Featured Posts

தேசபக்தி

சமீபத்தில் அமெரிக்காவிலுள்ள விர்ஜினியா டெக் பல்கலைக் கழகத்தில், சைக்கோ வெறி கொண்ட கொரிய மாணவன் நிகழ்த்திய துப்பாக்கிச் சூட்டில் இருபதுக்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். அவர்களில் தமிழகப் பேராசிரியர் டாக்டர்.G.V.லோகனநாதன் மற்றும் மும்பையைச் சார்ந்த மாணவியும் அடங்குவர். சம்பவத்தில் பலியானவர்களுக்கு நம் ஆழ்ந்த அனுதாபங்கள் உரித்தாகட்டும்.

அதேசமயம, இந்தக் கொடூர நிகழ்வில் உயிரிழந்தவர்களுக்கு சம்பந்தப்பட்ட பல்கலைக் கழகமோ அல்லது அமெரிக்க அரசாங்கமோ இழப்பீடு வழங்காது என்று சென்னையிலுள்ள அமெரிக்கத் தூதர் ஒரு தொலைக்காட்சி பேட்டியின் போது சொன்னதாக நண்பர் ஒருவர் அனுப்பிய ஈமெயில் வழியாக அறிந்தேன்.

அமெரிக்காவில் வன்முறைகள் மூலம் ஏற்படும் உயிரிழப்புகள் அன்றாட நிகழ்வுகள். குறிப்பாக வீட்டுக்கு ஒரு துப்பாக்கி என்பது அமெரிக்காவில் எழுதப்படாத சட்டம். ஒழுக்கச் சீர்கேடுகளால் சீரழிந்துள்ள அமெரிக்கக் குடும்ப உறவுகளில் தந்தையை மகன் சுடுவதும், கணவனை மனைவி சுட்டுக் கொல்வதும் சர்வ சாதாரணம். அற்பக் காரணங்களுக்காக பள்ளி/கல்லூரி வளாகத்தில் துப்பாகியால் சுட்டுக் கொல்/ள்வதும் அமெரிக்கா வழங்கியிருக்கும் தனி மனித உரிமைகள்!

நம் நாட்டின் உயர் கல்வி நிறுவனங்களில் குறிப்பாக IIT, IIM ஆகிய கல்வி நிறுவனங்களுக்கு நமது மத்திய அரசு கோடிக்கணக்கான ரூபாய்களை ஒதுக்கீடு செய்கிறது. ஒட்டு மொத்த இந்தியாவிற்கும் பொதுவான கல்வி நிறுவனங்களாகச் சொல்லப்பட்டாலும் குறிப்பிட்ட சாரார் மட்டுமே அதன் பலன்களை அறுவடை செய்து வருகின்றனர். (மேற்கண்ட உயர்கல்வி நிறுவனங்களில் ஒதுக்கப்பட்டவர்களுக்கு அரசு ரீதியில் இடஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும் என்ற போராட்டமும் சமீபத்திய சர்ச்சைகள்.)

இந்தியர்களுக்கு வேண்டுமானால் அமெரிக்கா, டாலரை அள்ளிக் கொட்டும் சொர்க்க பூமியாக இருக்கலாம்; அமெரிக்காவைப் பொருத்த மட்டில் மற்ற உயிர்களை விட அமெரிக்க உயிரின் விலை அதிகமே என்பது 9/11 ஐத் தொடர்ந்த அமெரிக்காவின் அரச வன்முறைகளும் ஆக்கிரமிப்புப் போர்களும் நமக்கு உணர்த்துகின்றன.

இப்படியாக, மத்திய அரசின் நிதியில் படித்து பட்டம் பெற்றவர்கள் தவறாமல் செய்யும் காரியம் தாங்கள் இந்தியாவில் கற்ற கல்வியை அமெரிக்க ஐரோப்பிய நிறுவனங்களுக்கு அடகு வைப்பதாகும்.

மறைந்த பேராசிரியர் G.V. லோகநாதன் அவர்களின் ஈமக் கிரியைகளில் கலந்து கொள்ள அன்னாரின் குடும்பத்தினரில் “ஒன்பது பேர் அமெரிக்கா செல்வதற்காக நம் தமிழக அரசு ஒருமணி நேரத்தில் பாஸ்போர்ட் பெறவும், ஒரே நாளில் அமெரிக்கா விசா பெற்று மறுநாளே அமெரிக்கா செல்லவும் ஏற்பாடு செய்தததோடு அதற்கான முழுச் செலவுகளையும் அரசே ஏற்றுக் கொள்ளும்” என்று சட்டமன்றக் கூட்டத்தொடரில் நிதி அமைச்சர் க.அன்பழகன் அறிவித்தார். இச்செய்தியை சன் தொலைக்காட்சியில் தி.மு.க அரசின் சாதனைபோல் திரும்பத் திரும்பக் காட்டினார்கள்.


நான்கு வருடங்களுக்கு முன் அமெரிக்காவின் கொலம்பியா விண்கலம் வெடித்துச் சிதறியதில் நம்நாட்டைச் சார்ந்த விஞ்ஞானி கல்பனா சாவ்லா இறந்த போதும் இப்படித்தான் அஞ்சலி செலுத்தியதை வாஜ்பாய் முதல் ஜெயலலிதாவரை அரசியலாக்கினர். கல்பனா சாவ்லா பிறப்பால் இந்தியராக இருந்தாலும் அமெரிக்கக் குடியுரிமை பெற்றிருந்ததால் அமெரிக்கராகவே கருதப்பட்டார்.

நாஸாவில், இறந்த விஞ்ஞானிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய அஞ்சலியில் ஆறு அமெரிக்கக் கொடியும், ஒரு இஸ்ரேலியக் கொடியும் அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டிருந்தன.இஸ்ரேல் விஞ்ஞானி தன்னுடன் இஸ்ரேல் கொடியையும் எடுத்துச் சென்றிருந்தார்.

ஆனால் கல்பனா சாவ்லாவோ அவ்வாறு இந்திய அடையாளம் எதையும் தன்னுடன் கொண்டிருக்கவில்லை. இருந்தாலும் நாம், நம் இந்திய சகோதரியின் இழப்பில் வருந்தினோம்.

இங்க கவனிக்கப் படவேண்டிய விசயம் என்னவென்றால், பேராசிரியர் லோகநாதனோ அல்லது அன்னாரின் குடும்பமோ ஏழ்மையில் வாடுபவர்கள் அல்லர். பேராசிரியரின் அமெரிக்க உத்யோகத்தின் மூலம் இலட்சக்கணக்கில் மாத வருமானம் அடைந்து கொண்டவர்கள் அவருடைய குடும்பத்திர். மேலும் தான் இறந்த பின்னர் அமெரிக்காவிலேயே அடக்கம் செய்யப்பட வேண்டும் என்றும் பேராசிரியர் விரும்பினாராம்! என்ன செய்வது? அமெரிக்க மோகமா? நாட்டுப் பற்றா? என்ற கேள்வி எழும்போது பெரும்பாலும் நம்மவர்களின் அமெரிக்க மோகமே பெரும்பாலும் வெல்கிறது!

தமிழகத்தைச் சார்ந்தவருக்காக ஆளும் அரசாங்கம் மனிதாபிமான உதவிகளைச் செய்வதை யாரும் குறை சொல்லவில்லை. ஆனால், ஒரு கண்ணில் வெண்ணையும் இன்னொரு கண்ணில் சுண்ணாம்பும் தடவும் போக்கை யாருமே கண்டு கொள்ளாதது துரதிஷ்டம்!
வளைகுடா நாடுகளிலும் சிங்கப்பூர் மலேசியா போன்ற நாடுகளிலும் சொற்ப சம்பளத்தில் பணியாற்றும் நம் நாட்டவர்கள் சாலை விபத்துக்கள் மற்றும் பல்வேறு காரணங்களால் உயிரிழக்கிறார்கள்.அந்நாடுகளிலுள்ள இந்தியத் தூதரகங்களின் மெத்தனம் நன்கு அறிந்ததே.

துன்பத்தில் வாடும் உறவினர்களுக்கு ஈமக்கிரியையில் பங்கேற்கவோ அல்லது இறந்த உடலைத் தாய்நாட்டிற்குக் கொண்டு செல்லவோ நமது தூதரகங்கள் அதிக சிரத்தை எடுத்துக் கொள்வதில்லை. அப்படியே உறவினர்களின் விடா முயற்சியால் சிலவேளை நமது தூதரங்கள் ஒத்துழைத்து விட்டாலும் மிகுந்த சிரமங்களுக்கிடையில் விமானத்தில் கொண்டு செல்வதற்குச் சடலங்களுக்கு இரண்டு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இலங்கை, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளின் விமானங்கள் இதற்கு முழு விலக்கு அளிக்கின்றன.

NRI க்களால் இலாபம் கொழிக்கும் இந்திய விமானங்கள் இறந்த இந்தியர்களுக்குக் கொஞ்சமும் சலுகை காட்டுவதில்லை என்பது வேதனையான விடயம்.

8 comments

  1. இப்னு ஹம்துன்.

    சிந்தனையைத் தூண்டும் பதிவு.
    இப்பதிவு, குறிப்பாக, அந்த கடைப்பத்தி உரியவர்களின் காதிலும், மனதிலும் விழ வேண்டும் என்று விரும்புகிறேன்.

  2. முத்துகுமரன்

    நியாயமான ஆதங்கம் நல்லடியார். எல்லா மரணங்களும் ஒரே மாதிரியானவை இல்லை என்பது பலமுறை நிரூபிக்கப்பட்ட ஒன்றுதானே.

    //மேலும் தான் இறந்த பின்னர் அமெரிக்காவிலேயே அடக்கம் செய்யப்பட வேண்டும் என்றும் பேராசிரியர் விரும்பினாராம்!//
    பேராசிரியர் லோகநாதன் விரும்பியது தனக்கு எதாவது நேர்ந்தால் அந்தப் பல்கலைக்கழக வளாகத்திலே அடக்கம் செய்யப்பட வேண்டும் என்றுதான். இது தான் நேசித்த கற்பித்தல் பணியால் ஏற்பட்ட பிணைப்பே தவிர அமெரிக்க மோகம் என்று ஆகாது.

    நன்றி

  3. முஸ்லிம்

    //துன்பத்தில் வாடும் உறவினர்களுக்கு ஈமக்கிரியையில் பங்கேற்கவோ அல்லது இறந்த உடலைத் தாய்நாட்டிற்குக் கொண்டு செல்லவோ நமது தூதரகங்கள் அதிக சிரத்தை எடுத்துக் கொள்வதில்லை. அப்படியே உறவினர்களின் விடா முயற்சியால் சிலவேளை நமது தூதரங்கள் ஒத்துழைத்து விட்டாலும் மிகுந்த சிரமங்களுக்கிடையில் விமானத்தில் கொண்டு செல்வதற்குச் சடலங்களுக்கு இரண்டு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இலங்கை, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளின் விமானங்கள் இதற்கு முழு விலக்கு அளிக்கின்றன.
    NRI க்களால் இலாபம் கொழிக்கும் இந்திய விமானங்கள் இறந்த இந்தியர்களுக்குக் கொஞ்சமும் சலுகை காட்டுவதில்லை என்பது வேதனையான விடயம்.//

    நல்லடியார்,

    நியாயமான வேதனை! :(

    வேறொன்றும் சொல்ல தோணல,

  4. அதிரைக்காரன்

    நல்லடியார்,

    தகவலுக்காக,ஐக்கியஅரபு அமீரகத்தீல் செயல்பட்டு வரும் ஐமான் (IMAN) அமைப்பின் முயற்சியால் துபை இந்தியத் தூதரகத்தில் முழுநேர பணியாளர் ஒருவரை நியமித்திருக்கிறார்கள். ஒவ்வொரு வாரமும் சிறைச்சாலைக்குச் சென்று அங்குள்ள இந்திய கைதிகளை சந்தித்து என்ன காரணத்தினால் சிறையிலடைக்கப்பட்டார் என்று விசாரித்து, சம்பந்தப்பட்டவர்களுக்கு தகவல் தெரிவித்தும் சட்டப்படி வெளியில் விடுதலை பெறவும் உதவுகின்றனர். அநியாயமாக சிறையிலடைக்கப் பட்டிருந்தால் சட்டப்படி இழப்பீடு பெறவும் ஆலோசனை வழங்குகின்றனர்.

    மேலும், இந்தியர்கள் விபத்தினாலோ அல்லது இயற்கையாகவோ இறந்து விட்டால், அவர்களின் உடலை உறவினர்கள் விரும்பினால் இந்தியா கொண்டு செல்லவும் உதவுகின்றனர். இதற்கான முழுச் செலவையும் ETA நிறுவனம் ஏற்றுக் கொள்கிறது.சாதி மத வேறுபாடின்றி இச்சேவையை தன்னார்வத்தில் வழங்குகிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

    அமீரகத்தில் பணியாற்றுபவர்கள் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்.

  5. நல்லடியார்

    //சாதி மத வேறுபாடின்றி இச்சேவையை தன்னார்வத்தில் வழங்குகிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது//

    அதிரைக்காரன்,

    பயனுள்ள தகவல்! வலைப்பூவில் அரேபிய அனுபவங்கள் எழுதிய பதிவரின் கண்களில் ஏனோ இந்த விபரங்கள் படுவதில்லை.

    //இது தான் நேசித்த கற்பித்தல் பணியால் ஏற்பட்ட பிணைப்பே தவிர அமெரிக்க மோகம் என்று ஆகாது.//

    இருக்கலாம். நானும் அதை தவறென்று சொல்லவில்லை.

    அமெரிக்காவிலுள்ள இந்தியர்களுக்குக் காட்டும் பரிவும் சலுகையும் நம் அரசுகள் மற்ற நாடுகளிலுள்ளவர்களுக்குக் காட்டுவதில்லை; அதேபோல் விமானச் சேவை(?)யிலும் உள்ள பாரபட்சத்தை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தவிர்க்கலாம் என்ற ஆதங்கத்தில் எழுதினேன்.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    முஸ்லிம் & இப்னு ஹம்துன்,

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  6. //NRI க்களால் இலாபம் கொழிக்கும் இந்திய விமானங்கள் இறந்த இந்தியர்களுக்குக் கொஞ்சமும் சலுகை காட்டுவதில்லை என்பது வேதனையான விடயம்.//
    100 % true!!!

  7. நல்லடியார்

    வாசகன்,

    உங்களின் தனிமடல் கிடைத்தது. வேறு பதிவுக்கான பின்னூட்டம் தவறுதலாக இப்பதிவில் பதித்து விட்டதாகச் சொல்லியுள்ளீர்கள். அதனால் சம்பந்தப்பட்ட இரு பின்னூட்டங்களையும் நீக்கி விடுகிறேன்.

    அன்புடன்,

  8. நண்பன்

    Well Said. Nalladiyaar.

    Nanban

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *