நிலமெல்லாம் ரத்தம் – பா. ராகவன் 68
அமெரிக்க டாலரை ‘ரிசர்வ் கரன்ஸி’ என்பார்கள். மதிப்பு மிக்க நாணயம். எண்ணெய், தங்கம் போன்ற விலை மதிப்பு மிக்க பொருள்களின் வர்த்தகம், சர்வதேச அளவில் டாலரில்தான் நடக்கும். மற்ற தேசங்களின் கரன்ஸி எத்தனை மதிப்பு மிக்கது என்பதை அமெரிக்க டாலருடன் ஒப்பிட்டுத்தான் சொல்வது வழக்கம். அதாவது, ‘அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு’ என்று சொல்லப்படுவதைக் கேட்டிருப்பீர்கள் அல்லவா? அதுதான்.
அமெரிக்க டாலரைக் காட்டிலும் இன்றைக்கு ‘யூரோ’வின் மதிப்பு அதிகம். ஜப்பானின் ‘யென்’, ஸ்விட்சர்லாந்தின் ‘ஸ்விஸ் ஃப்ராங்க்’, இங்கிலாந்தின் ‘பவுண்ட் ஸ்டெர்லிங்’ ஆகியவையும் மதிப்பு மிக்க நாணயங்கள்.
இந்த நாணயங்களெல்லாம் சமீப காலத்தில் மதிப்பு பெற்றவை. ஐம்பதுகளில் அமெரிக்க டாலர் ஒன்றுதான் ‘ரிசர்வ் கரன்ஸி’. ஒவ்வொரு தேசமும் தனது அந்நியச் செலாவணியாக எத்தனை டாலர்கள் வைத்திருக்கிறது என்பதைக் கொண்டு அதன் பொருளாதார நிலைமை மதிப்பிடப்படும். அது மட்டுமில்லாமல், எந்த தேசமும் தான் இறக்குமதி செய்துகொள்ளும் எந்தப் பொருளுக்கும் அமெரிக்க டாலரில் விலை கொடுக்குமானால் கணிசமான தள்ளுபடி கிடைக்கும்! காரணம், அந்த தேசத்தின் அந்நியச் செலாவணி டாலரில் கிடைக்கிறதல்லவா, அதனால்தான்!
இந்த ‘ரிஸர்வ் கரன்ஸி’ அந்தஸ்தை வைத்துக்கொண்டுதான் அமெரிக்கா அன்றைக்கு பிரிட்டனை மிரட்டியது.
‘மரியாதையாக சூயஸ் யுத்தத்தை நிறுத்துகிறீர்களா? அல்லது, நான் என் ரிசர்வ் கரன்ஸி முதலீடுகளை நிறுத்திக்கொள்ளவா?’
இதுதான் மிரட்டல். மிரட்டியதோடு அமெரிக்கா நிற்கவில்லை. கொஞ்சம் பயமுறுத்தும் விதத்தில் ஓரளவு தன்னுடைய முதலீடுகளையும் முடக்கிவைத்தது. இதனால் ஒரே நாளில் பிரிட்டனின் ‘பவுண்ட்’ மதிப்பு தடதடவென்று சரிந்தது. நாணயத்தின் மதிப்பு சரிந்தால் நாடே சரிகிறது என்று அர்த்தம்.
ஆகவே பிரிட்டனின் அன்றைய பிரதமர் ஆண்டனி ஈடன் வலுக்கட்டாயமாக ராஜினாமா செய்யவேண்டியதானது. அவசரமாக பிரிட்டிஷ் பாராளுமன்றம் கூடி, எகிப்திலிருந்து படைகளை வாபஸ் பெற முடிவு செய்தது. இது நடந்தது மார்ச் 1957-ல்.
இதற்குச் சில தினங்கள் முன்னதாக கனடாவின் அன்றைய வெளிவிவகாரத் துறை அமைச்சராக இருந்த லெஸ்டர் பியர்ஸன் (Lester Pearson) என்பவர் ஐக்கிய நாடுகள் அமைப்புக்கு நேரில் சென்று, சூயஸ் விவகாரத்துக்கு ஒரு முடிவு காண ஒரு தனி நபர் போராட்டத்தை நடத்தினார்.
‘சூயஸ் கால்வாய் எல்லா தேசங்களுக்கும் பொதுவானதாக இருப்பதன் பொருட்டு, ஐ.நா.வே ஒரு பாதுகாப்புப் படையை உருவாக்கி எகிப்துக்கு அனுப்பவேண்டும்’ என்பது கனடாவின் கோரிக்கை. ‘அரசியல் ரீதியிலான தீர்வு ஒன்று காணப்படும்வரை, ஐ.நா.வின் இந்த அதிரடிப்படை சூயஸ் கால்வாய்க் கரையில் முகாமிட்டு உட்கார்ந்தால்தான் வர்த்தகம் தடைபடாமல் இருக்கும்’ என்று பியர்ஸன் எடுத்துச் சொன்னார்.
நீண்ட வாக்குவாதங்களுக்குப் பிறகு ஐக்கியநாடுகள் சபை இந்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு எகிப்துக்கு ஒரு ராணுவத்தை அனுப்பியது. அமைதிப்படையாகத்தான் அனுப்பப்பட்டதென்றாலும் ஆயுதங்களுடன்தான் போனார்கள். (மிகுந்த சாதுர்யமும், அரசியல் முக்கியத்துவமும் வாய்ந்த இந்த யோசனைக்காகவே லெஸ்டர் பியர்ஸனுக்கு 1957-க்கான நோபல் அமைதிப் பரிசு வழங்கப்பட்டது. இன்றைக்கு உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப் படைப்பிரிவைத் தோற்றுவித்தவரே இவர்தான்.)
எகிப்தின் சூயஸ் கால்வாய் விவகாரம், உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டிய விஷயங்கள் பல. அவற்றுள் முக்கியமானது, ‘உலகின் மிகப்பெரிய சக்தி என்கிற அந்தஸ்திலிருந்து பிரிட்டன் இறங்கிவிட்டது’ என்பது. உண்மையிலேயே பெரிய சக்தி அமெரிக்காதான் என்பது நிரூபணமானதும் அப்போதுதான். அமெரிக்காவுக்கு நிகராக வைத்துப் பேசுவதற்கு சோவியத் யூனியன்தான் இருக்கிறது என்பதும் அப்போது நினைவுகூரப்பட்டது.
இதைக் காட்டிலும் முக்கியமாக உலகம் கவனித்த விஷயம் ஒன்றுண்டு. நாசர் என்கிற நபர் எத்தனை சக்திமிக்கவர் என்பதுதான் அது! இந்த சூயஸ் கால்வாய் விவகாரத்தில் எகிப்து ராணுவ ரீதியில் தோல்வி கண்டிருந்தபோதும் மத்தியக் கிழக்கின் ஒரே ஹீரோ அவர்தான் என்று அத்தனை நாடுகளும் அடித்துச் சொல்லிவிட்டன.
குறிப்பாக அன்றைய தேதியில் மத்தியக் கிழக்கில் சொல்லிக்கொள்ளும்படியான தலைவர் யாரும் இல்லாத காரணத்தால், நாசரின் இந்தத் துணிச்சலும் வீரமும் வெகுவாகப் புகழப்பட்டன. நாசரை மையமாக வைத்து, செத்துக்கொண்டிருந்த ‘இஸ்லாமிய சகோதரத்துவத்துக்கு’ உயிர் கொடுக்க முடியுமா என்று பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.
அத்தனை முஸ்லிம் நாடுகளும் தன்னை இப்போது ஆதரிக்கின்றன என்பதைக் கண்டுகொண்ட நாசர் இன்னும் ஒரு படி மேலே சென்று, ‘எகிப்தில் உள்ள அத்தனை யூதர்களும் உடனடியாக வெளியேற வேண்டும்’ என்று ஓர் அறிவிப்பு வெளியிட்டார்.
இது இஸ்ரேலுக்கு குலைநடுக்கம் ஏற்படுத்தியது. ஏனெனில் அன்றைய தேதியில் எகிப்தில் சுமார் முப்பதாயிரம் யூதர்கள் இருப்பார்கள் என்று இஸ்ரேல் நினைத்தது. (உண்மையில் இருபத்தைந்தாயிரத்துக்குச் சற்று அதிகமானோர் இருந்தார்கள்.) யுத்தத்தின் விளைவாக, அவர்கள் எந்த நாட்டுக்குப் போனாலும் யாரும் ஏற்கமாட்டார்கள் என்பதால் அத்தனை பேரும் எல்லை தாண்டி இஸ்ரேலுக்குள்தான் வர நினைப்பார்கள்.
இஸ்ரேல், தன்னுடைய சொந்தக் குடிகளை ஏற்பதற்கு எக்காலத்திலும் தயக்கம் காட்டியதில்லை என்றபோதிலும் முப்பதாயிரம் பேருக்கு உடனடியாகத் தங்குமிடம், உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு அப்போது தயாராக இல்லை. காரணம், யுத்த இழப்புகள்.
ஆனாலும் வேறு வழியில்லை என்று கரம் நீட்டி வரவேற்க சினாய் எல்லையில் தயாரானது இஸ்ரேல் ராணுவம்.
இருபத்தைந்தாயிரம் பேர். அத்தனை பேரும் இரவோடு இரவாக எகிப்திலிருந்து நாடுகடத்தப்பட்டார்கள். அது தவிர இன்னும் ஓராயிரம் (சிலர் ஆயிரத்து ஐந்நூறு என்கிறார்கள்.) பேரை நாசர் ‘சந்தேகத்தின் பேரில்’ சிறையில் அடைத்தார். சில நூறுபேர், சித்திரவதைக் கூடங்களுக்கு அனுப்பப்பட்டதாகவும் ஒரு வதந்தி உண்டு.
இந்தச் செய்திகள் வெளியே வந்தபோது ஒட்டுமொத்த அரபு உலகமும் நாசரைத் தலையில் தூக்கிவைத்துக்கொண்டு கொண்டாட ஆரம்பித்துவிட்டது. இஸ்ரேலின் கொட்டங்களை அடக்குவதற்கு நாசர்தான் ஒரே சரியான ஆள் என்று பேசினார்கள்.
உலகம் இதையெல்லாம் எவ்வாறு பார்த்தது என்பதைவிட, நடந்த சம்பவங்களை இஸ்ரேல் அன்று எப்படிப் பார்த்தது என்று கவனிக்க வேண்டியது மிகவும் முக்கியம். ஏற்கெனவே அமெரிக்காவின் ஆதரவு இஸ்ரேலுக்கு இருந்தது. இந்த சூயஸ் விவகாரத்துக்குப் பிறகு, அமெரிக்காதான் அடுத்த வல்லரசு என்று அத்தனை தேசங்களும் எழுந்து நின்று தலைதாழ்த்தி வணக்கம் சொன்னபோது, ஒரு நண்பனாக அமெரிக்காவின் தோளில் தட்டிக்கொடுத்து தன்னுடைய நெருக்கத்தை இன்னும் வெளிப்படையாகக் காட்டிக்கொள்ள ஆரம்பித்தது இஸ்ரேல். அதன்மூலம் எகிப்து என்ன பயமுறுத்தினாலும் தனக்கு அதனால் பாதிப்பு ஏதுமில்லை என்று சொல்லாமல் சொன்னது.
எகிப்து விஷயத்தில் இஸ்ரேல் எக்கேடு கெட்டாலும் அதன் அமெரிக்கச் சார்பு நிலை நிச்சயம் சோவியத் யூனியனுக்கு எரிச்சல் தரும் என்பதை இஸ்ரேலியர்கள் உணராமல் இல்லை. ஆனாலும் சோவியத் யூனியன் ஒருபோதும் தன்னை ஆதரிக்காது என்றே இஸ்ரேல் நம்பியது.
இஸ்ரேல் எதிர்பார்த்தது ஒரு தோள். சாய்ந்துகொள்வதற்கான தோள். அவர்களால் சுயமாக யுத்தம் செய்ய முடியும். யுத்தத்துக்குத் தேவையான ஆயுதங்களைக்கூட அவர்களே உற்பத்தி செய்துகொள்வார்கள். பண உதவியைக் கூட இஸ்ரேல் பெரிதாக எதிர்பார்க்கவில்லை. உழைப்பின் மூலம் வேண்டிய பணத்தைத் தானே சம்பாதித்துக்கொள்ள முடியும் என்பதுதான் அன்றைக்கும், இன்றைக்கும், என்றைக்குமே இஸ்ரேலின் சித்தாந்தம்.
ஆனால் அவர்களுக்கு ஒரு தார்மீக ஆதரவு வேண்டியிருந்தது. யாராவது ஒரு பெரிய சக்தி தனக்காகக் குரல் கொடுக்கவேண்டும் என்று எதிர்பார்த்தார்கள். அந்த சக்தி ஓர் அயோக்கிய சக்தியாக இருந்தால்கூடப் பாதகமில்லை. ஆனால் பெரிய சக்தியாக இருக்கவேண்டும். மத்தியக் கிழக்கில் இஸ்ரேல் ஜீவித்திருப்பதென்பது, சிங்கத்தின் குகையில் ஓர் ஓரத்தில் குடிசை போட்டுக்கொண்டு வாழ்வது மாதிரிதான். எந்த நிமிஷம் யார் பாய்வார்கள் என்று சொல்லமுடியாது. இதோ எகிப்து இன்றைக்கு வேலையைக் காட்டிவிட்டது. நாளைக்கு ஜோர்டன் தாக்கலாம். ஈராக் யுத்தத்தை ஆரம்பிக்கலாம். கழுத்தில் இருக்கும் கத்தியான சிரியா அடிக்க வரலாம். அவ்வளவு ஏன், அத்தனை பேருமே சேர்ந்துகூட சண்டைக்கு வரலாம். இதற்கெல்லாம் ஒரு காரணம்கூட வேண்டாம். எதாவது கேட்டால் பாலஸ்தீனிய அரேபியர்களுக்கு ஆதரவாகப் போர் என்று சுலபமாகச் சொல்லிவிட முடியும்.
என்ன ஆனாலும் தன்னை ஆதரிக்க இஸ்ரேலுக்கு ஒரு பெரிய ஆதரவு சக்தியாக அமெரிக்கா இருக்கும் என்று உறுதியானது அப்போதுதான்.
அமெரிக்காவைப் பொறுத்தவரை இஸ்ரேலை ஆதரிப்பதற்கான காரணங்கள் மிகவும் எளிமையானவை. ஒன்று, இஸ்ரேலை சோவியத் யூனியன் ஆதரிக்கவில்லை என்பது. இரண்டாவது, மத்தியக் கிழக்கில் தனக்கொரு தளமாக இஸ்ரேல் இருக்கும் என்கிற நம்பிக்கை. திகட்டத் திகட்டப் பொருளாதார உதவிகள், ஆயுத உதவிகளை அளித்துக்கொண்டிருப்பதன் மூலம் இஸ்ரேலைத் தன்னுடைய குட்டிக் காலனி மாதிரியே அமைத்துக்கொண்டு, அங்கிருந்து அனைத்து எண்ணெய் தேசங்களையும் கண்காணிக்கலாம் என்பது அமெரிக்காவின் எண்ணம்.
என்ன முயன்றாலும் சோவியத் யூனியனுடன் முஸ்லிம் நாடுகளை ஒட்டவைக்க முடியாது என்று அன்றைய அமெரிக்க அதிபர் ஐசனோவர் திட்டவட்டமாகக் கருதினார். எங்காவது, எதிலாவது அவர்கள் முட்டிக்கொள்ள நேரிடும் என்பதே அவரது எண்ணம். ஆகவே, மத்தியக் கிழக்கில் காசு பண்ணுவதற்குத் தான் இஸ்ரேலை ஆதரிப்பது லாபகரமான முடிவாகவே இருக்கும் என்று அமெரிக்கா நினைத்தது. தவிரவும் இஸ்ரேலில் எண்ணெய் கிடையாது. இன்னும் கொஞ்சம் நகர்ந்து கிழக்கே போனால்தான் எண்ணெய். ஆகவே, இஸ்ரேலில் காசு பண்ணுகிறது அமெரிக்கா என்றும் யாரும் குற்றம் சொல்ல முடியாது.
என்ன அழகான திட்டம்!
அன்று தொடங்கி, இஸ்ரேல் ராணுவம், இஸ்ரேல் வர்த்தகம், இஸ்ரேல் பொருளாதாரம் ஆகிய மூன்று அம்சங்கள் எப்படியெப்படி இருக்க வேண்டும் என்று தீர்மானிக்கும் ஒரு நிழல் சக்தியாக அமெரிக்கா ஆகிப்போனது.
தனது முதல் கட்டளையாக, எகிப்திடமிருந்து இஸ்ரேல் கைப்பற்றிய சினாய் பகுதியிலிருந்து இஸ்ரேலிய ராணுவத்தை வாபஸ் பெற்றுக்கொள்ளும்படி ரகசியமாகக் கேட்டுக்கொண்டது.
ஒரு துண்டு நிலம் என்னவிதமான பிரச்னைகளை உருவாக்கும் என்று சொல்லமுடியாதல்லவா? அமெரிக்காவின் நீண்டநாள் திட்டங்களுக்கு அந்த ஒரு மாநிலமே கூடத் தடையாக இருக்கலாம். இஸ்ரேலுக்கே அது ஒரு நிரந்தரத் தலைவலிப் பிராந்தியமாகிவிடக்கூடும்.
இதையெல்லாம் யோசித்துத்தான் சினாயை எகிப்திடமே திரும்பக் கொடுத்துவிடலாம் என்று முடிவானது.
1957-ம் ஆண்டு இறுதியில் இஸ்ரேல், சினாயில் இருந்த தன்னுடைய ராணுவத்தைக் கட்டக்கடைசியில் மொத்தமாக வாபஸ் பெற்றுக்கொண்டது. மீண்டும் அங்கே எகிப்து ராணுவம் வந்து உட்கார்ந்துகொண்டது.
எல்லையில் வலுவான வேலி போடப்பட்டது. இங்கேயும் நிலம்தான். அங்கேயும் நிலம்தான். சமதளமும் கூட. ஆனாலும் நடுவில் கண்ணுக்குத் தெரியாத மிகப்பெரிய பள்ளம் ஒன்று இருப்பதாகவே அனைவருக்கும் தோன்றியது.
யாரைப் பிடித்து யார் தள்ளப்போகிறார்கள் என்பதே கேள்வி. எப்போது என்பது அடுத்த கேள்வி.
இதையெல்லாம் ஒரு மனிதர் பார்த்துக்கொண்டிருந்தார். மிகவும் அமைதியாக. எந்தக் கருத்தும் சொல்லாமல். யாசர் அராஃபத். அவர் எகிப்தில் பிறந்த பாலஸ்தீன்காரர் என்பதால் சூயஸ் விவகாரத்தில் மிகுந்த உணர்ச்சிவசப்பட்ட நிலையிலேயே இருந்தார். அதனாலேயேதான் இப்போது எதுவும் பேசக்கூடாது, செய்யக்கூடாது என்று தீர்மானமாக இருந்தார்.
அவரது சிந்தனையெல்லாம் ஒரே விஷயத்தைப் பற்றித்தான். நாசரை எந்தளவுக்கு நம்பலாம்?
நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 17 ஜூலை, 2005