752. ‘அப்வா என்ற இடத்தில் மிஸ்வர் மின் மக்ரமா (ரலி) அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) ஆகிய இருவரும் கருத்து வேறுபட்டனர். ‘இஹ்ராம் அணிந்தவர் தலையைக் கழுவலாம்!” என்று இப்னு அப்பாஸ் (ரலி) கூறினார். ‘இஹ்ராம் அணிந்தவர் தலையக் கழுவக் கூடாது!” என்ற மிஸ்வர் (ரலி) கூறினார். அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி), என்னை அபூ அய்யூப் அல் அன்ஸாரி (ரலி) அவர்களிடம் அனுப்பி வைத்தார்கள். நான் சென்றபோது, அவர்கள் ஊன்றப்பட்ட இரண்டு மரக்கழிகளுக்கிடையே திரையால் மறைக்கப்பட்டுக் குளித்துக் கொண்டிருந்தார்கள். ‘நான் அவர்களுக்கு ஸலாம் கூறினேன். ‘யார் அது?’ என்று கேட்டார்கள். ‘நானே அப்துல்லாஹ் இப்னு ஹுனைன்! ‘நபி (ஸல்) அவர்கள் இஹ்ராம் அணிந்திருக்கும்போது எவ்வாறு தலையைக் கழுவுவார்கள்?’ என்று உங்களிடம் கேட்பதற்காக அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) என்னை அனுப்பினார்கள்!” என்று கூறினேன். அபூ அய்யூப் (ரலி), தம் கையைத் திரையின் மீது வைத்து, அவர்களின் தலை தெரியுமளவிற்குத் திரையை (அசைத்து) இறக்கினார்கள். பிறகு தண்ணீர் ஊற்றுகிற மனிதரிடம் ‘தண்ணீர் ஊற்றுவீராக!’ என்றார்கள். அவர் தண்ணீர் ஊற்றினார். அபூ அய்யூப் (ரலி), தம் தலையை இரண்டு கைகளாலும் அசைத்துவிட்டு, முன்னும் பின்னுமாகக் கைகளைக் கொண்டு சென்றார்கள்; ‘இப்படித்தான் நபி (ஸல்) அவர்கள் செய்யப் பார்த்திருக்கிறேன்!” என்றும் கூறினார்கள்.
இஹ்ராமணிந்தவர் தலை உடலைக் கழுவுதல் பற்றி..
புஹாரி:1840 அப்துல்லாஹ் பின் ஹூனைன் (ரலி).