கா நகரப் பெரியவர்களுக்கு மிகவும் அச்சம் ஏற்பட்டது. எப்படியாவது ரத்த நதி பெருகுவதைத் தடுத்தாகவேண்டும் என்று நினைத்தார்கள். எத்தனையோ விதமாகக் குரைஷிகளிடம் (மெக்காவில் வசித்துவந்த அரேபியர்கள் இவர்கள்தாம்.) பேசிப்பார்த்தார்கள்.ஆனால் எதற்கும் பலனில்லை. யாரும் உரிமையை விட்டுத்தரத் தயாராக இல்லை என்று சொல்லிவிட்டார்கள். யுத்தம் செய்வோம். வெற்றி பெறுபவர்கள் அந்தப் புனிதக் கல்லைத் திரும்பப் பதிக்கும் பரிசினைப் பெறுவார்கள் என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டார்கள்.கட்டக்கடைசி முயற்சியாக ஒரு முதியவர், தன் பங்குக்கு ஒரு யோசனையை முன்வைத்தார். யுத்தத்தை ஒருநாள் ஒத்திப்போடலாம். யாராவது ஒருவர் சொல்லும் யோசனைக்காவது கொஞ்சம் செவிசாய்க்கலாம்.ஆனால், யார் அந்த ஒருவர்?அன்றைய பொழுது மறைந்து, மறுநாள் காலை விடியும்போது யார் முதலில் “கஃபா”வுக்குள் வணங்குவதற்காகச் செல்கிறாரோ, அவர்தான். யாராயிருந்தாலும் சரி. அந்த முதல் வணக்கம் செலுத்தப் போகிறவரிடம் பிரச்னையைக் கொண்டுசெல்வது. அவர் சொல்லும் யோசனை எதுவானாலும் கேட்டு, அதன்படி செயல்படுவது.அதுசரி. அவர் என்ன யோசனை சொல்லவேண்டும்? சண்டைக்குத் தயாராக இருக்கும் இனக்குழுவினரிடையே, யார் அந்தக் கல்லைப் பதிக்கலாம் என்று மட்டுமே அவர் சொல்லலாம். அவர் குறிப்பிடும் குழுவினர் கல்லைப் பதிப்பார்கள். மற்றவர்கள் ஒத்துழைக்கவேண்டும்.ஆர்வமுடனும் எதிர்பார்ப்புடனும் இரு தரப்பினருமே அன்றைய இரவு முழுவதும் “கஃபா”வின் வெளியே காத்திருந்தார்கள். மறுநாள் பொழுது இன்னும் விடியக்கூட இல்லை. இருள் பிரியாத அந்நேரத்தில் ஓர் உருவம் அமைதியாக “கஃபா”வுக்குத் தொழச் சென்றது. அவர்தான், அவர்தான் என்று அனைவரின் உதடுகளும் முணுமுணுத்தன.தொழுது முடித்து அவர் திரும்பியபோது அத்தனை பேரும் மொத்தமாக எதிரே வந்து நின்று யாரென்று உற்றுப்பார்த்தார்கள்.முகம்மதுதான் அவர். அப்போது அவருக்கு இருபத்துமூன்று வயது. ஆணழகராகவும் அறிவில் சிறந்தவராகவும் அமைதிவிரும்பியாகவும் ஒட்டுமொத்த மெக்காவுக்கும் அவர் அப்போது நன்கு அறிமுகமாகியிருந்தார். முன்பே சொன்னதுபோல், அவரிடம் அனைவருக்குமே அன்பும் மரியாதையும் மேலோங்கியிருந்தது.ஆகவே, ஒரு சரியான நபர்தான் ஆலயத்துள் முதல் நபராகச் சென்றிருக்கிறார், இவரிடம் நமது பிரச்னையைச் சொல்லித் தீர்வு கேட்கலாம் என்று நம்பிக்கையுடன் அவரை அணுகிப் பேசத் தொடங்கினார்கள்.முகம்மது பொறுமையாகக் கேட்டார். இப்போது நான் என்ன செய்யவேண்டும்?இரு தரப்பினர் இருக்கிறோம். “ஹஜ்ருல் அஸ்வத்” என்கிற கல்லை யார் “கஃபா”வின் சுவரில் பதிக்கவேண்டும்? முகம்மதுதான் சொல்லவேண்டும்.முகம்மது புன்னகை செய்தார். இரண்டடி நகர்ந்து, தன் தோளில் போட்டிருந்த துண்டை எடுத்துத் தரையில் விரித்தார். அந்தக் கல்லைக் கொண்டு வாருங்கள் என்று உத்தரவிட்டார்.கல் வந்தது. அதைத் துண்டின் நடுவே வைக்கச் சொன்னார். வைத்தார்கள். அவ்வளவுதான். இனி ஆளுக்கொரு புறம் துண்டின் நுனியைப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றார். பிடித்துக்கொண்டார்கள். அப்படியே எடுத்துப் போய்ப் பொருத்தி, பூசிவிடுங்கள் என்றார்.நன்கு கவனிக்கவேண்டிய இடம் இது. முகம்மது மூலம் உலகுக்கு வழங்கப்பட்ட இஸ்லாம் என்கிற மார்க்கத்தின் ஆதாரப்புள்ளி இந்தச் சம்பவத்துக்குள்தான் புதைந்திருக்கிறது. அரேபியர்களிடையே ஒற்றுமை என்கிற அவரது பெருங்கனவின் தொடக்கப்புள்ளியும் இதுதான். அவர் ஒரு நபி என்று அறியப்படுவதற்கெல்லாம் பல்லாண்டுகளுக்கு முன்னதாகவே நடந்த சம்பவம் இது.நாற்பது, நானூறல்ல; நாலாயிரம் துண்டுகளாகச் சிதறிக்கிடந்த அரேபியர்களை ஒரு மேல்துண்டின் நான்கு முனைகளை ஒற்றுமையுடன் பிடிக்க வைத்ததன்மூலம் மாபெரும் யுத்தமொன்றைத் தவிர்த்தாரே, அது. அதுதான் ஆரம்பம்.முகம்மது என்றொருவர் உதிக்காமலே போயிருந்தால் அரேபியர்களுக்கு சரித்திரம் என்று ஒன்று இருந்திருக்குமா என்பதே சந்தேகம்தான்.நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 02 ஜனவரி, 2005

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *