நிலமெல்லாம் ரத்தம் – பா. ராகவன் 83
பாலஸ்தீன் விடுதலைப் போராட்ட சரித்திரத்தில், ஓஸ்லோ ஒப்பந்தம் மிக முக்கியமானதொரு கட்டம். ஏனெனில் அமைதியை உத்தேசித்துச் செய்யப்பட்ட இந்த ஒப்பந்தம், இரு தரப்பிலும் மக்கள் மத்தியில், மிகப்பெரிய அதிருப்தியையே உண்டாக்கியது. இப்படி ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டதற்காக, இஸ்ரேலியப் பிரதமராக இருந்த இட்ஸாக் ராபினை ஒரு யூதரே கொலை செய்தார் (1995). அடுத்து வந்த பொதுத்தேர்தலில், யூதர்கள் மிகக் கவனமாக பழைமைவாத யூதரான பெஞ்சமின் நெதன்யாஹுவை (Benjamin Netanyahu)ப் பிரதமராக்கி உட்காரவைத்தார்கள். ஒருபோதும் அவர், அரேபியர்களுக்கு எந்த அதிகாரத்தையும் தரமாட்டார் என்கிற நம்பிக்கை யூதர்களுக்கு இருந்தது.
மறுபுறம், அரபுகள் தரப்பில் யாசர் அராஃபத் மீது உண்டான அதிருப்தி, நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போனது. ஓஸ்லோ ஒப்பந்தத்தின்படி, அரேபியர்கள் யூதர்களின்மீது தாக்குதல் நடத்தமாட்டார்கள் என்றும், பதிலாக கொஞ்சம் கொஞ்சமாக மேற்குக் கரை மற்றும் காஸா பகுதியிலிருந்து இஸ்ரேல் தன்னுடைய ராணுவத்தை வாபஸ் பெற்றுக்கொள்ளும் என்றும் ஏற்பாடாகியிருந்தது.
எங்களைக் கலந்து ஆலோசிக்காமல் நீங்களாக எப்படி ஒப்பந்தத்தை ஏற்கலாம் என்று அராஃபத்தைக் கேட்டார்கள், பாலஸ்தீனிய அரேபியர்கள். குறிப்பாக, அங்குள்ள விடுதலை இயக்கங்கள் அனைத்துமே, இந்த ஒப்பந்தத்துக்கு எதிராகத்தான் இருந்தன.
அராஃபத் தன் சக்திக்கு உட்பட்ட அளவில் ஒவ்வொரு இயக்கத்தையும் அழைத்துப் பேச்சுவார்த்தைகள் நடத்தி, ஒப்பந்தத்தின் அவசியத்தை வலியுறுத்திப் பார்த்தார். தினசரி, பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு மக்களுக்கும் விளக்கமளித்தார். கேட்கத்தான் ஆளில்லாமல் போய்விட்டது.
“யூதர்கள் மீது அரேபியர்கள் தாக்குதல் நடத்தமாட்டார்கள் என்று எழுதிக்கொடுத்துக் கையெழுத்துப் போட்டீர்கள் அல்லவா? இதோ பாருங்கள்,” என்று அன்று தொடங்கி, கலவரங்களும் தாக்குதல்களும் நம்ப முடியாத அளவுக்கு அதிகரிக்க ஆரம்பித்தன.
ஓஸ்லோ ஒப்பந்தத்துக்கு இஸ்ரேலிய அரசு சம்மதித்ததன் அடிப்படைக் காரணமே, ஹமாஸ் உள்ளிட்ட போராளி இயக்கங்களின் செயல்பாடுகளை அராஃபத் முயற்சி எடுத்து முடக்கிவைக்கவேண்டும் என்பதுதான். ஆனால் எந்தவிதமான பேச்சுவார்த்தை சமரசங்களுக்கும் இயக்கங்கள் ஒத்துழைக்கத் தயாராக இல்லாத காரணத்தால், பாலஸ்தீன் முழுவதும் படிப்படியாக வன்முறை அதிகரிக்கத் தொடங்கியது.
இஸ்ரேலிய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் ஓர் அறிக்கையின்படி செப்டம்பர் 1993 தொடங்கி, செப்டம்பர் 2000 வரையிலான காலகட்டத்தில் மொத்தம் 256 இஸ்ரேலியர்களை அரேபியர்கள் கொன்றிருக்கிறார்கள். இதற்கு எந்தக் காரணமும் சொல்லப்படவில்லை. திடீரென்று கலவரம் மூளும். கண்ணில் பட்டவர்கள் மீது கற்கள் வீசப்படும். தப்பியோடினால் துப்பாக்கிச் சூடு. விழுந்த உடல்கள் உடனடியாக ஜோர்டன் நதியில் வீசி எறியப்படும்.
கட்டுப்படுத்தவே முடியவில்லை. மக்களின் கோபம் எல்லையற்றுப் பொங்கிக்கொண்டிருந்தது. அராஃபத் அவர்களைச் சமாதானப்படுத்துவதற்காக பாலஸ்தீன் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பொதுக்கூட்டங்களில் பேசினார். அந்தக் கூட்டங்களிலும் கற்கள் பறக்க ஆரம்பித்தன. (உண்மையில் கற்கள் பறந்த சம்பவம் மிகக் குறைவு. அழுகிய பழங்கள்தான் அதிகம் பறந்தன.)
அராஃபத்தின் கவலை என்னவெனில், இப்படிக் கலவரம் அதிகரித்துக்கொண்டே போனால், ஒப்பந்தப்படி இஸ்ரேலிய ராணுவம் வாபஸ் ஆவது தள்ளிக்கொண்டே போகும். ஒரு கட்டத்தில் மீண்டும் பழைய குருடி கதவைத் திறக்க வந்துவிடுவாள். என்ன செய்யலாம் என்று யோசித்தார்.
இந்தச் சூழ்நிலையில்தான் இட்ஸாக் ராபின் படுகொலை செய்யப்பட்டு, பெஞ்சமின் நெதன்யாஹு இஸ்ரேலின் பிரதமராக ஆனார். இந்தப் புதிய பிரதமரின் நடவடிக்கைகள் அராஃபத்துக்கு மேலும் கவலையளித்தன.
நெதன்யாஹு பதவியேற்றவுடனேயே யூதர்களின் அபிமானத்தைப் பெறுவதற்காக, மேற்குக் கரை மற்றும் காஸா பகுதிகளில் இருந்த யூதக் குடியிருப்புகளை அதிகப்படுத்தத் தொடங்கினார். இதன் அர்த்தம் என்னவெனில், எக்காரணம் கொண்டும் அந்த இரு பகுதிகளையும் இஸ்ரேல், அரேபியர்களுக்குத் தத்துக் கொடுத்துவிடாது என்பதை உறுதிப்படுத்துவதுதான்.
ஏற்கெனவே 1967 யுத்தத்தை அடுத்து, இப்பகுதிகளில் யூதக் குடியிருப்புகள் கணிசமாக உருவாக்கப்பட்டிருந்தன. பல்லாயிரக்கணக்கான யூதர்கள் இங்கே இடம் பெயர்ந்து வந்து, அரேபியர்களின் மத்தியில் வாழ ஆரம்பித்திருந்தார்கள். அவர்களுக்கு நிகரான எண்ணிக்கையில் புதிதாகவும் பல்லாயிரக்கணக்கானோரை இப்பகுதிகளுக்கு அனுப்பி அழகு பார்த்தது இஸ்ரேல்.
இது அரேபியர்கள் மத்தியில் அச்சத்தையும் கோபத்தையும் உண்டாக்கி, அடிக்கடி கலவரங்களில் இறங்கத் தூண்டியது. “பார்த்தீர்களா, உங்கள் ஓஸ்லோ ஒப்பந்தத்தின் லட்சணத்தை?” என்று அராஃபத்தைக் கேட்டார்கள்.
அராஃபத்தால் பதில் சொல்ல முடியவில்லை. காரணம், அரேபியர்கள் தாக்குதலில் ஈடுபடாமலிருக்கும் பட்சத்தில் இஸ்ரேல் ராணுவம் கொஞ்சம் கொஞ்சமாக வாபஸ் வாங்கப்படும் என்றுதான் ஒப்பந்தத்தில் இருந்ததே தவிர, அரேபியர்கள் வாழும் இடங்களில் யூதக் குடியிருப்புகளை நிறுவுவது குறித்து, அதில் ஏதும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. அது கூடாது என்றோ, சரியென்றோ இருவிதமாகவும் ஒப்பந்தத்தில் ஏதும் இல்லாத காரணத்தால், வழக்கப்படி விருப்பமான நேரத்தில், விருப்பமான அளவில், குடியேற்றங்களை அமைப்பது என்கிற புராதனமான வழக்கத்துக்குப் புத்துருவம் கொடுத்துவிட்டார் நெதன்யாஹு.
ஓஸ்லோவினால் உண்டாகியிருந்த வெறுப்பை இந்த ஏற்பாடு, யூதர்கள் மத்தியில் சற்றே தணிக்கத் தொடங்கிய அதே சமயம், அரேபியர்கள் முழு வீச்சில் கலவரங்களில் இறங்குவதற்கு ஆயத்தம் செய்துகொண்டிருந்தார்கள். இதற்கு இன்னொரு காரணமும் உண்டு.
பாலஸ்தீன் அத்தாரிடி சார்பில் அதிபராக அராஃபத்தும் அவரது நியமன உறுப்பினர்களாக ஒரு சிறு அமைச்சரவையும் பொறுப்பேற்றிருந்தபோதும், அவர்களுக்கு ஆட்சி செய்வதில் அனுபவம் இல்லாத காரணத்தால், நிறைய நிர்வாகக் குளறுபடிகள் ஏற்பட்டன. குறிப்பாக, பணத்தை ஒழுங்கான விகிதத்தில் பிரித்து, செலவு செய்யத் தெரியாத காரணத்தால், கடும் நிதி நெருக்கடிக்கு ஆளானார்கள். மறுபக்கம் மக்கள், போராட்டம்தான் முழு நேரத் தொழில் என்று முடிவு செய்துவிட்டிருந்தபடியால் வர்த்தக மையங்கள், அலுவலகங்கள் அனைத்தும் எப்போதாவதுதான் திறந்திருக்கும் என்கிற நிலைமை உண்டானது. வேலையில்லாப் பிரச்னை அதிகரித்து, ஏராளமான அரபு இளைஞர்கள் புதிதாகத் துப்பாக்கி ஏந்த ஆரம்பித்தார்கள். இவர்களுக்குக் கொம்பு சீவி விடும் பணியைப் போராளி இயக்கங்கள் ஏற்றுக்கொண்டன. (அராஃபத் பதவிக்கு வந்த முதல் வருட இறுதியில் மக்கள் வாழ்க்கைத் தரம் 30% குறைந்து, வேலையில்லாத் திண்டாட்டம் 51% அதிகரித்ததாக ஒரு புள்ளி விவரம் இருக்கிறது.)
இவை அனைத்துமே ஓஸ்லோ ஒப்பந்தத்தின் விளைவுதான் என்று தீவிரமாக நம்பினார்கள் அரேபியர்கள். அது மட்டுமல்லாமல், ஓஸ்லோ ஒப்பந்தத்தின்போதே எழுதப்படாத ஒப்பந்தமாகப் புதிய குடியேற்றங்களுக்கும் அராஃபத் சம்மதம் தெரிவித்திருப்பார் என்று சந்தேகித்து, அத்தகைய புதிய குடியேற்றங்களால் தங்கள் விளை நிலங்களும் வாழும் இடங்களும் பறிபோகின்றன என்றும் குற்றம்சாட்ட ஆரம்பித்தார்கள்.
ஆனால், இந்தக் குடியேற்றங்கள், அராஃபத் முற்றிலும் எதிர்பாராதது. உண்மையிலேயே இரு தரப்பு அமைதியை இஸ்ரேல் விரும்புவதாகத்தான் அவர் நம்பினார். அதன் ஆரம்பப் புள்ளியாகத்தான் ஓஸ்லோ உடன்படிக்கையை அவர் பார்த்தார். ஆனால், இஸ்ரேல் தனது வழக்கமான குடியேற்றத் திருவிழாவைப் பகடைக்காயாகப் பயன்படுத்தி, யூதர்களைச் சமாதானப்படுத்தியதில் உண்மையிலேயே அவருக்கு அதிர்ச்சிதான்.
ஆனால் எப்படி எடுத்துச் சொன்னால் இது புரியும்? மக்கள் யாரும் புரிந்துகொள்ளும் மன நிலையில் இல்லை. தாங்கள் முற்றிலும் வஞ்சிக்கப்பட்டுவிட்டதாகவே கருதினார்கள். ஏதாவது செய்து தங்கள் எதிர்ப்பை மிகக் கடுமையான முறையில் பதிவு செய்ய மிகவும் விரும்பினார்கள். இது மட்டும் நடந்தால், பிறகு சரிசெய்யவே முடியாத அளவுக்குப் பிரச்னை பூதாகாரமாகிவிடும் என்று அராஃபத் அஞ்சினார்.
ஆகவே, மக்களின் கவனத்தைத் திசைமாற்றவும், யூதக் குடியேற்றங்களைக் கட்டுப்படுத்தவும் வேறு வழியே இல்லாமல், தானே இரண்டாவது இண்டிஃபதாவுக்கான அழைப்பை விடுக்கத் தீர்மானித்தார்.
அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது உண்மை. ஆனால் தொடர்ந்து நடைபெறும் காரியங்கள் எதுவும் அமைதியை முன்னெடுத்துச் செல்வதாக இல்லை என்று அறிவித்துவிட்டு, அரேபியர்களின் உணர்ச்சியை இஸ்ரேல் மதிக்கத் தவறுவதாகப் பேசினார்.
இது, சூடேறிக்கொண்டிருந்த பாலஸ்தீனைப் பற்றியெரியச் செய்யும் விதமான விளைவுகளை உண்டாக்க ஆரம்பித்தது. 1996-ம் ஆண்டில் மட்டும் இஸ்ரேலில், சுமார் முப்பது குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நிகழ்ந்தன. அவற்றுள் டெல் அவிவில் வெடித்த பஸ் வெடிகுண்டு ஒன்று பத்தொன்பது பேர் உயிரைக் குடித்தது, மிக முக்கியமானது. மார்ச் மாதம் நடந்த இந்தச் சம்பவத்தின் தொடர்ச்சியாக, ஏப்ரலில் காஸா பகுதியில் ஒரு தற்கொலைத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டு ஆறு யூதர்கள் பலியானார்கள். மீண்டும் மே மாதம் டெல் அவிவில் ஒரு பஸ்ஸில் வெடிகுண்டு வெடித்து, முப்பது பேர் பலி. அந்தச் சம்பவம் நடந்த சில மணி நேரங்களுக்குள்ளாக ஜெருசலேமில், அதே பாணி தற்கொலைத் தாக்குதலுக்கு ஐந்து பேர் பலி.
என்ன நடக்கிறது என்றே புரியாத சூழல் ஏற்பட்டது. நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர, ராணுவ நடவடிக்கை மிகவும் அவசியம் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாஹு கருதினார். ஆனால் அரேபியக் குடியிருப்புகளில் ராணுவம் புகுமானால் விளைவு எந்த மாதிரியும் ஆகலாம். ஒரு முழுநீள யுத்தத்துக்கான சாத்தியமே அப்போது தெளிவாகத் தெரிந்ததால் சற்றே நிதானம் காட்டலாம் என்று மொஸாட் சொன்னது.
ஹமாஸ், மிகத் தீவிரமாகச் செயல்பட்ட நேரம் அது. தினசரி குண்டுகள் வெடிப்பது என்பதை ஒரு கடமை போலச் செய்தார்கள். பெரும்பாலும் பேருந்து நிலையங்கள், மார்க்கெட்டுகள், பாலங்கள், தேவாலயங்கள் ஆகிய இடங்களில்தான் அவர்கள் குண்டுவைத்தார்கள். பத்து அல்லது பன்னிரண்டு சாதாரண குண்டுவெடிப்புகளை நடத்திவிட்டு, ஒரு பெரிய தற்கொலைத் தாக்குதல் நடத்துவது என்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள்.
ஹமாஸின் இந்தத் தீவிர நடவடிக்கைகள், அரேபியர்கள் மத்தியில் புதிய எழுச்சியை உண்டாக்கியது. ஒருவேளை தங்களுக்கு விடுதலை வாங்கித் தரப்போவதே ஹமாஸ்தானோ என்று அவர்கள் நினைக்கத் தொடங்கினார்கள். நடப்பது எதுவுமே நல்லதுக்கல்ல என்பது மட்டும் அராஃபத்துக்குப் புரிந்தது. பி.எல்.ஓ.வை அவர்கள் முற்றிலுமாக நிராகரித்துவிடுவதற்கு முன்னால், ஏதாவது செய்தால்தான் உண்டு என்று நினைத்தார்.
மிகவும் யோசித்து, சாதகபாதகங்களை அலசி ஆராய்ந்து, கடைசியில்தான் அந்த முடிவை எடுத்தார். இன்னொரு இண்டிஃபதா.
பாலஸ்தீனின் இரண்டாவது மக்கள் எழுச்சி என்று சரித்திரம் வருணிக்கும் இந்த இண்டிஃபதாவுக்கு “அல் அக்ஸா இண்டிஃபதா” என்று பெயர். அதாவது அல் அக்ஸா மசூதியை மீட்பதற்கான மக்கள் போராட்டம். சந்தேகமில்லாமல் இதனைத் தொடங்கியவர் அராஃபத் தான். ஆகவே இதன் விளைவாகப் பெருகிய மாபெரும் ரத்த வெள்ளத்துக்கும் அவரேதான் பொறுப்பு.
நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 8 செப்டம்பர், 2005