1057. நான் அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா (ரலி) அவர்களிடம், ‘நபி (ஸல்) அவர்கள் வஸிய்யத் – மரண சாசனம் செய்தார்களா?’ என்று கேட்டேன். அவர்கள், ‘இல்லை” என்று பதிலளித்தார்கள். நான், ‘அப்படியென்றால் மக்களின் மீது வஸிய்யத் – மரண சாசனம் செய்வது எப்படிக் கடமையாக்கப்பட்டது? அல்லது மரண சாசனம் செய்யவேண்டுமென்று மக்களுக்கு எப்படிக் கட்டளையிடப்பட்டது?’ என்று கேட்டேன். அதற்கு அவர், ‘அல்லாஹ்வின் வேதத்தின்படி செயல்படுமாறு நபி (ஸல்) அவர்கள் உபதேசம் செய்தார்கள்” என்று பதிலளித்தார்கள்.
1058. ஆயிஷா (ரலி) அவர்களிடம் மக்கள், ‘நபி (ஸல்) அவர்கள் (தமக்குப் பின் ஆட்சித் தலைமை ஏற்கும்படி) அலீ (ரலி) அவர்களிடம் இறுதி விருப்பம் (வஸிய்யத்) தெரிவித்துவிட்டுச் சென்றார்கள். (என்று கேள்விப்படுகிறோமே)” என்றார்கள். அதற்கு ஆயிஷா (ரலி), ‘நபி (ஸல்) அவர்கள் எப்போது அவருக்கு வஸிய்யத் செய்தார்கள்? (நபி (ஸல்) அவர்கள் மரணப் படுக்கையில் இருந்த போது) நான் தானே அவர்களை என் நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொண்டிருந்தேன். அவர்கள் கையலம்பும் கிண்ணம் கொண்டு வரும்படிக் கேட்டார்கள். பிறகு என் மடியில் மூர்ச்சையுற்று சரிந்தார்கள். நான் அவர்கள் இறந்துவிட்டார்கள் என்பதைக் கூட உணரவில்லை. அவ்வாறிருக்க, அவர்கள் எப்போது அவரிடம் (ஆட்சிப் பொறுப்பேற்கும்படி) வஸிய்யத் செய்திருக்க முடியும்?’ என்று கேட்டார்கள்.
1059. (ஒரு முறை) இப்னு அப்பாஸ் (ரலி), ‘(அன்று) வியாழக்கிழமை எந்த வியாழக்கிழமை (தெரியுமா?)” என்று கேட்டுவிட்டு, அவர்களின் கண்ணீர் சரளைக் கல் பூமியை நனைத்து விடும் அளவிற்கு அழுதார்கள். பிறகு கூறினார்கள்.வியாழக்கிழமையன்று இறைத்தூதர் (ஸல்) அவர்களின் (நோயின்) வேதனை கடுமையாயிற்று. அப்போது அவர்கள், ‘ஓர் ஏட்டை என்னிடம் கொண்டு வாருங்கள். உங்களுக்கு ஒரு மடலை நான் எழுதித் தருகிறேன். அதன் பிறகு நீங்கள் ஒருபோதும் வழி தவற மாட்டீர்கள்” என்று கூறினார்கள். அப்போது மக்கள் (உரத்த குரலில்) சச்சரவிட்டார்கள். ஆனால், ஓர் இறைத் தூதரின் முன்னால் சச்சரவு செய்வது முறையல்ல. மக்கள், ‘இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கடுமையாக நோயுற்றுவிட்டார்கள்” என்று கூறினார்கள். எனவே, நபி (ஸல்) அவர்கள், ‘என்னைவிட்டு விடுங்கள். நீங்கள் எதற்கு என்னை அழைக்கிறீர்களோ அந்த (மரண சாசனம் எழுதும்) பணியை விட நான் இப்போதுள்ள (இறை நினைவில் லயித்திருக்கும் இந்த) நிலையே சிறந்தது?’ என்று சொல்லிவிட்டார்கள். (எதையும் எழுதித் தரவில்லை) மேலும், அவர்கள் தங்களின் மரணத் தருவாயில் மூன்று விஷயங்களைக் கட்டளையிட்டார்கள். அவை: அரபு தீபகற்பத்திலிருந்து இணை வைப்பவர்களை வெளியேற்றுங்கள். (அயல் நாடுகள் மற்றும் குலங்களின்) தூதுக் குழுவினருக்கு நான் கொடுத்து வந்ததைப் போல் நீங்களும் பரிசுப் பொருள்களை வழங்குங்கள். மூன்றாவது கட்டளையை நான் மறந்து விட்டேன்…
1060. இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வீட்டில் மக்கள் பலரும் இருக்க, அவர்களுக்கு இறப்பு நெருங்கி விட்டபோது நபி (ஸல்) அவர்கள், ‘வாருங்கள். நான் உங்களுக்கு ஒரு மடலை எழுதித் தருகிறேன். அதன் பிறகு நீங்கள் ஒருபோதும் வழிதவற மாட்டீர்கள்” என்று கூறினார்கள். அப்போது மக்களில் சிலர், ‘இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு (நோயின்) வேதனை மிகைத்து விட்டது. (அவர்களை எழுதித் தரச் சொல்லித் தொந்தரவு செய்யாதீர்கள்) உங்களிடம் தான் குர்ஆன் இருக்கிறதே. நமக்கு அல்லாஹ்வின் வேதமே போதும்” என்று கூறினார்கள். உடனே அங்கு வீட்டிலிருந்தோர், கருத்து வேறுபட்டு சச்சரவிட்டுக் கொண்டார்கள். அவர்களில் சிலர் ‘(நபியவர்கள் கேட்ட எழுது பொருளை அவர்களிடம்) கொண்டு போய்க் கொடுங்கள். உங்களுக்கு ஒரு மடலை அவர்கள் எழுதுவார்கள். அதன் பிறகு நீங்கள் வழிதவறிச் செல்லமாட்டீர்கள்” என்று கூறினார்கள். மற்ற சிலர் வேறு விதமாகக் கூறினார்கள். அவர்களின் கூச்சலும் சச்சரவும் அதிகரித்தபோது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் , ‘எழுந்திருங்கள்” என்று கூறினார்கள். அறிவிப்பாளர் உபைதுல்லாஹ் இப்னு அப்தில்லாஹ் (ரஹ்) கூறினார்:”அவர்கள் கருத்து வேறுபட்டு கூச்சலிட்டுக் கொண்டதனால் இறைத்தூதர் (ஸல்) அவர்களால் அந்த மடலை எழுத முடியாமல் போனதுதான் சோதனையிலும் பெரும் சோதனையாகும்” என்று இப்னு அப்பாஸ் (ரலி) கூறி வந்தார்கள்.