1169. உஹுதுப் போரின்போது நபி (ஸல்) அவர்களின் தலைக் கவசம் அவர்களின் தலையில் வைத்தே நொறுக்கப்பட்டு, முகம் முழுவதும் இரத்த மயமாகி, அவர்களின் நடுப் பல் உடைக்கப்பட்டுவிட்டபோது, அலீ (ரலி) (காயத்தைக் கழுவுவதற்காக) கேடயத்தில் அவ்வப்போது தண்ணீர் கொண்டு வர, ஃபாத்திமா (ரலி) காயத்தைக் கழுவி வந்தார்கள். இரத்தம் தண்ணீரை மிஞ்சி அதிகமாக வழிவதைக் கண்ட ஃபாத்திமா (ரலி), ஒரு பாயை எடுத்து அதை எரித்து, (அதன் சாம்பலை) நபி (ஸல்) அவர்களின் காயத்தின் மேல் வைத்து அழுத்தி விட, இரத்தம் (வழிவது) நின்றுவிட்டது.
1170. (முற்கால) இறைத்தூதர்களில் ஒருவரின் நிலையை நபி (ஸல்) அவர்கள் எடுத்துரைத்துக் கொண்டிருப்பதை நான் இப்போது பார்ப்பது போன்றுள்ளது. ‘அந்த இறைத்தூதரை அவரின் சமுதாயத்தார் அடித்து அவரை இரத்தத்தில் தோய்த்துவிட்டார்கள். அப்போது அவர் தம் முகத்திலிருந்து இரத்தத்தைத் துடைத்தபடி, ‘இறைவா! என் சமுதாயத்தாரை மன்னித்து விடு! ஏனெனில், அவர்கள் அறியாதவர்களாயிருக்கிறார்கள்’ என்று சொல்லிக் கொண்டிருந்தார்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.