1493. நபி (ஸல்) அவர்களிடம் எது கேட்கப்பட்டாலும் ஒருபோதும் அவர்கள் ‘இல்லை’ என்று சொன்னதில்லை என ஜாபிர் (ரலி) கூறக் கேட்டேன்.
1494. ”பஹ்ரைன் நாட்டிலிருந்து (ஸகாத்) பொருள்கள் வந்தால் உனக்கு இன்னின்ன பொருட்களைத் தருவேன்!” என்று நபி (ஸல்) அவர்கள் என்னிடம் கூறியிருந்தார்கள். அவர்கள் மரணிக்கும்வரை பஹ்ரைனிலிருந்து பொருள்கள் வரவில்லை. அபூ பக்ர் (ரலி) அவர்களின் ஆட்சியில் பஹ்ரைனியிலிருந்து பொருள்கள் வந்தபோது, ‘நபி (ஸல்) அவர்கள் யாருக்காவது வாக்களித்திருந்தால் அல்லது யாரிடமாவது கடன்பட்டிருந்தால் அவர் நம்மிடம் வரட்டும்!” என்று அபூ பக்ர் (ரலி) பிரகடனப்படுத்தினார்கள். நான் அவர்களிடம் சென்று ‘நபி(ஸல்) அவர்கள் எனக்கு இன்னின்ன பொருட்களைத் தருவதாகக் கூறியிருந்தார்கள்!” என்றேன். அபூ பக்ர் (ரலி)எனக்குக் கை நிறைய நாணயங்களை அள்ளித் தந்தார்கள். அதை நான் எண்ணிப் பார்த்தபோது ஐநூறு நாணயங்கள் இருந்தன. இதுபோல் இன்னும் இரண்டு மடங்குகளை எடுத்துக் கொள்வீராக!” என்று அபூபக்ர் (ரலி) கூறினார்.
1495. நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் (அவர்களின் மகன் இப்ராஹீம் வளர்ந்து வந்த) அபூ ஸைஃப் என்ற கொல்லரின் வீட்டிற்குச் சென்றோம். அவர் இப்ராஹீமின் பால்குடித் தாயாருடைய கணவராவார். நபி(ஸல்) அவர்கள் இப்ராஹீமைத் தூக்கி முகர்ந்து முத்தமிட்டார்கள். மற்றொரு முறை நாங்கள் வீட்டினுள் நுழைந்தோம். அப்போது இப்ராஹீமின் உயிர் பிரிந்து கொண்டிருந்தது. நபி (ஸல்) அவர்களின் கண்கள் நீரைப் பொழியலாயின. இதைக்கண்ட அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) ‘இறைத்தூதர் அவர்களே! தாங்களா (அழுகிறீர்கள்)?’ எனக் கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘அவ்ஃபின் மகனே! நிச்சயமாக இது கருணையாகும்” என்று கூறிவிட்டு மேலும் தொடர்ந்து அழுதார்கள். பிறகு, ‘கண்கள் நீரைச் சொரிகின்றன் உள்ளம் வாடிக் கொண்டிருக்கிறது. எனினும், இறைவன் விரும்பாத எந்த வார்த்தையையும் நாங்கள் கூற மாட்டோம். இப்ராஹீமே! நிச்சயமாக நாங்கள் உன்னுடைய பிரிவால் அதிகக் கவலைப் படுகிறோம்” என்றார்கள்.
1496. ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘நீங்கள் சிறு குழந்தைகளை முத்தமிடுகிறீர்களா? நாங்களெல்லாம் அவர்களை முத்தமிடுவதில்லை” என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘அல்லாஹ் உம்முடைய இதயத்திலிருந்து அன்பைக் கழற்றிவிட்ட பின்னர் உமக்காக நான் என்ன செய்ய முடியும்?’ என்று கேட்டார்கள்.
1497. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (தம் பேரரான) ஹஸன் இப்னு அலீயை முத்தமிட்டார்கள். அப்போது அவர்கள் அருகில் அமர்ந்துகொண்டிருந்த அக்ரஉ இப்னு ஹாபிஸ்அத்தமீமீ (ரலி), ‘எனக்குப் பத்துக் குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவரைக் கூட நான் முத்தமிட்டதில்லை” என்றார். அவரை ஏறெடுத்துப் பார்த்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ‘அன்பு காட்டாதவர் அன்பு காட்டப் படமாட்டார்” என்று கூறினார்கள்.
1498. (படைப்பினங்களின் மீது) கருணை காட்டாதவர் (படைத்தவனால்) கருணை காட்டப்படமாட்டார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.