நிலமெல்லாம் ரத்தம் – பா. ராகவன் 54
பாலஸ்தீன் யாருடையது? யூதர்களுக்கும் அரேபிய முஸ்லிம்களுக்கும் சொந்தமான பூமி அது. நல்லது. பாலஸ்தீனில் யார் பெரும்பான்மையானோர்? இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் யூதர்கள் பெரும்பான்மையானோராகவும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கிட்டத்தட்ட இரு தரப்பினரும் சம அளவினராகவும், நவீன காலத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையானோராகவும் அங்கே இருந்திருக்கிறார்கள்.
இதனை இந்தத் தொடரின் பல்வேறு அத்தியாயங்களில் இடையிடையே பார்த்திருக்கிறோம். இப்போது மீண்டும் நினைவுபடுத்திக்கொள்ளவேண்டியது அவசியமாகிறது. காரணம், இந்தக் குழப்பத்தால்தான் பாலஸ்தீனை எப்படிப் பிரிப்பது என்று பிரிட்டன் யோசித்துக்கொண்டிருந்தது.
இரண்டாம் உலக யுத்தம் முடிவடைந்த தருணத்தில் பாலஸ்தீனில் இருந்த யூதர்களின் எண்ணிக்கை சுமார் ஆறு லட்சம். இவர்கள் அத்தனைபேரும் ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளிலிருந்து பாலஸ்தீன் வந்து சேர்ந்தவர்கள். அவர்களது மூதாதையர்களுக்கு பாலஸ்தீன் சொந்த ஊராக இருக்கலாம். அவர்களுக்குக் கண்டிப்பாக அது புதிய தேசம். அதாவது சொந்த தேசமே என்றாலும் வந்தேறிகள். அவர்களைத் தவிர உள்ளூர் யூதர்கள் என்று சொல்லிக்கொள்ளும்படியாக சுமார் இருபதாயிரம் பேர் இருந்தால் அதிகம்.
ஆனால் அங்கே இருந்த அரேபியர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிட்டால் இந்த எண்ணிக்கை மிகவும் சொற்பம். குறைந்தது நாலரை மடங்கு அதிகமான எண்ணிக்கையில் அரேபியர்கள் அப்போது அங்கே இருந்தார்கள்.
ஆகவே, அநியாயமாகவே நிலப்பரப்பைப் பிரிப்பதென்றாலும் அரேபியர்களுக்குச் சற்றுக் கூடுதலான நிலம் ஒதுக்கித்தான் ஆகவேண்டும். அப்படிச் செய்வதென்றால் இஸ்ரேல் என்கிற தேசத்தை உருவாக்க நினைப்பதன் அடிப்படைக் காரணமே தவிடுபொடியாகிவிடும்.
இது முதல் பிரச்னை. இரண்டாவது பிரச்னை ஜெருசலேம் தொடர்பானது. பாலஸ்தீனின் மிக முக்கியமான நகரம். முஸ்லிம்கள், யூதர்கள் என்று இருதரப்பினருக்குமே அது ஒரு புனித நகரம். இந்த இரு தரப்பினர் மட்டுமல்லாமல் பாலஸ்தீனின் அப்போதைய மிகச் சிறுபான்மையினரான கிறிஸ்துவர்களுக்கும் அது புனிதத்தலம். ஒட்டுமொத்த பாலஸ்தீனில் யார் எத்தனைபேர் வாழ்கிறார்கள் என்று கணக்கெடுக்கும்போதே ஜெருசலேத்தில் எத்தனைபேர் என்று உடன் சேர்த்துப் பார்ப்பதுதான் வழக்கம்.
பாலஸ்தீனின் மற்ற பகுதிகளைப் பிரிப்பதில் ஏதாவது குளறுபடி நேர்ந்தால்கூடப் பின்னால் சரிசெய்துகொண்டுவிட முடியும். ஆனால், ஜெருசலேத்தைப் பிரிப்பதில் ஒரு சிறு பிரச்னை வந்தாலும் மூன்று மிகப்பெரிய சமயத்தவரும் பிரிட்டனை துவம்சம் செய்துவிடும் அபாயம் இருப்பதை பிரிட்டிஷ் பிரதமர் உணர்ந்தார். ஆகவே ஒரு சிறு சிக்கல் கூட வராமல் விஷயத்தை முடிக்கவேண்டும் என்பதால்தான் இஸ்ரேல் விஷயத்தை எடுத்தேன் கவிழ்த்தேன் என்று முடிக்காமல் முதலில் இந்தியப் பிரச்னைக்கு ஒரு தீர்வு சொல்லிவிட்டு, அடுத்தபடியாக இஸ்ரேலுக்கு வரலாம் என்று நினைத்தது பிரிட்டன்.
இவற்றையெல்லாம் தாண்டி பிரிட்டனுக்கு இன்னொரு hidden agenda இருக்கவே செய்தது. இரண்டு தரப்பினருக்கும் அதிருப்தி ஏற்படாமல் தேசத்தை இரண்டாகப் பிரித்து ஒரு தேசத்துக்கு இஸ்ரேல் என்று பெயரிட்டு பிரச்னையைத் தீர்ப்பது என்பது மேல்பார்வைக்குத் தெரிந்த செயல்திட்டம். பிரிட்டனின் உண்மையான திட்டம், ஓரளவுக்காவது பாலஸ்தீனை முழுமையாக யூதர்களின் தேசமாக்கிவிடுவதுதான். அதாவது பெரும்பான்மை நிலப்பரப்பு யூதர்களுடையதாக இருக்க வேண்டும். அப்படியென்றால் யூதர்களின் எண்ணிக்கை அதிகமாக வேண்டும். யூதர்களின் வசிப்பிடம் இன்னும் பரவலாக, எல்லா சந்துபொந்துகளிலும் இருக்க வேண்டும். அப்போதுதான் ஒரு எல்லைக்கோடு என்று கிழிக்கும்போது அதிக இடத்தை யூதர்கள் பெறும்படி செய்யலாம்.
ஆனால் யதார்த்தம் வேறு விதமாகத்தான் இருந்தது. பாலஸ்தீன் முழுவதும் அரேபியர்களே நிறைந்திருந்தார்கள். நிலங்களை இழந்த அரேபியர்கள் கூட, வேறிடம் தேடிச்செல்லாமல் பாலைவனங்களில் கூடாரம் அடித்தே வாழ்ந்துகொண்டிருந்தார்கள். பாறைகள் மிக்க மலைப்பகுதிகளிலும் அவர்கள் வசித்துக்கொண்டிருந்தார்கள். ஜோர்டன் நதியின் மேற்குக் கரையில் ஏராளமாக வசித்தார்கள். கிழக்கு கடற்கரைப் பகுதியான காஸா உள்ளிட்ட எல்லையோர நகரங்களிலும் அவர்கள் ஏராளமாக இருந்தார்கள். ஒரு வரியில் சொல்லுவதென்றால், எல்லைப்புறங்கள் முழுவதிலும் அரேபியர்கள் நாலா திசைகளிலும் இருந்தார்கள். நாட்டின் நடுப்பகுதிகளிலும் அவர்கள் பரவலாக வசித்துவந்தார்கள். மிகச் சில இடங்களில் மட்டுமே யூதக்குடியிருப்புகள் இருந்தன.
ஒரு தேசத்தை இரண்டாகப் பிரிப்பதற்கு இது மிகவும் சிக்கல்தரக்கூடிய விஷயம். எங்கே போடுவது எல்லைக் கோட்டை? பாலஸ்தீனுக்கு நடுவே ஒரு வட்டம் போட்டா இஸ்ரேல் என்று சொல்லமுடியும்? அப்படியென்றால் இஸ்ரேலின் நான்குபுறமும் பாலஸ்தீன் இருக்கும். பாலஸ்தீனின் கிழக்கு எல்லையில் வசிப்பவர்கள், மேற்குப் பகுதி நகர் ஒன்றுக்குப் போவதென்றால் விசா எடுத்துக்கொண்டு போகவேண்டி வரும். இதெல்லாம் மிகப்பெரிய சிக்கல்கள்.
நமக்கு மிக நன்றாகத் தெரிந்த ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம். இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையின்போது முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளைப் பிரித்து பாகிஸ்தான் என்ற தேசத்தை உருவாக்கலாம் என்று முடிவு செய்தார்கள். அதன்படி முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளைக் கண்டறிந்தார்கள். ராட்க்ளிஃப் என்கிற பிரிட்டிஷ் சர்வேயர் ஒருவர் வரைபடத்தை வைத்துக்கொண்டு அதில் கோடு கிழித்தார். மேற்கே ஒரு பரந்த நிலப்பரப்பு. கிழக்கே இந்தியாவின் ஜாடையில் பிறந்த இன்னொரு குழந்தை மாதிரி இன்னொரு சிறு நிலப்பரப்பு. மேற்குப் பாகிஸ்தான், கிழக்கு பாகிஸ்தான் என்று அடையாளம் கூறப்பட்டது.
எத்தனை சிக்கல்கள் வந்துவிட்டன! ஆட்சி நிர்வாகம் முழுவதும் மேற்கு பாகிஸ்தானில் இருந்து நடைபெறும். எதற்குமே சம்பந்தமில்லாமல் இடையில் இந்தியாவின் இருபெரும் எல்லைகள் தாண்டி கிழக்கு பாகிஸ்தான் அம்போவென்று தனியே கிடக்கும்.
இதனால்தான் அம்மக்கள் தாங்கள் தனிமைப்படுத்தப்பட்டது போல உணர்ந்தார்கள். அரசுக்கு எதிராகக் கலவரங்கள் செய்ய ஆரம்பித்தார்கள். முக்திபாஹினி என்கிற தனியார் ராணுவம் ஒன்றையே அமைத்து சொந்த தேச ராணுவத்துக்கு எதிராகப் போரிட்டார்கள்.
அதன்பிறகு 1971-ல் யுத்தம், பங்களாதேஷ் பிறப்பு என்று ஒருவாறு பிரச்னை தீரும்வரை அங்கே சிக்கல், சிக்கல் மட்டும்தான்.
இந்த பாகிஸ்தான் பிரிவினை விவகாரம், அங்குள்ள முஸ்லிம்களுக்கு எத்தனை சிக்கல் தரக்கூடியது என்பதை அவர்கள் உணர்வதற்குச் சில காலம் ஆனது உண்மை. ஆனால் பிரித்துக்கொடுத்த பிரிட்டனுக்கு அன்றே புரிந்துவிட்டது. இஸ்ரேல் – பாலஸ்தீன் அளவுக்கெல்லாம் மிகப்பெரிய பிரச்னைகள் இல்லாத தேசத்திலேயே இத்தனை சிக்கல் என்றால், பாலஸ்தீனைப் பிரிக்கிற விஷயத்தில் எப்படியிருக்கும் என்பதை விவரிக்கவே வேண்டாம்.
பிரிட்டனின் மிகப்பெரிய சிறப்பு அதுதான். அவர்களால் நிறைய பிரச்னைகளை உருவாக்க முடியும். பிரச்னை வரும் என்று தெரிந்தே செய்வார்கள். சிறு தேசங்களில் பிரச்னை இருந்தால்தான் வளர்ந்த நாடுகளின் பிழைப்பு நடக்கும் என்பது ஓர் அரசியல் சித்தாந்தம்.
ஆனால் பாலஸ்தீன் விஷயத்தில் பிரிட்டனின் நிலைப்பாடு மிகத் தெளிவானது. இஸ்ரேலை உருவாக்கவேண்டும். அவ்வளவுதான். பாலஸ்தீன் என்கிற நிலப்பரப்பின் பெரும்பகுதியை அந்தப் புதிய தேசத்துடன் இணைக்கவேண்டும். கடமைக்காக, முஸ்லிம்களுக்கென்றும் கொஞ்சம் நிலம் ஒதுக்கியாக வேண்டும். அப்படி ஒதுக்கும் நிலம் அதிகமாக இருந்துவிடக்கூடாது!
இந்தப் பாசம் யூதர்களுக்குப் புரிந்ததைக் காட்டிலும் முஸ்லிம்களுக்கு மிக நன்றாகப் புரிந்தது. எப்படியிருந்தாலும் இனி தாங்கள் கஷ்டப்பட்டுத்தான் தீரவேண்டும் என்பதை அவர்கள் உணர்ந்தார்கள். பயமும் பதற்றமும் கவலையும் அவர்களைப் பீடித்தன. யார் தங்களுக்கு உதவுவார்கள் என்று உலகெங்கும் தேட ஆரம்பித்தார்கள்.
துரதிருஷ்டவசமாக அன்றைய தேதியில் பாலஸ்தீன் அரேபியர்களுக்கு உதவி செய்ய யாருமே தயாராக இல்லை. அவர்கள் சார்பில் வெறுமனே குரல் கொடுக்கக்கூட யாரும் முன்வரவில்லை. காரணம், உலகப்போரில் அவர்கள் ஹிட்லரை ஆதரித்தவர்கள் என்பதுதான். ஓர் அழிவு சக்திக்குத் துணைபோனவர்கள் என்கிற அழிக்கமுடியாத கறை அன்று முஸ்லிம்களின் மீது படிந்திருந்தது.
உண்மையில் அழிவுக்குத் துணைபோவதா அவர்களின் எண்ணமாக இருந்தது?
மிகவும் கவனமாகச் சிந்தித்துப் பார்க்கவேண்டிய விஷயம். உயிர்போகிற கடைசி வினாடியில் தப்பிக்க ஒரு சிறு சந்து கிடைக்கும் என்று தோன்றினால் நம்மில் எத்தனைபேர் அதைப் பயன்படுத்த விரும்பாமல் இருப்போம்?
அன்றைய நிலைமையில் பாலஸ்தீனில் யூதர்களின் ஊடுருவலைத் தடுக்கவேண்டும் என்பதுதான் முஸ்லிம்களின் முக்கிய நோக்கமாக இருந்தது. அனைத்து மேற்கத்திய நாடுகளும் எப்படியாவது யூதர்களைக் கொண்டுபோய் பாலஸ்தீனில் திணித்துவிடவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டுக்கொண்டிருக்கும்போது ஹிட்லர் ஒருவர்தான் யூதர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்கியிருந்தவர். அந்த ஒரு காரணத்தால்தான் முஸ்லிம்கள் அவரை ஆதரித்தார்கள்.
இதை நியாயப்படுத்த முடியாது; நியாயப்படுத்தவும் கூடாது. அதே சமயம், அத்தனை அர்த்தம், அனர்த்தங்களுடனும் இதனைப் புரிந்துகொள்ளவும் வேண்டும். கண்ணெதிரே சொந்த தேசம் களவாடப்படுகிறது என்பது தெரியும்போது ஏதாவது செய்து காப்பாற்றவேண்டும் என்று விரும்பினார்கள். விரும்பியதில் தவறில்லை. ஆனால் தேர்ந்தெடுத்த வழிதான் தவறாகப்போய்விட்டது.
மிகவும் யோசித்து, திட்டமிட்டுத்தான் பிரிட்டன் பாலஸ்தீனைப் பிரிக்க திட்டம் தீட்டியது. திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு முன்னால் தேசத்தின் நடுப்பகுதிகளில் வசித்துக்கொண்டிருந்த முஸ்லிம்களை, குறிப்பாக கிராமப்பகுதி முஸ்லிம்களை மேற்கு எல்லைக்கு விரட்டுவதற்கான ஏற்பாடுகள் மறுபுறம் மிகத்தீவிரமாக நடக்க ஆரம்பித்தன.
யூத நிலவங்கிகளுக்காக மிரட்டல் மூலம் நிலங்களை அபகரித்துக்கொடுத்த முன்னாள் குண்டர்படைகளின் வம்சாவழிகள் ஆங்காங்கே தோன்ற ஆரம்பித்தார்கள். அவர்கள், ஆயுதங்களுடன் முஸ்லிம் கிராமங்களுக்குள் நுழைந்து, இரவு வேளைகளில் வீடுகளுக்குத் தீவைத்து மக்களை வெளியேற்ற ஆரம்பித்தார்கள். அப்படி அலறி வெளியே ஓடிவரும் முஸ்லிம்களைக் கொல்லாமல், வெறுமனே துரத்திக்கொண்டே போய் ஜோர்டன் நதியின் மேற்குக் கரை வரை சென்று விட்டுவிட்டு வந்தார்கள்.
நல்லவேளை, இந்தச் செயல்கள் அதிகமாக நடைபெறவில்லை. சில ஆயிரம் பேரை மட்டும்தான் அவர்களால் இப்படித் துரத்த முடிந்தது. அதற்குள் முஸ்லிம்கள் தரப்பிலும் சில தாற்காலிக ஆயுதப்படை வீரர்கள் முளைத்து தத்தம் கிராமங்களைப் பாதுகாக்கத் தொடங்கிவிட்டார்கள்.
ஆனால் இதெல்லாமே கொஞ்சநாள்தான். சட்டப்படி என்னென்ன செய்யவேண்டுமோ அத்தனையையும் செய்துமுடித்துவிட்டு, அமைதியாக பிரிட்டன் தன் தீர்மானத்தை அறிவித்தபோது, முஸ்லிம்கள் இறுதியாக நொறுங்கித் தூள்தூளாகிப் போனார்கள்.
நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 29 மே, 2005