Featured Posts

95] யாசின் மற்றும் ரண்டிஸியை கொன்றார்கள்

நிலமெல்லாம் ரத்தம் – பா. ராகவன் 95

ஓர் அமைதி முயற்சி, ஒரு மாதகாலம் கூட உயிருடன் இருக்க சாத்தியமில்லை என்றால், அந்த தேசத்தின் சூழ்நிலை எப்படிப்பட்டதாக இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்.

யாசர் அராஃபத்தை ஒழிப்பதே தனது இலக்கு என்று இஸ்ரேல் அறிவித்த மறுகணமே பாலஸ்தீனில் பழையபடி முழுவேகத்தில் போராட்டம் தொடங்கிவிட்டது என்றுதான் சொல்லவேண்டும்.

அக்டோபர் 4, 2003 அன்று ஹைஃபாவில் உள்ள ரெஸ்டாரண்ட் ஒன்றில், (மேக்ஸிம் ரெஸ்டாரண்ட் என்று பெயர்) ஒரு தற்கொலைப்படைப் போராளி புகுந்து, குண்டு வெடிக்கச் செய்ததில், 21 யூதர்கள் தலத்திலேயே கொல்லப்பட்டார்கள். வெகுண்டெழுந்த இஸ்ரேல் அரசு, ஈரான் மற்றும் சிரியாவின் ஆசீர்வாதத்துடன் இஸ்லாமிக் ஜிகாத் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்புகள் இணைந்து, இந்தத் தாக்குதலைச் செய்ததாகக் குற்றம் சாட்டியது.

இதற்குப் பதில் நடவடிக்கையாக, சிரியாவின் எல்லைப் பகுதியில் உள்ள ஐன் – ஸஹிப் (Ein Saheb) என்கிற இடத்தில் அமைந்திருந்த ஒரு போராளிகள் பயிற்சி முகாமின் மீது, இஸ்ரேலிய விமானப்படை தாக்குதலைத் தொடங்கியது. விஷயம் தீவிரமாவதன் தொடக்கம் இது. ஏனெனில், பாலஸ்தீனுக்குள் இஸ்ரேல் என்ன செய்தாலும், அது உள்நாட்டு விவகாரம். சிரிய எல்லைக்குட்பட்ட பகுதியில் அத்துமீறித் தாக்குதல் நடத்துவதென்பது, வலுச்சண்டைக்குப் போகிற காரியம்.

தாக்குதல் நடத்தப்பட்ட இடம் உண்மையிலேயே தீவிரவாதப் பயிற்சி முகாம்தானா, அதைச் சிரியா அரசு ஆதரிக்கத்தான் செய்கிறதா என்றெல்லாம் அடுத்தடுத்து ஏகப்பட்ட கேள்விகள் வரும். ஒருவரையொருவர் வன்மையாகக் குற்றம் சாட்டிக்கொண்டு இறுதியில் மோத ஆரம்பித்தால், மீண்டும் ரணகளமாகும். கொள்கையளவில் அனைத்து அரபு தேசங்களும் பாலஸ்தீன் போராளி இயக்கங்களுக்கு ஆதரவளித்து வருவதும் உதவி செய்து வருவதும் உண்மையே என்றாலும், திடீரென்று இப்படி எல்லை தாண்டிச் சென்று தாக்குதல் நடத்துவதென்பது, அதுநாள் வரை அமெரிக்கா மட்டுமே செய்து வந்த ஒரு அத்துமீறல் நடவடிக்கை. உலகில் வேறெந்த தேசமும் அம்மாதிரி செய்யாது. ஈராக், ஆப்கன் பிரச்னைகளில் அமெரிக்கா நடந்துகொண்ட விதம் எப்படியோ, அப்படித்தான் இது.

அண்டை தேசத்துடன் ஒரு பிரச்னை என்றால், முதலில் முறைப்படி தனது குற்றச்சாட்டை அனுப்பவேண்டும். பதில் வருகிறதா என்று பார்க்கவேண்டும். பதிலில் நியாயம் இருக்கிறதா என்பது அடுத்தபடியாக. தன்னிடம் உரிய ஆதாரங்கள் இருக்கிறதென்றால் அவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும். அதற்குமேல் சர்வதேச எல்லைகளை மதித்து நடக்கும் தார்மீகக் கடமை… இத்தியாதிகள். எதுவுமே உதவாது என்கிற நிலை வருமானால் மட்டுமே, யுத்தம்.

ஆனால், இஸ்ரேல் எடுத்த எடுப்பில் எல்லைதாண்டிச் சென்று தாக்குதல் நடத்த விமானப்படைப்பிரிவு ஒன்றை அனுப்பிவைக்க, சிரியா கோபம் கொண்டது. இன்னும் தீவிரமாகப் போராளிகளுக்கு உதவி செய்யத் தொடங்கியது.

ஆயுதங்கள், பணம், மருந்துப்பொருள்கள், எரிபொருள் என்று என்னென்ன தேவையோ, அனைத்தையும் ரகசிய வழிகளில் அனுப்ப ஆரம்பித்தது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, சிரியா ஆதரவு கிடைத்ததில் மகிழ்ச்சியடைந்த பாலஸ்தீன் போராளி இயக்கங்கள், தமது தாக்குதல்களை இன்னும் தீவிரமாக முன்னெடுத்துச் செல்ல ஆரம்பித்தன.

போராளி இயக்கங்களுக்கு உதவிகள் வரும் வழி, பெரும்பாலும் மேற்குக் கரைப் பகுதியில் இல்லை. காஸா வழியாகத்தான் அவர்களுக்குத் தேவையான பொருள்கள் வந்து சேரும். கடல் பக்கத்தில் இருக்கிற சௌகரியம் என்பது ஒரு புறமிருக்க, இயற்கையிலேயே காஸா, போராளிகளுக்கு மிகவும் பாதுகாப்பானதொரு பகுதி. மறைவிடங்கள் (குகைகள், சுரங்க வழிகள்) அங்கே ஏராளம். தவிர, மக்களும் உயிரைக்கொடுத்து அவர்களை அடைகாப்பார்கள்.

இதை நன்கறிந்த இஸ்ரேல் ராணுவம், தனது கவனத்தை, காஸாவின் மீது குவித்தது. முதலில், என்னென்ன பொருள்கள் கடத்திவரப்படுகின்றன என்று ஒரு பட்டியல் தயார் செய்தார்கள். ஆயுதங்கள் முதலாவது. அடுத்தது அந்நியச் செலாவணி. மூன்றாவதாக, போதைப் பொருள்கள். நான்காவதாக, துணிமணிகள். இவை பெரும்பாலும் எகிப்திலிருந்துதான் வந்துகொண்டிருந்தன. இப்போது சிரியாவிலிருந்தும் வரத் தொடங்கியதில், இஸ்ரேல் ராணுவம் விழித்துக்கொண்டு வேலை பார்க்க ஆரம்பித்தது.

காஸா முழுவதும் சல்லடை போட்டுத் துளைத்து, மொத்தம் தொண்ணூற்று இரண்டு சுரங்க வழிகளை இடித்து ஒழித்தார்கள். இவற்றில் பெரும்பாலானவை எகிப்திலிருந்து வரும் சுரங்கப்பாதைகள். எப்போது இத்தனை சுரங்கப்பாதைகளை அமைத்தார்கள், எத்தனை ஆயிரம் பேர் இதற்காகப் பாடுபட்டிருக்கவேண்டும் என்றெல்லாம் எண்ணிப் பார்த்து, வியப்பின் உச்சிக்கே போனார்கள், இஸ்ரேலிய ராணுவ வீரர்கள். அதுவும் ஒரு ஈ, காக்கைக்குத் தெரியாமல் வேலைகள் நடந்திருக்கின்றன! நூற்றுக்கணக்கான மைல்கள் நீளத்துக்குச் சுரங்கம் அமைப்பதென்பது, பெரிய, பெரிய அரசாங்கங்களே நினைத்தாலும் அத்தனை சுலபத்தில் சாத்தியமாகக் கூடியதல்ல. பாலஸ்தீன் போராளிகளுக்கு அது சாத்தியமாகியிருக்கிறது. அதுவும் ஒன்றிரண்டல்ல. கிட்டத்தட்ட நூறு சுரங்கங்கள்!

இப்படிச் சுரங்கங்களைக் கண்டறிந்து அழிப்பதாகச் சொல்லிக்கொண்டு, நூற்றுக்கணக்கான அப்பாவி கிராம மக்களின் வீடுகளை இடித்துத் தரைமட்டமாக்கியதும் நடந்தது. இது குறித்துக் கேள்வி எழுந்தபோது, ‘அந்த வீடுகளெல்லாம் தீவிரவாதிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு, அவர்களின் பதுங்கு இடங்களாக இருந்தவை. அதனால்தான் அழித்தோம்’ என்று, ஒரு வரியில் பதில் சொல்லிவிட்டார், ஷரோன்.

உண்மையில் தீவிரவாத வேட்டை என்கிற பெயரில் காஸா பகுதி மக்களிடையே நிரந்தரமானதொரு அச்சத்தை ஏற்படுத்தி, அவர்களாகவே இடத்தை காலிபண்ணிக்கொண்டு போவதற்காகச் செய்யப்பட்ட காரியமே அது. எந்த நேரத்தில், எந்தக் கிராமத்தில் ராணுவம் நுழையும் என்றே சொல்லமுடியாது. திடீரென்று ஊரைச் சுற்றிலும் ராணுவ ஜீப்புகள் வலம் வரும். மக்கள் வீடுகளை அடைத்துக்கொண்டு உள்ளே உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு காத்திருப்பார்கள். ராணுவம் நுழையும்போது முதலில் ஒரு எச்சரிக்கை விடுப்பார்கள். மக்கள் அனைவரும் வெளியேறிவிட வேண்டும். மீறி யார் இருந்தாலும் அவர்கள் உயிருக்கு உத்தரவாதமில்லை.

இப்படியே ஆயிரக்கணக்கான அரேபியர்கள் ஊரை காலிபண்ணிக்கொண்டு, அகதிகளாக வெளியேற வேண்டிய நிலைமை உண்டானது. காஸாவின் தெற்குப்பகுதி கிராமங்கள், ஒருசில நகரங்கள் இந்த வகையில் கிட்டத்தட்ட முழுமையாகக் காலியாகிவிட்டன என்றுதான் சொல்லவேண்டும். இது நடந்தது 2004-ம் ஆண்டு தொடக்கத்தில்.

இந்தச் செயல், போராளி இயக்கத்தவர்களை மிகுந்த கோபம் கொள்ளச் செய்ய, கண்ணை மூடிக்கொண்டு அவர்கள் தற்கொலைத் தாக்குதல் நடவடிக்கைகளில் மிகத் தீவிரமாக இறங்க ஆரம்பித்தார்கள். டெல் அவிவ் நகரில் சராசரியாக ஒரு நாளைக்கு இரண்டு இடங்களில் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நடக்க ஆரம்பித்தன.

ஜார்ஜ் புஷ்ஷுக்குக் கோபம் வந்தது. தனது அமைதித்திட்டம் நாசமானது மட்டும் காரணமல்ல. ஏரியல் ஷரோனின் நடவடிக்கைகள் கிட்டத்தட்ட அனைத்துத் தேசங்களின் கெட்ட அபிப்பிராயத்தையும் ஒருங்கே பெற ஆரம்பித்திருந்தன. இதென்ன காட்டாட்சி என்று எல்லோரும் ஏக காலத்தில் இஸ்ரேலைப் பார்த்து வெறுப்புடன் பேசத்தொடங்கியிருந்தார்கள். இது இஸ்ரேலுக்கு நல்லதல்ல என்பது மட்டுமல்ல; ஈராக் விவகாரத்தால் உலகளவில் அமெரிக்காவின் இமேஜ் மிகவும் மோசமாகிக்கொண்டிருந்த நேரத்தில், அமெரிக்காவையும் கணிசமாகப் பாதிக்கவே செய்யும் என்று நினைத்த புஷ், உடனடியாக ஏதாவது செய்தாகவேண்டிய கட்டாயம் இஸ்ரேலுக்கு இருப்பதாக, ஏரியல் ஷரோனை எச்சரித்தார்.

முந்தைய நாள் வரை ‘ரோட் மேப்’ போட்டுக்கொடுத்த திட்டங்களை அப்படியே அச்சுப்பிசகாமல் கடைப்பிடித்து வந்தவர்போல, காஸாவிலிருந்து இஸ்ரேலியக் குடியிருப்புகளை அப்புறப்படுத்துவதற்கான நேரம் வந்துவிட்டதாக அவரும் அறிவித்தார்.

இதனை ஒரு ‘பப்ளிசிடி ஸ்டண்ட்’ என்று கிண்டலடித்தன, இஸ்ரேல் எதிர்க்கட்சிகள். ஒருவேளை இது நடக்குமானால், தாம் ஆதரிப்பதாக இஸ்ரேல் தொழிற்கட்சி சொன்னது. ஆனால், ஷரோனின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த தீவிர வலதுசாரிக் கட்சியான மஃப்தால் (Mafdal) மற்றும் தேசிய யூனியன் (National Union) போன்ற சில கட்சிகள், ‘ஒருவேளை ஷரோன் அப்படிச் செய்வாரேயானால் கண்டிப்பாகத் தாங்கள் அமைச்சரவையிலிருந்து விலகிவிடுவோம்’ என்று பகிரங்கமாக மிரட்டத் தொடங்கின.

இதில் ஆச்சர்யப்படத்தக்க அம்சம் என்னவெனில், ஓஸ்லோ அமைதி ஒப்பந்தம் ஏற்படக் காரணமாயிருந்தவரும், இஸ்ரேல் அரசின் மிக மூத்த அரசியல் ஆலோசகருமான யோஸி பெய்லின் (Yossi Beilin) என்பவரே ஷரோனின் இந்த வாபஸ் அறிவிப்பைக் கடுமையாக எதிர்த்ததுதான்!

பெய்லின் இதற்குச் சொன்ன காரணம், ‘இரு தரப்புக்கும் பொதுவாக ஏதாவது ஓர் ஒப்பந்தம் செய்துகொள்ளாமல், யூதர்களைக் காஸாவிலிருந்து வாபஸ் பெறுவதென்பது, அங்கே மீண்டும் தீவிரவாதம் பெருகத்தான் வழி செய்யும்.”

எத்தனை ஒப்பந்தங்கள்! எத்தனை அமைதி முயற்சிகள்!

எல்லாமே அந்தந்த சந்தர்ப்பங்களின் சூட்டைத் தணிப்பதற்காகச் செய்யப்பட்டவைதானே தவிர, நிரந்தரமான அமைதியை நோக்கி ஒரு கல்லைக்கூட யாரும் எடுத்து நகர்த்தி வைக்கவில்லை என்பதுதான் உண்மை.

ஆக, ஏரியல் ஷரோனின் இந்த அறிவிப்பும் வெளிவந்த வேகத்திலேயே உயிரை விட்டது. ஒட்டுமொத்தத் தேசமும் திரண்டு தனக்கு எதிராகத் தோள்தட்டிவிடுமோ என்கிற அச்சத்தில் உடனடியாக, வாபஸ் பெறுவதாகச் சொன்னதை வாபஸ் பெற்றுக்கொண்டு, ஏதோ இரண்டு தற்கொலைத் தாக்குதல் நடவடிக்கைக்குப் பதிலாகச் செயல்படவேண்டிய நிர்ப்பந்தம் தனக்கு ஏற்பட்டிருப்பதாகச் சொல்லிவிட்டு, காஸா பகுதியில் முன்னைக்காட்டிலும் தீவிரமாகத் தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கையில் இறங்கத் தனது ராணுவத்துக்கு உத்தரவிட்டார் ஷரோன்.

அமெரிக்காவின் பேச்சைக் கேட்டு காஸாவிலிருந்து இஸ்ரேலியக் குடியிருப்புகளைக் காலி செய்ய உத்தரவிடுவதாகச் சொன்னவர், சட்டென்று பின்வாங்கியதற்கான வலுவான காரணம் வேண்டுமல்லவா? ஆகவே, இம்முறை தனது ராணுவத்துக்குப் பலமான உத்தரவைப் பிறப்பித்திருந்தார். கணிசமான அளவில் அங்கிருந்து போராளிகளைக் கைது செய்யவேண்டும். மீடியாமுன் அவர்களை நிறுத்தி, தலை எண்ணச் சொல்லி, தான் பின்வாங்கியதன் காரணம் சரிதான்; காஸாவில் இன்னும் தீவிரவாதம் தழைக்கத்தான் செய்கிறது என்று நிரூபிக்கவேண்டும் என்று நினைத்தார்.

அதன்படி இரவு பகலாக இஸ்ரேல் ராணுவம் காஸாவில் சல்லடை போட்டுத் தேடத்தொடங்கியது. நூற்றுக்கணக்கான அப்பாவிப் பொதுமக்கள் இதனால் வீடிழந்துப் போனார்கள். கடைகள் அனைத்தும் இழுத்து மூடப்பட்டன. ஊரடங்கு உத்தரவின் சௌகரியத்தில் ராணுவம் நகரெங்கும் ரணகளப்படுத்தியது. மூலை முடுக்கெல்லாம் தேடி, மொத்தம் எழுபது ஹமாஸ் போராளிகளைக் கைது செய்து இழுத்துவந்தார்கள்.

இந்த நடவடிக்கையின்போதுதான் அவர்களுக்கு ஹமாஸ் இயக்கத்தின் மூத்த தலைவர்களின் அன்றாட நடவடிக்கைகள் பற்றிய சில தகவல்கள் கிடைத்தன. எத்தனை அவசரப் பணி இருந்தாலும், என்னதான் நெருக்கடி இருந்தாலும் அவர்கள் ஒருநாள் தவறாமல் தொழுகைக்கு மசூதிக்குச் செல்வார்கள் என்பது தெரிய வந்தது இந்தச் சந்தர்ப்பத்தில்தான்.

உடனே இஸ்ரேல் உளவு அமைப்பான மொஸாட் ஒரு திட்டம் தீட்டியது. நம்பகமான சில ஏஜெண்டுகளை, காஸாவில் உள்ள அத்தனை மசூதி வளாகங்களிலும் உலவ விட்டு, யார், யார் எப்போது எங்கே வருகிறார்கள்? என்று கண்காணித்தது.

அப்படித்தான் ஹமாஸின் தலைவர் ஷேக் முகம்மது யாசின் எப்போது எந்த மசூதிக்குத் தொழுகைக்கு வருவார் என்கிற விவரம் அவர்களுக்குக் கிடைத்தது. வாரக்கணக்கில் கண்காணித்து, பாதுகாப்பு ஏற்பாடுகளை ரகசியமாகப் பலப்படுத்திக்கொண்டு, தொலைவிலிருந்து ராக்கெட் தாக்குதல் நடத்தி, மசூதியை விட்டு சக்கர நாற்காலியில் அவர் வெளியே வந்தபோது கொலை செய்தார்கள். (மார்ச் 22, 2004)

இதுபற்றிய விவரங்களை முன்பே பார்த்திருக்கிறோம். யாசின் படுகொலைக்குப் பிறகு, ஹமாஸின் அடுத்த தலைவராகப் பொறுப்பேற்ற அபித் அல் அஜிஸ் ரண்டிஸி என்பவரையும், இதேபோல் தொழுகை முடித்து வந்த சமயத்தில் ஹெலிகாப்டரிலிருந்து குண்டுவீசிக் கொன்றதையும் பார்த்திருக்கிறோம்.

ஓர் உச்சகட்ட யுத்தம் தொடங்கிவிட்டதாகவே பாலஸ்தீனியர்கள் நினைத்தார்கள். அந்த ஆண்டின் மே மாதம் தொடங்கியபோது, காஸா நகரம் முழுவதும் மயானபூமி போலக் காட்சியளித்தது. யுத்தம், யுத்தம், யுத்தம் என்று அந்த ஒரு சத்தத்தைத் தவிர அங்கே வேறெதுவுமே கேட்கவில்லை.

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 20 அக்டோபர், 2005

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *