நிலமெல்லாம் ரத்தம் – பா. ராகவன் 85
இயேசுவைச் சிலுவையில் அறைந்து, கொல்ல உத்தரவிட்ட ஏரோது மன்னனின் காலத்தில், அதாவது கி.மு. 63-ல் இரண்டாவது முறையாகப் புதுப்பித்துக் கட்டப்பட்ட சாலமன் ஆலயத்தின் எச்சங்களைத் தேடி, கி.பி. 1967-லிருந்து யூதர்கள் அல் அக்ஸா மசூதி வளாகத்தில், அகழ்வாராய்ச்சி செய்து வருவதைப் பார்த்தோம். கிட்டத்தட்ட இரண்டாயிரம் வருடகாலத்து மிச்சங்களை இன்றும் அவர்கள், தேடிக்கொண்டிருக்கிறார்கள். ஓர் உடைந்த சுவர்தான் அவர்களது ஆதாரம். மேற்கொண்டு வலுவான ஆதாரங்கள் ஏதும் கிடைக்காத காரணத்தால், அல் அக்ஸா பள்ளிவாசலின் தாழ்வாரம், இஸ்லாமியர்களின் கட்டடக் கலையைப் பிரதிபலிப்பதாக இல்லை; உள்ளே இருக்கும் தூண்களும் மாடங்களும், பண்டைய ரோமானிய கட்டடக் கலைப் பாணியில் இருக்கின்றன என்றெல்லாம் சொன்னார்கள். அகழ்வாராய்ச்சியில் பல்வேறு ஆதாரங்கள் கண்டெடுக்கப்பட்டிருப்பதாகவும், அவ்வப்போது தகவல் வந்துகொண்டே இருக்கும். ஆனால், அந்த இடத்தில்தான் சாலமன் தேவாலயம் இருந்திருக்கமுடியும் என்பதற்கான உறுதியான ஓர் ஆதாரம், இன்றுவரை பெறப்படவில்லை என்பதே உண்மை.
ஆனால் இந்தக் காரணங்களால் அல் அக்ஸா மசூதியை இடித்துவிட்டு, அங்கே ஒரு யூத தேவாலயம் எழுப்பவேண்டுமென்கிற தங்கள் விருப்பத்தை விட்டுக்கொடுக்க, யூதர்கள் தயாராக இல்லை. ஜெருசலேமே யூதர்களின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் ஒரு நகரம்தான் என்பதால், அவ்வப்போது ஆக்கிரமிப்பு முயற்சிகள் மூலமும், இதற்கான வேலைகளை முடுக்கிவிட்டிருக்கிறார்கள்.
1967 _ யுத்தத்தில் இஸ்ரேல் வென்ற உடனேயே, மசூதி வளாகத்தில் அகழ்வாராய்ச்சிக்கான நடவடிக்கைகள் ஆரம்பமாயின என்று, சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம். அதோடு இன்னொரு காரியத்தையும் அவர்கள் செய்தார்கள். அந்த ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி, ஷலோமாகரன் என்கிற யூத மத குரு ஒருவர், ஒரு சிறு படையைத் (அரசாங்கப்படைதான்) தன்னுடைய பாதுகாப்புக்காக ஏற்பாடு செய்துகொண்டு, அல் அக்ஸா மசூதி வளாகத்துக்கு வந்து, அங்கே யூத முறைப்படியான பிரார்த்தனை மற்றும் பூஜைகளில் ஈடுபடத் தொடங்கினார்.
ஷலோமாகரன், தனது சொந்த முடிவின்பேரில்தான் இந்தப் பிரார்த்தனையைச் செய்தார் என்று இஸ்ரேல் தரப்பில் சொல்லப்பட்டாலும், அது, அரசு அனுமதியின்றி நடந்திருக்கச் சாத்தியமில்லை என்பது மிகவும் வெளிப்படை.
முஸ்லிம்களுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. அப்போதுதான் அவர்கள் யுத்தத்தில் தோற்றுத் துவண்டிருந்தார்கள். ஜெருசலேம் நகரை விட்டு அவர்கள் முற்றிலுமாக நீங்குவதற்குள், மசூதி அவர்கள் கையைவிட்டுப் போய்விடும்போலிருந்தது. தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போராளி இயக்கத்தவர்கள் யாரும், அப்போது அங்கே இல்லை. ஒரு முழுநாள் நடைபெற்ற இந்தப் பிரார்த்தனையின் தொடர்ச்சியாக, மசூதி விரைவில் இடிக்கப்பட்டு, அங்கே பழைய சாலமன் ஆலயம் மீண்டும் எழுப்பப்படும் என்கிற நம்பிக்கையை யூதர்களுக்கு விதைத்துவிட்டு, வீடுபோய்ச் சேர்ந்தார், அந்த மதகுரு. (அவரது அந்த துணிச்சல் மிக்க நடவடிக்கைக்காக, அந்த வருடம் முழுவதும் இஸ்ரேலின் பல்வேறு நகரங்களில், அவருக்குப் பாராட்டுக்கூட்டங்கள் நடந்தனவாம்.)
ஒரு பக்கம் அகழ்வாராய்ச்சிப் பணிகள் ஆரம்பமாகி நடைபெற்றுக்கொண்டிருக்க, அதில் நம்பிக்கை இல்லாத சில தீவிர யூதர்கள் மசூதியை வெடிகுண்டு வைத்துத் தகர்ப்பது, தீவைத்து எரிப்பது, புல்டோசர்களைக் கொண்டுவந்து இடிப்பது என்று, பல்வேறு உத்திகளைப் பரிசீலிக்கத் தொடங்கினார்கள்.
மசூதி வளாகத்தில், எந்தவிதமான அத்துமீறல்களையும் அனுமதிக்க முடியாது என்று இஸ்ரேல் அரசு சொன்னாலும், 1969-ம் ஆண்டு ஒரு தீவைப்புச் சம்பவம் அங்கே நடக்கத்தான் செய்தது. மனநிலை சரியில்லாதவன் என்று, பின்னால் இஸ்ரேல் நீதிமன்றம் சான்றிதழ் அளித்துவிட்ட அஸுயி டெனிஸ் என்கிற ஒரு யூதத் தீவிரவாதி, பள்ளிவாசலின் ஒரு பகுதியில் பெட்ரோல் ஊற்றித் தீவைத்தான். கணிசமான சேதம். அந்தப் பகுதியில் இருந்த சில முஸ்லிம் இளைஞர்கள் கடுமையாகப் போராடி, இந்தத் தீயை அணைத்தார்கள். இறுதிவரை தீயணைப்பு வண்டிகள் எதுவும் வரவேயில்லை.
அரசுத் தரப்பிலிருந்து எந்தவிதமான உத்தரவாதமும் இல்லாத நிலையில், முஸ்லிம்கள் தாங்களாகவே ஒரு குழுவை ஏற்பாடு செய்து, அல் அக்ஸா மசூதியைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாழவைத்து, மசூதியைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபடுத்த முடிவு செய்தார்கள்.
இதில் வினோதம் என்னவென்றால், முற்றிலும் இஸ்ரேல் அரசின் கட்டுப்பாட்டில் இருந்த மசூதிக்கு, அப்போது முஸ்லிம்கள் யாரும் போய்வரமுடியாது. கேட்டால், அகழ்வாராய்ச்சிப் பணிகளைக் காரணம் சொல்லிவிடுவார்கள். அகழ்வாராய்ச்சிக்காரர்கள் எப்போது தோண்ட ஆரம்பித்து, எப்போது வீட்டுக்குப் போனாலும், உடனே யாராவது மசூதியைத் தகர்க்க வந்துவிடுவார்கள். மசூதிக்கு வெளியே கண்விழித்துக் காவல் காத்து நிற்கவேண்டியது மட்டும், முஸ்லிம்கள்.
யூத மதகுரு ஷலோமாகரன், முதல் முதலில் அல் அக்ஸாவுக்குச் சென்று, யூத மதச் சடங்குகளை நிறைவேற்றிவிட்டு வந்ததன் தொடர்ச்சியாக, அடுத்த நான்கைந்து வருடங்களில் மொத்தம் மூன்று முறை, இதே போன்ற முயற்சிகளும் அங்கே மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு முறையும் முஸ்லிம் இளைஞர்கள், அவர்களை வழிமறித்துத் தடுத்து நிறுத்தித் திருப்பி அனுப்ப வேண்டியிருந்தது.
இதனால், யூதர்கள் இந்தப் பிரச்னையை நீதிமன்றத்துக்கு எடுத்துச் சென்றார்கள். நீண்டநாள் இழுத்தடித்த இந்த வழக்கில், 1976-ம் வருடம் ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டது. ‘இப்போது மசூதி இருக்கிறதென்றாலும் எப்போதோ தேவாலயம் இருந்த இடம்தான் அது என்று யூதர்கள் நம்புவதால், அவர்களும் அங்கே பிரார்த்தனையில் ஈடுபடத் தடையில்லை’ என்பது தீர்ப்பு.
கவனிக்கவும். அகழ்வாராய்ச்சித் துறையினர் தமது முடிவுகளை முழுமையாக வெளிப்படுத்தவில்லை. அங்கே இரண்டாயிரம் வருடங்களுக்கு முந்தைய யூத தேவாலயம் இருந்தது நிரூபிக்கப்பட்டிருக்கவில்லை. பிரச்னைக்குரிய இடத்தில் இரு சமயத்தவரும் பிரார்த்தனை செய்யலாம் என்று நீதிமன்றம் உத்தரவிட்டதன் உள்நோக்கம், மிக வெளிப்படையானது. யூதர்கள் ஒரு மாபெரும் கலவரத்தை உத்தேசிக்கிறார்கள் என்று அலறினார்கள், அரேபியர்கள்.
காது கொடுத்துக் கேட்க யாருமில்லாத காரணத்தால், அல் அக்ஸா மசூதி வளாகத்துக்கு அடிக்கடி யூதர்கள் வரத் தொடங்கினார்கள். இதனால் எந்தக் கணமும் அங்கே மதக்கலவரங்கள் மூளும் அபாயம் ஏற்பட்டது. சமயத்தில், வம்புக்காகவே நூற்றுக்கணக்கான யூதர்கள் (பெரும்பாலும் இந்த அணிகளில் காவல்துறையினரே இருந்ததாக முஸ்லிம்களின் சில இணையத்தளங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் போதிய ஆதாரங்கள் கிடைக்கவில்லை.) மொத்தமாக மசூதிக்குள் நுழைந்து, யூத மதச் சடங்குகளைச் செய்ய ஆரம்பிப்பார்கள். நாள்கணக்கில்கூட இந்தச் சடங்குகள் நீள்வதுண்டு. அப்போதெல்லாம், அகழ்வாராய்ச்சித் துறையினர் விடுப்பு எடுத்துக்கொண்டு போய்விடுவார்கள்.
இம்மாதிரியான தருணங்களில், அந்தப் பகுதியில் கலவரம் மூள்வது சாதாரணமாகிப்போனது. முஸ்லிம்கள், யூதர்களைத் தாக்குவார்கள். பதிலுக்கு யூதர்கள் முஸ்லிம்களைத் தாக்குவார்கள். கடைகள் உடனடியாக மூடப்படும். கற்கள் பறக்கும். பாட்டில்களில் அடைத்த பெட்ரோல், வானில் பறந்து சுவரில் மோதி வெடிக்கும். எப்படியும் ஓரிருவர் உயிரை விடுவார்கள். பலர் காயமடைவார்கள். கிட்டத்தட்ட, இது ஒரு தினசரி நடவடிக்கையாகிப் போனது. புனிதமான நகரம் என்று வருணிக்கப்படும் ஜெருசலேம், உலகின் ஆபத்து மிகுந்த நகரங்களில் ஒன்றாக ஆகிப்போனது.
இதில் உச்சகட்ட சம்பவம் ஒன்று உண்டு. அல் அக்ஸா மசூதி வளாகத்தின் அருகே, ஒரு பள்ளிக்கூடம் உண்டு. யூதர்களின் மதப் பள்ளிக்கூடம் அது. திடீரென்று அந்தப் பள்ளிக்கூடத்தை வெடிமருந்துக் கிடங்காக மாற்றிவிட்டார்கள். ஒரே இரவில் லாரிகளில் வெடிபொருள்களைக் கொண்டுவந்து, அங்கே நிரப்பினார்கள். ஒரு சிறு வெடிவிபத்தை ‘உண்டாக்கினால்’ கூடப் போதும். மசூதி இருந்த இடம், அடையாளம் தெரியாமல் உருக்குலைந்துவிடும் அபாயம் ஏற்பட்டது.
இதனால் கலவரமடைந்த முஸ்லிம்கள், உடனடியாக அந்தப் பள்ளிக்கூடத்தில் இருக்கும் வெடிபொருள்களை அப்புறப்படுத்தக் கோரி, போராட்டத்தில் இறங்கினார்கள். இந்தப் போராட்டத்தை, ஒரு கலவரமாகக் கணக்கில் எடுத்துக்கொண்ட இஸ்ரேல் காவல்துறை, கலவரத்தை அடக்குவதான பெயரில், மசூதியின் மீது தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நிகழ்த்த ஆரம்பித்தது. இதில் மசூதியில் பல பகுதிகள் சேதமாயின. ஒரு சில உயிர்களைப் பலி வாங்கி, சில கதவு ஜன்னல்களை நாசப்படுத்தி, சுமார் எட்டு மீட்டர் பரப்பளவுக்கு மசூதிச் சுவரையும் இடித்துத் தள்ளியதுடன், இந்தக் கலவர அடக்கல் நடவடிக்கை, ஒரு முடிவுக்கு வந்தது. பள்ளிக்கூட வெடிகுண்டுகள் அப்புறப்படுத்தப்படும் என்று உறுதியளித்துவிட்டு ஒதுங்கிப்போனார்கள். (பிறகு அந்த குண்டுகள் எப்போது அப்புறப்படுத்தப்பட்டன என்பது தெரியவில்லை. ஆனால் இரண்டு சந்தர்ப்பங்களில் பள்ளிக்கூடம் இருந்த திசையிலிருந்து, மசூதியை நோக்கி வெடிகுண்டுகள் வீசப்பட்டிருக்கின்றன. ஆனால் சேதமில்லை.)
1982-ம் ஆண்டுக்குப் பிறகு, இந்தப் பள்ளிவாசல் தகர்ப்பு முயற்சிகள், புதுப்பரிமாணம் பெற்றன. குறைந்தது வாரம் ஒருமுறையாவது, அந்தப் பகுதியில் குண்டுவீச்சு சம்பவம் நடைபெற ஆரம்பித்தது. வாகனங்களில் வந்து இறங்கி மசூதியை நோக்கி குண்டு வீசுவது தவிர, இரவு நேரங்களில் ரகசியமாக, அத்துமீறி உள்ளே புகுந்து, வெடிகுண்டுகளை வைத்துவிட்டுப் போவதும் நடந்திருக்கிறது. ஷிப்ட் முறையில் முஸ்லிம்கள் விழித்திருந்து, இந்தச் சம்பவங்கள் அசம்பாவிதங்களாகிவிடாமல் தடுப்பதற்காகக் காவலில் ஈடுபட்டார்கள்.
அப்படிக் காவலில் ஈடுபட்டவர்கள் மீதும் தாக்குதல்கள் நடந்தன. 1982-ம் ஆண்டு தொடங்கி 86 வரையிலான காலகட்டத்தில், அல் அக்ஸா காவல் பணியில் ஈடுபட்டிருந்த முஸ்லிம் இளைஞர்களில் மொத்தம் 23 பேர், யூதர்களின் தாக்குதலுக்கு பலியாகியிருக்கிறார்கள். (முஸ்லிம்கள் திருப்பித்தாக்கியதில், இதே சந்தர்ப்பங்களில், இதே காலகட்டத்தில் 16 யூதர்களும் பலியாகியிருக்கிறார்கள்.)
இதில், கலவரத்தை அடக்குவதாகச் சொல்லிக்கொண்டு, ராணுவம் உள்ளே புகுந்ததன் விளைவாக இறந்தவர்கள் தனி. உண்மையில் கலவரக்காரர்களைக் காட்டிலும், ராணுவத்தினர் மேற்கொண்ட நடவடிக்கையினால்தான் மசூதி அதிகமாகப் பாதிக்கப்பட்டது. அதன் பல பகுதிகள் இடிந்து சின்னாபின்னமாயின.
82-ம் வருடம் பிப்ரவரி மாதம் லெஸர் என்கிற யூதர் ஒருவர், தனது உடம்பெங்கும் ஜெலட்டின் குச்சிகளைக் கட்டிக்கொண்டு, மனித வெடிகுண்டாக, பகிரங்கமாக அல் அக்ஸாவுக்குள் நுழைந்தார். முஸ்லிம்கள் கடுமையாகப் போராடி, அவரை அப்புறப்படுத்தினார்கள். இந்தச் சம்பவம் உண்டாக்கிய பாதிப்பில், அடுத்த வருடமே தீவிர யூதர்கள் அடங்கிய குழுவினர் (சுமார் ஐம்பது பேர் கொண்ட குழு), இதேபோல் மனித வெடிகுண்டுகளாக ஒரு நாள் அதிகாலை மசூதிக்குள் நுழைந்தார்கள்.
அதிகாலைப் பிரார்த்தனைக்காக அந்தப் பக்கம் வந்த சில முஸ்லிம்கள், அவர்களைப் பார்த்துவிட்டுச் சென்று தடுக்க, அப்போது எழுந்த களேபரத்தில் அத்தனை பேருமே மடிந்துபோனார்கள். நல்லவேளையாக, மசூதி தப்பித்தது.
1984-ம் ஆண்டு ஒரு யூத மதகுரு, மசூதி வளாகத்தில் அத்துமீறி நுழைந்து, மசூதியின் மேலே ஏறி, அங்கே யூத தேசியக் கொடியைப் பறக்கவிட்டார். இந்தச் சம்பவம் மிகப்பெரிய கலவரத்துக்கான தூண்டுதலாக அமைந்தது. அந்த யூத மதகுரு, மனநிலை சரியில்லாதவர் என்று இஸ்ரேலிய நீதிமன்றம் சொல்லிவிட்டதைக் கண்டித்து, உலகெங்கும் உள்ள முஸ்லிம்கள் கோபக்குரல் எழுப்பினார்கள். ஜெருசலேம் முழுவதும் வசித்துவந்த முஸ்லிம்கள் கலவரத்தில் இறங்க, போலீஸ் தடியடி, துப்பாக்கிச் சூடு என்று நகரமே ரணகளமானது. இருபது பேர் இறந்தார்கள். அறுபத்தியேழு பேர் படுகாயமடைந்தார்கள்.
1990-ம் ஆண்டு சாலமன் ஆலயத்தை, மசூதி வளாகத்தில் எழுப்பியே தீருவோம் என்று, அடிக்கல் நாட்டும் சம்பவம் ஒன்று நடைபெற்றது. தடுக்கப்போன சுமார் இருநூற்றைம்பது முஸ்லிம்கள், வளாகத்திலேயே படுகொலை செய்யப்பட்டார்கள்.
இந்தக் கலவரங்களின் உச்சமாக, 2000-ம் ஆண்டு செப்டெம்பரில் சில முக்கிய சம்பவங்கள் நடைபெற்றன. 27-ம் தேதி டேவிட் பிரி (David Biri) என்கிற யூத மதகுருவைச் சில முஸ்லிம்கள் சேர்ந்து கொன்றார்கள். இது, இன்னொரு இண்டிஃபதாவின் ஆரம்பம் என்று இஸ்ரேல் உளவுத்துறை முடிவு செய்துவிட்டது. இந்தச் சம்பவம் நடந்த இருபத்துநான்கு மணி நேரத்துக்குள், இன்னொரு அதிர்ச்சிகரமான சம்பவம், மேற்குக்கரை நகரமான கல்கில்யாவில் நடைபெற்றது. இஸ்ரேலிய காவல்துறையினருடன் இணைந்து, ஊர்க்காவல் பணியில் ஈடுபட்டிருந்த பாலஸ்தீனியக் காவலர் ஒருவர், தமது சக யூதக் காவலர் ஒருவரைத் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார்.
எப்படியும் கலவரம் மூளத்தான் போகிறது என்று எதிர்பார்த்த, அப்போதைய இஸ்ரேலிய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த, ஏரியல் ஷரோன், அரசியல் காரணங்களை உத்தேசித்து, அல் அக்ஸா மசூதிக்கு ஒரு விசிட் செய்தார்.
இது மிகப்பெரிய பிரச்னைக்கு வித்திட்டுவிட்டது. தீவிர யூதரான ஏரியல் ஷரோன், அல் அக்ஸா மசூதிக்குள் நுழைவதை ஜெருசலேம் நகரத்து முஸ்லிம்கள் விரும்பவில்லை. ஏற்கெனவே பிரச்னைகள் மலிந்த பிராந்தியம் அது. ஏரியல் ஷரோன் அங்கே வரும்பட்சத்தில் நிச்சயம் விபரீதம் நடக்கும் என்று நினைத்தவர்கள், அவருக்கு எதிர்ப்புத் தெரிவித்து, உள்ளே விடமாட்டோம் என்று வழிமறித்து நின்றார்கள்.
ஏரியல் ஷரோன் மசூதிக்குள் நுழைவதற்கு, இஸ்ரேலிய காவல்துறை பாதுகாப்பு அளித்தது. ஷரோன் மசூதிக்குள் நுழைந்தார். வெளியே கலவரம் வெடித்தது.
நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 15 செப்டம்பர், 2005