“அல் லிஆன்” (மனைவியைப் பிற அந்நியனுடன் உடலுறவு கொண்டதாக குற்றம் சுமத்தியதால் கணவனும் மனைவியும் சத்தியமிடுதல்)
952. அஜ்லான் குலத்தைச் சேர்ந்த உவைமிர் (ரலி) (தம் குலத்தின் தலைவரான) ஆஸிம் இப்னு அதீ அல்அன்சாரி (ரலி) அவர்களிடம் வந்து, ‘ஆஸிம் அவர்களே! தம் மனைவியுடன் மற்றோர் அந்நிய ஆடவன் (தகாத உறவு கொண்டபடி) இருக்கக் கண்ட ஒரு மனிதனின் விஷயத்தில் என்ன கூறுகிறீர்கள்? அவன் அந்த (அந்நிய) ஆடவனைக் கொன்றுவிடலாமா? அவ்வாறு கொன்றுவிட்டால் (பழிவாங்கும் சட்டப்படி) அவனை நீங்கள் கொன்றுவிடுவீர்களா? அல்லது அவன் வேறு என்ன செய்ய வேண்டும்? எனக்காக இந்த விவகாரம் குறித்து ஆஸிமே! நீங்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டுச் சொல்லுங்கள்” என்று கூறினார். எனவே, (ஆஸிம் (ரலி) அல்லாஹ்வின் தூதரிடம் சென்று கேட்கத் தொடங்க) இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (இத்தகைய) கேள்விகளை விரும்பவில்லை. அவற்றை அசிங்கமாகக் கருதலானார்கள். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து கேட்ட (கண்டன) வார்த்தைகள் ஆஸிம் (ரலி) அவர்களுக்குக் கடினமாயிற்று. ஆஸிம் (ரலி) தம் வீட்டாரிடம் திரும்பி வந்தபோது உவைமிர் வந்து ‘ஆஸிம் அவர்களே! இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உங்களிடம் என்ன கூறினார்கள்?’ என்று கேட்டார்கள். அதற்கு ஆஸிம் (ரலி) ‘நீ எனக்கு நன்மை செய்யவில்லை. (சிக்கலில் என்னைச் சிக்க வைத்துவிட்டாய்;) இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு நான் கேட்ட இந்தக் கேள்வி பிடிக்கவில்லை” என்று பதிலளித்தார்கள். அதற்கு உவைமிர், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! நானே (நேரடியாக) இது குறித்து இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்காமல் ஓயமாட்டேன்” என்று கூறியபடி மக்களிடையேயிருந்த அல்லாஹ்வின் துதர் (ஸல்) அவர்களை நோக்கிச் சென்றார். பிறகு, ‘அவர்களை நோக்கிச் சென்றார். பிறகு, ‘இறைத்தூதர் அவர்களே! ஒரு மனிதன் தன் மனைவியுடன் அந்நிய ஆடவன் (தகாத உறவு கொண்ட நிலையில்) இருக்கக் கண்டால் அவன் அந்த ஆடவனைக் கொல்லலாமா? (அப்படிக் கொன்றுவிட்டால் பழிக்குப் பழியாக) நீங்கள் அம்மனிதனைக் கொன்றுவிடுவீர்களா? அல்லது அவன் வேறு என்ன செய்ய வேண்டும்? சொல்லுங்கள்” என்று கேட்டார். அதற்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் , ‘அல்லாஹ் உம்முடைய விஷயத்திலும் உம்முடைய மனைவி விஷயத்திலும் (குர்ஆன் வசனத்தை) அருளிவிட்டான். எனவே, நீர் சென்று, உம்முடைய மனைவியை அழைத்து வாரும்!” என்று கூறினார்கள். பிறகு அவர்கள் இருவரும் (‘லிஆன்’ எனும்) சாப அழைப்புப் பிரமாணம் செய்தனர். அப்போது மக்களுடன் நானும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அருகில் இருந்தேன். (தம்பதியர்) இருவரும் (லிஆன் செய்து) முடித்தபோது (கணவரான) உவைமிர், ‘இறைத்தூதர் அவர்களே! நான் இவளை (மணவிலக்குச் செய்யாமல் மனைவியாகவே இனியும்) வைத்திருந்தால் இவள் மீது நான் பொய்(யான குற்றச்சாட்டு) கூறியவனாக ஆகிவிடுவேன்” என்று கூறிவிட்டு, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அவருக்கு ஆணையிடுவதற்கு முன்பே அவளை முத்தலாக் சொல்லிவிட்டார். (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) கூறினார். பிறகு இந்த வழிமுறையே (அவர்களுக்கப் பின்) ‘லிஆன்’ செய்யும் தம்பதியருக்கு முன்மாதிரி ஆகிவிட்டது.
953. சாப அழைப்புப் பிரமாணம் (லிஆன்) செய்த அந்தத் தம்பதியரிடம் நபி (ஸல்) அவர்கள், ‘உங்கள் இருவரின் விசாரணையும் அல்லாஹ்விடம் உள்ளது. உங்கள் இருவரில் ஒருவர் பொய்யர்” என்று கூறிவிட்டு, (கணவரான உவைமிரைப் பார்த்து), ‘இனி அவளின் மீது உமக்கு எந்த அதிகாரமும் கிடையாது” என்று கூறினார்கள். அதற்கு அவர், ‘இறைத்தூதர் அவர்களே! (அவளுக்கு நான் மணக்கொடையாக அளித்திருந்த) என்னுடைய பொருள் (என்னாவது)?’ என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், ‘உமக்கு (அந்த)ப் பொருள் கிடைக்காது. நீர் அவளின் மீது உண்மை(யான குற்றச்சாட்டைச்) சொல்லியிருந்தால், அவளுடைய கற்பை நீர் பயன்படுத்திக் கொள்வதற்காகப் பெற்ற அனுமதிக்கு அந்தப் பொருள் பகரமாகிவிடும். நீர் அவளின் மீது பொய்(யான குற்றச்சாட்டைச்) சொல்லியிருந்தால், (அவளை அனுபவித்துக்கொண்டு அவதூறும் கற்பித்த காரணத்தினால்) அப்பொருள் உம்மைவிட்டு வெகுதொலைவில் உள்ளது” என்று கூறினார்கள்.
954. நபி (ஸல்) அவர்கள் ஒரு மனிதரையும் அவரின் மனைவியையும் சாப அழைப்புப் பிரமாணம் (லிஆன்) செய்யவைத்தார்கள். அப்போது அந்த மனிதர் அவளுடைய குழந்தையைத் தமதல்ல என்று கூறினார். எனவே, அவ்விருவருரையும் நபி (ஸல்) அவர்கள் பிரித்துவைத்தார்கள்; மேலும், குழந்தையை மனைவியிடம் சேர்த்தார்கள்.
955. சாப அழைப்புப் பிரமாணம் (நடை முறையில் வருவதற்கு முன் ஒரு முறை மனைவி மீது கணவன் விபசாரக் குற்றம் சாட்டுவது) தொடர்பாக நபி (ஸல்) அவர்கள் அருகில் பேசப்பட்டது. அப்போது ஆஸிம் இப்னு அதீ (ரலி) அது தொடர்பாக ஏதோ (ஆக்ரோஷமாகப்) பேசிவிட்டுத் திரும்பிச் சென்றார்கள். (சிறிது நேரத்தில்) ஆஸிம் (ரலி) அவர்களின் குலத்தைச் சேர்ந்த ஒருவர் அவரிடம் சென்று தம் மனைவியுடன் (அந்நிய) ஆடவன் ஒருவன் (தகாத உறவு கொண்டு) இருந்ததைத் தாம் கண்டதாகக் கூறினார். அதற்கு ஆஸிம் (ரலி), ‘நான் (ஆக்ரோஷமாகப்) பேசியதாலேயே இப்படி (என் குலத்தாரிடையே நடந்து) நானே சோதிக்கப்பட்டுள்ளேன்” என்று கூறினார்கள். எனவே, ஆஸிம் (ரலி) அவரை அழைத்துக்கொண்டு நபி (ஸல்) அவர்களிடம் சென்று அவரின் மனைவியின் நடத்தை குறித்துத் தெரிவித்தார்கள். -(உவைமிர் என்ற) அந்த மனிதர் நல்ல மஞ்சள் நிறம் உடையவராகவும், சதைப் பிடிப்புக் குறைவானவராகவும், நீண்ட முடிகளைக் கொண்டவராகவும் இருந்தார். தம் மனைவியுடன் இருக்கக் கண்டதாக அவர் வாதிட்ட அந்த அந்நிய மனிதரோ, மாநிறம் உடையவராகவும் உடல் பருத்து அதிக சதைப்பிடிப்பு உள்ளவராகவும் இருந்தார். (இந்த குற்றச்சாட்டைக் கேட்ட) நபி (ஸல்) அவர்கள், ‘இறைவா! (இந்தப் பிரச்சினையில் ஒரு) தெளிவைத் தருவாயாக!” என்று பிரார்த்தித்தார்கள். பிறகு, தம் மனைவியுடன் கண்டதாக அவர் குறிப்பிட்ட அந்த (அந்நிய) ஆடவரின் சாயலில் அவள் குழந்தை பெற்றெடுத்தாள். (அதற்கு முன்பே) இந்தத் தம்பதியரை நபி (ஸல்) அவர்கள் சாப அழைப்புப் பிரமாணம் (லிஆன்) செய்ய வைத்தார்கள். (இந்த ஹதீஸ் கூறப்பட்ட) அவையில் இருந்த ஒருவர் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், ‘சாட்சி இல்லாமலேயே ஒருவருக்கு நான் கல்லெறி தண்டனை அளிப்பவனாயிருந்தால் இவளுக்கு அளித்திருப்பேன்” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னது (உவைமிருடைய மனைவியான) இந்தப் பெண் குறித்தா? என்று கேட்டதற்கு இப்னு அப்பாஸ் (ரலி), ‘இல்லை (அவள் வேறொரு பெண்ணாவாள்.) அந்தப் பெண் இஸ்லாத்தில் இருந்துகொண்டே தகாத உறவுகொண்டு வந்தாள் எனப் பரவலாகப் பேசப்பட்டவள். (ஆனால், அவள் குற்றத்தை ஒப்புக் கொள்ளவுமில்லை தகுந்த சாட்சியும் இல்லை. அவள் குறித்தே நபியவர்கள் இவ்வாறு குறிப்பிட்டார்கள்.)” என்று பதிலளித்தார்கள்.
956. ஸஅத் இப்னு உபாதா (ரலி) அவர்கள், ‘என் மனைவியுடன் ஓர் ஆண் (தவறான உறவு கொண்ட நிலையில்) இருக்கக் கண்டால் வாளின் முனையாலேயே அவனை நான் வெட்டுவேன்” என்று சொல்ல, இச்செய்தி இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு எட்டியது. அப்போது அவர்கள், ‘ஸஅத் அவர்களின் ரோஷத்தைக் கண்டு நீங்கள் வியக்கின்றீர்களா? அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அவரைவிட அதிக ரோஷமுள்ளவன்; அல்லாஹ் என்னைவிட அதிக ரோஷமுள்ளவன். அல்லாஹ் தன் ரோஷத்தின் காரணத்தால்தான் வெளிப்படையான மற்றும் மறைவான மானக்கேடான செயல்கள் (ஆபாசங்கள்) அனைத்தையும் தடைசெய்துவிட்டான். (திருந்துவதற்கு வாய்ப்பளித்து) விட்டுப்பிடிப்பதை மிகவும் விரும்புகிறவர் அல்லாஹ்வை விட வேறெவரும் இல்லை. எனவேதான் நற்செய்தி சொல்பவர்களையும் எச்சரிக்கை செய்பவர்களையும் அல்லாஹ் அனுப்பிவைத்தான். அல்லாஹ்வை விட மிகவும் புகழை விரும்புகிறவர் வேறெவருமில்லை. எனவேதான் அல்லாஹ் சொர்க்கத்தை அளிப்பதாக வாக்களித்துள்ளான்.
957. (கிராமவாசியான) ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! (வெள்ளை நிறமுடைய) எனக்குக் கறுப்பு நிறத்தில் ஒரு மகன் பிறந்துள்ளான்! (அவன் எப்படி எனக்குப் பிறந்தவனாக இருக்க முடியும்?)” என்று (சாடையாகக்) கேட்டதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘உன்னிடம் ஒட்டகம் ஏதேனும் உள்ளதா?’ என்று கேட்டார்கள். அதற்கவர், ‘ஆம்’ என்றார். நபி (ஸல்) அவர்கள், ‘அதன் நிறம் என்ன?’ என்ற கேட்டார்கள். அவர், ‘சிவப்பு’ என்று பதிலளித்தார். நபி (ஸல்) அவர்கள், ‘உன் ஒட்டகங்களுக்கிடையே சாம்பல் நிற ஒட்டகம் உள்ளதா?’ என்று கேட்டார்கள். அவர், ‘ஆம்’ என்றார். நபி (ஸல்) அவர்கள், ‘(தன்னுடைய தாயிடம் இல்லாத) அந்த நிறம் அதற்கு மட்டும் எவ்வாறு வந்தது?’ என்று கேட்டார்கள். அவர், ‘அதன் (தந்தையான) ஆண் ஒட்டகத்தின் பரம்பரையிலிருந்து வந்திருக்கலாம்” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், ‘உன்னுடைய இந்த மகனும் உன் பரம்பரையிலுள்ள (மூதாதையரின்) நிறத்தினைக் கொண்டிருக்கக் கூடும்” என்று கூறினார்கள்.