நிலமெல்லாம் ரத்தம் – பா. ராகவன் 76
இஸ்ரேல் – பாலஸ்தீன் பிரச்னையின் தொடக்கம் மதம் சார்ந்ததாக இருந்தாலும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே அது முற்றிலும் அரசியல் சார்ந்ததொரு விவகாரமாகிவிட்டது. இதைத் தெளிவாகப் புரிந்துகொண்டபடியால்தான் யாசர் அராஃபத் பி.எல்.ஓ.வின் தலைமைப் பொறுப்புக்கு வந்தபோது, தொடக்கத்திலிருந்தே அரசியல் தீர்வுக்கும் ஒரு கதவைத் திறந்து வைத்தார். பேச்சுவார்த்தைகள், அமைதி ஒப்பந்தங்கள், போர் நிறுத்தம் உள்ளிட்ட சாத்வீக வழிகளுக்கும் சம்மதம் சொன்னார்.
ஆனால் பிரச்னையின் அடிப்படை அரசியல் அல்ல என்று திட்டவட்டமாகக் கருதிய ஹமாஸ், இஸ்ரேலுக்கு எதிராக வெளியிட்ட அந்த முதல் அறிக்கையில் அழுத்தந்திருத்தமாக ‘அல்லாவின் பெயரால்’ தமது நிலைப்பாட்டை விளக்கியிருந்தது.
‘மதத்தின்மீது ஒருவன் நம்பிக்கை இழப்பானானால் அவனது பாதுகாப்பும் அவனது நல்வாழ்வும் அந்தக் கணத்துடன் போய்விடுகிறது’ என்கிற பிரசித்தி பெற்ற இஸ்லாமியக் கவிஞர் முஹம்மது இக்பாலின் வரிகளை மேற்கோள் காட்டி யூத மக்களுக்கும் இஸ்ரேலிய அரசுக்கும் எச்சரிக்கை செய்யும் விதமாக வெளியிடப்பட்ட அந்த அறிக்கைதான் இஸ்லாத்தின் பெயரால் புனிதப்போருக்கு அறைகூவல் விடுத்த முதல் அறிக்கை.
புனிதப்போர்கள் அதற்கு முன்பும் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. ஆனால் ஹமாஸின் அந்த அறிக்கை பாலஸ்தீனிய அரேபியர்களிடையே அன்றைக்கு ஏற்படுத்திய தாக்கமும் பாதிப்பும் முன்னெப்போதும் நிகழாதது. உருக்கமும் உணர்ச்சி வேகமும் கோபமும் ஆதங்கமும் கலந்த கவித்துவமான வரிகளில் ஒரு போராளி இயக்கம் அதற்கு முன் அறிக்கை வெளியிட்டதில்லை. பாலஸ்தீனியர்களின் வலியை அப்பட்டமாகப் படம் பிடிக்கும் அந்த அறிக்கையிலிருந்துதான் பாலஸ்தீனுக்கான ஜிகாத் வேகமெடுக்கத் தொடங்கியது என்று தயங்காமல் கூறலாம்.
திடீரென்று பாலஸ்தீனில் இந்த அறிக்கை உண்டாக்கிய எழுச்சியைக் கண்டு, முதலில் அஞ்சியது இஸ்ரேல் அல்ல. அமெரிக்காதான். உடனடியாக ஹமாஸை ஒரு தீவிரவாத இயக்கம் என்று அறிவிக்கச் சொல்லி, இஸ்ரேல் அரசுக்கு உத்தரவிட்டுவிட்டு, உலகெங்கும் ஹமாஸுக்கு உதவக்கூடிய யாராக இருந்தாலும் கண்ணை மூடிக்கொண்டு கைது செய்யவும் தனது உளவு அமைப்பான சி.ஐ.ஏ.விடம் கேட்டுக்கொண்டது.
அன்றைய காலகட்டத்தில் இது மிகவும் நகைப்புக்குரிய ஒரு விஷயம். ஏனென்றால், ஹமாஸ் என்றொரு இயக்கம் இருப்பது தெரியுமே தவிர, அது யாரால் தலைமை தாங்கப்படுகிறது, வழி நடத்துவோர் யார் யார் என்கிற விவரங்களெல்லாம் அப்போது பாலஸ்தீனிலேயே கூட யாருக்கும் தெரியாது. ஹமாஸின் எந்த ஒரு தலைவரும் தன் பெயரோ, புகைப்படமோ வெளியே வர அனுமதித்ததில்லை. ஹமாஸ் இயக்கத்தில் இருந்த எந்த ஒரு போராளியும் பிற போராளி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்போல இருபத்து நாலு மணி நேரமும் கையில் துப்பாக்கியுடன் முகத்தைத் துணியால் கட்டி மறைத்துக்கொண்டு அலைந்து திரிந்ததில்லை. காடுகளிலும் மலைப் பகுதிகளிலும் மட்டுமே புழங்கி, திரைப்படத் தீவிரவாதிகள்போல படபடபடவென்று இயந்திரத் துப்பாக்கி புல்லட்டுகளை வீணாக்கிக் கொண்டிருக்கவில்லை.
ஹமாஸின் முழுநேரப் போராளிகள்கூட தொடக்ககாலத்தில் எங்கெங்கோ உத்தியோகம் பார்த்துக்கொண்டுதான் இருந்தார்கள். சிலர் ஆசிரியர்களாக இருந்தார்கள். சிலர் மருத்துவர்களாக இருந்தார்கள். பெரும்பாலான இளைஞர்கள் ஹமாஸின் ‘தனி பார்லிமெண்ட்’டின் தன்னார்வச் சேவகர்களாக கிராமம் கிராமமாகப் போய் மக்கள் நலப்பணிகளில் ஈடுபட்டு, சாலை போடுவதிலும் நகர சுத்திகரிப்புப் பணிகளிலும் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள் என்றால் நம்பித்தான் ஆகவேண்டும். இது மிகையே இல்லாத உண்மை. ஓர் அவசியம், தேவை என்று வரும்போது அப்படி அப்படியே வேலையைப் போட்டுவிட்டு ஆயுதத்தைத் தூக்கிக்கொண்டு கிளம்பிவிடுவார்கள். அந்தச் சமயங்களில் மட்டும் அடையாளம் மறைப்பதன் பொருட்டு ஹமாஸ் போராளிகள் தங்கள் முகங்களைத் துணியால் சுற்றி மறைத்துக்கொள்வார்கள். ஏனெனில், பொழுது விடிந்தால் மீண்டும் வீதிகளுக்கு வந்து கூட்டிப் பெருக்க வேண்டுமே?
ஹாலிவுட் காட்ஃபாதரிலிருந்து கோலிவுட் ஜென்டில்மேன் வரை திரைப்படங்கள் காட்டிய நெகடிவ் ஹீரோயிஸத்தின் ரிஷிமூலத்தைத் தேடிப்போனால் ஹமாஸில்தான் வந்து நிற்கவேண்டியிருக்கும்.
ஹமாஸின் வளர்ச்சி இஸ்ரேலை மிகவும் கவலை கொள்ளச் செய்தது. ஏற்கெனவே பதினெட்டுப் போராளி இயக்கங்களை உள்ளடக்கிய பி.எல்.ஓ.வையும் அதன் தலைவர் யாசர் அராஃபத்தின் எதிர்பார்க்கமுடியாத கெரில்லா யுத்தங்களையும் சமாளிக்க முடியாமல் திண்டாடிக்கொண்டிருந்தார்கள் அவர்கள். குறிப்பாக, பி.எல்.ஓ.வின் மிக முக்கிய சக்தியாக விளங்கிய அராஃபத்தின் ‘ஃபத்தா’ இயக்கத்தினர் தாம் கற்ற போர்க்கலையின் அத்தனை சிறப்பு நடவடிக்கைகளையும் மொத்தமாக டெல் அவிவ் நகரில் காட்டியே தீருவது என்று தீர்மானம் செய்துகொண்டு, தினசரி குறைந்தது இரண்டு அல்லது மூன்று தாக்குதல்களைத் தயங்காமல் மேற்கொண்டு வந்தார்கள்.
ஃபத்தா விஷயத்தில் இன்னொரு பிரச்னை என்னவென்றால், தொடக்கம் முதலே (அதாவது பி.எல்.ஓ.வில் இணைவதற்கு முன்பிலிருந்தே) அராஃபத் அதனை ஒரு மதச்சார்பற்ற இயக்கமாகத்தான் முன்னிறுத்தி வந்தார். இயக்கத்திலிருந்த அத்தனை பேருமே இஸ்லாமியர்கள்தான் என்றபோதும் இஸ்லாத்தை முன்வைத்து அவர்கள் ஒருபோதும் யுத்தம் மேற்கொண்டதில்லை. ஹமாஸ் அல்லது இன்றைய அல் கொய்தாவைப்போல் ‘அல்லாவின் பெயரால்’ அறிக்கை விடுத்ததில்லை. மாறாக, ‘இஸ்ரேலிடமிருந்து இழந்த நிலத்தை மீட்பது’ மட்டுமே ஃபத்தாவின் நோக்கமாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனாலேயே சர்வதேச மீடியா ஃபத்தாவைக் குறித்து செய்தி சொல்லும்போதெல்லாம் அதனை ஓர் அரசியல் இயக்கமாகவே குறிப்பிட்டு வந்தது. பாலஸ்தீன் விவகாரம் அதிகம் எட்டியிராத தூரக்கிழக்கு தேசங்களிலெல்லாம் எழுபதுகளின் தொடக்கத்திலேயே ஃபத்தாவை ஓர் அரசியல் கட்சி போலவே சித்திரித்துச் செய்தி வெளிவரும்! சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தவித்துத் திண்டாடி நிற்கும் இஸ்ரேல் அரசு. ‘ஃபத்தா ஓர் அரசியல் கட்சியல்ல, அது ஒரு தீவிரவாத இயக்கம்தான்’ என்று லவுட் ஸ்பீக்கர் வைத்து அலறுவார்கள். அமெரிக்க ஊடகங்களின் துணையுடன் புகைப்படங்கள், வீடியோத் துணுக்குகளை வெளியிடக் கடும் முயற்சிகள் மேற்கொள்வார்கள். அப்போதுகூட எடுபடாமல் போய்விடும்.
இஸ்ரேலுக்கு இது மிகப்பெரிய தலைவலியாக இருந்தது. ஏனெனில், இஸ்லாமியத் தீவிரவாதிகளால் தங்களுக்கு ஆபத்து என்றுதான் இஸ்ரேல் அரசு எப்போதும் ஐ.நா.வில் புலம்புவது வழக்கம். அராஃபத்தும் ஃபத்தாவும் பி.எல்.ஓ.வின் தலைமை நிலைக்கு வந்துவிட்டபோது, அவர்களால் அப்படி அழுது புலம்ப முடியாமல் போய்விட்டது. ஏனெனில் அராஃபத் எப்போதும் பேச்சுவார்த்தைகளுக்குத் தயாராக இருந்தார். எப்போதும் போர் நிறுத்தத்துக்கான சாத்தியத்தை முதலில் வைத்துவிட்டுத்தான் யுத்தத்தையே தொடங்குவார். இது ஒரு ராஜதந்திரம். மாபெரும் அரசியல் தெளிவுள்ளவர்களுக்கு மட்டுமே சாத்தியமான யோசனை.
ஆகவே ஃபத்தாவின் செயல்பாடுகளைத் தடுத்து நிறுத்த வழி தேடிக்கொண்டிருந்த இஸ்ரேலுக்கு, ஹமாஸின் திடீர் எழுச்சியும் அவர்களுக்கு இருந்த மக்கள் ஆதரவும் மேலும் கலவரமூட்டியது. ஒருகட்டத்தில் இஸ்ரேலிய உளவுத்துறையான மொஸாட், வேறு வழியே இல்லை என்று ஹமாஸை எப்படியாவது வளைத்து, இஸ்ரேல் அரசின் ரகசியத் தோழன் ஆக்கிக்கொண்டு, அவர்களைக் கொண்டே பி.எல்.ஓ.வை ஒழித்துக்கட்ட ஒரு திட்டம் தீட்டியது.
தேவையான பண உதவி, வேண்டிய அளவுக்கு ஆயுத உதவி. ஹமாஸ் இயக்கத்தினருக்கு அளவற்ற பாஸ்போர்ட்கள், ஒருவருக்கே நான்கைந்து பாஸ்போர்ட்கள் வேண்டுமென்றாலும் கிடைக்கும். எந்த நாட்டு பாஸ்போர்ட் வேண்டுமென்றாலும் கிடைக்கும்; இயக்கத்திலிருக்கும் அத்தனை பேருக்கும் வீடு, நிலங்கள் என்று நம்ப முடியாத அளவுக்குக் கொட்டிக்கொடுத்தாவது ஹமாஸை வளைக்க இஸ்ரேல் அரசு ஒரு திட்ட வரைவையே தயாரித்தது.
ஹமாஸின் மத உணர்வுகளைத் தாங்கள் மிகவும் மதிப்பதாகவும், நிதானமாகப் பேச்சுவார்த்தை நடத்தி, இருதரப்புக்கும் திருப்தியளிக்கும் விதத்தில் பிரச்னைக்கு ஒரு தீர்வு காணமுடியும் என்று தாம் நம்புவதாகவும், ஃபத்தாவும் அராஃபத்தும்தான் பிரச்னை என்றும் ‘எடுத்துச் சொல்லி’ ஹமாஸ் தலைவர்களை வளைக்க ஒரு செயல்திட்டம் தீட்டியது இஸ்ரேல் அரசு.
இதன் மறைமுக அர்த்தம் என்னவென்றால், ஹமாஸுக்கு இஸ்ரேல் அரசு உதவி செய்யும். பதிலுக்கு பி.எல்.ஓ.வை ஒழித்துக்கட்ட ஹமாஸ் உதவவேண்டும் என்பதுதான்.
இத்தகைய கேவலமான யோசனைகள் அமெரிக்காவுக்கும் அமெரிக்க அடிவருடிகளுக்கும் மட்டும்தான் சாத்தியம் என்று ஒற்றைவரியில் நிராகரித்துத் திருப்பிவிட்டார்கள், ஹமாஸின் உயர்மட்ட அரசியல் குழுவினர். அதோடு நிறுத்தாமல் மிகத் தீவிரமாக ஓர் ஊழல் ஒழிப்புப் போராட்டத்தையும் அவர்கள் உடனே தொடங்கினார்கள். பாலஸ்தீன் முழுவதும் யூத அதிகாரிகள் அப்போது கிடைத்த வழிகளிலெல்லாம் பணம் பண்ணிக்கொண்டிருந்தார்கள். ஊழலில் உலகிலேயே முதல் இடத்தை இஸ்ரேல் பிடித்துவிடக்கூடிய சாத்தியம் இருக்குமளவுக்கு ஊழல் நாற்றம் இஸ்ரேல் முழுவதும் நாறடித்துக்கொண்டிருந்தது. ஏராளமான அறக்கட்டளைகள் அப்போது அங்கே இருந்தன. யாராவது நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்று முடிவு செய்தால், உடனே ஏதாவதொரு பெயரில் அறக்கட்டளை ஆரம்பித்து நிதி வசூலிக்க ஆரம்பித்துவிடுவார்கள். குறிப்பிடத்தக்க அளவில் பணம் சேர்ந்ததும் அறக்கட்டளை இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய்விடும். அறங்காவலர்கள் வெளிநாடுகளுக்குப் போய்விடுவார்கள். எதற்காக அவர்கள் நிதி திரட்டினார்கள், திரட்டிய நிதி எங்கே போனது என்றெல்லாம் யாரும் கேட்கக்கூடாது.
உல்லாசமாக வெளிநாடுகளில் சுற்றித் திரிந்துவிட்டு, பணம் தீர்ந்ததும் மீண்டும் இஸ்ரேலுக்கு வந்து வேறொரு அறக்கட்டளை ஆரம்பிப்பார்கள். மீண்டும் வசூல் நடக்கும். மீண்டும் காணாமல் போய்விடுவார்கள்.
ஒருவர் இருவர் அல்ல. அநேகமாக அன்றைய இஸ்ரேலின் மிக முக்கியமானதொரு ‘தொழிலாகவே’ இது இருந்தது. எழுபதுகளில் இஸ்ரேலில் இம்மாதிரி திடீர் அறக்கட்டளைகள், டிரஸ்டுகள் மட்டும் லட்சக்கணக்கில் தோன்றி, காணாமல் போயிருக்கின்றன. இத்தகைய நூதன மோசடியில் அரசின் உயர்மட்ட அதிகாரிகளுக்கும் அமைச்சர்களுக்கும் கூட நிறைய தொடர்புகள் இருந்திருக்கின்றன.
கோடிக்கணக்கில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் பணம் திரட்டி, அறக்கட்டளைகளின் பெயரில் அவற்றைச் சில தனிநபர்கள் தின்று கொழுத்து வந்ததைக் கண்டு கோபம் கொண்ட ஹமாஸ், இத்தகைய அறக்கட்டளைகளையும் டிரஸ்டுகளையும் ஒழித்துக்கட்டுவதே தன் முதல் வேலை என்று தீர்மானம் செய்து பகிரங்கமாக அறிவித்துவிட்டு, கையோடு வேலையை ஆரம்பித்து விட்டது.
இதற்கு பயந்த ஊழல் முதலைகள், போர்டுகளைக் கழற்றிப் போட்டுவிட்டு, அறைக்கதவைச் சாத்திக்கொண்டு வேலை செய்ய ஆரம்பித்தன. ஆனால் ஹமாஸ் இயக்கத்தினர் இத்தகைய அறக்கட்டளைகளைக் கணக்கெடுத்து, பட்டியலிட்டு, ஒரு நாளைக்கு ஒன்று என்று முடிவு செய்து தேசம் முழுவதும் இவற்றின்மீது தினசரி யுத்தம் ஆரம்பித்துவிட்டார்கள்.
அறக்கட்டளைகளின் பெயரில் ஊழல் செய்வதைத் தடுக்கப் போன ஹமாஸுக்கு அரசுத்துறையிலும் ஊழல் மலிந்து கிடப்பது தெரியவர, பெரிய அளவில் ஒரு நாடு தழுவிய ஊழல் ஒழிப்புப் போராக நடத்தினாலொழிய இதற்கு விடிவு கிடையாது என்று தெரிந்தது.
ஆகவே, ஹமாஸில் உடனடியாகத் தனியொரு ஊழல் ஒழிப்புப் பிரிவு ஆரம்பிக்கப்பட்டது. எங்கெல்லாம் , யாரெல்லாம் ஊழலில் ஈடுபடுவதாகத் தெரிகிறதோ அங்கெல்லாம் இந்தப் படை போகும். ஒரு தோட்டா. ஒரே முயற்சி. ஆள் காலி அல்லது நிறுவனம் காலி. அங்கிருக்கும் பணம் முழுவதும் அடுத்த வினாடி ஹமாஸின் மக்கள் வங்கிக்கு வந்து சேர்ந்துவிடும். உடனே கணக்கு எழுதி பொதுமக்கள் பார்வையில் படும்படி எங்காவது மாட்டிவிடுவார்கள். இந்த இடத்தில் இத்தனை பணம் எடுத்துவரப்பட்டது. இந்தப் பணம் இந்த இந்த வகைகளில் செலவிடப்படவிருக்கிறது என்று எழுதியே போட்டுவிடுவார்கள்.
எழுதிப் போட்டபடி செயல்படுகிறார்களா என்பதைக் கண்காணிப்பதற்காகவே ஒரு குழு இருக்கும். அவர்கள் வருடத்துக்கு மூன்றுமுறை இன்ஸ்பெக்ஷன் நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
அது ஓர் அரசாங்கமேதான். தனியார் அரசாங்கம்.
ஆரம்பத்தில் ஹமாஸின் இத்தகைய சமூகப்பணிகள்தான் இஸ்ரேல் அரசின் கவனத்தைக் கவர்ந்தன. ஹமாஸைத் தீவிரவாதச் செயல்களிலிருந்து பிரித்து இழுப்பது சுலபம் என்று அவர்கள் நினைத்ததும் இதனால்தான்.
ஆனால் யுத்தத்தை நிறுத்தினாலும் நிறுத்துவார்களே தவிர, அவர்கள் இஸ்ரேலுக்கு ஆதரவாக ஒருபோதும் நினைத்துக்கூடப் பார்க்கமாட்டார்கள் என்பது ஏனோ அவர்களுக்கு உறைக்காமல் போய்விட்டது.
இதெல்லாம் எண்பதுகளின் தொடக்கம் வரைதான். அதுகாறும் அரசியல் சித்தாந்தவாதிகளால் வழிநடத்தப்பட்டுவந்த ஹமாஸுக்கு எண்பதாம் வருடம் ஒரு ராணுவத் தலைவர் வந்து பொறுப்பேற்றுக்கொண்டார். அவர் பெயர் ஷேக் அகமது யாசின். (Sheikh Ahmed Yassin). அந்தக் கணமே ஹமாஸின் செயல்பாடுகள் முற்றிலும் வேறுமுகம் கொள்ளத் தொடங்கிவிட்டன.
நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 14 ஆகஸ்ட், 2005