944. நான் ஒரு வருட காலமாக ஒரு வசனத்தைப் பற்றி உமர் இப்னு கத்தாப் (ரலி) அவர்களிடம் (விளக்கம்) கேட்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், அன்னார் மேலிருந்த (மரியாதை கலந்த) அச்சம் காணரமாகக் கேட்பதற்குத் தைரியம் வரவில்லை.(ஒரு முறை) உமர் (ரலி) ஹஜ்ஜுக்காகப் புறப்பட்டுச் சென்றபோது நானும் அவர்களுடன் புறப்பட்டேன். நான் (ஹஜ்ஜை முடித்துக் கொண்டு) திரும்பி வரும் வழியில் நாங்கள் (மர்ருழ் ழஹ்ரான் எனும்) ஒரு சாலையில் இருந்தோம். அப்போது உமர் (ரலி) தம் (இயற்கைத்) தேவை ஒன்றிற்காக ‘அராக்’ மரத்தை நோக்கி ஒதுங்கிச் சென்றார்கள். அவர்கள், தம் தேவையை முடித்துக்கொண்டு வரும்வரை நான் அவர்களை எதிர்பார்த்தபடி அவர்களுக்காக நின்று கொண்டிருந்தேன். பிறகு அவர்களுடன் செல்லலானேன். அப்போது நான் அவர்களிடம், ‘இறை நம்பிக்கையாளர்களின் தலைவரே! நபி (ஸல்) அவர்களின் துணைவியரில், (நபியவர்களைச் சங்கடப்படுத்தும் வகையில்) கூடிப் பேசிக் செயல்பட்ட இருவர் யார்?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘ஆயிஷாவும் ஹஃப்ஸாவும் தாம் அந்த இருவர்” என்று பதிலளித்தார்கள். உடனே நான், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! ஒரு வருட காலமாக இது குறித்து உங்களிடம் கேட்க வேண்டுமென்று நான் எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால், உங்களின் மீது (எனக்கு) உள்ள (மரியாதை கலந்த) அச்சம் காரணமாக எனக்குத் தைரியம் வரவில்லை” என்று சொன்னேன். அப்போது ‘(இப்படிச்) செய்யாதீர்கள். என்னிடம் ஓர் அறிவு இருப்பதாக நீங்கள் எண்ணினால் என்னிடம் கேட்டு விடுங்கள். (உண்மையிலேயே) அவ்வறிவு என்னிடம் இருக்குமானால், அதை உங்களுக்கு நான் தெரிவிக்கிறேன்” என்று கூறிய உமர் (ரலி), பிறகு (பின் வருமாறு) தெரிவித்தார்கள். ‘அல்லாஹ்வின் மீதாணையாக! அறியாமைக் காலத்தில் பெண்களுக்கு எந்த உரிமையும் இருப்பதாக நாங்கள் கருதியதில்லை. அவர்(களின் உரிமை)கள் தொடர்பாக, தான் அருளிய (சட்டத்)தை அல்லாஹ் அருளும் வரையிலும், அவர்களுக்குரிய (செலவுத் தொகை, சொத்துரிமை ஆகிய பங்கு)தனை அவன் நிர்ணயிக்கும் வரையிலும் (இந்நிலை நீடித்தது.) (ஒரு நாள்) நான் ஒரு விவகாரம் குறித்து ஆலோசித்துக் கொண்டிருந்தபோது என் மனைவி, ‘நீங்கள் இப்படிச் செய்யலாமே” என்று (என்னிடம் ஆலோசனை) கூறினார். அதற்கு நான் அவரிடம், ‘உனக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? நான் தீர்மானிக்க வேண்டிய ஒரு விஷயத்தில் உன் தலையீடு எதற்கு?’ என்று கேட்டேன். அதற்கு அவர் என்னிடம், ‘கத்தாபின் புதல்வரே! (இப்படிச் சொன்ன) உங்களைப் பார்த்து நான் ஆச்சரியப்படுகிறேன். உங்களுடன் விவாதிக்கப்படுவதை நீங்கள் விரும்பவில்லை. ஆனால், உங்களுடைய புதல்வி (ஹஃப்ஸாவோ தம் துணைவர்) இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் விவாதித்தால் அன்றைய நாள் முழுக்க இறைத்தூதர் கோபமாக இருந்தார்கள்” என்று கூறினார்.
உடனே நான் எழுந்து, அதே இடத்தில் என்னுடைய மேலங்கியை எடுத்துக்கொண்டு, ஹஃப்ஸாவிடம் சென்று, ‘என் அருமை மகளே! நீ இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் வாதம் புரிந்து, அதனால் அவர்கள் அன்றைய தினம் கோபமாக இருந்தார்களாமே! (உண்மையா?)” என்று கேட்டேன். அதற்கு ஹஃப்ஸா, ‘அல்லாஹ்வின் மீதாணையாக! (நபிகளாரின் துணைவியரான) நாங்கள் நபியவர்களுடன் விவாதிப்பதுண்டு” என்றார். அதற்கு நான், ‘அல்லாஹ்வின் தண்டனையையும் அவனுடைய தூதர் (ஸல்) அவர்களின் கோபத்தையும் பற்றி உனக்கு நான் எச்சரிக்கை விடுக்கிறேன். அருமை மகளே! தன்னுடைய அழகும், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தம் மீது கொண்டுள்ள அன்பும் எவரைப் பூரிப்படைய வைத்துள்ளதோ அவரை – ஆயிஷாவை-ப் பார்த்து நீயும் துணிந்து விடாதே!” என்று (அறிவுரை) சொன்னேன். பிறகு நான் (அங்கிருந்து) புறப்பட்டு, (நபி (ஸல்) அவர்களின் மற்றொரு துணைவியாரான) உம்மு ஸலமாவிடம் (அறிவுரை கூறச் சென்றேன். ஏனெனில், அவர் (என் தாய்வழி) உறவினராவார். இது குறித்து அவரிடமும் நான் பேசினேன். அப்போது உம்மு ஸலமா, ‘கத்தாபின் புதல்வரே! உம்மைக் கண்டு நான் வியப்படைகிறேன். எல்லா விஷயங்களிலும் தலையிட்டு வந்த நீங்கள் இப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கும் அவர்களின் துணைவியருக்கு இடையேயும் தலையிடும் அளவிற்கு வந்துவிட்டீர்கள்” என்று கூறினார். அல்லாஹ்வின் மீதாணையாக! உம்மு ஸலமா (தம் பேச்சால்) என்னை ஒரு பிடி பிடித்துவிட்டார். எனக்கு ஏற்பட்டிருந்த பாதி(கோப உணர்ச்சி)யை உடைத்தெறிந்துவிட்டார். எனவே, நான், அவரிடமிருந்து வெளியேறி (வந்து) விட்டேன்.
மேலும், அன்சாரிகளில் எனக்கொரு நண்பர் இருந்தார். நான் (நபி (ஸல்) அவர்களின் அவையில்) இல்லாதபோது கிடைக்கும் செய்திகளை அவர் எனக்குத் தெரிவிப்பதும், அவர் இல்லாதபோது கிடைக்கும் செய்திகளை நான் அவருக்குத் தெரிவிப்பதும் வழக்கம்.(அந்தக் காலக்கட்டத்தில் ஷாம் நாட்டு) ‘ஃகஸ்ஸான்’ வமிச மன்னர்களில் ஒருவனைப் பற்றிய அச்சம் எங்களுக்கு இருந்துவந்தது. அவன் எங்கள் (மதீனா) மீது படையெடுக்க விரும்புவதாக எங்களிடம் சொல்லப்பட்டிருந்தது. இதனால், அவனைப் பற்றிய அச்சம் எங்கள் நெஞ்சங்களில் நிரம்பியிருந்தது. இந்நிலையில், (ஒரு நாள்) அந்த அன்சாரி நண்பர் (என் வீட்டுக்) கதவைத் தட்டினார். ‘திறங்கள், திறங்கள்” என்று கூறினார். (கதவைத் திறந்த) நான், ‘ஃகஸ்ஸானிய மன்னன் (படையெடுத்து) வந்துவிட்டானா?’ என்று கேட்டேன். அதற்கவர், ‘அதைவிடப் பெரியது நடந்துவிட்டது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தம் துணைவியரை விட்டு விலகிவிட்டார்கள்” என்றார். உடனே நான், ‘ஹஃப்ஸா, ஆயிஷா ஆகியோரின் மூக்கு மண்ணைக் கவ்வட்டும்!” என்று கூறிவிட்டு, என்னுடைய உடையை எடுத்து (அணிந்து) கொண்டு புறப்பட்டேன். இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தபோது அவர்கள் தமக்குரிய (மாடி) அறையொன்றில் (தங்கி) இருந்தார்கள். ஏணிப்படி வழியாக மேலே அந்த அறைக்குச் செல்ல முடியும். அங்கே இறைத்தூதர் (ஸல்) அவர்களின் கறுப்பு நிற அடிமை ஒருவர் ஏணியின் மேற்படியில் இருந்தார். அவரிடம் நான், ‘இந்த உமர் இப்னு கத்தாபுக்காக (அல்லாஹ்வின் தூதரிடம் அனுமதி) கேள்!” என்றேன். (அவர் உள்ளே சென்று அனுமதி கேட்டார்.) அவர்களும் எனக்கு அனுமதி அளித்துவிட்டார்கள். (நான் உள்ளே சென்று) இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் (எனக்கும் அவர்களின் துணைவியருக்குமிடையே நடைபெற்ற) இந்த உரையாடல்களை எடுத்துரைத்தேன். உம்மு ஸலமாவின் பேச்சு வந்தபோது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் புன்னகைத்தார்கள். அப்போது அவர்கள் ஓர் ஈச்சம் பாயில் (அமர்ந்து) இருந்தார்கள். அவர்களுக்கும் அந்தப் பாய்க்குமிடையே (விரிப்பு) எதுவும் இருக்கவில்லை. அவர்களின் தலைக்குக் கீழே ஈச்ச நார்கள் நிரப்பப்பட்ட தோல் தலையணை ஒன்றிருந்தது. அவர்களின் கால்களுக்கருகில் கருவேல இலைகள் குவிக்கப்பட்டிருந்தன. அவர்களின் தலைமாட்டில் பதனிடப்படாத தோல் தொங்கிக் கொண்டிருந்தது. அப்போது அவர்களின் விலாப்புறத்தில் ஈச்சம்பாயின் சுவடு (பதிந்து) இருப்பதைக் கண்டு அழுதுவிட்டேன்.அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘ஏன் அழுகிறீர்கள்?’ என்றார்கள். அதற்கு நான், ‘இறைத்தூதர் அவர்களே! (பைஸாந்திய மற்றும் பாரசீக மன்னர்களான) சீசரும் குஸ்ரூவும் (தாராளமான உலகச் செல்வங்களைப் பெற்று) வளமுடன் இருந்து வருகின்றனர். தாங்களோ அல்லாஹ்வின் தூதராயிற்றே!” என்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘அ(ம்மன்ன)வர்களுக்கு இம்மையும் நமக்கு மறுமையும் இருப்பதை நீங்கள் விரும்பவில்லையா?’ என்று கேட்டார்கள்.
945. நான் நீண்ட நாள்களாக நபி (ஸல்) அவர்களின் துணைவியரில் இருவரைப் பற்றி உமர் இப்னு கத்தாப் (ரலி) அவர்களிடம் கேட்க வேண்டும் என்று பேராவல் கொண்டிருந்தேன். (ஏனெனில், அவ்விருவரைப் பற்றித் தான்) அல்லாஹ் (குர்ஆனில்), ‘நீங்கள் இருவரும் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி மீண்டால் (அது உங்களக்குச் சிறந்ததாகும்.) ஏனெனில், உங்கள் உள்ளங்கள் (நேரிய வழியிலிருந்து சற்றே) பிறழ்ந்து விட்டிருக்கின்றன” (திருக்குர்ஆன் 66:04) என்று கூறியிருந்தான்.(ஒரு முறை) உமர் (ரலி) ஹஜ்ஜுக்குச் சென்றார்கள். நானும் (அந்த ஆண்டு) அவர்களுடன் ஹஜ் செய்தேன். (ஹஜ்ஜை முடித்துக்கொண்டு திரும்பும் வழியில்) உமர் (ரலி) (தம்) இயற்கைக் கடனை நிறைவேற்றுவதற்காக) ஒதுங்கினார்கள். அவர்களுடன் நானும் தண்ணீர்க் குவளையுடன் சென்றேன். அவர்கள் இயற்கைக் கடனை முடித்துவிட்டுத் திரும்பி வந்தார்கள். நான் அவர்களின் கைகளில் (குவளையிலிருந்த) தண்ணீரை ஊற்றினேன். (அதில்) அவர்கள் ‘உளூ’ச் செய்தார்கள். அப்போது நான் அன்னாரிடம், ‘இறை நம்பிக்கையாளர்களின் தலைவரே! நபி (ஸல்) அவர்களின் துணைவியரில் இருவரைக் குறித்து, ‘நீங்கள் இருவரும் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி மீண்டால் (அது உங்களுக்குச் சிறந்ததாகும்). ஏனெனில், உங்கள் உள்ளங்கள் (நேரிய வழியிலிருந்து சற்றே) பிறழ்ந்து விட்டிருக்கின்றன’ என்று அல்லாஹ் கூறியுள்ளானே, அந்த இருவர் யார்?’ என்று கேட்டேன். அதற்கு உமர் (ரலி), ‘இப்னு அப்பாஸே! உங்களைக் கண்டு நான் வியப்படைகிறேன். (உங்களுக்குமா இது தெரியாமல் போயிற்று!) ஆயிஷா (ரலி) அவர்களும் ஹஃப்ஸா (ரலி) அவர்களும் தாம் அந்த இருவர்” என்று பதிலளித்தார்கள். பிறகு உமர் (ரலி) நடந்த நிகழ்ச்சி முழுவதையும் கூறலானார்கள். அப்போது அவர்கள் கூறினார்: நான் அன்சாரியான என் பக்கத்து வீட்டுக்காரர் ஒருவருடன் பனூ உமய்யா இப்னு ஸைத் குலத்தாருடன் வசித்து வந்தேன். இவர்கள் மதீனாவின் மேடான பகுதிகளில் ஒன்றில் குடியிருப்பவர்களாவர். நாங்கள் இருவரும் முறைவைத்துக் கொண்டு (அங்கிருந்து) இறங்கி வந்து நபி (ஸல்) அவர்களுடன் இருப்போம். அவர் ஒரு நாள் நபியவர்களுடன் இருப்பார். நான் ஒரு நாள் நபியவர்களுடன் இருப்பேன். நான் நபி (ஸல்) அவர்களுடன் இருக்கும் அன்றைய நாளின் வேத அறிவிப்புகள் (நபியவர்களின் சொல், செயல்) முதலானவற்றை நான் அவரிடம் வந்து தெரிவிப்பேன். அவர் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தால் இதைப் போன்றே அவரும் செய்வார். குறைஷிக் குலத்தினராகிய நாங்கள் (மக்காவிலிருந்தபோது) பெண்களை மிஞ்சி விடுபவர்களாக இருந்து வந்தோம். (பெண்களை எங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தோம்.) நாங்கள் (மக்காவைத் துறந்து) அன்சாரிகளிடம் (மதீனா நகருக்கு) வந்தபோது பெண்கள் ஆண்களை மிஞ்சிவிடக் கூடியவர்களாக இருந்தனர். (பெண்கள் ஆண்களைக் கட்டுப்படுத்துபவர்களாக, தம் மனத்திற்குப் பிடிக்காதவற்றைக் கூறும்போது ஆண்களை எதிர்த்துப் பேசக் கூடியவர்களாக இருந்தனர். (இதைக் கண்ட) எங்களுடைய பெண்களும் அன்சாரிப் பெண்களின் வழக்கத்தைக் கையாளத் தொடங்கினர். (ஒரு நாள்) நான் என் மனைவி (ஸைனப் பின்த் மழ்ஊன்) இடம் (கோபத்துடன்) இரைந்து பேசினேன். உடனே என் மனைவியும் என்னை எதிர்த்துப் பேசினார். அவர் என்னை எதிர்த்துப் பேசிய(து (எனக்குப் பிடிக்கவில்லை. அ)தை நான் வெறுத்தேன். அதற்கு அவர், ‘நான் உங்களை எதிர்த்துப் பேசியதற்காக நீங்கள் ஏன் (என்னை) வெறுக்கிறீர்கள்? அல்லாஹ்வின் மீதாணையாக! நபி (ஸல்) அவர்களின் துணைவியர் கூட (அன்னாரின் பேச்சுக்கு) மறு பேச்சு பேசத்தான் செய்கிறார்கள். அவர்களில் சிலர் நபியவர்களிடம் பகலில் இருந்து இரவு வரை பேசுவதில்லை” என்று கூறினார். இது என்னை அதிர்ச்சி அடையச் செய்யவே, ‘அவர்களில் இப்படிச் செய்தவர் பெரும் இழப்புக்கு ஆளாகிவிட்டார்” என்று என் மனைவியிடம் கூறினேன்.
பிறகு உடை அணிந்து கொண்டு (அங்கிருந்து) இறங்கி, (நபியவர்களுடைய துணைவியரில் ஒருவராயிருந்த என் மகள்) ஹஃப்ஸாவிடம் சென்றேன். ‘ஹஃப்ஸாவே உங்களில் சிலர் அல்லாஹ்வின் தூதரிடம் பகலில் இருந்து இரவு வரை கோபமாக இருக்கிறார்களா?’ என்று கேட்டேன். அதற்கு ஹஃப்ஸா, ‘ஆம்” என்று பதிலளித்தார். நான் ‘அப்படியானால், நீ நஷ்டப்பட்டுவிட்டாய்; இழப்புக்குள்ளாகிவிட்டாய். இறைத்தூதருக்குக் கோபம் ஏற்பட்டால் அதனால் அல்லாஹ்வும் கோபமடைந்து நீ அழிந்து போய்விடுவாய் எனும் அச்சம் உனக்கில்லையா? நபி (ஸல்) அவர்களிடம் அதிகமாக(த் தேவைகளை)க் கேட்காதே. எதற்காகவும் அவர்களை எதிர்த்துப் பேசாதே. அவர்களிடம் பேசாமல் இருக்காதே. உனக்கு (அவசியத் தேவையென்று) தோன்றியதை என்னிடம் கேள். உன் அண்டை வீட்டுக்காரர் – ஆயிஷா – உன்னை விட அழகு மிக்கவராகவும் நபி (ஸல்) அவர்களுக்குப் பிரியமானவராகவும் இருப்பதை வைத்து (அவர் நபியவர்களிடம் சற்று கூடுதல் உரிமை எடுத்துக் கொண்டு ஊடலும் கோபமும் கொள்வதைப் பார்த்து) நீ ஏமாந்து போய் (அவரைப் போல் நடந்து கொண்டு) விடாதே” என்று நான் (என் மகளுக்குப் புத்திமதி) கூறினேன். அந்தக் காலகட்டத்தில் நாங்கள், (ஷாம் நாட்டில் வாழும்) ‘ஃகஸ்ஸான்’ குலத்தார் எங்களின் மீது போர் தொடுப்பதற்காக, (தங்கள்) குதிரைகளுக்கு லாடம் அடித்து(த் தயாராகி)க் கொண்டிருக்கின்றனர் என்று ஒரு (வதந்தியான) செய்தியைப் பேசிக்கொண்டிருந்தோம். (இவ்வாறிருக்க ஒருநாள்) என் அன்சாரித் தோழர் தம் முறைக்குரிய நாளில் (எங்கள் பகுதியிலிருந்து) இறங்கி நபி (ஸல்) அவர்களிடம் சென்றுவிட்டு, இஷா நேரத்தில் திரும்பி வந்தார். என் வீட்டுக் கதவை மிக பலமாகத் தட்டினார். (கதவைத் திறக்க நான் சற்று தாமதித்தபோது) ‘அவர் (உமர்) இங்கே இருக்கிறாரா? அல்லது வெளியில் சென்றுவிட்டாரா?’ என்று கேட்டார். (வழக்கத்திற்கு மாறாக அவர் கதவைத் தட்டியதால்) நான் கலக்கமுற்று அவரைப் பார்க்க வெளியே வந்தேன். அவர், ‘இன்று மிகப் பெரிய சம்பவமொன்று நடந்துவிட்டது” என்று கூறினார். நான், ‘என்ன அது? ஃகஸ்ஸான் குலத்தார் (படையெடுத்து) வந்துவிட்டனரா?’ என்று கேட்டேன். ‘இல்லை. அதைவிடப் பெரிய, அதை விட அதிர்ச்சியான சம்பவம் நடந்துவிட்டது. நபி (ஸல்) அவர்கள் தம் துணைவியரை விவாகரத்துச் செய்துவிட்டார்கள்!” என்று கூறினார். நான், ‘(என் மகள்) ஹஃப்ஸா நஷ்டமடைந்து இழப்புக்குள்ளாகி விட்டார். நான் இப்படி (கூடிய விரைவில்) நடக்கத்தான் போகிறது என்று எண்ணியிருந்தேன்’ எனக் கூறிவிட்டு, உடை அணிந்துகொண்டு புறப்பட்டேன். நபி (ஸல்) அவர்களுடன் ஃபஜ்ருத் தொழுகை தொழுதேன். (தொழுகை முடிந்த) உடனே நபி (ஸல்) அவர்கள் தமக்குரிய மாடியறைக்குச் சென்று அங்கே தனியே இருந்தார்கள். நான் ஹஃப்ஸாவிடம் சென்றேன். அப்போது அவர் அழுதுகொண்டிருந்தார். நான், ‘ஏன் அழுகிறாய்? இது குறித்து உன்னை நான் எச்சரித்திருக்கவில்லையா? நபி (ஸல்) அவர்கள் உங்களை விவாகரத்துச செய்துவிட்டார்களா?’ என்று கேட்டேன். அதற்கு அவர், ‘எனக்கு (ஒன்றும்) தெரியாது. அதோ அவர்கள் அந்த மாடி அறையில் தனியாக இருக்கிறார்கள்” என்று கூறினார். உடனே நான் (அங்கிருந்து) புறப்பட்டு சொற்பொழிவு மேடை (மிம்பர்) அருகில் சென்றேன். அதைச் சுற்றி ஒரு கூட்டத்தினர் இருந்தனர். அவர்களில் சிலர் (கேள்விப்பட்ட செய்தியை எண்ணி) அழுதுகொண்டிருந்தனர். அவர்களுடன் நான் சிறிது நேரம் தாளாமல் நபியவர்கள் இருந்த மாடி அறைக்கு அருகே வந்தேன். (அங்கிருந்த) நபி (ஸல்) அவர்களின் கறுப்பு அடிமை (ரபாஹ் அவர்கள்) இடம், ‘உமருக்காக (நபியவர்களின் அறைக்குள் வர) அனுமதி கேள்” என்று சொன்னேன்.
அந்த அடிமை அறைக்கு உள்ளே சென்று நபி (ஸல்) அவர்களிடம் பேசிவிட்டுப் பிறகு வெளியே வந்து, ‘நபி (ஸல்) அவர்களிடம் பேசினேன். உங்களைப் பற்றி அவர்களிடம் கூறினேன். அவர்கள் மௌனமாக இருந்துவிட்டார்கள்” என்று கூறினார். எனவே, நான் திரும்பி வந்து மிம்பருக்கு அருகில் இருந்த கூட்டத்தினருடன் அமர்ந்துகொண்டேன். பின்னர், அங்கு நிலவிய (துக்ககரமான) சூழ்நிலையைத் தாங்க முடியாமல் (மீண்டும்) அந்த அடிமையிடம் சென்று, ‘உமருக்காக அனுமதிகேள்” என்று கூறினேன். அவர் உள்ளே சென்றுவிட்டுத் திரும்பி வந்து, ‘உங்களைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கூறினேன். அவர்கள் (பதிலேதும் சொல்லாமல்) மௌனமாக இருந்துவிட்டார்கள்” என்று (முன் போன்றே) கூறினார். நான் (மறுபடியும்) திரும்பிவந்து மிம்பருக்கருகில் இருந்த கூட்டத்தாருடன் அமர்ந்து கொண்டேன். மறுபடி அங்கு நான் கண்ட (கவலையான) சூழ்நிலையைத் தாங்க முடியாமல் (மூன்றாம் முறையாக) அந்த அடிமையிடம் சென்று, ‘உமருக்காக அனுமதி கேள்!” என்று சொன்னேன். அவர் உள்ளே சென்றுவிட்டு என்னிடம் திரும்பி வந்து, ‘நான் உங்களைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கூறினேன். அவர்கள் (பதிலேதும் சொல்லாமல்) மௌனமாக இருந்துவிட்டார்கள்” என்று கூறினார்.நான் திரும்பிச் செல்ல இருந்தபோது அந்த அடிமை என்னை அழைத்து, ‘உங்களுக்கு நபி (ஸல்) அவர்கள் அனுமதியளித்து விட்டார்கள்” என்று கூறினார். உடனே, நான் நபி (ஸல்) அவர்களின் அறைக்குள் நுழைந்தேன். அங்கு அவர்கள் ஓர் ஈச்சம் பாயில், ஈச்ச நார்கள் அடைத்த தோல் தலையணை ஒன்றின் மீது சாய்ந்தபடி படுத்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கும் (அவர்கள் படுத்திருந்த) அந்தப் பாய்க்குமிடையே விரிப்பு ஏதும் இருக்கவில்லை. எனவே, அவர்களின் விலாவில் அந்த ஈச்சம் பாய் அடையாளம் பதித்திருந்தது. அவர்களுக்கு நான் சலாம் சொன்னேன். பிறகு நான் நின்று கொண்டே, ‘இறைத்தூதர் அவர்களே! தங்கள் துணைவியரைத் தாங்கள் விவாகரத்துச் செய்துவிட்டீர்களா?’ என்று கேட்டேன். நபிவர்கள் தம் பார்வையை என்னை நோக்கி உயர்த்தி, ‘இல்லை (விவாக விலக்குச் செய்யவில்லை)” என்று கூறினார்கள். உடனே நான் ‘அல்லாஹு அக்பர்” (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்று சொன்னேன். (அவர்களின் கோபத்தைக் குறைத்து) அவர்களைச் சாந்தப்படுத்த விரும்பி, நின்றபடியே (பின்வருமாறு) சொல்லத் தொடங்கினேன்.
இறைத்தூதர் அவர்களே! நான் சொல்வதைச் சற்று கேளுங்கள்! குறைஷிக் குலத்தினராகிய நாங்கள் பெண்களை எங்கள் அதிகாரத்திற்குள் வைத்திருந்தோம். நாங்கள் மதீனாவிற்கு வந்தபோது பெண்கள் ஆண்களின் மீது ஆதிக்கம் செலுத்தும் ஒரு கூட்டத்தாரைக் கண்டோம். (எங்கள் பெண்களும் அவர்களைப் பார்த்துக் கற்றுக் கொண்டு எங்களிடம் எதிர்த்துப் பேசத் தொடங்கிவிட்டனர்)” என்று சொன்னேன். (அதைக் கேட்ட) நபி (ஸல்) அவர்கள் புன்னகைத்தார்கள். பிறகு நான் ‘இறைத்தூதர் அவர்களே! நான் கூறுவதைச் சற்று கேளுங்கள்! நான் ஹஃப்ஸாவிடம் சென்று, ‘உன் அண்டை வீட்டுக்காரர் – ஆயிஷா – உன்னை விட அழகானவராகவும் அல்லாஹ்வின் தூதருக்குப் பிரியமானவராகவும் இருப்பதை வைத்து (அவர் நபியவர்களிடம் அதிக உரிமை எடுத்துக்கொண்டு ஊடலும் கோபமும் கொள்வதைக் கண்டு) நீ ஏமாந்து போய் (அவரைப் போன்று நடந்து கொண்டு) விடாதே’ என்று கூறியதைச் சொன்னேன். (இதை நான் சொல்லக் கேட்ட) நபி (ஸல்) அவர்கள் இன்னொரு முறை புன்கைத்தார்கள். நபி (ஸல்) அவர்கள் புன்னகைத்ததைக் கண்ட நான் (அங்கு) அமர்ந்து கொண்டேன். பிறகு, நான் என்னுடைய பார்வையை உயர்த்தி அவர்களின் அறையை நோட்டமிட்டேன். அல்லாஹ்வின் மீதாணையாக! கண்ணைக் கவருகிற பொருள் எதையும் நான் அவர்களின் அறையில் காணவில்லை மூன்றே மூன்று தோல்களைத் தவிர. அப்போது நான், ‘தங்கள் சமுதாயத்தினருக்கு (உலகச் செல்வங்களை) தாராளமாக வழங்கும்படி தாங்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள். ஏனெனில், பாரசீகர்களுக்கும் ரோமர்களுக்கும் – அவர்கள் (ஏக இறைவன்) அல்லாஹ்வை வணங்காதவர்களாக இருந்தும் – உலகச் செல்வங்கள் தாராளமாக வழங்கப்பட்டிருக்கின்றனவே” என்று கூறினேன். (தலையணையில்) சாய்ந்து அமர்ந்திருந்த நபி (ஸல்) அவர்கள் (இதைக் கேட்டவுடன்) நிமிர்ந்து அமர்ந்துகொண்டு, ‘கத்தாபின் புதல்வரே! நீங்கள் இன்னும் இந்த எண்ணத்தில் தான் இருக்கிறீர்களா? அவர்களின் (நற்செயல்களுக்கான) பிரதிபலன்கள் அனைத்தும் இந்த உலக வாழ்விலேயே (மறுமை வாழ்வுக்கு) முன்னதாக அவர்களுக்கு வழங்கப்பட்டுவிட்டன” என்று கூறினார்கள். உடனே நான், ‘இறைத்தூதர் அவர்களே! (அவரசப்பட்டு இப்படிக் கேட்ட) எனக்காகப் பாவமன்னிப்புக்கோரிப் பிராத்தியுங்கள்” என்று கூறினேன்.
நபி (ஸல்) அவர்களின் அந்த இரகசியத்தை ஹஃப்ஸா, ஆயிஷா அவர்களிடம் கூறி வெளிப்படுத்தி விட்டபோது, அதன் காரணத்தால் தான் நபி (ஸல்) அவர்கள் தம் துணைவியரிடமிருந்து விலகி, இருபத்தொன்பது நாள்கள் தனிமையில் இருக்கத் தொடங்கினார்கள். மேலும், நபி (ஸல்) அவர்களை அல்லாஹ் (திருக்குர்ஆன் 66:1 வது வசனத்தின் மூலம்) கண்டித்தபோது தம் துணைவியர் மீது ஏற்பட்ட கடும் வருத்தத்தின் காரணத்தினால் ‘(என் துணைவியரான) அவர்களிடம் ஒரு மாத காலத்திற்கு நான் செல்லமாட்டேன்” என்றும் கூறியிருந்தார்கள். இருபத்தொன்பது நாள்கள் கழிந்துவிட்ட பொழுது? நபி (ஸல்) அவர்கள் ஆரம்பமாக ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்றார்கள். (அதற்குப் பின் மற்ற மனைவிமார்களிடம் சென்றார்கள்.) அப்போது ஆயிஷா (ரலி) நபி (ஸல்) அவர்களிடம், ‘இறைத்தூதர் அவர்களே! எங்களிடம் ஒரு மாத காலத்திற்கு வரப் போவதில்லை என்று நீங்கள் சத்தியம் செய்திருந்தீர்களே! நீங்கள் இருபத்தொன்பது இரவுகளைத்தானே கழித்திருக்கிறீர்கள்! (ஒரு நாள் முன்னதாக வந்துவிட்டீர்களே!) அதை நான் ஒவ்வொரு நாளாக எண்ணிக் கொண்டே வருகிறேனே!” என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘மாதம் என்பது (குறைந்தபட்சம்) இருபத்தொன்பது நாள்களும் தான்” என்று பதில் கூறினார்கள். அந்த மாதமும் இருபத்தொன்பது நாள்களாகவே இருந்தது.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: பிறகு (நபி (ஸல்) அவர்களின் துணைவியருக்கு, அவர்கள் விரும்பினால் நபியுடன் சேர்ந்து வாழலாம்; அல்லது பிரிந்து விடலாம் என) உரிமை அளித்திடும் (திருக்குர்ஆன் 33:28 வது) வசனத்தை அல்லாஹ் அருளினான். (இந்த இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுமாறு) தம் துணைவியரில் முதலாவதாக என்னிடமே (கூறத்) தொடங்கினார்கள். நான் நபி (ஸல்) அவர்களை(ச் சேர்ந்து வாழும் வாழ்க்கையை)யே தேர்ந்தெடுத்தேன். பிறகு தம் துணைவியர் அனைவருக்கும் நபி(ஸல்) அவர்கள் இதே உரிமையை வழங்கினார்கள். துணைவியர் அனைவரும் நான் சொன்னது போன்றே சொல்லிவிட்டார்கள்.