தனித்து விடப்பட்ட தாயும் மகனும்
இப்ராஹீம் என்றொரு இறைத்தூதர் இருந்தார். அவருக்கு சாரா, ஹாஜர் என்று இரண்டு மனைவிகள் இருந்தனர். இரண்டாம் மனைவி ஹாஜர் அவர்களுக்கு இஸ்மாயீல் என்றொரு ஆண் குழந்தை பிறந்தது. இப்ராஹீம் நபியின் வயோதிக காலத்தில் பிறந்த குழந்தை அது. நீண்ட காலமாக குழந்தை இல்லாமல் இருந்த இப்ராஹீம் நபி, மகன் இஸ்மாயீல் மீது பாசத்தைப் பொழிந்தனர். அல்லாஹ்வின் சோதனை வந்தது. மகன் இஸ்மாயீலையும் அவரது தாயாரையும் கஃபா அமைந்துள்ள பாலைவனப் பிரதேசத்தில் விடவேண்டும் என்று அல்லாஹ்வின் கட்டளை வந்தது. உலகின் பல பாகங்களிலும் மக்கள் தொகைப் பெருகவும், கஃபா எனும் இறை இல்லத்தை புணர் நிர்மானம் செய்யவும் அல்லாஹ் செய்த ஏற்பாடு இது!
அவர் தனது மனைவியையும் மகனையும் அழைத்துக் கொண்டு மக்காவை நோக்கிச் சென்றார். கஃபா அமைந்துள்ள பிரதேசத்தில் அப்போது மக்கள் யாரும் இருக்கவில்லை. இவர் தனது மனைவியை அந்த இடத்தில் விட்டுவிட்டு வரும்போது அவரது மனைவி “என்னையும் பிள்ளையையும் இந்த இடத்தில் விட்டுவிட்டு எங்கே செல்கிறீர்கள். இங்கு மனித சஞ்சாரமே இல்லை. மனிதன் வாழத் தகுதியான எந்த வசதியும் இல்லையே…” என்று கேட்டார். இப்ராஹீம் நபி பதில் சொல்லாமல் செல்லவே “இது அல்லாஹ்வின் கட்டளையா?” எனக் கேட்டார்கள். இப்ராஹீம் நபி ‘ஆம்’ என தலையசைத்தார். ஈமானால் நிரம்பிய உள்ளத்தைப் பெற்ற உறுதிமிக்க அந்தத் தாய் “அப்படியென்றால் அல்லாஹ் எம்மைக் காப்பான்” என்று பதிலளித்தார்கள்.
இப்ராஹீம் நபி மனைவியையும் மகனையும் அந்த இடத்தில் விட்டுவிட்டு உருக்கமாக அல்லாஹ்விடம் பிரார்த்தித்தார்கள்.
யாஅல்லாஹ் எனது சந்ததியை பயிர் பச்சை இல்லாத பள்ளத்தாக்கில் புனிதமான உனது இல்லத்திற்கு அருகில் குடியமர்த்தியுள்ளேன். இங்கே மக்கள் தொழுகை நடத்த வேண்டும். எனவே மக்களில் ஒரு கூட்டத்தை இந்த இடத்தை நோக்கி வரச்செய்வாயாக! இங்கு வசிக்கும் மக்களுக்கு பழங்களைக் கொண்டு உணவளிப்பாயாக! என்று பிரார்த்தித்தார்.
அல்லஹ் இப்ராஹீம் நபியின் பிரார்த்தனையை அங்கீகரித்தான். தாயும் குழந்தையும் அந்த இடத்தில் அல்லாஹ்வை மட்டும் நம்பி இருந்தனர். அங்கு தண்ணீர் இருக்கவில்லை. மகன் இஸ்மாயீல் தாகத்தால் கத்த ஆரம்பித்தார். தாய் தண்ணீர் தேடி அல்லது மக்கள் யாரும் இருக்கிறார்களா எனப் பார்க்க ஸஃபா, மர்வா மலைகள் மீது மாறி மாறி ஏறிப் பார்த்தார். இப்போதுதான் அந்த அதிசயம் நடந்தது. ஜிப்ரீல்(அலை) அவர்கள் வந்து தமது கால் விரலால் கிண்டி விட்டார். தண்ணீரே இல்லாத அந்தப் பாலைவன மணலில் நீர் பீறிட்டு வந்தது. அதுதான் இன்றைய உலக அதிசயங்களில் ஒன்றாக இருக்கும் ‘ஸம் ஸம்’ கிணறாகும். நாள்தோறும் இலட்சக்கணக்கான மக்கள் அதில் நீர் அருந்தியும் அதிலிருந்து கலன் கலன்களாக நீர் எடுத்துச் சென்றும் வற்றாமல் இருக்கும் அற்புற நீரூற்றாகும்.
தாய் அந்தத் தண்ணீரை அணை கட்டி சேகரித்தார்கள். அந்தக் கால மக்கள் நீர்நிலைகளில் தான் குடியேறி வாழ்ந்து வந்தனர். அந்த இடத்தில் நீர் சேர்ந்ததும் வானத்தில் பறவைகள் வட்டமிட்டன. அந்த வழியாக வந்த ஒரு பயணக் கூட்டம் வானில் வட்டமிடும் பறவைகளைக் கண்டனர். இந்தப் பறவைகள் தண்ணீர் உள்ள இடத்தில்தான் வட்டமிடும். எனவே இங்கே தண்ணீர் இருக்கும் என நம்பி அவ்விடம் வந்தனர். தண்ணீரும் இருந்தது. ஒரு தாயும் சேயும் இருந்தனர். வந்த கூட்டத்தினர் அவர்களிடம் அனுமதி கேட்டு அங்கே குடியேறினர். தனிமையாக இருந்த அவர்களுக்கு தனிமை நீங்கியது. அங்கே மக்கள் குடியேற்றம் உருவானது. இஸ்மாயீல் வளர்ந்து பெரியவரானதும் அந்த குடியில் திருமணம் முடித்தார். அதன் மூலம்தான் அரபு இன மக்கள் உருவானார்கள். நமது நபி முஹம்மது(ஸல்) அவர்களும் இந்த சந்ததியில் வந்தவர்கள் தான்.
இஸ்மாயீல் நபி சற்று வளர்ந்த பின்னர் இப்ராஹீம் நபியும் இஸ்மாயீல் நபியும் சேர்ந்து முதல் ஆலயம் கஃபாவைப் புனர் நிர்மாணம் செய்தனர். நாம் ஹஜ், உம்ரா கடமைகளை நிறைவேற்ற அங்குதான் சென்று வருகின்றோம்.
(இப்ராஹீம் நபி பிள்ளையை விட்டுவிட்டு செய்த பிரார்த்தனை அல்குர்ஆனில் 14:37ல் இடம்பெற்றுள்ளது.)