1529. இப்ராஹீம் (அலை) அவர்கள், தம் எண்பதாவது வயதில் ‘கத்தூம்’ (எனும் வாய்ச்சி’யின்) மூலமாக விருத்த சேதனம் செய்தார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
1530. (இறந்துவிட்டவற்றுக்கு அல்லாஹ் எப்படி உயிரூட்டுகிறான் என்ற சந்தேகம் இறைத்தூதர்களுக்கு வருவதாயிருந்தால் நாமே இப்ராஹீம(அலை) அவர்களை விடவும் சந்தேகம் கொள்ள அதிகத் தகுதியுடையவர்கள் ஆவோம். (எனவே, சந்தேகப் பட்டு அவர்கள் அப்படிக் கேட்கவில்லை. திருக்குர்ஆனின் படி,) இப்ராஹீம் (அலை) அவர்கள், ‘என் இறைவா! நீ இறந்தவர்களை எப்படி உயிராக்குகிறாய் என்று எனக்குக் காட்டு” என்று கேட்போது அல்லாஹ்? ‘நீங்கள் நம்பிக்கை கொள்ளவில்லையா?’ என்றுகேட்டான். அவர்கள், ‘ஆம்; (நம்பிக்கை கொண்டுள்ளேன்.) ஆனாலும், என் உள்ளம் நிம்மதியடை வதற்காக இப்படிக் கேட்டேன்” என்று பதிலளித்தார்கள். லூத் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் கருணை காட்டுவானாக! அவர்கள் வலுவான ஓர் ஆதரவாளனிடமே தஞ்சம் புகுபவர்களாக இருந்தார்கள். யூசுஃப் (அலை) அவர்கள் சிறையில் கழித்த அளவிற்கு நீண்ட காலத்தை நான் கழிக்க நேர்ந்திருந்தால் (விடுதலையளிக்க அழைத்தவரிடம் (அவரின் அழைப்பை ஏற்று விடுதலையாகிச் செல்ல) ஒப்புக் கொண்டிருப்பேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
1531. இப்ராஹீம் (அலை) அவர்கள் மூன்று பொய்களைத்தவிர வேறு பொய் எதுவும் பேசியதில்லை. அவற்றில் இரண்டு அல்லாஹ்வின் (மார்க்கத்தின் நலன் காக்கும்) விஷயத்தில் சொன்னவையாகும். அவை: 1. (அவரை இணைவைக்கும் திருவிழாவிற்கு மக்கள் அழைத்தபோது,) ‘நான் நோயுற்றிருக்கிறேன்” என்று (அதில் கலந்து கொள்ளாமல் தவிர்ப்பதற்காகக்) கூறியதும். 2. (சிலைகளை உடைத்துப் பெரிய சிலையின் தோளில் கோடரியை மாட்டிவிட்டு மக்கள், ‘இப்படிச் செய்தது யார்?’ என்று கேட்டபோது,’ஆயினும், இவர்களில் பெரியதான இந்தச் சிலை தான் இதைச் செய்தது” என்று கூறியதுமாகும். 3. (மூன்றாவது முறையாகப் பொய் சொன்ன சூழ்நிலை வருமாறு:) ஒரு நாள் இப்ராஹீம் (அலை) அவர்களும் (அவர்களின் துணைவியார்) சாரா (அலை) அவர்களும் கொடுங்கோல் மன்னர்களில் ஒருவனுடைய வழியாகச் சென்றார்கள். அப்போது அந்த மன்னனிடம் (அவர்களைக் குறித்து) ‘இங்கு ஒருவர் வந்திருக்கிறார்: அவருடன் அவரின் அழகான மனைவியும் இருக்கிறாள்” என்று கூறப்பட்டது. உடனே, இப்ராஹீம் (அலை) அவர்களை அழைத்து வரச் சொல்லி அந்த மன்னன் சாரா (அலை) அவர்களை யார் அந்தப் பெண் எனக்கேட்க இப்ராஹீம் (அலை)அவர்கள் இவள் என் சகோதரி என்று கூறி ஸாரா (அலை) அவர்களிடமும் அவனிடம் அவ்வாறே பதிலளிக்க கூறினார். அவன் ஸாரா (அலை) அவர்களைக் கூப்பிட்டு அனுப்பினான். சாரா (அலை) அவர்கள் அவனிடம் சென்றபோது அவன் அவரைத் தன் கையால் அள்ள முயன்றான். உடனே, அவன் (வலிப்பு நோயால்) தண்டிக்கப்பட்டான். அவன் (சாரா (அலை) அவர்களிடம்), ‘அல்லாஹ்விடம் எனக்காக (என் கைகளை குணப்படுத்தும்படி) பிரார்த்தனை செய். நான் உனக்குக் தீங்கு செய்ய மாட்டேன்” என்று சொன்னான். உடனே, சாரா (அலை) அவர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்திக்க, அவன் (வலிப்பிலிருந்து) விடுவிக்கப்பட்டான். பிறகு, இரண்டாவது முறையாக அவர்கள் அணைக்க முயன்றான். முன்பு போன்றே மீண்டும் தண்டிக்கப்பட்டான். அல்லது அதை விடக் கடுமையாகத் தண்டிக்கப்பட்டான். அப்போதும், ‘எனக்காக (என் கைகளை குணப்படுத்தும்படி) அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய். நான் உனக்குத் தீங்கு செய்ய மாட்டேன்” என்று சொன்னான். அவ்வாறே அவர் பிரார்த்திக்க, அவன் (வலிப்பிலிருந்து) விடுவிக்கப்பட்டான். பிறகு, தன் காவலன் ஒருவனை அழைத்து, ‘நீங்கள் என்னிடம் ஒரு மனிதரைக்கொண்டு வரவில்லை. ஒரு ஷைத்தானைத் தான் கொண்டு வந்துள்ளீர்கள்” என்று சொன்னான். பிறகு, ஹாஜிரா அவர்களை, சாரா (அலை) அவர்களுக்குப் பணியாளாகக் கொடுத்தான். சாரா (அலை) அவர்கள், இப்ராஹீம் (அலை) அவர்களிடம் அவர்கள் தொழுது கொண்டிருக்கும்போது வந்தார்கள். இப்ராஹீம் (அலை) அவர்கள் கைகளால் சைகை செய்து,’என்ன நடந்தது?’ என்று கேட்டார்கள். அவர், ‘அல்லாஹ் நிராகரிப்பாளனின் அல்லது தீயவனின் சூழ்ச்சியை முறியடித்து, அவன் மீதே திருப்பி விட்டான். ஹாஜிராவைப் பணிப்பெண்ணாக அளித்தான் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’.'(அபூஹுரைரா (ரலி) கூறினார்:) வான் மழை (பிரதேச) மக்களே! அவர் (ஹாஜிரா)தான் உங்களின் தாயார்.