Featured Posts

யூதர்கள் நபி (ஸல்) அவர்களிடம் ரூஹ் பற்றி வினவியது.

1780. அவர்கள் மதீனாவில் மக்கள் சஞ்சாரம் இல்லாத ஒரு பாழ் வெளியில் சென்றபோது அவர்களுடன் நானும் சென்று கொண்டிருந்தேன். அப்போது யூதர்களின் குழு ஒன்றைஅவர்கள் கடந்து சென்றார்கள். அப்போது அவர்களில் ஒருவர் மற்றவரிடம் ‘ரூஹை (உயிர்) பற்றி அவரிடம் கேளுங்கள்’ என்றார். அவர்களின் இன்னொருவர் ‘அவரிடம் அதைப் பற்றிக் கேட்காதீர்கள்; உங்களுக்குப் பிடிக்காத எதையும் அவர் சொல்லப் போவதில்லை என்றார். அவர்களில் மற்றொருவரோ, ‘(இல்லை!) இறைவன் மீது ஆணையாக நாம் (அதைப்பற்றி) அவரிடம் கேட்டே விடுவோம்’ என்றார். (முடிவில்) அவர்களில் ஒருவர் எழுந்து,’அபுல்காஸிம் அவர்களே! ரூஹு என்றால் என்ன? என்று கேட்டார். உடனே நபி (ஸல்) அவர்கள் மௌனமானார்கள். ‘அவர்களுக்கு இறைவனிடமிருந்து இப்போது செய்தி அறிவிக்கப்படுகிறது’ என்று என்னுடைய மனதிற்குள் நினைத்தபடி நான் நின்று கொண்டிருந்தேன். (இறைச் செய்தி வரும்போது ஏற்படும் சிரமம் விலகி) அவர்கள் தெளிவடைந்தபோது ‘(நபியே!) உம்மிடம் அவர்கள் ரூஹைப் பற்றிக் கேட்டார்கள். ரூஹு என்பது என் இறைவனுடைய கட்டளையைச் சார்ந்ததாகும். ஞானத்தில் (மிகக்) குறைந்த அளவே தவிர அவர்கள் கொடுக்கப் படவில்லை என்று நீர் (பதில்) கூறும்!’ (திருக்குர்ஆன் 17:85) என்று (திருக்குர்ஆன் வசனத்தை) கூறினார்கள்”.

புஹாரி : 125 அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி).

1781. நான் அறியாமைக் காலத்தில் கருமானாக இருந்தேன். ஆஸ் இப்னு வாயில் என்பவன் எனக்குக் கடன் தர வேண்டியிருந்தது. அதை வாங்குவதற்காக அவனிடம் நான் சென்றேன். அப்போது அவன், ‘நீ முஹம்மதை நிராகரிக்காமல் (ஏற்றுக் கொண்டு) இருக்கும்வரை (உன்னிடம் வாங்கிய கடனை) உனக்குத் (திருப்பித்) தரமாட்டேன்!”என்றான். நான் ‘அல்லாஹ் உன்னை மரணிக்கச் செய்து, திரும்ப நீ எழுப்பப்படும் வரை நான் முஹம்மதை நிராகரிக்க மாட்டேன்!’ எனக் கூறினேன். அதற்கவன் ‘நான் மரணித்து எழுப்பப்படும்வரை என்னை விட்டுவிடு! அப்போது பொருட் செல்வமும் குழந்தைச் செல்வமும் எனக்கு வழங்கப்படும்; அப்போது உன் கடனை நான் தீர்த்து விடுகிறேன்!” என்றான். அப்போதுதான் ‘நம்முடைய வசனங்களை நிராகரித்து, ‘(மறுமையிலும்) எனக்கு நிச்சயமாக பொருட் செல்வமும் குழந்தைச் செல்வமும் வழங்கப்படும்!’ என்று கூறியவனை (நபியே!) நீர் பார்த்தீரா? (பின்னர் நடக்கவிருக்கும்) மறைவான விஷயத்தை அவன் முன்கூட்டியே தெரிந்து கொண்டானா? அல்லது (இப்படியெல்லாம் தனக்கு வழங்கப்பட வேண்டுமென்று) கருணையாளனான இறைவனிடத்திலிருந்து உறுதிமொழி (ஏதேனும்) பெற்றிருக்கிறானா?’ என்ற (திருக்குர்ஆன் 19:77, 78) இறைவசனம் அருளப்பட்டது!”.

புஹாரி :2091 கப்பாப் (ரலி).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *