நிலமெல்லாம் ரத்தம் – பா. ராகவன் 35
கி.பி. 1517-ம் ஆண்டு தொடங்கி 1917, 18-ம் ஆண்டுகள் வரை பாலஸ்தீன் ஒட்டோமான் துருக்கியப் பேரரசின் ஆதிக்கத்தின்கீழ்தான் இருந்தது. அதாவது, நானூறு வருடங்கள். நடுவில் 1831-ம் ஆண்டு தொடங்கி 1840 வரை எகிப்தை ஆண்ட முகம்மது அலி என்கிற சர்வவல்லமை பொருந்திய சக்ரவர்த்தியின் காலத்தில் மட்டும் ஒரேயொருமுறை ஒட்டோமான் அரசிடமிருந்து பிரிந்து எகிப்தின் ஆட்சிக்கு உட்பட்டிருக்கிறது. தமது பேரரசு விஸ்தரிப்புத் திட்டத்தின் கீழ் ஒரு சிறு படையெடுப்பு நிகழ்த்தி, பாலஸ்தீனை எகிப்துடன் இணைத்தார் முகம்மது அலி.
ஐந்தாறு வருடங்கள்தான் என்றாலும், அவரது ஆட்சிக்காலத்தில் பாலஸ்தீனில் விவசாயம் கணிசமான அளவு முன்னேற்றம் கண்டதாக அநேகமாக எல்லா சரித்திர ஆசிரியர்களும் குறிப்பிடுகிறார்கள். பாலஸ்தீன் முழுவதிலும் இருந்த தரிசு நிலங்களை அளந்து கணக்கிட்டு, அந்தந்த நிலப்பரப்பின் தன்மைக்கேற்ற பயிர்கள் விதைக்கப்பட்டன. பெரும்பாலான இடங்களில் விவசாயம் ஒரு அரசுத்துறை நடவடிக்கையாகவே மேற்கொள்ளப்பட்டு, உழைப்பவர்களுக்கு ஒழுங்கான சம்பளம் வழங்கப்பட்டிருக்கிறது. (சில இடங்களில் நிலச்சுவான்தார்களின் அட்டகாசமும் இருந்திருக்கிறது.) சொந்தமாக நிலம் வைத்திருந்தவர்கள் ஒழுங்காக வரி செலுத்திவிட்டால் போதும். யூதர்கள், முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள் என்று பாரபட்சமில்லாமல், பிரச்னையின்றி வாழ்வதற்கு முகம்மது அலி உத்தரவாதம் அளித்திருந்தார்.
இந்த விஷயத்தில் பல ஜமீந்தார்களுக்கு மிகவும் வருத்தம்! பெரிய பெரிய கிராமங்களின் அளவுக்கு நிலம் வைத்திருந்தவர்கள் அவர்கள். அவர்களுக்குக் கிடைத்த அதே மரியாதை, ஒரு கர்ச்சிப் அளவு நிலம் வைத்திருக்கும் ஏழை விவசாயிகளுக்கும் அப்போது கிடைத்தது. சமத்துவம்!
இந்த சமத்துவம், திட்டமிட்டுப் பேணப்படவில்லை. பாலஸ்தீனுக்கு மட்டும் இயல்பாக வாய்த்தது. அடிப்படையில் முகம்மது அலி ஒரு நில உடைமைவாதியாகத்தான் இருந்திருக்கிறார். ஆயினும் விவசாயம் தவிர, கல்வித்துறையிலும் அவரது காலத்தில் கணிசமான வளர்ச்சி சாத்தியமாகியிருக்கிறது. ஜெருசலேம், காஸா மற்றும் இன்றைய வெஸ்ட் பேங்க் பகுதிகளில் அன்றைக்கு அடிப்படைப் பள்ளிக்கூடங்கள் தொடங்கி, சர்வகலாசாலைகள் வரை ஏராளமாக நிறுவப்பட்டு, பல்வேறு தேசங்களிலிருந்து வல்லுநர்களை வரவழைத்துப் பாடம் சொல்லிக்கொடுக்க ஏற்பாடு செய்திருக்கிறார் மன்னர்.
ஆனால், 1840-ல் துருக்கி சுல்தான் மீண்டும் பாலஸ்தீனைக் கைப்பற்றிவிட்டார். பாலஸ்தீனை இழப்பதென்பது அந்தக் காலத்தில் ஒரு மாபெரும் அவமானமாகவே சுல்தான்களால் கருதப்பட்டு வந்திருக்கிறது. எத்தனையோ யுத்தங்களில் எத்தனையெத்தனையோ இடங்களை வென்றிருக்கிறார்கள், தோற்றும் இருக்கிறார்கள். அதையெல்லாம் மீட்டெடுக்க யாரும் இத்தனை முயற்சி மேற்கொண்டதில்லை. ஆனால் ஒவ்வொரு முறை பாலஸ்தீன் கையை விட்டுப் போகும்போதும் சம்பந்தப்பட்ட மன்னர்களால் ஏனோ தாங்கமுடியாமலாகிவிடுகிறது. இத்தனைக்கும் மத்திய ஆசியாவிலேயே மிகவும் வளம் குன்றிய பகுதி அதுதான். (இன்றைக்கும்!) பாலைவனங்களும் கரடுமுரடான பாறைகளாலான சிறு குன்றுகளும் அங்கே அதிகம். பெரும்பாலான கிராமங்களுக்கு வெளியிலிருந்து யாரும் போகக்கூட முடியாது. பாதைகளே இருக்காது.
பதினேழாம் நூற்றாண்டின் மத்தியில் பாலஸ்தீனுக்கு இடம்பெயர்ந்து வந்த யூதர்கள், அங்கே ஆறு ‘புத்தம்புதிய’ கிராமங்களைக் ‘கண்டுபிடித்திருக்கிறார்கள்’ என்றால் நம்ப முடிகிறதா? ஒரு பாலைநிலப்பகுதியில் தற்செயலாகப் பயணம் மேற்கொண்டவர்கள், தாகத்தில் அலைந்து திரிந்தபோது, புதிதாகச் சில கிராமங்களையும் அங்கு வாழும் மக்களையும் கண்டுபிடித்தார்கள்! மண்ணின் மைந்தர்களான அவர்கள், அதுநாள் வரை பாலஸ்தீனில் நடைபெற்ற எத்தனையோ அரசியல் குழப்பங்களுக்கும் தங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பது போல, தனிக்காட்டில் கூட்டுவாழ்க்கை மேற்கொண்டிருந்திருக்கிறார்கள்! இப்போது தங்களை யார் ஆள்கிறார்கள் என்பது கூடத் தெரியாமல் அவர்கள் இருந்திருக்கிறார்கள்!
அப்படிப்பட்ட இடம் பாலஸ்தீன். ஆனாலும் எந்த மன்னராலும் பாலஸ்தீனை மனத்தளவிலும் விட்டுக்கொடுத்துவிட முடியாது. காரணம், ஜெருசலேம்.
ஒட்டோமான் பேரரசின் கீழ் பாலஸ்தீன் இருந்த காலத்தில் ஏராளமான ஐரோப்பிய யூதர்கள் அங்கே இடம்பெயர்ந்து வந்ததை ஏற்கெனவே பார்த்தோம். ஆனால் பாலஸ்தீனில் மீண்டும் யுத்தம், மீண்டும் ஆட்சி மாற்றம் என்று எகிப்து மன்னர் முகம்மது அலியின் படையெடுப்பை ஒட்டி ஏற்பட்ட பதற்றத்தில் பெரும்பாலான யூதர்கள் பாலஸ்தீனை விட்டு வெளியேறிவிட்டிருந்தார்கள். துருக்கிப் பேரரசின் எல்லைக்குள் பரவலாக வசிக்கத் தலைப்பட்ட யூதர்களுக்கு இம்முறை வாழ்வது கொஞ்சம் பிரச்னையாகத்தான் இருந்தது.
அவர்கள் முதன்முதலில் இடம்பெயர்ந்து வந்தபோது இருந்த அளவுக்கு அரசு அப்போது கருணை மிக்கதாக இல்லை. அரசு என்றால் மன்னர், சுல்தான், திம்மிகள் என்ற அளவில் அவர்களுக்கான உரிமைகள் இருக்கவே செய்தன என்றபோதும், அடக்குமுறை சற்று அதிகமாகவே இருந்ததாக எழுதுகிறார்கள் யூத சரித்திர ஆசிரியர்கள். (இதனை கிறிஸ்துவ சரித்திர ஆய்வாளர்களும் ஆமோதிக்கிறார்கள்.)
பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தே அரேபியர்களுக்கு யூதர்களை சுத்தமாகப் பிடிக்காமல் போய்விட்டது. அதுவரை யூதர்கள் விஷயத்தில் கூடியவரை சகிப்புத்தன்மையுடனும் சகோதரத்துவத்துடனும் வாழ்ந்துவந்தவர்கள், கி.பி. 1790-ம் ஆண்டு காலகட்டத்திலிருந்து ஏனோ யூதர்களிடமிருந்து பெரிதும் விலகியே இருக்கத் தொடங்கினார்கள்.
இதற்கு பாலஸ்தீன் முஸ்லிம்கள் தரப்பில் சொல்லப்பட்ட காரணங்கள் பின்வருமாறு:
1.அவர்கள் நைச்சியமாக அதிகாரிகளை வளைத்துப்போட்டு எங்கள் நிலங்களை அபகரித்துக்கொள்கிறார்கள்.
2. வட்டிக்குப் பணம் கொடுக்கிறார்கள். பெரும்பாலும் புரியாத விதத்தில் பத்திரங்களை எழுதி வாங்கிக்கொள்கிறார்கள். பணம் கட்ட முடியாமல் போகும் சந்தர்ப்பங்களில் அந்தப் பத்திரங்களை அதிகாரிகளிடம் சமர்ப்பித்து, எங்கள் வீடுகளையும் நிலங்களையும் கையகப்படுத்திவிடுகிறார்கள். கூடுதலாக அவகாசம் தருவது என்பதே கிடையாது.
3.அரேபியச் சிறுவர்களையும் சிறுமிகளையும் வீட்டு வேலைகளுக்கு வைத்துக்கொள்கிறார்கள். அவர்கள் மனத்தில் யூதமதம்தான் உயர்வானது, யூதர்கள்தான் மேலான குடிகள் என்பது போன்ற எண்ணத்தை விதைக்கிறார்கள். அரேபியர்கள் அடிமை வாழ்வு வாழவே பிறந்தவர்கள் என்று திரும்பத்திரும்பச் சொல்கிறார்கள்.
4.ஆட்சியாளர்களுக்கு நிறையப் பணம் கொடுத்து, பெரிய ஒப்பந்தங்களைப் பெற்றுவிடுகிறார்கள். வெளிநாட்டு வர்த்தகம் போன்ற லாபம் தரத்தக்க பணிகளில் அரேபியர்கள் நுழைவதை முடிந்தவரை தடுக்கிறார்கள்.
5. தங்கள் தொழிலுக்குப் போட்டியாக முஸ்லிம்கள் பெரிதாக வளர்ந்து வரும்போது சூழ்ச்சி செய்து அழிக்கிறார்கள்.
6. யூதக் குழந்தைகளை முஸ்லிம் குழந்தைகளுடன் பழகவிடுவதில்லை.
7. யூத குருமார்கள் ஆணவத்துடன் நடந்துகொள்கிறார்கள். அவர்கள் முஸ்லிம்களை அறவே மதிப்பதில்லை.
8. முஸ்லிம்களின் பண்டிகைக் காலங்களிலும் கொண்டாட்டக் காலங்களிலும் அவர்கள் தம் வீடுகளைத் திறப்பதே இல்லை. துக்க தினம்போல அனுஷ்டிக்கிறார்கள்.
9. சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் இறைத்தூதரான முகம்மது நபியை அவமரியாதையாகப் பேசுகிறார்கள்.
மேற்சொன்ன இந்த ஒன்பது காரணங்களை ஹாசன் தாபித் என்கிற பதினெட்டாம் நூற்றாண்டு சரித்திர ஆசிரியரின் குறிப்புகளிலிருந்து பெறமுடிகிறது. இஸ்தான்புல்லில் ஒரு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்தவர் இவர்.
இந்த ஒன்பது காரணங்களைச் சற்று உன்னிப்பாக கவனித்தால் அன்றைய பாலஸ்தீன் அரேபியர்களின் சமூக நிலைமை சற்று புரியும்.
முதல் காரணம் நமக்குத் தெரிவிப்பது, அந்தக் காலத்தில் அரேபிய முஸ்லிம்களுக்கு கிராம, நகர அதிகாரிகளுடன் நெருக்கமோ செல்வாக்கோ இல்லை. அதிகாரிகளும் முஸ்லிம்களே என்றபோதும் சாமானிய மக்களுக்கும் அவர்களுக்கும் இடைவெளி இருந்திருக்கிறது.
இரண்டாவது காரணம் சொல்லும் செய்தி, யூதர்கள் வெளிநாடுகளிலிருந்து அகதிகளாக வந்தார்கள் என்றபோதும் அவர்களுக்குப் பணப்பிரச்னை இல்லை. வட்டிக்குப் பணம் தரும் அளவுக்கு வசதியாக இருந்திருக்கிறார்கள். அரேபியர்கள் உள்ளூர்க்காரர்களே என்றாலும் ஏழைமை மிகுதியாக இருந்திருக்கிறது. வட்டிக்குப் பணம் பெற்றே வாழ்க்கையை ஓட்டியிருக்கிறார்கள் என்பது முதல் செய்தி. இதிலேயே உள்ள இரண்டாவது செய்தி, வட்டிப் பத்திரங்களைப் படித்துப் புரிந்துகொள்ளும் அளவுக்கு முஸ்லிம்களுக்குப் படிப்பறிவு இல்லை என்பது.
மூன்றாவது காரணமும் அரேபியர்களின் ஏழைமை வாழ்க்கையைத்தான் சுட்டிக்காட்டுகிறது.
நான்காவது காரணம், அந்தக் காலத்திலும் லஞ்சம் வாங்கும் ஆட்சியாளர்கள் இருந்திருக்கிறார்கள். வர்த்தக ஒப்பந்தங்கள், லைசென்ஸ்கள் போன்றவை லஞ்சமில்லாமல் சாத்தியமாகவில்லை.
ஐந்தாவது காரணம், முஸ்லிம்களில் சிலர் கல்வி கற்றோராக, வியாபாரத்தில் சிறந்தவர்களாக இருந்திருக்கிறார்கள். ஆனாலும் யூதர்களுடன் அவர்களால் போட்டியிட முடியாமல் போயிருக்கிறது.
ஆறாவது காரணம் யூதர்கள், குழந்தைகளிடமிருந்தே பிரிவினையை ஆரம்பித்திருக்கிறார்கள் என்கிற தகவலைச் சொல்லுகிறது. ஆனால் இது விஷயமாக எதிர்த்தரப்பையும் நாம் ஆராய உரிய ஆவணங்கள் ஏதும் இன்று கிடைக்காததால் இதை அப்படியே ஏற்றுக்கொண்டுவிட முடியாது.
இது போலவே ஏழு, எட்டாவது காரணங்களையும் ஆதாரபூர்வமாக இன்று உறுதிப்படுத்திக்கொள்ள வழியில்லை.
ஒன்பதாவது காரணம் குறித்து எந்தச் சந்தேகமும் இல்லை. முகம்மது நபி வாழ்ந்த காலத்திலிருந்தே யூதர்கள் விடாமல் செய்துவரும் காரியம்தான் அது!
ஆக, எப்படியோ யூதர்களும் முஸ்லிம்களும் தண்டவாளங்கள்போலத் தனித்தனியே பயணம் மேற்கொள்ள வேண்டியவர்கள் தான் என்று மனத்தளவில் இரு தரப்பிலுமே முடிவாகியிருக்கிறது. ஒத்துப்போகாது என்பதற்கு எந்தக் காரணமுமே முக்கியமில்லை என்கிற அளவுக்கு இரு தரப்பினருக்குமான இறுக்கம் அதிகமாகிக்கொண்டே வந்தது.
இந்தச் சூழலில், முகம்மது அலி கைப்பற்றிய பாலஸ்தீனை, துருக்கி சுல்தான் மீண்டும் வெற்றிகொண்டபிறகு, பாலஸ்தீன் யூதர்களுக்கு அங்கே இருப்பு சார்ந்த சங்கடங்கள் நிறைய தோன்ற ஆரம்பித்தன. அன்றைய தேதியில் பாலஸ்தீனில் மட்டும் சுமார் பன்னிரண்டாயிரம் யூதர்கள் இருந்தார்கள். (பதினாறாயிரம் பேர் என்றும் சில குறிப்புகள் தெரிவிக்கின்றன.) இந்தப் பன்னிரண்டாயிரம் பேரில் பாதிப்பேருக்கு மேல் சுயமாகத் தொழில் செய்பவர்கள். பாஸ்போர்ட், விசா பிரச்னையெல்லாம் இன்றைக்குப் போல் அத்தனை பெரிதாக இல்லாத காலகட்டமாதலால் வருடத்தில் பாதி நாட்களுக்கும் மேல் அவர்கள் உலகம் சுற்றிக்கொண்டிருந்தார்கள்.
வர்த்தகக் காரணம் ஒரு பக்கம். ஒவ்வொரு தேசத்திலும் உள்ள யூதர்களைக் கணக்கெடுத்து, அந்தந்த தேசத்தின் அரசியல் நிலவரங்களை அலசி ஆராய்ந்து, உடனடிப் பிரச்னை என்றால் ஒரு தீர்வு, நீண்ட நாள் பிரச்னை என்றால் ஒரு தீர்வு, எதிர்பார்க்கப்படும் பிரச்னை என்றால் அதற்கான மந்திராலோசனை என்று பல்வேறு சமூகத்திட்டங்கள் இல்லாமல் எந்த ஒரு யூதரும் வெளிநாட்டுக்குப் போகமாட்டார். ஒரு யூதர் வெளிநாடு கிளம்புகிறார் என்றால் முதலில் பாஸ்போர்ட் அலுவலகம் போகமாட்டார். இன்றைக்கும் தமது மதச்சபை தலைமை குருவைத்தான் முதலில் சந்திக்கச் செல்வார்.
தமக்கு முன்பின் தெரிந்தவரா, தெரியாதவரா என்பது கூட அவர்களுக்கு முக்கியமில்லை. யூதரா? அவ்வளவுதான்.
இப்படி வர்த்தகக் காரணங்களுடன் வெளிநாடுகளுக்குப் புறப்பட்ட பாலஸ்தீன் யூதர்கள்தான், பல்வேறு இடங்களிலிருந்த யூதர்கள் பாலஸ்தீனுக்கு வந்து சேரவும் வாழத்தொடங்கவும் காரணமாக இருந்தார்கள்.
ஆயிரத்து எண்ணூறுகளின் தொடக்கத்தில் பாலஸ்தீனில் மொத்தமே பதினைந்தாயிரம் யூதர்கள்தான் இருந்தார்கள். ஒரு நூறு வருஷத்தில் இந்த எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தொட்டது. அந்த நூறு வருட காலத்தில் பத்துப்பத்து பேராக, நூறு நூறு பேராக, ஆயிரம் ஆயிரம் பேராக யூதர்கள் எங்கெங்கிருந்தோ பாலஸ்தீனுக்கு வந்து சேர்ந்தது தவிர, வேறு குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் ஏதும் அம்மண்ணில் நடைபெறவில்லை என்பதைப் பார்க்கவேண்டும்.
பாலஸ்தீன் மண்ணில் கண்ணுக்குத்தெரியாமல் யூதர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது என்பதை அரேபிய முஸ்லிம்கள் கவனிக்கவேயில்லை என்பதையும் பார்க்கவேண்டும்.
நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 24 மார்ச், 2005