நிலமெல்லாம் ரத்தம் – பா. ராகவன் 80
பி.எல்.ஓ. போன்ற மாபெரும் போராளி இயக்கங்களின் தலைவர்கள் பாலஸ்தீனிலேயே இருந்தபடி போராட்டங்களை நடத்துவது என்பது சற்றும் இயலாத காரியம். ஓர் இயக்கத்தை வழி நடத்துவது என்பது நூற்றுக்கணக்கான சிக்கல்களை உட்கொண்டது. முதலில் போராளிகளுக்குப் போர்ப்பயிற்சி அளிக்க வேண்டும். அதற்கு சௌகரியமான இடம், வசதிகள், உணவு, போதிய தூக்கம், பாதுகாப்பு மிகவும் அவசியம். இவற்றைவிட முக்கியம், பணம். அப்புறம் அரசு ஆதரவு. தடையற்ற ஆயுதப் பரிமாற்றங்களுக்கான வசதிகள்.
இதன் அடுத்தக்கட்டம், அரசியல் தீர்வுகளுக்கான ஆலோசனைகளை மேற்கொள்வது, பேச்சுவார்த்தைகளுக்கான கதவுகளைத் திறக்கப் பார்ப்பது. உண்மையிலேயே அதில் விருப்பமிருக்குமானால் தலைவர்களுக்கு விட்டுக்கொடுக்கும் சுபாவம் இருந்தாக வேண்டும். விமர்சனங்களுக்கு அஞ்சாத பக்குவம் வேண்டும். நீண்டநாள் நோக்கில் தேசத்துக்கும் மக்களுக்கும் நன்மை உண்டாவதற்காகக் கொள்கைகளில் சிறு மாறுதல்கள் செய்துகொள்ளத் தயங்கக்கூடாது. எல்லாவற்றைக் காட்டிலும் சுயநலமற்ற மனப்பான்மை நிரந்தரமாக இருக்கவேண்டும்.
இதெல்லாம் அனைவருக்கும் புரியக்கூடியவை அல்ல. புரியும் என்றாலும் முழுக்கப் புரிவது சாத்தியமில்லை.
பாலஸ்தீனில் வசிக்க முடியாத பி.எல்.ஓ.வினருக்கு லெபனானும் சிரியாவும் டுனிஷும் அரசியல் அடைக்கலமும் ஆதரவும் அளித்து, அவர்கள் சுதந்திரமாகச் செயல்பட வழி செய்துகொடுத்ததில் பெரிய ஆச்சர்யம் ஏதுமில்லை. ஆனால், அராஃபத் யுத்தத்தைக் காட்டிலும் அரசியல் தீர்வில்தான் தமக்கு அதிக நம்பிக்கை இருக்கிறது என்பதைத் தொடக்கம் முதல் வெளிப்படையாகத் தெரிவிக்காமலேயே இருந்துவிட்டதில்தான், கொஞ்சம் பிரச்னையாகிவிட்டது.
அரசியல் தீர்வுக்கான கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கின்றன என்று வாய்வார்த்தையில் சொல்லுவது பெரியவிஷயமல்ல. அதை அவர் தொடக்கம் முதலே செய்துவந்திருக்கிறார் என்றபோதும், பிரதானமாக ஒரு போராளியாகவே அடையாளம் காணப்பட்டவர், இஸ்ரேலிய அதிகாரிகளுடனும் அமைச்சர்களுடனும் பேச்சுவார்த்தைகளிலும் அவ்வப்போது ஈடுபட்டுவந்திருக்கிறார் என்பது பலருக்கு வியப்பளிக்கும் விஷயமாகவே இருந்தது.
தவிரவும், முன்பே பார்த்தது போல அராஃபத்தும் சரி, அவரது அல்ஃபத்தா அமைப்பும் சரி, ஆரம்பம் முதலே சோஷலிசத்தில் நம்பிக்கை கொண்ட தலைவரும் இயக்கமுமாகவே அடையாளம் காணப்பட்டு வந்ததையும் இங்கே கவனத்தில் கொள்ளவேண்டும். ஒருபோதும் மதத்தை முன்னிறுத்தி அராஃபத் யுத்தம் மேற்கொண்டதில்லை.
அவரளவில் தெளிவாகவே இருந்திருக்கிறார் என்றபோதும், பாலஸ்தீனிய அரேபியர்களுக்கு அராஃபத்தின் அரசியல் அவ்வளவாகப் புரியவில்லை என்பது, தொண்ணூறுகளின் தொடக்கத்தில்தான் தெரியவந்தது.
அராஃபத் டுனிஷில் இருந்த காலத்தில் பல்வேறு சந்தர்ப்பங்களில் இஸ்ரேலிய அதிகாரிகளுடன் ரகசியப் பேச்சுவார்த்தைகள் நடத்தியிருப்பதாகத் தெரிகிறது. இவற்றில் எது ஒன்றும் முழு விவரங்களுடன் வெளியே வரவில்லை. ஒரு பக்கம் பாலஸ்தீன் முழுவதும் இண்டிஃபதா எழுச்சிப் போராட்டங்கள் உச்சகட்டத்தை நோக்கிப் போய்க்கொண்டிருக்க, மறுபுறம் இஸ்ரேலிய அதிகாரிகளுடன் அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தை என்பதைப் பாலஸ்தீனியர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை.
தாற்காலிகத் தீர்வுகளின் வழியே நிரந்தரத் தீர்வை நோக்கி நகர்வது என்கிற சித்தாந்தத்தில், அராஃபத்துக்கு நம்பிக்கை உண்டு. அவரது மேடைப்பேச்சு வீடியோக்கள் இன்றும் நமக்குக் கிடைக்கின்றன. ஆக்ரோஷமாக “ஜிகாது ஜிகாது ஜிகாது” என்று கை உயர்த்திக் கோஷமிடும் அந்த அராஃபத்தைத்தான் பாலஸ்தீனிய அரேபியர்களுக்குத் தெரியும். அந்த உத்வேகத்துக்கு ஆட்பட்டுத்தான் அவர்கள் இண்டிஃபதாவை மாபெரும் வெற்றிபெற்ற போராட்டமாக ஆக்கினார்கள்.
அதிகம் படிப்பறிவில்லாத, தலைவன் என்ன சொன்னாலும் கட்டுப்படக்கூடிய அந்த மக்களுக்கு, அராஃபத்தின் இந்த அரசியல் தீர்வை நோக்கிய ஆரம்ப முயற்சிகள் முதலில் புரியாமல் போனதில் வியப்பில்லை. துப்பாக்கியுடன் மட்டுமே அராஃபத்தைப் பார்த்தவர்கள் அவர்கள். ஆலிவ் இலையும் துப்பாக்கியும் கைக்கொன்றாக எடுத்துக்கொண்டு ஐ.நா.வுக்குப் போன அராஃபத், அவர்களுக்கு மிகவும் புதியவர்.
அதனால்தான், இண்டிஃபதாவின் விளைவாக உருவான ஓஸ்லோ ஒப்பந்தம், பாலஸ்தீனிய அரேபியர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியையும் அவநம்பிக்கையையும் தந்தது. அவநம்பிக்கை என்றால், அராஃபத்தின் மீதான அவநம்பிக்கை. கிட்டத்தட்ட சரிபாதி பாலஸ்தீனியர்கள் இந்த அவநம்பிக்கைக்கு ஆட்பட்டார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. அகண்ட பாலஸ்தீனத்தின் ஒரே பெரிய தலைவராக அவரைக் கற்பனை செய்துபார்த்துவந்த மக்களுக்கு, அவரை ஒரு முனிசிபாலிடி சேர்மனாக நினைத்துப் பார்ப்பதில் நிறைய சங்கடங்கள் இருந்தன. அதைவிட, எங்கே அராஃபத் விலைபோய்விடுவாரோ என்கிற பயம் அதிகம் இருந்தது. அவரும் இல்லாவிட்டால் தங்களுக்கு விடிவு ஏது என்கிற கவலை. பாலஸ்தீனில் மட்டுமல்ல. உலகம் முழுவதிலும் வசித்துவந்த முஸ்லிம் சமூகத்தினருக்கும் அடிமனத்தில் இந்த பயம் இருக்கத்தான் செய்தது.
இந்த விவரங்களின் பின்னணியில், நாம் ஓஸ்லோ ஒப்பந்தத்துக்குள் நுழைவது சரியாக இருக்கும்.
இன்றைக்கு இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் சமரசம் பேசி ஏதாவது நல்லது செய்துவைக்க முடியுமா என்று பார்க்கிற நார்வே, அன்றைக்கு இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனுக்கும் இடையில்கூட இப்படியானதொரு அமைதி முயற்சியை மேற்கொண்டது. ஆனால் இன்றைக்குப் போல, அன்று நடந்த இந்த முயற்சிகள், வெளிப்படையான முயற்சிகளாக இல்லை. மாறாக, டுனிஷியாவில் இருந்த யாசர் அராஃபத்துக்கும் இஸ்ரேலிய அதிகாரிகளுக்கும் நடந்த பேச்சுவார்த்தைகள் யாவும் பரம ரகசியமாகவே நடைபெற்றன. இதற்கு நார்வே மட்டும் காரணமல்ல. ஓரெல்லை வரை அமெரிக்காவும் காரணம்.
1989-90_களிலிருந்தே பி.எல்.ஓ.வும் இஸ்ரேலிய அரசும் ரகசியப் பேச்சுகளில் ஈடுபட்டுவந்திருக்கின்றன. ஓரளவு அமைதிக்கான சாத்தியம் இருக்கிறது என்பது தெரியவந்தபோது, ஓஸ்லோ ஒப்பந்தத்துக்கான பணிகளில் இறங்க ஆரம்பித்தார்கள். ஓஸ்லோ என்பது நார்வேவின் தலைநகரம். அங்கே இந்த ஒப்பந்தம் கையெழுத்தானதால் அந்தப் பெயர் வந்துவிட்டது. அவ்வளவுதான்.
முதலில் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட, அராஃபத் நார்வேக்குப் போகவில்லை. அவர் அப்போது அமெரிக்காவில் இருந்தார். அமெரிக்க அதிகாரிகளுடனும் ஐ.நா.வின் அதிகாரிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்தார். நிரந்தரத் தீர்வு என்பது உடனடியாகச் சாத்தியமில்லாத காரணத்தால், சில தாற்காலிகத் தீர்வுகளை இருதரப்புக்கும் பொதுவாக அமெரிக்க அதிபர் பில் க்ளிண்டன் முன்வைத்தார்.
ஒரு பக்கம் யாசர் அராஃபத் அங்கே பேசிக்கொண்டிருந்த அதே சமயம், அங்கே பேசப்பட்ட தீர்வுகள், ஓர் ஒப்பந்தமாக எழுதப்பட்டு நார்வேயின் தலைநகர் ஓஸ்லோவில் கையெழுத்தானது. பி.எல்.ஓ.வின் சார்பில் அகமது குரானி என்பவரும், இஸ்ரேல் அரசின் சார்பில் அதன் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷிமோன் பெரஸும் கையெழுத்திட்டார்கள்.
கவனிக்கவும். சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஒப்பந்தம், ரகசியமாகவே செய்யப்பட்டது. உலகுக்கு அறிவிக்கப்படவில்லை. 1993-ம் ஆண்டு ஆகஸ்ட் 19 அன்று இது நடந்தது.
ஒப்பந்தம் என்று செய்யப்பட்டதே தவிர, பாலஸ்தீனியர்கள் இதனை எப்படி ஏற்பார்கள் என்கிற சந்தேகம் அராஃபத்துக்கும் இருந்திருக்கிறது. அதனால்தான், பகிரங்கமாக ஒப்பந்தத்தை அவர்களால் மேற்கொள்ள முடியவில்லை. ஆனால், இதெல்லாம் மூடிவைக்கிற விஷயமல்ல என்கிற காரணத்தினால் சரியாக எட்டே தினங்களில் (ஆகஸ்ட் 27) வெளிவந்துவிட்டது. பத்திரிகைகள் எப்படியோ மோப்பம் பிடித்து செய்தி வெளியிட்டுவிட்டன.
முதலில் அராஃபத்தும் இஸ்ரேலிய அதிகாரிகளும் யோசித்தார்கள். அப்படியொரு ஒப்பந்தம் நடக்கவே இல்லை என்று சொல்லிவிடுவதா? அல்லது, ஆமாம் நடந்தது என்று உண்மையை ஒப்புக்கொள்வதா?
இதுதான் குழப்பம். ஆனால் நார்வே அரசு, இதற்கு மேல் மூடி மறைக்க வேண்டாம் என்று சொல்லி, ஒப்பந்தம் கையெழுத்தானது உண்மைதான் என்று பகிரங்கமாக அறிவித்தது.
பாலஸ்தீனியர்கள் மட்டுமல்ல. ஒட்டுமொத்த உலகமே வியப்புடன் பார்த்த சம்பவம் இது. ஆண்டாண்டு காலமாகப் பாலஸ்தீனியர்களின் விடுதலைக்காகத்தான் யாசர் அராஃபத் போராடுகிறார். அவர்களுக்காகத்தான் இஸ்ரேலிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, ஓர் ஒப்பந்தம் வரை போயிருக்கிறார். அப்படி இருக்கையில், அதை ஏன் ரகசியமாகச் செய்யவேண்டும்? மக்கள் மத்தியிலேயே செய்திருக்கலாமே?
என்றால், காரணம் இல்லாமல் இல்லை. நிதானமாகப் பார்க்கலாம். விஷயம் வெளியே தெரிந்துவிட்டதும் வேறு வழியில்லாமல் ஒப்புக்கொள்ளவேண்டியதானது என்று பார்த்தோமல்லவா?
சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஒப்பந்தத்தை, முறைப்படி பகிரங்கமாக மீண்டும் ஒரு முறை செய்தால்தான் சரியாக இருக்கும் என்று அமெரிக்க அதிபர் பில் க்ளிண்டன் சொன்னார்.
ஆகவே, கையெழுத்தாகிவிட்ட ஒப்பந்தம் மீண்டும் ஒரு முறை வாஷிங்டனுக்கு எடுத்துச் செல்லப்பட்டு பகிரங்கமாக, மீடியாவின் விளக்குகளுக்கு எதிரே மீண்டும் கையெழுத்தானது. இம்முறை இஸ்ரேல் பிரதமர் இட்ஸாக் ராபினும் யாசர் அராஃபத்துமே பில் க்ளிண்டன் முன்னிலையில் கையெழுத்துப் போட்டார்கள்.
இப்படியொரு ஒப்பந்தத்தை நிறைவேற்றியதற்காக யூதர்கள், ராபினைப் புழுதிவாரித் தூற்றி, வீட்டுக்கு அனுப்பிவைத்தார்கள். அரேபியர்கள், யாசர் அராஃபத்தை சந்தேகத்துடன் பார்க்க ஆரம்பித்தார்கள்.
யாருக்குமே சந்தோஷம் தராத அந்த ஒப்பந்தத்தில் அப்படி என்னதான் இருக்கிறது? பார்க்கலாம்:
Declaration of Principles என்று தலைப்பிடப்பட்டு ஒரு கொள்கைப் பிரகடனமாக வெளியிடப்பட்ட இந்த ஒப்பந்தம், மொத்தம் பதினேழு பிரிவுகளையும் நான்கு பின்னிணைப்புகளையும் கொண்டது.
“பாலஸ்தீன் மக்கள் தமது ஒரே தலைவராக யாசர் அராஃபத்தைத்தான் கருதுகிறார்கள். ஆகவே, அவருடன் செய்துகொள்ளப்படும் இந்த ஒப்பந்தம், ஒட்டுமொத்த பாலஸ்தீனியர்களுடனும் செய்துகொள்ளும் ஒப்பந்தமாகக் கருதப்படும்” என்கிற அறிவிப்புடன் ஆரம்பமாகும் இந்த ஒப்பந்தத்தின் சாரமென்னவென்றால், பி.எல்.ஓ.வுக்கு இஸ்ரேலிய அரசு சில இடங்களில் தன்னாட்சி செய்யும் உரிமையை வழங்கும் என்பதுதான்.
தன்னாட்சி என்கிற பதம், சற்றே கிளுகிளுப்பு தரலாம். உண்மையில் ஒரு நகராட்சி அல்லது மாநகராட்சியை நிர்வகிப்பது போன்ற அதிகாரத்தைத்தான் இஸ்ரேல் அதில் அளித்திருந்தது. காஸா மற்றும் மேற்குக் கரையிலுள்ள ஜெரிக்கோ நகரங்களை ஆட்சி செய்யும் அதிகாரம் அரேபியர்களிடம் அளிக்கப்படும். “பாலஸ்தீனியன் அத்தாரிடி” என்கிற ஆட்சிமன்ற அமைப்பின் மூலம் அவர்கள் அந்தப் பகுதிகளை நிர்வகிக்க வேண்டும். யாசர் அராஃபத் முதலில் பாலஸ்தீனுக்கு ஒரு முறை “வந்துபோக” அனுமதிக்கப்படுவார். பிறகு அவர் அங்கே குடிபெயரவும் ஏற்பாடு செய்யப்படும். பி.எல்.ஓ.வின் ஜோர்டன் கிளையில் உறுப்பினர்களாக இருக்கும் சில நூறு போராளிகள் மேற்குக் கரைப் பகுதி நகரமான ஜெரிக்கோவுக்கு வந்து நகரக் காவல் பணியை மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். (அதாவது உள்ளூர் போலீஸ்.) பாதுகாப்பு, சுகாதாரம், கல்வி, தபால் துறை ஆகிய துறைகள் பாலஸ்தீனியன் அதாரிடியால் நிர்வகிக்கப்படும். இஸ்ரேலிய ராணுவம் அந்தப் பகுதிகளிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலக்கிக்கொள்ளப்படும். ஆனால், உடனடியாக அது நடக்காது. “தன்னாட்சி அதிகாரம் பெற்ற இடங்கள்” என்று சொல்லப்பட்டாலும் அந்தப் பகுதியில் உள்ள நிலங்களையும் நீர் ஆதாரங்களையும் கட்டுப்படுத்தும் அதிகாரம் இஸ்ரேல் அரசிடம்தான் இருக்கும். ஒட்டுமொத்த பாதுகாப்புப் பொறுப்பு மற்றும் வெளி விவகாரத் துறைப் பொறுப்பு ஆகியவையும் இஸ்ரேலைச் சேர்ந்ததே.
சுற்றி வளைக்க அவசியமே இல்லை. இரண்டு நகரங்களை ஒரு நகராட்சித் தலைவர்போல யாசர் அராஃபத் ஆளலாம். அவ்வளவுதான். இதற்குத்தான் நார்வே நாட்டாமை. அமெரிக்க ஆதரவு. ரகசியப் பேச்சுக்கள் எல்லாம்.
அதுசரி. பதிலுக்கு பி.எல்.ஓ. அவர்களுக்குச் செய்யப்போவது என்ன?
நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 28 ஆகஸ்ட், 2005