1616. மஸ்ஜிதுந் நபவீயில் (நபித் தோழரும் கவிஞருமான) ஹஸ்ஸான் இப்னு ஸாபித் (ரலி) கவிபாடிக் கொண்டிருக்க, உமர் (ரலி) அங்கு வந்தார்கள். (ஹஸ்ஸான் (ரலி) பள்ளிவாசலில் கவி பாடுவதை உமர் (ரலி) கண்டித்தார்கள்) ஹஸ்ஸான் (ரலி), ‘நான் இந்தப் பள்ளிவாசலில் உங்களை விடச் சிறந்தவர் (நபி (ஸல்) அவர்கள்) இருக்கும்போதே கவிபாடிக் கொண்டிருந்தேன்” என்று கூறிவிட்டு, அபூ ஹுரைரா (ரலி) பக்கம் திரும்பி, ‘அல்லாஹ்வின் பெயரால் உங்களிடம் கேட்கிறேன். (என்னிடம்) இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘(ஹஸ்ஸானே!) என் சார்பாக (எதிரிகளின் வசைக் கவிகளுக்கு) நீங்கள் (கவிகளாலேயே) பதிலளியுங்கள். இறைவா! ஹஸ்ஸானுக்கு ரூஹுல் குதுஸ்(தூய ஆத்மா வானவர் ஜிப்ரீல் அவர்களின்) மூலம் துணை புரிவாயாக!” என்று கூறியதை நீங்கள் செவியுற்றிருக்கிறீர்களா?’ என்று கேட்டார்கள். அதற்கு அபூஹுரைரா (ரலி), ‘ஆம் (செவியுற்றிருக்கிறேன்)” என்று பதிலளித்தார்கள்.
1617. நபி (ஸல்) அவர்கள் ஹஸ்ஸான் (ரலி) அவர்களிடம், ‘எதிரிகளுக்கு (பதிலடியாக) வசைக் கவிதை பாடுங்கள். ஜிப்ரீல் உங்களுடன் (துணையாக) இருப்பார்” என்று கூறினார்கள்.
1618. (ஒரு முறை) நான் ஹஸ்ஸான் (ரலி) அவர்களை ஏசிக் கொண்டே ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்றேன். அவர்கள், ‘அவரைத் திட்டாதே! ஏனெனில், அவர் (எதிரிகளின் வசைப் பாடல்களுக்குத் தக்க பதிலடி கொடுத்து) நபி (ஸல்) அவர்களைப் பாதுகாப்பவராக இருந்தார்” என்று கூறினார்கள்.
1619. (ஒருமுறை) நாங்கள் (அன்னை) ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்றோம். அப்போது அவர்களுக்கு அருகில் (கவிஞர்) ஹஸ்ஸான் இப்னு ஸாபித் (ரலி) அமர்ந்து கவிபாடிக் கொண்டும் தம் பாடல்களால் (ஆயிஷாவை) பாராட்டிக் கொண்டுமிருந்தார்கள். (தம் பாடல்களில்) ஹஸ்ஸான், ஆயிஷா (ரலி) அவர்களைப் பற்றி, ‘(அவர்கள்) கற்பொழுக்கம் மிக்கவர்கள்; கண்ணியம் நிறைந்தவர்கள்; எந்த சந்தேகத்தின் பேரிலும் குற்றம் சாட்டப்பட இயலாதவர்கள். (புறமும் அவதூறும் பேசுவதன் மூலம்) அப்பாவிப் பெண்களின் மாமிசங்களைப் புசித்து விடாமல் பட்டினியோடு காலையில் எழுபவர்கள்” என்று பாடினார்கள். அப்போது ஹஸ்ஸான் அவர்களைப் பார்த்து ஆயிஷா (ரலி), ‘ஆனாலும், நீங்கள் அப்படியல்ல (என்னைப் பற்றி அவதூறு பேசுபவர்களுடன் சேர்ந்து கொண்டு நீங்களும் புறம் பேசினீர்கள்”) என்று கூறினார்கள்.(தொடர்ந்து) அறிவிப்பாளர் மஸ்ரூக் (ரஹ்) கூறினார்: நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், ‘ஹஸ்ஸான் அவர்களைத் தங்களிடம் வர ஏன் அனுமதிக்கிறீர்கள்? அல்லாஹ் (தன்னுடைய வேதத்தில்), ‘அவர்களில் (அவதூறு பரப்புவதில்) பெரும் பங்கு வகித்தவருக்கு கடினமான வேதனையுண்டு” என்று (திருக்குர்ஆன் 24:11ல்) கூறுகிறானே” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘குருடாவதை விடக் கொடிய வேதனை ஏது?’ என்று கூறிவிட்டு, ‘அவர் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சார்பில் பதிலளிப்பவராக அல்லது இறைத்தூதர் சார்பில் (எதிரிகளுக்கு பதிலடியாக) வசைக் கவிபாடுபவராக இருந்தார் என்று கூறினார்கள்.
1620. (முஸ்லிம்களுக்கெதிராக இணைவைப்பவர்கள் வசைபாடிய போது) இணைவைப்பவர்களுக்கெதிராக வசைக் கவிதை பாடுவதற்கு நபி (ஸல்) அவர்களிடம் (கவிஞர்) ஹஸ்ஸான் இப்னு ஸாபித் (ரலி) அனுமதி கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் என் வமிசம் (அவர்களுடன் கலந்திருக்க, அவர்களை வசை பாடுவது; எப்படி?’ என்று கேட்டார்கள். அதற்கு ஹஸ்ஸான் (ரலி), ‘மாவிலிருந்து முடியை உருவியெடுப்பது போல் தங்களை அவர்களிலிருந்து உருவியெடுத்து (வசையிலிருந்து நீக்கி) விடுவேன்” என்று கூறினார்கள்.