நிலமெல்லாம் ரத்தம் – பா. ராகவன் 62
நல்ல, குளிர் மிகுந்த இரவு. வீட்டில் அத்தனை பேரும் இழுத்துப் போர்த்திக்கொண்டு தூங்கிக்கொண்டிருந்தார்கள். துளி சப்தம் இல்லாத சாலையில் எங்கோ தொலைவில் ஒரே ஒரு நாய் மட்டும் ஒரு முறை குரைத்தது. குரைக்கத் தொடங்கிய அந்த நாயின் குரல், ஆரம்பத்திலேயே அடங்கிப்போனது, அரை உறக்கத்தில் இருந்த அந்தச் சிறுவனுக்கு வியப்பளித்தது. நாய் குரைக்கத் தொடங்கினால் ஒரு நிமிடமாவது நீடிக்காதோ? இதென்ன, ஆரம்பத்திலேயே ஓய்ந்துவிட்டது?
அவன் ஒருமுறை புரண்டு படுத்தான். வீதியில் யாரோ நடப்பது போல் இருந்தது. ஒருவரா? இரண்டு பேரா? இல்லை. நிறைய காலடிச் சப்தங்கள் கேட்கின்றன. எப்படியும் பத்துப் பேராவது இருக்கலாம். அவன் நேரம் பார்த்தான். மணி நள்ளிரவைத் தாண்டி நாற்பது நிமிடங்கள் கடந்திருந்தன.
இந்த இரவில், இத்தனை குளிரில் வீதியில் யார் போகிறார்கள்? ஒரே மாதிரி பூட்ஸ் சத்தம். அதுவும் இந்த பூட்ஸ் சத்தம் சாதாரண மக்கள் அணிந்து நடக்கும்போது கேட்கும் சத்தமல்ல. இது ராணுவப்படை பூட்ஸ். அப்படியென்றால்?
கடவுளே! இன்றைக்கு எந்த வீட்டைக் குறி வைத்திருக்கிறார்கள்?
அந்த ஐந்து வயதுச் சிறுவனுக்கு அச்சம் மிகுந்தது. போர்வைக்குள் மேலும் ஒடுங்கிப் படுத்து இழுத்து தலை வரை போர்த்திக்கொண்டான். சில விநாடிகள் கழித்து, பூட்ஸ் சத்தம் நின்றுவிட்டது. மிகவும் அமைதியாக இருந்தது.
இல்லையே, இப்படி இருக்கக்கூடாதே? பூட்ஸ் சத்தம் நின்ற கணத்தில் அழுகைச் சத்தமும் ஓலச் சத்தமும் அல்லவா கேட்கும்? அதானே வழக்கம்? என்ன நடக்கிறது இன்றைக்கு?
அதற்குமேல் அவனால் படுத்துக்கொண்டிருக்க முடியவில்லை. பூனை போல் சத்தமின்றி எழுந்து பின்புறப் படிக்கட்டுக் கதவைத் திறந்து, வீட்டின் மேல்கட்டுக்குப் போனான். ஓசைப்படாமல் ஜன்னலைப் பாதி திறந்து வெளியே பார்த்தான். முதலில் தவறாக ஏதும் தெரியவில்லை. இருளில் சாலையும் உறங்கித்தான் கிடந்தது. கொஞ்சம் கூர்ந்து பார்த்தபோது, வீதியின் முனையில், நடுச்சாலையில் ஒரு நாய் விநோதமாகக் கால்களைப் பரப்பிக் கிடப்பதைக் கண்டான். சற்றுமுன் குரைக்கத் தொடங்கிய நாய். இன்னும் கவனித்துப் பார்த்ததில் அந்த நாயைச் சுற்றிலும் ஈரம் படர்ந்திருந்ததும் அவனுக்குப் புலப்பட்டது.
அப்படியென்றால்? நாய் குரைக்கத் தொடங்கியதும் கொன்றுவிட்டார்களா?
அதிர்ச்சியில் அவனுக்குத் தொண்டை உலர்ந்துவிட்டது. அப்படியே பார்வையை நகர்த்தி வீதி முழுவதையும் பார்த்தான். ஒரு கணம்தான். அவனுக்கு உயிரே போய்விடும்போலிருந்தது.
ராணுவப் படையினர் அன்றைக்கு அவனது வீட்டைத்தான் தேர்ந்தெடுத்திருந்தனர். வீட்டு வாசலில் சுவரோடு சுவராக அணிவகுத்திருந்த கால்களைப் பார்த்துத் திடுக்கிட்டான் அந்தச் சிறுவன். உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு அப்படியே சுவரோடு சரிந்து விழுந்தான்.
சில விநாடிகளில் ராணுவத்தினரின் வேட்டை தொடங்கிவிட்டது.
முதலில் கதவை இடித்தார்கள். திறக்கப்படாத கதவைப் பிறகு துப்பாக்கிகளின் பின்பகுதியால் தட்டி உடைத்து உள்ளே நுழைந்தார்கள். விளக்கைக்கூட அவர்கள் போடவில்லை. படுத்துக் கிடந்தவர்களைக் காலால் எட்டி உதைத்து எழுப்பினார்கள். அலறிக்கொண்டு எழுந்தவர்களை அறைந்து வீழ்த்தினார்கள். டேபிள் கவிழ்க்கப்பட்டது. கண்ணாடிச் சாமான்கள் தூக்கி எறியப்பட்டன. நாற்காலிகள் உடைக்கப்பட்டன. அந்த வீட்டில் நூற்று நாற்பது வருடப் பழைய கடிகாரம் ஒன்று இருந்தது. சுவருக்கு அழகு தரும் மிகப்பெரிய கடிகாரம். அதை ஒரு வீரன் பார்த்தான். உடனே பிடுங்கி எடுத்து வீதியில் வீசி உடைத்தான். பாத்திரங்களைத் தூக்கி அடித்தார்கள். தடுக்க வந்த பெண்களையும் தூக்கி வீதியில் வீசினார்கள். பெட்டிகள், படுக்கைகள், அனைத்தையும் உடைத்துக் கிழித்து வீசியெறிந்தார்கள்.
மாடி அறையில் பதுங்கியிருந்த சிறுவன் சத்தங்கள் மூலமே இவை அனைத்தையும் உணர்ந்தான். உரக்க அழக்கூட முடியவில்லை அவனால். அவர்கள் தம் வேலையை முடித்துவிட்டுத் திரும்பும்போது வீட்டில் எத்தனை உயிர்கள் மிச்சம் இருக்கும் என்பதே அவனது கவலையாக இருந்தது. மாமாவை விட்டு வைப்பார்களா? அத்தை உயிர் பிழைப்பாளா? அவர்களது குழந்தைகள்?
ம்ஹும். எதுவும் நிச்சயமில்லை. இன்றைக்கு இந்த வீடு என்று குறி வைத்தவர்கள், முழுக்க அழித்தொழிக்காமல் திரும்பமாட்டார்கள். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள் அவசியம் கண்விழித்திருப்பார்கள். ஆனால் எழுந்து வந்து உதவி செய்ய யாருக்கும் துணிச்சல் இல்லை. துப்பாக்கி வைத்திருக்கும் ராணுவத்தினர். அவர்களிடம் என்ன செய்துவிட முடியும்?
முக்கால் மணி நேரம் அந்தக் கலவரம் அங்கே நடந்தேறியது. வீட்டில் இருந்த அத்தனை பேரும் – அந்த ஒரு சிறுவனைத் தவிர தாக்கப்பட்டிருந்தார்கள். உயிர் இருக்கிறதா, இல்லையா என்பது கூடத் தெரியவில்லை. இறந்திருப்பார்கள் என்று நினைத்து, வந்த படை ஒரு வழியாகத் திரும்பிப் போனதும் அவன் மெல்ல படியிறங்கிக் கீழே வந்தான்.
மாமாவின் மூக்கருகே கை வைத்துப் பார்த்தான். நல்ல வேளை. சுவாசம் இருக்கிறது. அவனுக்கு நிம்மதி பிறந்தது. திரும்பி வீட்டைப் பார்த்தான். அது சீரடைய எப்படியும் பல மாதங்கள் பிடிக்கும் என்று தோன்றியது. உட்கார்ந்து ஓவென்று அழத் தொடங்கினான்.
பாலஸ்தீனிய விடுதலை இயக்கத் தலைவர் யாசர் அராஃபத், தன் ஞாபகத்தில் இருக்கும் முதல் சம்பவமாக வருணித்த காட்சிதான் மேலே சொன்னது. அந்தச் சிறுவன் அவர்தான். அது, ஜெருசலேத்தில் உள்ள அவரது மாமா வீடு. நள்ளிரவில் வீடு புகுந்து தாக்கியவர்கள், அப்போது பாலஸ்தீனைக் கைப்பற்றி ஆண்டுகொண்டிருந்த பிரிட்டிஷ் படையினர். அராஃபத்துக்கு அப்போது வயது ஐந்து.
அந்த ஐந்தாவது வயது தொடங்கி, தம் வாழ்நாள் முழுவதும் அவர் சுமார் பத்தாயிரம் கலவரங்களைக் கண்ணெதிரே பார்த்திருக்கிறார். பல லட்சம் உயிர்கள் பலியாவதைக் கண்டிருக்கிறார். நூற்றுக்கணக்கான வீடுகள் இடிக்கப்பட்டு, தரைமட்டமாக்கப்பட்டதைப் பார்த்திருக்கிறார். ஆயிரமாயிரம் மக்கள் அகதிகளாக, இருக்க இடமின்றிப் பாலைவனங்களில் அலைந்து திரிந்ததைக் கண்டு ரத்தக்கண்ணீர் விட்டிருக்கிறார். ஒரு துண்டு ரொட்டிக்காகத் தம் இனத்து மக்கள் பல மைல்கள் நடந்து, பிச்சைக்காரர்கள் போல் நடத்தப்பட்ட காட்சிகளைப் பார்த்திருக்கிறார். பாடப் புத்தகங்களைத் தூக்கிக்கொண்டு பள்ளிக்கூடங்களுக்குப் போகவேண்டிய குழந்தைகள், நாட்டுத்துப்பாக்கி ஏந்தி போர்க்களம் காணவேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுவதன் ஆதாரக் காரணம் என்னவென்று சிந்திக்க ஆரம்பித்தபோதுதான் அராஃபத்துக்குள் இருந்த போராளி கண் விழித்தான். அவருக்குள் இருந்த தலைவன் சீற்றம் கொண்டான்.
வேறு வழியே இல்லாமல்தான் அராஃபத் துப்பாக்கி ஏந்தினார். இறக்கும்வரை ஏந்திய துப்பாக்கியை அவரால் இறக்கி வைக்கவே முடியவில்லை.
பாலஸ்தீனப் போராட்டத்தின் மிக முக்கிய அத்தியாயம், யாசர் அராஃபத். அவரைப் பற்றிப் பார்க்கும்போது முதலில் நாம் கவனித்து உள்வாங்கிக்கொள்ள வேண்டிய விஷயம், அராஃபத் பாலஸ்தீனில் பிறந்தவர் இல்லை என்பது!
அராஃபத், எகிப்தில் கெய்ரோவில் பிறந்தவர். அவரது தந்தை அங்கே ஒரு சுமாரான துணி வியாபாரி. தாய் வழியில்தான் பாலஸ்தீனத் தொடர்பு அவருக்கு வருகிறது. அராஃபத்தின் அம்மாவின் பூர்வீகம் ஜெருசலேம். இதை ஒரு முக்கியக் குறையாகச் சுட்டிக்காட்டி, அராஃபத்துக்கு பாலஸ்தீனம் மீது உண்மையிலேயே அக்கறை கிடையாது; சம்பாதிப்பதற்காகத்தான் அவர் போராளியானார் என்று குற்றம்சாட்டுவோர் உண்டு. பின்னாளில் அவரது சொத்துகள் என்று கணக்கெடுக்கப்பட்டவற்றைச் சுட்டிக்காட்டி, ‘அப்போதே சொன்னோமே கேட்டீர்களா’ என்று கேலி செய்தோரும் உண்டு.
ஆனால், இஸ்லாத்தில் தந்தையைக் காட்டிலும் தாய்வழி உறவுக்குத்தான் மதிப்பு அதிகம். தாய்வழிப் பூர்வீகம்தான் அந்தக் காலத்தில் பாலஸ்தீனில் முக்கிய உறவுத் தொடர்புச் சங்கிலியாக அறியப்பட்டது. அந்த வகையில் அராஃபத்தின் பூர்வீகம் ஜெருசலேம்தான் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால் அவர் ஜெருசலேத்தில் பிறந்தவர் அல்லர்; எகிப்தில்தான் பிறந்தார் என்பதிலும் சந்தேகமும் இல்லை.
அராஃபத்துக்கு ஐந்து வயதானபோது அவரது தாய் இறந்துவிட்டார். ஆகவே குழந்தை தாய்மாமன் வீட்டில் வளர்வது நல்லது என்று உறவினர்கள் முடிவு செய்து அவரை ஜெருசலேத்துக்குக் கொண்டுவந்து விட்டார்கள். அப்படி வந்தபோதுதான் முன்னர் நாம் பார்த்த அந்த நள்ளிரவுக் கலவரச் சம்பவம் நடந்தது.
சுமார் நான்கு வருடங்கள்வரை அராஃபத், மாமா வீட்டில், ஜெருசலேத்தில் இருந்தார். அதாவது ஒன்பது வயது வரை. அந்த நான்கு வருட காலமும் அவருக்கு ஜெருசலேம் நகரம் ஒரு வினோதமான பிராந்தியமாகவே தெரிந்தது. திடீர் திடீரென்று குண்டுகள் வெடிக்கும். திடீர் திடீரென்று கடையடைப்பு நடக்கும். எதிர்பாராத நேரங்களில் ராணுவ அட்டகாசம் ஆரம்பமாகும்.
ஒரு பக்கம், புனித பூமி என்று கண்மூடி, கையேந்தித் தொழுதுகொண்டு, இன்னொரு பக்கம் அச்சத்துடன்தான் அங்கே வாழமுடியும் என்கிற நிலைமை, சிறுவன் அராஃபத்துக்குப் புரியவில்லை. ஒன்று மட்டும் தெளிவாகப் புரிந்தது. வாழ்க்கை என்பது போராட்டம். உணவுக்காக, உறைவிடத்துக்காக, ஊருக்காக என்று மட்டுமில்லை. வாழ்வதென்பதே போராட்டம்தான் என்று அவருக்குத் தோன்றியது. தன்னால் முழு அக்கறை செலுத்திப் பள்ளிப் பாடங்களைப் படிக்க முடியாது என்றும் நினைத்தார். பாதுகாப்புக்கு ஒரு குறுவாளாவது இல்லாமல் வெளியே போகமுடியாது என்கிற நிலைமையில், பாடங்கள் எப்படி ஏறும்?
மனத்தளவில் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தார் அராஃபத். எப்போதாவது கெய்ரோவில் உள்ள தமது மூத்த சகோதரிக்குக் கடிதங்கள் எழுதுவார். ஜெருசலேத்தில் தன்னால் சமநிலையுடன் வாழமுடியவில்லை என்று அக்கடிதங்களில் மிகவும் வருத்தப்படுவார். இங்கே மக்கள் படும் பாடுகளைப் பார்த்தால் நாளெல்லாம் உட்கார்ந்து கதறித் தீர்க்கலாம் போலிருக்கிறது என்று ஒரு கடிதத்தில் எழுதியிருக்கிறார்.
இதனை முற்றிலும் தவறாகப் புரிந்துகொண்ட அராஃபத்தின் சகோதரி, தன் தந்தையிடம் சொல்லி, அராஃபத்தை கெய்ரோவுக்கே அழைத்துக்கொண்டுவர ஏற்பாடு செய்துவிட்டார். அராஃபத்துக்கு உண்மையில் ஜெருசலேத்தை விட்டுப் போவதில் விருப்பம் இல்லை. வாழ்வது சிரமம் என்று நினைத்தாரே தவிர, ஓடிவிட நினைக்கவில்லை. ஆனால், அவரது தந்தை திடீரென்று ஒருநாள் வந்து அவரை மீண்டும் கெய்ரோவுக்கே அழைத்துப் போய்விட்டார்.
கெய்ரோவில் அராஃபத் தன் மூத்த சகோதரியின் பராமரிப்பில் வளரத் தொடங்கினார். ஏனோ அவருக்குத் தன் சகோதரியைப் பிடித்த அளவுக்கு அப்பாவைப் பிடிக்கவில்லை. இதற்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.
யாசர் அராஃபத்தின் தந்தை ஒரு சரியான வியாபாரி. வியாபாரம் ஒன்றைத்தவிர அவருக்கு வேறு எதிலும் நாட்டம் கிடையாது. மக்கள் கஷ்டப்படுகிறார்கள் என்றெல்லாம் அவர் எண்ணிக் கவலைப்படுகிறவர் இல்லை. தன் தொழில், தன் பணம், தன் சந்தோஷம் என்று மட்டுமே நினைக்கக் கூடியவர் என்பதால்தான் அராஃபத்துக்கு அவரைப் பிடிக்காமல் போனது என்று சிலர் சொல்கிறார்கள்.
வேறொரு சாரார் கருத்துப்படி அராஃபத்தின் தந்தைக்குப் பல வீடுகள் உண்டு. அதாவது பல மனைவிகள். இதுவும் சிறுவன் அராஃபத்தின் மனத்தை மிகவும் பாதித்தது; அதனால்தான் அவர் தன் தந்தையை வெறுத்தார் என்போரும் உண்டு. தன்னுடைய அம்மா இறந்தது பற்றிய எந்த வருத்தமும் இல்லாமல், அப்பா பல பெண்களுடன் வாழ்கிறாரே என்கிற வெறுப்பு அவருக்கு அந்த வயதில் ஏற்பட்டிருக்கலாம் என்கிறார்கள்.
மூன்றாவது காரணம், அவரது அப்பா ஒரு முசுடு என்பது. குழந்தை என்று அன்பாகத் தூக்கி ஒரு முறை கூடக் கொஞ்சாதவர் என்பதால் பிறந்ததிலிருந்தே அராஃபத்துக்குத் தந்தைப் பாசம் இல்லாமலேயே போய்விட்டது என்று சொல்கிறார்கள்.
என்ன காரணம் என்று சரியாகத் தெரியவில்லை. ஆனால் 1952-ல் அராஃபத்தின் தந்தை இறந்தபோது, இறுதிச் சடங்குக்குக்கூட அராஃபத் போகவில்லை. அந்தளவுக்கு அவருக்குத் தமது தந்தையுடன் உறவு நிலை சரியாக இருந்ததில்லை என்பது மட்டும் தெரிகிறது.
அராஃபத் முதல் முதலாகத் தமது பதினாறாவது வயதில் ஒரு துப்பாக்கியைத் தொட்டுப் பார்த்தார். அப்போது அவர் கெய்ரோவில் படித்துக்கொண்டிருந்தார். மனம் முழுக்க ஜெருசலேத்திலும் உடல் மட்டும் கெய்ரோவிலுமாக வாழ்ந்துகொண்டிருந்த அராஃபத்துக்கு அப்போது ஒரு சுமாரான உள்ளூர் புரட்சிக் குழுவுடன் தொடர்பு ஏற்பட்டது. பாலஸ்தீனில் பிரிட்டிஷ் ராணுவத்தை விரட்டுவதற்காகப் போராடிக்கொண்டிருந்த அரேபியர்களுக்கு ஆயுத உதவி செய்வதற்கென்று உருவான குழு அது.
எகிப்திலிருந்த ஆயுத வியாபாரிகளிடமிருந்து கழித்துக் கட்டப்பட்ட துப்பாக்கிகளை வாங்கி, அவற்றைச் சரிசெய்து, பழுதுபார்த்து, ஜெருசலேத்துக்குக் கடத்துவது அவர்கள் வேலை.
நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 26 ஜூன், 2005