நிலமெல்லாம் ரத்தம் – பா. ராகவன் 90
மனைவியும் குழந்தையும் பிரான்ஸில் இருந்தார்கள். எப்போதும் உடன் இருக்கும் மூத்த அல் ஃபத்தா உறுப்பினர்கள் நான்கைந்து பேர், தலைமறைவாகியிருந்தார்கள். பலர், கைது செய்யப்பட்டிருந்தார்கள். யார், யார் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள், யார் வெளியே இருக்கிறார்கள் என்பதே தெரியாத சூழ்நிலையும் நிலவியது. அராஃபத்தின் வீட்டில் வேலை பார்த்துக்கொண்டிருந்த பணியாளர்கள் அத்தனை பேரையும், ஆரம்பத்திலேயே கைது செய்து கொண்டுபோய்விட்டார்கள். காவலுக்கு நின்ற வீரர்கள் ஒருத்தர் விடாமல், முன்னதாகச் சுட்டுக்கொல்லப்பட்டிருக்க, தனது ரமல்லா மாளிகையில் அராஃபத் தனியொரு நபராக, வாய் திறந்து பேசுவதற்கு ஒரு சகா இல்லாமல், இருக்க வேண்டியதானது. வெளியுலகுடன் அவர் தொடர்புகொள்வதற்கு, எந்த வழியும் இல்லாமல், மாளிகையின் தொலைத் தொடர்புகள் அத்தனையும் துண்டிக்கப்பட்டன. ஒரு துண்டுக்காகிதம், பென்சில் கூட இல்லாதவாறு கண்ணும் கருத்துமாகத் தேடித் துடைத்தெடுத்துவிட்டார்கள்.
இரண்டாவது முறையாக, அராஃபத்தை வீட்டுக்காவலில் வைப்பதற்கு, இத்தனை காரியங்களைச் செய்யவேண்டியிருந்தது. ஆனால், இஸ்ரேல் ராணுவ வீரர்கள், இதற்கு அதிக அவகாசம் எடுத்துக்கொள்ளவில்லை. ஓர் இரவு. ஒரு பகல். அவ்வளவுதான்.
மேற்குக் கரைப் பகுதி நகரங்களிலேயே ரமல்லா, மிகவும் பாதுகாப்பானதொரு பிரதேசம். அராஃபத் அங்கே இருப்பது மட்டும் காரணமல்ல, பெரும்பாலான போராளி இயக்கங்களின் செயல் அலுவலகங்கள் அங்கேதான் இருந்தன. பயமின்றி நடமாடும் சௌகரியம், அவர்களுக்கு அங்கே இருந்தது. பாலஸ்தீன் அத்தாரிடி காவலர்கள்தான் அங்கே பெரும்பான்மை என்பதால், போராளிகள் தயக்கமின்றி என்ன வேண்டுமானாலும் செய்யமுடிந்தது. பதிலுக்கு நகரக் காவல் பணியில் அவர்களும், காவலர்களுக்குத் தம்மாலான அத்தனை உதவிகளையும் செய்துகொண்டிருந்தார்கள்.
அராஃபத் இருக்கிறார்; ஆகவே கவலை இல்லை என்கிற நம்பிக்கையில், ரமல்லா நகரத்து மக்களும் எப்போதும் அச்சமின்றியே வாழ்ந்துகொண்டிருந்தார்கள்.
அவரைச் சிறைப்படுத்துவது இஸ்ரேல் ராணுவத்துக்குப் பெரிய காரியம் இல்லை என்றபோதும், (வயதானவர், நோய்வாய்ப்பட்டிருந்தார், ஃபத்தா இயக்கத்துக்குள் இரண்டாம் கட்டத் தலைவர்களிடையே ஓரளவு உரசல் இருந்தது போன்றவை இதற்கான காரணங்கள்.) போராளிகளைச் சமாளித்தாகவேண்டியிருந்தது. எளிதில் விட்டுக்கொடுப்பவர்கள், இல்லை அவர்கள். ஒரு யுத்தம் என்று வரும்போது, தமக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளை ஒதுக்கிவைத்துவிட்டு, அத்தனை இயக்கத்தவர்களும் ஒன்றுசேர்ந்து, அராஃபத்தைக் காப்பாற்ற நிற்கத் தயாராக இருந்தார்கள்.
நான்கு அடுக்குகளாக அவர்கள் அரண்போல், அராஃபத்தின் மாளிகையைச் சூழ்ந்து நின்றிருந்தார்கள். இஸ்ரேல் ராணுவம் ஒவ்வொரு அரணையும் உடைத்துக்கொண்டு முன்னேற, எப்படியும் குறைந்தது ஆறிலிருந்து எட்டு மணிநேரமாவது ஆகும் என்று, கணக்கிடப்பட்டது. அத்தனைக் கட்டுக்காவல்களையும் தாண்டி, ராணுவம் அரண்மனையை நெருங்கினாலும், நேரடியாக உள்ளே நுழைந்துவிட முடியாதபடி, அரண்மனைக்கு வெளியிலும் கணிசமான போராளிகள், ஆயுதமேந்தித் தயாராக இருந்தார்கள். எப்படியாவது அராஃபத்தை ரமல்லாவிலிருந்து கிளப்பி, வேறெங்காவது கொண்டுபோய்விடவும் அவர்கள் ஆலோசித்தார்கள். ஆனால், நடைமுறையில் அது சாத்தியமில்லாமல் இருந்தது. அராஃபத்துக்கே அந்த விருப்பம் இல்லை என்பது, இதற்கு முதல் காரணம்.
என்ன ஆனாலும் ஊரை விட்டு ஓடக்கூடாது என்றிருந்தார், அவர். அமைதிக்கான கதவுகளைத் தான் அடைத்ததாக ஒரு பேச்சு வந்துவிடக்கூடாது என்பதில், அவருக்கு அக்கறை இருந்தது. நார்வேயின் முயற்சியின் விளைவாக ஏற்பட்ட ஓஸ்லோ ஒப்பந்தம், அமெரிக்க அதிபரின் முயற்சியில் நடைபெற்ற கேம்ப் டேவிட் அமைதிப் பேச்சுவார்த்தை எதுவுமே, எதிர்பார்த்த பலன் அளிக்காததற்கு, நிச்சயமாக அரபுகள் காரணமில்லை என்று, அராஃபத் நம்பினார்.
இஸ்ரேல் எப்போதும் ஒரு தரப்பிலிருந்து மட்டுமே அமைதியையும் விட்டுக்கொடுப்பதையும் எதிர்பார்ப்பதாக, அவர் கருதினார். ஓஸ்லோ ஒப்பந்தத்தின்போது, எத்தனையோ கஷ்டங்களைச் சகித்துக்கொண்டு, பல படிகள் இறங்கிவந்தும், உபயோகமாக எதுவுமே நடக்கவில்லை என்கிற வருத்தமும், விமரிசனமும் அவருக்கு, இருந்தது.
பாலஸ்தீனியர்கள் எதிர்பார்ப்பது, தாற்காலிக அமைதி அல்ல. சுதந்திரம். பூரண சுதந்திரம். மேற்குக்கரைப் பகுதி, ஜெருசலேம், காஸா உள்ளிட்ட நகரங்களை இணைத்த ஒரு சுதந்திர பூமி. கஷ்டமோ, நஷ்டமோ தங்கள் மண்ணைத் தாங்களே ஆண்டுகொள்வதில்தான் அவர்களுக்கு விருப்பம். இஸ்ரேல் என்றொரு தேசத்தையே அங்கீகரிக்கவில்லை; ஒட்டுமொத்த பாலஸ்தீனிலிருந்தும் யூதர்களைத் துரத்தி அடித்துவிட்டு, முழுமையான இஸ்லாமிய ஆட்சியை அமைப்போம் என்கிற தங்கள் கனவில், பெரும்பகுதியை விட்டுக்கொடுத்துவிட்டு, மேற்சொன்ன மூன்று பிராந்தியங்கள் இணைந்ததொரு சுதந்திர தேசம், கிடைத்தால் போதும் என்றுதான், அவர்கள் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.
ஆனால், அமைதிப்பேச்சுக்கு அழைக்கும் இஸ்ரேல், இந்த ஒரு விஷயம் தவிர, மற்ற அனைத்தைப் பற்றியும்தான் பேசுகிறது. போராளி இயக்கங்கள், தம் செயல்பாடுகளை நிறுத்தவேண்டும்; யூதர்கள் வாழும் பகுதிகளில் இயக்கங்கள் தாக்குதல் நடத்தக்கூடாது; பாலஸ்தீன் அத்தாரிடி, தீவிரவாதிகளுக்கு நிதியுதவி செய்வதை நிறுத்தவேண்டும் என்று, பாடிய பாடலையேதான் திரும்பத்திரும்பப் பாடிக்கொண்டிருந்தது.
சுதந்திர பூமி கிடைத்துவிட்டால், இவை ஏன் நடக்கப்போகின்றன என்று, அராஃபத் கேட்டார். ‘நீங்கள் முதலில் அமைதியைக் கொண்டு வாருங்கள்; அப்புறம் உட்கார்ந்து பேசலாம்’ என்று, அவர்கள் சொன்னார்கள்.
இரண்டுமே சரிதான் என்று மேலோட்டமான பார்வைக்குத் தோன்றலாம். உண்மையில், போராளி இயக்கங்கள் யாராலும் கட்டுப்படுத்த முடியாத எல்லைக்குச் சென்று, யுத்தம் தொடங்கிவிட்டிருந்தார்கள். அராஃபத் சொன்னால் கேட்பார்கள் என்கிற நிலைமையெல்லாம், காலாவதியாகிவிட்டிருந்தது என்பதுதான் உண்மை. அராஃபத்துக்கு நிலைமை புரிந்ததால்தான் அவர் பேசாதிருந்தார். யார் குத்தியாவது அரிசி வெந்தால் போதும் என்கிற நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தார்.
இந்தச் சூழ்நிலையைத்தான், இஸ்ரேல் தனக்கு வேறுவிதமாக சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளப் பார்த்தது.
‘அராஃபத் சொன்னால் அவர்கள் கேட்கவில்லையா? ஆளை மாற்றுங்கள்’ என்று, கோஷமிடத் தொடங்கினார் ஏரியல் ஷரோன். ஷரோனுக்கு ஆரம்பம் முதலே அராஃபத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதிலோ, அவரை பாலஸ்தீன் அத்தாரிடி தலைவராக ஏற்பதிலோ சற்றும் விருப்பம் இல்லை. பாலஸ்தீன் அத்தாரிடி அமைப்பிலேயே உள்ள மிதவாதிகள் சிலருள், யாராவது ஒருவர் குறிப்பாக, மம்மூத் அப்பாஸ் தலைமைப் பொறுப்பேற்றால், அதற்கு அராஃபத் சம்மதித்து, தான் ஒதுங்கிக்கொண்டால், யுத்தத்தை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தையில் அமரலாம் என்று, ஷரோன் பகிரங்கமாகவே அறிவித்தார்.
இதிலும் ஒரு சூழ்ச்சி இருக்கிறது. ‘அராஃபத்தை நீக்கிவிட்டு வேறு தலைவரைக் கொண்டுவாருங்கள்’ என்று, பொதுவாக இஸ்ரேல் சொல்லியிருந்தால், எந்தப் பிரச்னையும் வரப்போவதில்லை. முடிந்தால் அதைச் செய்வது; முடியாவிட்டால் முடியாது என்று அறிவித்துவிடப் போகிறார்கள். குறிப்பாக, மம்மூத் அப்பாஸின் பேரை, ஏரியல் ஷரோன் சொன்னதில், அல் ஃபத்தா இயக்கத்துக்குள்ளும், பாலஸ்தீன் அத்தாரிடி அமைப்புக்குள்ளும் புகைச்சலைக் கிளப்பியது.
அப்பாஸ், இஸ்ரேலின் ஆளா? எதற்காக ஷரோன் அவரை சிபாரிசு செய்யவேண்டும்? இஸ்ரேல் உருவான தினம் தொடங்கி, ஐம்பதாண்டு காலமாக, சோறு தண்ணி பார்க்காமல் சுதந்திரத்துக்காகப் போராடிக்கொண்டிருக்கிறோம். எந்த ஒரு கட்டத்திலும் அரேபியர்களுக்கு நல்லது செய்யும்விதத்தில் இஸ்ரேல் நடந்துகொண்டதில்லை. அமைதிப்பேச்சு என்று அழைக்கும்போதெல்லாம், அதன்பின் என்ன சூழ்ச்சி இருக்கிறது என்பதைத்தான் முதலில் பார்ப்பது வழக்கம். துளிகூட நம்பிக்கை கொள்வதற்கு சந்தர்ப்பமே தராததொரு அரசு, அல் ஃபத்தாவிலிருந்து ஒரு குறிப்பிட்ட நபரைத் தலைமை தாங்க சிபாரிசு செய்வதென்றால் என்ன அர்த்தம்?
மம்மூத் அப்பாஸுக்கே இது மிகவும் சங்கடமாகிப்போனது. போதாக்குறைக்கு ‘ஒருவேளை தான் பதவி விலகவேண்டி வருமானால், தனக்கு அடுத்து அஹமத் குரே (Ahmed Qurei) ஆட்சிக்கு வரவேண்டும் என்பதுதான் அராஃபத்தின் விருப்பம்’ என்பதாக, பாலஸ்தீன் முழுவதும் ஒரு வதந்தி பரவிக்கொண்டிருந்தது. இது அப்பாஸுக்கும் அஹமத் குரேவுக்கும் இடையில், ஒருவிதமான இறுக்கத்தைவேறு உண்டாக்கிவிட்டிருந்தது.
மூத்த தலைவர்கள் அனைவரும், இவ்வாறான சங்கடங்களில் அகப்பட்டு, ஆளுக்கொரு மூலையில் இருந்த தருணத்தில்தான், அராஃபத்தை வீட்டுக்காவலில் வைப்பதற்கு இஸ்ரேல் தனது ராணுவத்தை அனுப்பியது.
அன்றுதான் பாலஸ்தீன் அத்தாரிடி பார்லிமெண்ட் கூடுவதாக இருந்தது. புதிய அமைச்சர்கள் பலர், பொறுப்பேற்க இருந்தார்கள். பழைய அமைச்சர்கள் சிலரின் பதவிகளும் மாற்றப்படவிருந்தன. புதிய கேபினட்டின் முதல் கூட்டம்.
ஆனால் கூட்டம் நடக்குமா? அனைவருக்குமே சந்தேகமாகத்தான் இருந்தது. அமைச்சர்கள் அத்தனைபேரும் இஸ்ரேலை சகட்டுமேனிக்குத் திட்டி அறிக்கைவிட ஆரம்பித்தார்கள். ‘பாலஸ்தீன் அத்தாரிடியை பலவீனப்படுத்துவதும், பாலஸ்தீன் மக்களை அச்சமூட்டிப் பார்ப்பதும்தான் இஸ்ரேலின் நோக்கம். அதற்காகத்தான், ரமல்லாவைக் குறிவைத்திருக்கிறார்கள்’ என்றார், அராஃபத் அமைச்சரவையின் செயலாளர் யாசிர் அபெத் ரெபோ. (Yassir Abed Rebbo) நபில் ஷாத் (Nabil Shaath) என்கிற அமைச்சர் ஒருவர், ‘அமைதிக்கான அத்தனை கதவுகளையும் அடைத்துவிட்டார்கள். இனி பேச்சுவார்த்தைகள் முன்னேற்றமடைய வாய்ப்பே இல்லை’ என்று, கதறித் தீர்த்தார்.
ஒரு பக்கம், கேபினட் கூட்டம் தடைபடும் வருத்தத்தில் பாலஸ்தீன் அத்தாரிடியினர், இப்படி அறிக்கை விட்டுக்கொண்டிருக்க, மறுபக்கம், சத்தமில்லாமல் அத்தனை முக்கியஸ்தர்களையும் கைது செய்யும் பணியை இஸ்ரேல் ஆரம்பித்தது. எந்தக் கைதும் வெளியே தெரியக்கூடாது என்று தீர்மானமாக, உத்தரவிட்டிருந்தார்கள். கைது செய்யப்படுபவர்கள், எங்கே கொண்டுசெல்லப்படுகிறார்கள் என்பதும் ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது.
அரசியல் தலைவர்களைக் கைது செய்வது ஒரு பக்கம் இருக்க, ரமல்லாவிலும் அதன் சுற்றுப்பகுதிகளிலும் இருந்த அத்தனை போராளி இயக்கத்தைச் சேர்ந்தவர்களையும் தேடிப்பிடித்துக் கைது செய்வது அல்லது கொன்று ஒழிப்பது என்று செயல்திட்டம் வகுத்து, இரவோடு இரவாக அடிக்க ஆரம்பித்தார்கள்.
ரமல்லா முழுவதும் ராணுவ டாங்குகள் ஓடின. எந்தக் கதவாவது திறந்திருந்தால், கண்ணைமூடிக்கொண்டு சுட ஆரம்பித்துவிடுவார்கள். ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தது. போராளிகள் எங்குவேண்டுமானாலும் பதுங்கிக்கொண்டு தாக்குதல் நடத்தலாம் என்பதால், இஸ்ரேல் ராணுவத்தினர், குடியிருப்புப் பகுதிகளில்கூட எச்சரிக்கையுடன் நடந்துகொண்டார்கள். எந்தத் தலை கண்ணில் பட்டாலும் சுட்டார்கள். குழந்தைகள், வயதானவர் என்றெல்லாம் கூடப் பார்க்கவில்லை. ராக்கெட்டுகளால் அராஃபத்தின் மாளிகை மீது தாக்குதல் நடத்தியபடியே, புல்டோசர்களை மெல்ல நகர்த்திப்போய், எதிர்ப்பட்ட கட்டடங்கள் அனைத்தையும் இடித்தபடியே அவரது மாளிகையின் பின்புறம் போய்ச் சேர்ந்தார்கள்.
இடையில் நடந்த தாக்குதலில், இருபுறத்திலும் ஏராளமானோர் இறந்துபோனது, ஒருவாரம் கழித்துப் பத்திரிகைச் செய்தியாக வந்தது.
போராளிகளிடம் வீரமும் கோபமும் இருந்த அளவுக்கு, போர் நேர்த்தி இல்லை என்பது, மிகப்பெரிய குறையாக இருந்தது. பயிற்றுவிக்கப்பட்ட இஸ்ரேல் ராணுவத்தின் பலத்துக்கு முன், அவர்களால் அதிக நேரம் தாக்குப் பிடிக்க முடியவில்லை. தவிரவும் ராணுவத்தினரிடம் இருந்த அளவுக்கு, நவீன ஆயுதங்களும் போராளிகளிடம் இல்லை. ஏவுகணைத் தடுப்பு பீரங்கி இருந்தாலொழிய ரமல்லா மாளிகையைக் காக்கமுடியாது என்பது தெரிந்தவுடனேயே, போராளிகள் மத்தியில் சோர்வு உண்டாகிவிட்டது.
அவர்கள் யோசிப்பதற்குள்ளாக மாளிகை இடித்து நொறுக்கப்பட்டது. ஒரே ஒரு பகுதியை மட்டும் மிச்சம் வைத்துவிட்டு, அராஃபத்தின் வீட்டின் பெரும்பாலான பகுதிகளை இடித்துத் தரைமட்டமாக்கிவிட்டனர், இஸ்ரேலியர்கள். சுரங்கப் பாதை, ரகசிய வழி என்று எது இருந்தாலும் இருக்கலாம் என்பதே இதன் காரணம். தனிமைப் படுத்துவது என்று முடிவு செய்துவிட்டபடியால், அதை முழுமையாகச் செய்தாகவேண்டும் என்று, அவர்கள் விரும்பினார்கள். ஒரு ஈ, கொசு கூட அவரை நெருங்கமுடியாதபடி, சுற்றி வளைத்துக் காவல் நின்றார்கள்.
கண்டிப்பாக இம்முறை விபரீதம்தான் என்று ஒட்டுமொத்த பாலஸ்தீனியர்களும் முடிவு செய்தார்கள். அராஃபத்தை உயிருடன் விட்டுவைக்க மாட்டார்கள் என்றே, அவர்கள் நினைத்தார்கள். எந்த முயற்சியும் எடுக்க வழியில்லாமல், கையேந்திப் பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தார்கள்.
நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 2 அக்டோபர், 2005