நிலமெல்லாம் ரத்தம் – பா. ராகவன் 46
அமெரிக்கா ஒரு வல்லரசாக உருப்பெறுவதற்கு முன்னர், உலகம் பார்த்து பயந்த தேசம், இங்கிலாந்து. அன்றைய இங்கிலாந்தின் படைபலம், பொருளாதார பலம் இரண்டும் இதற்கான காரணங்கள். இவற்றைவிட முக்கியக் காரணம், அன்றைக்கு இங்கிலாந்துக்கு இருந்த காலனிகள் பலம். உலகெங்கும் பரவலாக பல்வேறு தேசங்களைத் தன் ஆளுகையின் கீழ் கொண்டுவந்து ஆட்சிபுரிந்துகொண்டிருந்தது இங்கிலாந்து. இதன் மறைமுகப் பொருள் என்னவென்றால், எந்தெந்த தேசமெல்லாம் இங்கிலாந்தின் காலனியாக உள்ளதோ, அந்தந்த தேசத்தின் ராணுவமெல்லாம் இங்கிலாந்து ராணுவத்தின் ஒரு பகுதி. அந்தந்த தேசத்தின் இயற்கை வளங்களெல்லாம் இங்கிலாந்தின் வளங்கள். ஆகவே, நினைத்த மாத்திரத்தில் ஒரு மாபெரும் ராணுவத்தை எந்த இடத்துக்கும் அனுப்பும் வல்லமை பெற்றிருந்தது இங்கிலாந்து.
ஆனால் இங்கிலாந்தால்கூட அப்போது முடியாத ஒரு காரியம் உண்டென்றால், அது மத்தியக்கிழக்கில் தன் வேர்களை ஊன்றுவது. நூறு சதவிகிதம் இஸ்லாமிய ஆட்சி நடந்துகொண்டிருந்த பூமி அது. ஒரு பக்கம் ஒட்டாமான் துருக்கிய சாம்ராஜ்ஜியம். இன்னொரு பக்கம், பழைய கலீஃபாக்களின் மிச்சங்களாக, பாக்தாத்தை மையமாகக் கொண்டு செயல்பட்டுக்கொண்டிருந்த சுல்தான்கள். ஆங்காங்கே இவர்களுக்குக் கப்பம் கட்டும் குறுநில மன்னர்கள். எப்படிப்பார்த்தாலும் இஸ்லாமியர்கள்தான். அவர்களைத் தவிர இன்னொருவர் கிடையாது.
மத்தியக்கிழக்கில் காலூன்றுவதற்கு ஏதாவது சந்தர்ப்பம் கிடைக்காதா என்று எல்லா மேற்கத்திய தேசங்களுமே கனவு கண்டுகொண்டிருந்த காலம் அது. உலகப்போர் அதற்கு சரியான சந்தர்ப்பமாக அமைந்தது.
பிரிட்டனும் பிரான்ஸும் போட்டிபோட்டுக்கொண்டு கூட்டணி அமைத்துத் தம் தாக்குதல் வியூகங்களை வகுத்தன.
முந்திக்கொண்டதென்னவோ பிரிட்டன்தான். ஒட்டாமான் சாம்ராஜ்ஜியம் என்று பெருமையாகச் சொன்னாலும் பிரிட்டனின் ராட்சஸப் படைபலத்துக்கு முன்னால் அவர்களால் தாக்குப்பிடிக்க முடியாமல் போனது. உக்கிரமாகப் போரிட்டுத் தோற்றுப்போனார்கள் முஸ்லிம்கள்.
இதற்கு இன்னும் சில நுணுக்கமான காரணங்களும் இருக்கின்றன. துருக்கியில் அப்போது நடந்துகொண்டிருந்தது முஸ்லிம்களின் ஆட்சிதான் என்றபோதும், புவியியல் ரீதியில் துருக்கி ஒரு ஐரோப்பிய தேசம். ஆனால் பிற ஐரோப்பிய தேசங்களுடன் ஒட்டமுடியாமல் மத்தியக்கிழக்கின் இஸ்லாமிய தேசங்களுடன் மட்டுமே உறவு கொண்ட தேசம்.
இந்தக் கடுப்பு அனைத்து ஐரோப்பிய தேசங்களுக்கும் உண்டு. ஆகவே, அவர்கள் திட்டமிட்டு துருக்கியை மத்தியக்கிழக்கின் பிற பகுதிகளிலிருந்து சித்தாந்த ரீதியில் பிரித்துக் காட்டுவதற்காக ஒரு தந்திரத்தை மேற்கொண்டார்கள். அதன்படி, முஸ்லிம்கள் என்று பொதுவாகக் குறிப்பிடாமல், துருக்கியர்கள், அரேபியர்கள் என்று இரு தரப்பினரையும் எப்போதும் பிரித்தே குறிப்பிட்டு வந்தார்கள். இதனை ஒரு திட்டமிட்ட பிரசார உத்தியாகவும் மாற்றி, மிகத்தீவிரமாகப் பேசியும் எழுதியும் வந்தார்கள்.
இதன் விளைவு, பாமர அரேபியர்களுக்கு, தாங்கள் வேறு; துருக்கியர்கள் வேறு என்னும் எண்ணம் மெல்ல மெல்ல ஏற்பட்டு, காலப்போக்கில் அது மிகத்தீவிரமாக மனத்தில் வேரூன்றத் தொடங்கிவிட்டது.
உலகப்போர் சமயத்தில் பிரிட்டன் இதனைத் தனக்குச் சாதகமான ஓர் அம்சமாகப் பயன்படுத்திக்கொண்டு, கிராமப்புற அரேபியர்களைப் பகடைக்காயாகப் பயன்படுத்தி, துருக்கி சுல்தானுக்கு எதிராகத் தகவல்கள் சேகரிக்க, ஒற்றறிந்து வரப் பயன்படுத்திக்கொண்டுவிட்டார்கள்.
ஒட்டாமான் சாம்ராஜ்ஜியம் என்பது எத்தனை பெரிய அரசு! ஒரு பேரரசு என்று சொல்வதற்கு முற்றிலும் பொருத்தமான அரசாக இருந்தது அது. அதுவும் எத்தனை நூற்றாண்டுகளாக!
ஆனால் அந்தப் பேரரசு, உலகப்போரில் விழுந்தபோது, அதற்காக கண்ணீர் சிந்தக்கூட யாருக்கும் அவகாசம் இல்லாமல் போய்விட்டது.
ஒட்டாமான் துருக்கிய சாம்ராஜ்ஜியம் யுத்தத்தில் விழுந்தது என்கிற தகவல் வந்ததுமே இங்கிலாந்தும் பிரான்ஸும் மிகத் தீவிரமாக உட்கார்ந்து யோசிக்கத் தொடங்கிவிட்டன. மிகக் கவனமாகத் திட்டமிட்டு, பேரரசின் பகுதிகளை எப்படிப் பிரிப்பது என்று ஆலோசித்தார்கள். இறுதியில் ஓர் ஒப்பந்தமும் அரங்கேறியது.
இன்றுவரை இங்கிலாந்தும் பிரான்ஸும் ‘அப்படியரு ஒப்பந்தம் நடைபெறவேயில்லை’ என்று அடித்துக்கூறி வந்தாலும், அந்த ஒப்பந்தத்துக்கு ஒரு பெயர் கூட இருக்கிறது. ‘ஸ்கைஸ் பிகாட் ஒப்பந்தம்’ (Skyes Picot Agreement).
நடக்கவேயில்லை என்று இரு தேசங்களும் அடித்துக்கூறும் ஒரு ஒப்பந்தம், பெயருடன் எப்படி வெளியே வந்தது?
அது ஒரு சுவாரசியமான கதை. முதல் உலகப்போர் சமயத்தில்தான் ரஷ்யாவில் உள்நாட்டுப் புரட்சி உச்சகட்டத்தைத் தொட்டிருந்தது. ஜார் மன்னர்களுக்கு எதிராகத் திரண்டெழுந்த மக்கள், கம்யூனிஸ்டுகளைத் தம்மைக் காக்கவந்த கர்த்தராகவே கருதிய சமயம் அது. புரட்சியின் உச்சகட்டக் காட்சிகளுள் ஒன்றாக, கம்யூனிஸ்ட் வீரர்கள், அமைச்சர்கள், அதிகாரிகளின் அலுவலகங்கள், வீடுகள் ஆகியவற்றை ஒரு சமயம் சூறையாடிக்கொண்டிருந்தார்கள். அப்படி சூறையாடியபோது அகப்பட்ட ஆவணங்களுள் ஒன்று இந்த ‘ஸ்கைஸ் பிகாட் ஒப்பந்தம்!’
படித்துப் பார்த்தார்கள். அடடா, இங்கிலாந்தும் பிரான்ஸும் மத்தியக்கிழக்கைக் கூறு போட திட்டம் வகுக்கிறார்களே என்று கவலைப்பட்டு, உடனடியாக அந்த ஒப்பந்த நகலை நம்பகமான தூதுவர் ஒருவர் மூலம் துருக்கிக்குக் கொடுத்தனுப்பினார்கள்.
இப்படித்தான் முஸ்லிம்களுக்கு அந்த ஒப்பந்த விவரமே தெரியவந்தது, கம்யூனிஸ்டுகளின் மூலம்! உடனே அவர்கள், இங்கிலாந்தின் மிகத் தீவிர ஆதரவாளராக அப்போது இருந்த மெக்கா நகரின் ஷெரீப், ஹுசேன் என்பவரிடம் கொடுத்து, விசாரிக்கச் சொன்னார்கள்.
அதுநாள் வரை இங்கிலாந்து தம்மை எதுவும் செய்யாது என்று திடமாக நம்பிக்கொண்டிருந்தவர் அவர். ஆகவே, நம்பிக்கையுடன் அந்த நகலை இங்கிலாந்து அரசுக்கு அனுப்பி, ‘இது என்ன விவகாரம்?’ என்று கேட்டார்.
“Nonsense, It is a figment of Bolsvik’s imagination!” என்று பதில் எழுதிவிட்டது இங்கிலாந்து. அதாவது, இதில் உண்மை இல்லை; இது ரஷ்யப் புரட்சியாளர்களின் கற்பனை. தங்கள் கற்பனைக்குத்தான் அவர்கள் இப்படியரு பொய்யான வடிவம் தந்திருக்கிறார்கள் என்று அர்த்தம்.
சொன்னார்களே தவிர, நடந்தது வேறு. ஸ்கைஸ் பிகாட் ஒப்பந்தத்தில் என்ன எழுதியிருந்ததோ, அதன்படிதான் இங்கிலாந்தும் பிரான்ஸும் துருக்கியப் பேரரசை கூறு போடத் தொடங்கின. பாலஸ்தீனை இங்கிலாந்து எடுத்துக்கொண்டது. 1917 டிசம்பர் 9-ம் தேதி அலன்பே (Allenby) என்கிற தளபதியின் தலைமையில் ஒரு படையை ஜெருசலேத்துக்கு அனுப்பிவிட்டார்கள். மறுபுறம், கவ் ராட் என்கிற பிரெஞ்சுத் தளபதி தலைமையிலான படை சிரியாவுக்குள் நுழைந்து ஆக்கிரமித்தது.
படை நுழைகிறது என்றால் அதிகாரம் மாறிவிட்டது என்று அர்த்தம். கண்மூடித்திறக்கும் நேரத்தில் பாலஸ்தீன் இங்கிலாந்தின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாகவும் சிரியா, பிரெஞ்சு காலனிகளுள் ஒன்றாகவும் ஆகிப்போயின.
இந்தப் பக்கம் இந்த வைபவங்கள் நடந்துகொண்டிருந்தபோதே, அங்கே இங்கிலாந்தில் (பின்னாளில் மிகப் பிரசித்தி பெற்ற) பால்ஃபர் பிரகடனத்தை வெளியிட்டார்கள். இன்றைக்கு வரை இஸ்ரேல், பாலஸ்தீன் விவகாரங்கள் அனைத்துக்கும் ஆதிமூல காரணமாக விளங்கிய மாபெரும் பிரகடனம் அது.
ஆர்தர் பால்ஃபர் என்கிற அன்றைய இங்கிலாந்து வெளிவிவகாரத்துறைச் செயலாளர் மூலம் வெளியிடப்பட்ட இந்தப் பிரகடனத்தின் சாரத்தை ஒரு வரியில் சொல்லுவதென்றால், பாலஸ்தீனில் யூதர்களுக்கான தனி நிலப்பகுதி ஒன்றை உருவாக்கியாகவேண்டும் என்பதுதான். அதை மாட்சிமை தாங்கிய இங்கிலாந்து மன்னரின் பெயரால் அப்பிரகடனம் அறிவித்திருந்தது. (His Majesty’s Government views with favour of establishment in Palestine of a Nation Home for the Jewish People)
இந்த அறிக்கையின் இன்னொரு பகுதி, ‘இப்போது பாலஸ்தீனில் வசிக்கும் யூதர் அல்லாதோரின் பொது உரிமைகளுக்கோ, மத உரிமைகளுக்கோ பங்கம் வராது’ என்றும் சொல்கிறது. (Nothing shall be done which may prejudice the civil and religious rights of exisiting non Jewish communities in Palestine.)
உலகில் எத்தனையோ தேசங்கள் தொடர்பாக எவ்வளவோ பிரகடனங்கள் இதற்கு முன்னும் பின்பும் வெளியாகியிருக்கின்றன. ஆனால் எந்த ஒரு பிரகடனமும் பால்ஃபர் பிரகடனம் அளவுக்கு நயவஞ்சகமும் சூழ்ச்சியும் மிக்கதல்ல. பிரிட்டன் ஏன் அத்தனை தீவிரமான யூத ஆதரவு நிலை எடுத்தது, அரேபியர்களுக்கு துரோகம் செய்தாவது யூதர்களைக் கொண்டு பாலஸ்தீனில் குடியமர்த்தலாம் என்று எதனால் முடிவு செய்தது? என்கிற கேள்விக்கெல்லாம் ஆதாரபூர்வ பதில் எதுவும் கிடையாது!
முன்பே பார்த்தது போல, யூதர்களின் ராஜதந்திர நடவடிக்கைகள்தான் இதற்கெல்லாம் காரணம் என்று ஒற்றை வரியில் சொல்லிவிட்டுப் போவது தவிர வேறு வழியும் கிடையாது. கொஞ்சம் பணம் செலவு செய்து ஒரு கிரவுண்ட் நிலம் வாங்கி வீடு கட்ட முடியும் என்பது நமக்குத் தெரியும். ஏராளமாகப் பணம் செலவு செய்து ஒரு நாட்டையே கூடக் கட்டமுடியும் என்று நிரூபித்துக் காட்டியவர்கள் யூதர்கள்.
பால்ஃபர் பிரகடனத்தின் மிக முக்கியப் பகுதி இதுதான்:
‘இப்போது பாலஸ்தீனில் வசிக்கும் யூதர் அல்லாதோரின் சிவில் உரிமைகளுக்கோ, மத உரிமைகளுக்கோ பங்கம் வராது’.
காலம் காலமாக பாலஸ்தீன் என்பது அரேபிய முஸ்லிம்களின் தாயகமாக விளங்கும் தேசம். எப்படி அது யூதர்களின் பூர்வீக பூமியோ, அதே போலத்தான் அரேபியர்களின் பூர்வீக பூமியும் கூட. யூதர்களாவது பிழைப்பு நிமித்தம் இடம்பெயர்ந்து பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே பல்வேறு தேசங்களுக்குப் போய்விட்டவர்கள். ஆனால், பாலஸ்தீன அரேபியர்கள் யுத்தகாலம் தொடங்கி, செத்தகாலம் வரை அங்கேயே இருந்து வந்தவர்கள்.
அப்படிப்பட்ட அரேபிய முஸ்லிம்களைப் பற்றிக் குறிப்பிடும்போது ‘யூதர் அல்லாதோர்’ என்னும் பதத்தை உபயோகிப்பதன்மூலம், பாலஸ்தீன் மண்ணின் மைந்தர்கள் என்பவர்கள் யூதர்கள்தான் என்கிற கருத்தாக்கத்தை மறைமுகமாக முன்வைத்தது பால்ஃபர் பிரகடனம். இதனால்தான் சரித்திர ஆசிரியர்கள், இப்பிரகடனத்தை வடிகட்டிய அயோக்கியத்தனம் என்று வருணிக்கிறார்கள்.
இன்னொரு விஷயத்தையும் இதில் கவனிக்கலாம். அரேபியர்களின் சிவில் உரிமைகளுக்கும் மத உரிமைகளுக்கும் பங்கம் வராது என்று பால்ஃபர் பிரகடனம் சொல்கிறது. இதில் மறைபொருளாக இருக்கும் விஷயம் என்ன?
அரேபியர்களுக்கு இனி அரசியல் உரிமைகள் என்று எதுவும் கிடையாது என்பதுதான்! சிவில் உரிமைகளைப் பயன்படுத்தி, வேண்டுமானால் ஓட்டுப் போடலாமே தவிர, தேர்தலில் நிற்க முடியாது! ஆட்சியில் பங்கு கேட்க முடியாது.
சுருக்கமாகச் சொல்லுவதென்றால், பால்ஃபர் பிரகடனத்தின்படி, பாலஸ்தீன் மண்ணில் நிறுவப்படும் இஸ்ரேல் என்கிற தேசத்தின் அரசியல் உரிமைகளில் அரேபியர்கள் பங்கு கோர முடியாது. இரண்டாந்தரக் குடிமகன்களாக அவர்களும் அங்கே வாழலாமே தவிர, யூதர்களின் தேசமாகத்தான் அது இருக்கும். அரபி அல்ல; ஹீப்ருவே தேசிய மொழியாக இருக்கும். இஸ்லாம் அல்ல; யூத மதமே தேசிய மதமாக இருக்கும்.
டாக்டர் அலி அப்துல்லா அல் தாஃபா என்கிற வரலாற்றாசிரியர், Arab Israel conflict என்றொரு நூல் எழுதியிருக்கிறார். இஸ்ரேல் பாலஸ்தீன் பிரச்னைகளைப் பொறுத்தமட்டில் அந்தப் புத்தகம் ஒரு பொக்கிஷம். தமது நூலில் டாக்டர் அப்துல்லா, பிரிட்டனின் வெளியுறவுச் செயலாளர் பால்ஃபரின் நாட்குறிப்புகளிலிருந்து சில பகுதிகளை பகிரங்கமாக வெளியிட்டிருக்கிறார். அந்த நாட்குறிப்புகளை அவர் எப்படிப் பெற்றார் என்கிற விவரம் தெரியாவிட்டாலும், அந்தக் குறிப்பிட்ட வரிகள் மிகவும் முக்கியமானவை:
“ஜியோனிசம் சரியான பாதைதானா என்பது பற்றிக் கவலையில்லை. ஆனால், அதன் அடிப்படையில் யூதர்களுக்கான தேசம் ஒன்றை பாலஸ்தீனில் உருவாக்கித்தான் ஆகவேண்டும். அப்படியரு யூததேசம் உருவாகுமானால், பாலஸ்தீனில் வாழ்ந்துகொண்டிருக்கும் ஏழு லட்சம் அரேபியர்களின் நிலை என்ன ஆகும் என்று கேட்கிறார்கள். அதுபற்றி எங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை.’’
இதைவிடக் கேவலமான, அருவருப்பூட்டக்கூடிய, சற்றும் பொறுப்பில்லாத ஒரு கருத்தை அந்தக் காலகட்டத்தில் வேறு யாரும் கொண்டிருந்ததாகத் தெரியவில்லை.
நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 1 மே, 2005
இது நாள் வரை விளக்கம் கிடைக்காமல் இருந்த பல வரலாற்றுப் புதிர்களுக்கான விடைகளை புரிய வைத்தமைக்கு நன்றி!