நிலமெல்லாம் ரத்தம் – பா. ராகவன் 93
ஜார்ஜ் புஷ்ஷின் ‘ரோட் மேப்’ வருணித்த முதல் கட்ட அமைதி முயற்சிகள் பற்றிப் பார்த்தோம். இதன் இரண்டாம் கட்டத் திட்டங்கள், அதிகாரபூர்வமாக பாலஸ்தீன் என்கிற தனி நாட்டை உருவாக்குவதற்கான, முதல்கட்ட நடவடிக்கைகள் பற்றிச் சொல்லுகின்றன.
இது விஷயத்தில் பாலஸ்தீன் அத்தாரிடிக்கு இருக்கும் பொறுப்புகள் இவை:
வலுவான, கட்டுக்கோப்பு குலையாத பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யவேண்டும். அசம்பாவிதங்கள் எந்த வகையிலும் அனுமதிக்கப்படக்கூடாது. இஸ்ரேல் அரசுடன் முழுமையான ஒத்துழைப்புக்கு உத்தரவாதம் தரவேண்டும். இது சாத்தியமாகிற பட்சத்தில், பொதுத்தேர்தலுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அரபு அமைப்புகள், கட்சிகள், அரசு சாராத் தொண்டு நிறுவனங்கள், மக்கள் பிரதிநிதிகள் ஆகியோரின் ஒப்புதலுடன், புதிய ஜனநாயக அரசுக்கான அரசியல் அமைப்புச் சட்டம் உருவாக்கப்பட வேண்டும். ஒழுங்கான, வலுமிக்க கேபினட் ஒன்று நிறுவப்படவேண்டும். தாற்காலிக எல்லைகளுடன் கூடிய, பாலஸ்தீன் குடியரசு இதன்பின் நிறுவப்படும்.
இஸ்ரேல் அரசுக்கு உள்ள பொறுப்புகள்:
அண்டை நாடாக அமையவிருக்கும் பாலஸ்தீனுடன், அதிகபட்ச நல்லுறவுக்காக, இதற்கு முன் வரையப்பட்ட அத்தனை ஒப்பந்தங்களையும் மதித்து நடக்க வேண்டும்.
பாலஸ்தீன் உருவாவதற்குத் தேவையான, அத்தனை முன் முயற்சிகளை எடுப்பதிலும் ஒத்துழைக்க வேண்டும்.
பிற தேசங்களுக்கு உள்ள பொறுப்புகள்:
தாற்காலிக எல்லைகளுடன் அமையவிருக்கும் புதிய தேசமான பாலஸ்தீனில், பொதுத்தேர்தல் நடைபெற்ற பிறகு, பாலஸ்தீன் விஷயமாகப் பேசுவதற்கென ஒரு சர்வதேச மாநாடு கூட்டப்படவேண்டும். அதில், புதிய தேசத்துக்கான நிதி ஆதாரங்களை வகுத்தளிக்க வேண்டும். அண்டை நாடுகள், பிற தேசங்கள் யாவும் பாலஸ்தீனுக்கு நிதியுதவி அளிக்க முன்வரவேண்டும்.
அரபு தேசங்கள் யாவும் இண்டிஃபதாவுக்கு முன்னர் இஸ்ரேலுடன் எத்தகைய உறவு வைத்திருந்தனவோ, அந்தப் பழைய உறவைத் தொடரவேண்டும்.
குடிநீர், சுற்றுச்சூழல், பொருளாதார மேம்பாடு, அகதிகள் பிரச்னை, ஆயுதக் கட்டுப்பாடுகள் போன்ற விஷயங்களில், பல்வேறு அதிகார மட்டங்களில் (multilateral engagement) பேச்சுவார்த்தை நடத்தி, முடிவு காணப்பட வேண்டும்.
இந்த இரண்டு கட்ட நடவடிக்கைகள் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்ட பிறகு, மூன்றாவது மற்றும் இறுதிக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
மூன்றாவது கட்டம் – பாலஸ்தீனை நிரந்தரமாக அங்கீகரித்தல். இஸ்ரேல், பாலஸ்தீன் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு:.
பாலஸ்தீன் அத்தாரிடியின் பொறுப்புகள்:
நிரந்தரத் தீர்வுக்குத் தன்னளவிலான ஆயத்தங்களை முழுமையாகச் செய்துவிட வேண்டும்.
மிக வலுவான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்குப் பொறுப்பேற்க வேண்டும்.
பாலஸ்தீன் அத்தாரிடி, இஸ்ரேல் அரசு இரண்டும் செய்யவேண்டியவை:
கி.பி. 2005_ல் நிரந்தரத் தீர்வு என்கிற இலக்கை முன்வைத்து, பாலஸ்தீன் அகதிகள் விஷயத்தில், சாத்தியமுள்ள தீர்வுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
ஜெருசலேம் விஷயத்தில், அரசியல் மற்றும் சமய ரீதியில் சிக்கல்கள் ஏதும் வராமல், ஒருங்கிணைந்து ஒரு முடிவெடுக்க முன்வரவேண்டும்.
இஸ்ரேல், பாலஸ்தீன் இரண்டும் பிரச்னையின்றி, யுத்தங்களின்றி அமைதியுடன் தத்தம் வழிகளைப் பார்த்துக்கொள்ள, உத்தரவாதம் வழங்கவேண்டும்.
சர்வதேசப் பங்களிப்பு:
2004_ம் ஆண்டு இரண்டாவது கூட்டு மாநாடு நடத்தப்படும். தாற்காலிக எல்லைகளுடன் நிறுவப்படும் பாலஸ்தீன் குடியரசுக்கு, அப்போது அனைத்து தேசங்களும் அங்கீகாரம் வழங்கவேண்டும்.
2005_ம் ஆண்டு நிரந்தர அமைதி என்கிற இலக்கை நோக்கி, அனைத்து தேசங்களும் தம்மாலான உதவிகளை வழங்கி, திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல வழி செய்யவேண்டும்.
இந்தச் செயல்பாடுகள் அனைத்தும், மத்தியக் கிழக்குத் தேசங்கள் அனைத்துக்கும் உவப்பானதாக, அங்குள்ள மற்ற பிரச்னைகளையும் கருத்தில்கொண்டு அமைவதாக இருக்க வேண்டும்.
அரபு தேசங்கள், முழு மனத்துடன் இஸ்ரேலை ஏற்று அங்கீகரிக்க வேண்டும்.
இதுதான் ஜார்ஜ் புஷ் வரைந்த ‘ரோட் மேப்’பின் ஒரு வரிச் சுருக்கங்கள். இது, எந்த வகையில் இதற்கு முந்தைய அமைதித் திட்டங்களிலிருந்து வேறுபடுகிறது? அல்லது உண்மையிலேயே இது வேறுபட்டுத்தான் இருக்கிறதா?
1979_ல் கேம்ப் டேவிடில் ஒரு பேச்சுவார்த்தை நடந்து ஒரு திட்டம் தீட்டப்பட்டது. பிறகு, 1991_ல் மேட்ரிடில் ஓர் அமைதி ஏற்பாடு. 1993_ல் ஓஸ்லோ உடன்படிக்கை. அதற்குப் பிறகு மிட்ஷல் ரிப்போர்ட். அதன்பின் டெனட் ப்ளான். அப்புறம் மீண்டும் கேம்ப் டேவிட் பேச்சுவார்த்தை, க்ளிண்டன் முன்னின்று நடத்தியது.
இத்தனைக்குப் பிறகு வந்திருக்கும் இந்த ஜார்ஜ் புஷ்ஷின் திட்டத்தின் சிறப்பு என்ன?
முதலாவது, பாலஸ்தீன் என்கிற தனியொரு தேசம் அமைவது குறித்து, முதல் முதலில் ஆதரவும் அங்கீகாரமும் தெரிவித்து வரையப்பட்ட திட்டம் இதுதான். இதற்கு முன் வரையப்பட்ட எந்த ஒரு திட்டமும் ஓஸ்லோ உடன்படிக்கை உள்பட, சுதந்திர பாலஸ்தீன் குறித்துச் சிந்திக்கவே இல்லை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அடுத்தது, பாலஸ்தீன் தரப்பில் தீவிரவாதத் தடுப்பு குறித்து வன்மையாக வலியுறுத்தும் அதே சமயம், இஸ்ரேல் ராணுவத்தினரின் அத்துமீறல்களையும் குறிப்பிட்டு, அவற்றையும் நிறுத்தச் சொல்வது; மார்ச் 2001_க்குப் பிறகான யூதக் குடியேற்றங்களை வாபஸ் பெறச் சொல்வது போன்ற அம்சங்கள் கவனிக்கத் தக்கவை. இதற்கு முன் திட்டம் தீட்டிய அத்தனை பேரும், பாலஸ்தீனுக்குச் சில லாபங்கள் பிச்சையாகக் கிடைப்பது போன்ற தோற்றத்தை உருவாக்குவதில் கவனமாயிருக்க, இந்த ‘ரோட்மேப்’ மட்டும்தான் பாலஸ்தீன், இஸ்ரேல் என்கிற இரு தேசங்களை சம அந்தஸ்தில் வைத்துப் பேசுவதாக அமைந்திருக்கிறது. அது மட்டுமல்லாமல், பிரச்னையின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, தன்னுடைய மத்தியஸ்தமாக மட்டும் அல்லாமல், சர்வதேச மாநாடுகள் நடத்தி, முக்கிய விஷயங்களில் முடிவெடுக்க அழைப்பதன் மூலம், அனைத்துத் தேசங்களுக்கும் இதில் பொறுப்பும் கவனமும் வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டும் விதமாகவும் இது அமைந்திருக்கிறது.
அதே சமயம், இதில் சில குறைகளும் இல்லாமல் இல்லை. உதாரணமாக, குடியேற்றங்களை நீக்குவது, ராணுவ நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பது போன்ற இஸ்ரேல் செய்யவேண்டிய காரியங்களாக, அமெரிக்கா முன்வைக்கும் விஷயங்கள் மிகவும் முக்கியமான பிரச்னைகள். இவற்றை இஸ்ரேல் சரியாகச் செய்கிறதா அல்லது செய்யுமா என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை. ‘செய்யவேண்டும்’ என்றுதான் சொல்லப்பட்டிருக்கிறதே தவிர, சரியாகச் செய்கிறார்களா என்று கண்காணிக்க எந்த அமைப்புக்கோ, நிறுவனத்துக்கோ பொறுப்பு எதுவும் வழங்கப்படவில்லை.
சர்வதேச மாநாடுகள் கூட்டப்பட்டு விவாதிக்க வேண்டிய விஷயங்கள் என்று சுட்டிக்காட்டப்படுபவை அனைத்தும், பாலஸ்தீன் பிரச்னை தொடர்பானவை. இஸ்ரேல் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளுக்கு மேற்பார்வை கிடையாது என்பது, மிகவும் அபாயகரமானது. இது நிச்சயம் பாலஸ்தீன் அத்தாரிடியினருக்கு அதிருப்தி தரக்கூடியது.
இரண்டாவது பிரச்னை, ஜெருசலேம் தொடர்பானது. இஸ்ரேல்-பாலஸ்தீன் பிரச்னையின் வேரே ஜெருசலேமில்தான் இருக்கிறது. இருதரப்பு அரசியல் ஒரு பக்கம் இருக்க, அடிப்படையில் அது மக்களின் மத உணர்வு தொடர்பான விஷயம். அரேபியர்களும் சரி; யூதர்களும் சரி. தங்களது வழிபாட்டு உரிமைகளையோ, வழிபாட்டுத் தலம் தொடர்பான உரிமையையோ விட்டுக்கொடுக்க, ஒருபோதும் சம்மதிக்கப்போவதில்லை.
எப்படி அரேபியர்களுக்கு, பைத்துல் முகத்தஸ் வளாகம், முகம்மது நபியுடன் நேரடியாகச் சம்பந்தப்பட்ட ஒரு புனிதத் தலமோ, அதே போல, அந்த இடத்தில்தான் சாலமன் தேவாலயம் இருந்தது என்கிற பல நூற்றாண்டு நம்பிக்கையை, யூதர்களும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.
அகழ்வாராய்ச்சி, ஆதாரச் சேகரிப்பு, சரித்திர நியாயங்கள், சமகால நியாயங்கள் எல்லாமே முக்கியம்தான். ஆனால், மக்களின் நம்பிக்கையைக் கேள்விக்குள்ளாக்கும் எந்தவிதமான நடவடிக்கையும், தோல்வியில்தான் முடியும் என்பதற்குச் சிறந்த உதாரணம் அது.
அப்படிப்பட்ட எரியும் பிரச்னையில், திடமான தீர்வு எதையும் ஜார்ஜ் புஷ்ஷின் திட்டம் முன்வைக்கவில்லை. மாறாக, இரு தேசங்களும் கூடிப்பேசி ஒரு முடிவுக்கு வரவேண்டும் என்று சொல்வது, அர்த்தமே இல்லாத விஷயம். என்ன பேசினாலும், இரு தரப்பினரும் எதையும் விட்டுக்கொடுக்கப் போவதில்லை என்பது அனைவருக்கும் தெரிந்ததே.
ஒரே தேசத்தில் இருந்தபடி அடித்துக்கொள்பவர்கள், பாலஸ்தீன் உருவானபிறகு, அண்டை தேசச் சண்டையாக இதனைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வார்கள் என்பதுதான் உண்மை.
மூன்றாவது சிக்கல், தீவிரவாத ஒழிப்பு தொடர்பானது. இது ஒரு கற்பனைவாத அணுகுமுறை. குறைந்தபட்சம் பாலஸ்தீனைப் பொறுத்தவரையிலாவது.
பாலஸ்தீன் அத்தாரிடிதான், பாலஸ்தீன் மக்களின் அங்கீகரிக்கப்பட்ட ஒரே அரசியல் முகம் என்று, இஸ்ரேலும் அமெரிக்காவும் ஏற்றுக்கொண்டாலும் ஒரு ஹமாஸையோ, இஸ்லாமிக் ஜிகாத் அமைப்பையோ, அல் ஃபத்தாவையோ நிராகரித்துவிட்டு, எந்தவிதமான அரசியல் தீர்வுகளையும் பாலஸ்தீனில் செயல்படுத்துவது சாத்தியமில்லை. முன்பே பார்த்தது போல, மேற்கத்திய நாடுகளின் பார்வையில், இவை தீவிரவாத இயக்கங்களாக இருப்பினும் பாலஸ்தீன் மக்களின் பார்வையில், இவை போராளி இயக்கங்கள் மட்டுமே. போராளி இயக்கத்துக்கும் தீவிரவாத இயக்கத்துக்கும் பெயரளவில் தொடங்கி, சித்தாந்த அடிப்படை வரை நூற்றுக்கணக்கான வித்தியாசங்கள் உண்டு.
ஹமாஸ், இஸ்லாமிக் ஜிகாத் போன்ற அமைப்புகளும், பாலஸ்தீனின் விடுதலைக்காகத்தான் போராடிக்கொண்டிருக்கின்றன. தற்போது, அரசியல் முகம் பெற்றுவிட்ட பாலஸ்தீன் அத்தாரிடியினரும் ஒரு காலத்தில் இவர்களுடன் இணைந்துதான் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றுகொண்டிருந்தார்கள். பாலஸ்தீன் அத்தாரிடிக்கு இருக்கும் ஆதரவாளர்கள் அளவுக்கே அங்கே ஹமாஸூக்கும் ஆதரவாளர்கள் உண்டு.
இப்படிப்பட்ட சூழலில், தீவிரவாத ஒழிப்பை, பாலஸ்தீன் அத்தாரிடியின் பொறுப்பாகத் திணித்து, மேற்சொன்ன இயக்கங்களை ஒடுக்க நடவடிக்கை எடுக்கச் சொல்வதென்பது, மிகப்பெரிய விபரீதத்துக்கு வழி வகுக்கும் என்பதில் சந்தேகமில்லை. தவிரவும், உண்மையைச் சொல்வதென்றால், ராணுவ ரீதியில் பாலஸ்தீன் அத்தாரிடியைக் காட்டிலும், இந்தப் போராளி இயக்கங்கள் வலுவானவை. பயிற்சிபெற்ற தரமான ராணுவம் இந்த அமைப்புகளுக்கு உண்டு.
தீவிரவாத ஒழிப்பு என்கிற பெயரில் பாலஸ்தீன் அத்தாரிடி, இவர்கள் மீது போர் தொடுக்குமானால், ஒரே இனத்தவர் தமக்குள் அடித்துக்கொண்டு மாள்வதாகப் போய் முடியும். இந்த விஷயத்தில், பாலஸ்தீன் அத்தாரிடிக்கு அமெரிக்காவோ அல்லது வேறு யாரோ, எந்த வகையில் உதவமுடியும் என்பது பற்றியும் புஷ்ஷின் திட்டத்தில் குறிப்புகள் ஏதுமில்லை என்பதை கவனிக்க வேண்டும்.
இதெல்லாம், இத்திட்டத்தின் வெளிப்படையான குறைகள். ஆனால், இதையெல்லாம் மீறியும் ஜார்ஜ் புஷ்ஷின் திட்டம் உருப்படியான ஒன்றுதான். காரணம் மிக எளிமையானது. முன்பே பார்த்ததுபோல், வேறு யாருமே முன்வைக்காத, சுதந்திர பாலஸ்தீன் என்கிற, நூற்றாண்டுகாலக் கனவுக்கு இது ஒரு கதவு திறக்கிறதல்லவா?
நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 13 அக்டோபர், 2005