நிலமெல்லாம் ரத்தம் – பா. ராகவன் 96
யுத்தம் ஒரு பக்கம் இருந்தாலும் ஆட்சி இன்னொரு பக்கம் இருந்துதானே ஆகவேண்டும்? இரண்டாயிரமாவது ஆண்டுக்குப் பிறகு, எப்படி இஸ்ரேல் _ பாலஸ்தீன் பிரச்னை புதுப்பரிமாணம் பெற்று, ஓயாத யுத்தத்துக்கு வழிவகுத்ததோ, அதேபோல, பாலஸ்தீன் அத்தாரிடியின் ஆட்சி முறை குறித்தும் ஏராளமான விமர்சனங்கள் வரத்தொடங்கின.
பூரண சுதந்திரம் என்கிற கோரிக்கையை முன்வைத்து, பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலுடன் போராடிக்கொண்டிருந்தாலும், கிடைத்த இடத்தில் (மேற்குக்கரை மற்றும் காஸா) அவர்கள் நடத்திய ஆட்சி, அத்தனை சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை என்பதையும் குறிப்பிடத்தான் வேண்டும்.
முதலில், அதிகார மையம் எது என்பதிலேயே குழப்பம் இருந்தது. அராஃபத் உடம்புக்கு முடியாமல் இருந்தாலும் அவர்தான் அதிபர். பிரதமர் மூலம்தான் ஆட்சி நடக்கவேண்டும் என்று நிபந்தனை இருந்தாலும் அதிபரைக் கேட்காமல் பிரதமர் எதுவும் செய்யமுடியாது. ஆண்டு பட்ஜெட்டில், செய்யவேண்டிய பணிகள் என்று பட்டியலிட்டு ஒதுக்கப்படும் தொகையில், பெரும்பகுதி எங்கு போகிறது என்று யாருக்குமே தெரியாத சூழ்நிலை. அல்லது, தெரிந்தும் வெளிப்படுத்த முடியாத சூழ்நிலை. வருடம்தோறும் பெரிய தொகை ஒன்று, அல் ஃபத்தாவின் தற்கொலைப் படைப்பிரிவான அல் அக்ஸா மீட்புப் படைக்குப் போய்க்கொண்டிருப்பதாக அனைவருமே ரகசியமாகப் பேசிக்கொண்டிருந்தார்கள்.
அராஃபத் இதை முற்றிலுமாக மறுத்தாலும், ஒரு கட்டத்தில் அனைவருக்குமே இது ஒரு பெரிய விஷயம் இல்லை என்பதுபோலாகிவிட்டது.
இந்தச் சூழ்நிலையில், 2003-ம் ஆண்டின் இறுதியில், பிரசித்திப் பெற்ற ஃபோர்ப்ஸ் பத்திரிகை (Forbes) அந்த ஆண்டின் உலகின் மாபெரும் பணக்காரர்கள் பட்டியலில் அராஃபத்தைச் சேர்த்திருந்தது!
இது, கிண்டலுக்குச் செய்யப்பட்டது என்று யாரும் கருதிவிடமுடியாதபடி, அராஃபத்தின் சொத்து மதிப்பு மொத்தம் முந்நூறு மில்லியன் டாலர் என்று சொன்னதுடன் நிறுத்தாமல், எந்தெந்த இனங்களில் அவர் சொத்துச் சேர்த்திருக்கிறார் என்றொரு பட்டியலையும் இணைத்து வெளியிட்டது. இது, ஒட்டுமொத்த பாலஸ்தீனியர்களையும் அதிர்ச்சியின் உச்சிக்கே கொண்டு சென்றது.
ஏனெனில், பாலஸ்தீன் அரேபியர்களில் பெரும்பான்மையானோர் ஏழைகள். வறுமைக்கோட்டுக்குக் கீழேயே பல தலைமுறைகளாக வசித்து வருபவர்கள். ஆயிரம், லட்சம், கோடி என்பதெல்லாம் அவர்களுக்குத் தெரியவே தெரியாது. இந்நிலையில், தமக்காக இரவு பகல் பாராமல், சொந்த லாபங்களைக் கருதாமல், உணவு உறக்கத்தைக்கூடப் பொருட்படுத்தாமல் போராடிக்கொண்டிருக்கும் ஒரு தலைவர், இத்தனை சொத்துச் சேர்த்திருக்கிறார் என்று, ஒரு பிரபல பத்திரிகை புள்ளி விவரத்துடன் செய்தி வெளியிட்டால்?
மக்களுக்காக ஒதுக்கப்படும் பணமெல்லாம் மக்களைப் போய்ச்சேருவதில்லை என்று, தொடர்ந்து இஸ்ரேல் தரப்பில் கூறப்பட்டு வந்தாலும், அந்தப் பணமெல்லாம் போராளி இயக்கங்களுக்குத்தான் போவதாக அவர்கள் நம்பி, அமைதிகாத்து வந்தார்கள். அதுவும் இல்லை; அத்தனை பணமும் அராஃபத்தின் பிரான்ஸ் மனைவியிடம்தான் போய்ச் சேர்ந்து கொண்டிருக்கிறது என்று தெரியவந்தால்?
கிட்டத்தட்ட இதே காலகட்டத்தில், இஸ்ரேலிய உளவுத்துறையும் அமெரிக்க உளவுத்துறையும் இணைந்து ஓர் ‘ஆராய்ச்சி’யை மேற்கொண்டு, அராஃபத்தின் சொத்து மதிப்பு சுமார் மூன்று பில்லியன் டாலர்கள் என்று ஒரு கணக்கை வெளியிட்டது. இதற்குத் தோதாக, ஐ.எம்.எஃப் என்கிற (International Monitary Fund) ராட்சஸ நிதி நிறுவனம் ஒன்று, பாலஸ்தீன் அத்தாரிடியின் ஆண்டு பட்ஜெட்டில், கூடுதலாக எட்டு சதவிகித நிதி (அதாவது சுமார் 135 மில்லியன் டாலர்) ஒவ்வொரு ஆண்டும் வேண்டியிருக்கிறது; ஆனால், இப்பணம் எங்குபோகிறது என்பது அராஃபத் ஒருவரைத் தவிர, வேறு யாருக்கும் தெரியவில்லை என்று ஓர் அறிக்கை வெளியிட்டது.
இதெல்லாம் தவிர, ரமல்லாவில் நிறுவப்பட்ட கோகோ_கோலா நிறுவனத்தின் ப்ளாண்ட் ஒன்றில் அராஃபத் ரகசியமாக, கணிசமாக முதலீடு செய்திருக்கிறார் என்றும், டுனிஷியாவைச் சேர்ந்த செல்போன் கம்பெனி ஒன்றிலும் அவர் பங்குகள் வைத்திருக்கிறார் என்றும், அமெரிக்கா மற்றும் கேமன் தீவுகளில், பல்வேறு தனியார் நிறுவனங்களிலும் அவருக்குக் கணிசமான பங்குகள் இருக்கின்றனவென்றும் பல்வேறு தரப்புகளிலிருந்து புள்ளிவிவரங்கள் வந்துகொண்டே இருந்தன.
இதெல்லாம், பாலஸ்தீனியர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தின. தள்ளாத வயதில், உடல்நலம் சரியில்லாமல் அராஃபத் தனது ரமல்லா மாளிகையை விட்டு வெளியே கூடப் போகமுடியாமல் இருந்த சமயம் அது. இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகளை அவர்முன் எடுத்துச் சென்று, பதில் பெறக்கூட சாத்தியமற்ற நிலை.
ஆனால், இந்தப் பண விவகாரம் மட்டும்தான் பாலஸ்தீன் அத்தாரிடியின் குறையா என்றால், அதுவும் இல்லை. வேறு பல விஷயங்களிலும் பாலஸ்தீன் அத்தாரிடியின் ஆட்சிமுறை, முகம்சுளிக்கச் செய்யக்கூடியதாக இருந்திருக்கிறது.
உதாரணமாக, விமர்சனங்களைப் பொறுமையுடன் கேட்டுப் பதில் சொல்வது என்கிற குணம், பாலஸ்தீன் ஆட்சியாளர்களிடம் இருந்ததில்லை. யார் விமர்சித்தாலும் உடனடியாக அவர் கைதுசெய்யப்படுவது, வாடிக்கையாக இருந்தது.
முஆவியா அல் மஸ்ரி என்பவர், பாலஸ்தீன் ஆட்சி மன்றக் குழுவில் ஓர் உறுப்பினர். அராஃபத் மீது இவருக்குப் பல்வேறு விமர்சனங்கள் இருந்தன. அவரது நடவடிக்கைகள் எதுவும் வெளிப்படையாக இல்லை என்பது அதில் முதன்மையானது. பண விவகாரங்களில் அராஃபத்தை அதிகம் நம்பமுடியாது என்று, அடிக்கடி சொல்லிவந்தவர் இவர். ஒரு சமயம், இவர் ஒரு ஜோர்டன் தினசரிப் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், இந்த விஷயங்களைப் பற்றி ‘மனம் திறந்து’ பேசிவிட, மறுநாளே ஃபத்தாவைச் சேர்ந்த சிலர், ஒரு குழுவாக அவரைச் சூழ்ந்துகொண்டு, கல்லால் அடித்து வீழ்த்தி, மூன்று முறை சுட்டார்கள்!
இதெல்லாம், தொண்டர்கள் உணர்ச்சிவசப்பட்டுச் செய்யும் செயல்கள்தானே தவிர, பாலஸ்தீன் அத்தாரிடிக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்று சொல்லிவிடுவது வழக்கம். ஆனால், ஒருமுறை இருமுறை அல்ல. பலமுறை இத்தகைய தாக்குதல் சம்பவங்கள் பாலஸ்தீனில் நடைபெற்றிருக்கின்றன.
அடுத்தபடியாக, பத்திரிகைச் சுதந்திரம். பாலஸ்தீனியர்களின் துயரமோ, அவர்களின் அர்ப்பணிப்புணர்வுடைய போராட்டமோ சந்தேகத்துக்கு இடமில்லாதவை. அதில், அராஃபத்தின் பங்களிப்பு கணிசமானது என்பதிலும் சந்தேகம் கிடையாது. ஆனால், பாலஸ்தீன் அத்தாரிடியின் ஆட்சி அதிகாரத்துக்கு உட்பட்ட காஸா மற்றும் மேற்குக்கரைப் பகுதிகளில், எந்தப் பத்திரிகையோ, தொலைக்காட்சியோ பாலஸ்தீன் அத்தாரிடியை விமர்சிக்கும் நோக்கில், ஏதாவது ஒரு விஷயத்தை எழுதியோ, பேசியோவிட்டால் போதும். மறுநாள் அவர்கள் செயல்பட முடியாது. பத்திரிகை வெளிவரமுடியாதபடி செய்துவிடுவார்கள்.
‘எங்கள் துயரங்களை எழுதுங்கள்; எங்களை விமர்சிக்காதீர்கள்’ என்பது பாலஸ்தீன் அத்தாரிடியின் சுலோகன் போலவே இருந்தது.
செப்டம்பர் 11, 2001-ம் ஆண்டு, அமெரிக்காவில் உள்ள உலக வர்த்தக மையத்தின் மீது, அல்கொய்தா அமைப்பு தாக்குதல் நடத்தி வீழ்த்தியதைக் கொண்டாடும் விதத்தில், பாலஸ்தீன் வீதிகளில் மக்கள் ஆடிப்பாடிப் பட்டாசு வெடித்துக்கொண்டிருந்தார்கள். உலகமே பதைத்துக்கொண்டிருந்தபோது, இப்படியா ஓர் அழிவுச் சம்பவத்தைக் கொண்டாடுவார்கள் என்கிற வியப்புடன், கிறி செய்தி நிறுவனத்தின் ஒளிப்பதிவாளர் ஒருவர், அக்காட்சிகளைப் படம்பிடித்துக்கொண்டிருந்தார்.
இதைப் போராளி இயக்கத்தவர்கள் சிலர் பார்த்து, உடனடியாக அவரைக் கடத்திக்கொண்டுபோய்விட்டார்கள். அந்தச் செய்தியாளர் எங்கே போனார் என்றே யாருக்கும் தெரியாத நிலையில், பாலஸ்தீன் அத்தாரிடியின் பாதுகாப்புத்துறை அலுவலகத்தில் அவர் சிறைவைக்கப்பட்டிருக்கும் தகவல், இரண்டுநாள் கழித்துத் தெரியவந்தது. அவரை விடுவிக்கும்படி செய்தி நிறுவனம் கேட்டதற்கு, ‘சம்பந்தப்பட்ட வீடியோ படம் ஒளிபரப்பப்படுமானால் அவரது உயிருக்கு உத்தரவாதமில்லை’ என்று பாலஸ்தீன் அத்தாரிடியின் கேபினட் செகரட்டரி, பகிரங்கமாக மிரட்டல் விடுத்தார்.
இந்தச் சந்தர்ப்பத்திலெல்லாம், யாசர் அராஃபத் கருத்து ஏதும் சொல்லாமல் அமைதி காத்ததையும் குறிப்பிட்டாக வேண்டும்.
பாலஸ்தீன் அத்தாரிடியின் ஆட்சியில் குறிப்பிடவேண்டிய இன்னொரு அம்சம், தீவிரவாத ஆதரவு நிலைப்பாடு. இதுகுறித்து, ஏற்கெனவே பார்த்துவிட்டோம் என்றபோதும் குறைகளின் பட்டியலில் இதுவும் மிக முக்கியமானதென்பதால், இந்த இடத்தில் சேர்த்தாக வேண்டியிருக்கிறது.
ஜனநாயக ரீதியில் ஆட்சி நடத்துவதுபோல ஒரு தோற்றத்தை ஏற்படுத்திவிட்டு, உள்ளுக்குள் மிகத் தீவிரமாகப் போராளி இயக்கங்களை ஆதரித்தும் உற்சாகப்படுத்தியும் நிதி உதவி செய்துகொண்டும் இருந்ததுதான், யாசர்அராஃபத் தலைமையிலான அரசின்மீது நம்பிக்கை வராமல் செய்ததற்கு மிக முக்கியக் காரணம்.
பாலஸ்தீன் போராளி இயக்கங்கள் எத்தனை முக்கியமானவை, அவை இல்லாவிட்டால், பாலஸ்தீன் மக்களால் இந்தளவுக்குக்கூட மூச்சுவிட்டுக்கொண்டிருக்க முடிந்திருக்காது என்பதெல்லாம் உண்மைதான். ஆனால், மேலுக்கு சமாதானமும் ஜனநாயகமும் பேசிக்கொண்டு, உள்ளுக்குள் இந்த இயக்கங்களை ஆதரிப்பது என்கிற இரட்டை நிலைப்பாட்டை அராஃபத் எடுத்தது மிகப்பெரிய தவறாகிப் போனது. ஒன்று, ஹமாஸ் இஸ்லாமிக் ஜிகாத், ஹிஸ்புல்லா போன்ற இயக்கங்களுடன் பேசி, அவர்களையும் அராஃபத் அமைதி வழிக்குத் திருப்பியிருக்க வேண்டும். அல்லது அந்த இயக்கங்களுடனான தொடர்புகளை முற்றிலுமாகத் துண்டித்துக் கொண்டிருக்க வேண்டும். அதுவுமில்லாவிட்டால், தமது பழைய போராளி முகத்தையே இறுதிவரை கழற்றாமல் அணிந்து கொண்டிருக்க வேண்டும். இந்த மூன்று வழியிலும் செல்லாமல், புதிதாக ஒரு பாதையை அவர் தேர்ந்தெடுத்ததனால்தான், மேற்கத்திய நாடுகள் இன்றுவரையிலுமே கூட பாலஸ்தீனியர்களைச் சந்தேகக் கண்ணுடன் பார்க்கின்றன.
தமது இறுதிக்காலத்தில் அராஃபத், ஃபத்தாவின் தற்கொலைப் படைப்பிரிவான அல் அக்ஸா மார்டைர்ஸ் ப்ரிகேடுக்கு (Al aqsa Martyrs’ Brigade) ஏராளமான பொருளுதவி செய்திருக்கிறார். 2003_ம் ஆண்டின் இறுதியில், பி.பி.சி. செய்தி நிறுவனத்தின் ஒரு குறிப்பிட்ட புலனாய்வுப் பிரிவுப் பத்திரிகையாளர்கள், இது விஷயமாகத் தோண்டித்துருவி ஆராய்ச்சி செய்ததன் பலனாக, இந்த இயக்கத்துக்கு ஃபத்தாவின் மூலம் மாதம் தவறாமல் 50,000 டாலர் தொகை போய்ச்சேர அராஃபத் ஏற்பாடு செய்திருந்த விவரம் வெளிச்சத்துக்கு வந்தது.
இந்த இயக்கத்தின் ஆயுதத் தேவைகள், மருத்துவத் தேவைகள், பணத்தேவைகள் என்னென்ன என்று பட்ஜெட் போட்டு, லெட்டர்ஹெட்டில் எழுதி அராஃபத்துக்கு அனுப்புவதும், அராஃபத் அவர்கள் கேட்கும் பணத்துக்கு அனுமதி அளித்துக் கையெழுத்துப் போட்டு அனுப்புவதும், பலகாலமாக நடந்துவந்திருப்பதை, இஸ்ரேலிய பாதுகாப்புப் படை அதிகாரிகள், தகுந்த ஆதாரங்களுடன் கண்டுபிடித்து அம்பலப்படுத்தினார்கள்.
ஒரு கட்டத்தில், அல் அக்ஸா தற்கொலைப் படையினருக்கும் ஃபத்தா இயக்கத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதாகக் கூட ஒரு வதந்தியை திட்டமிட்டுப் பரப்பப் பார்த்தார்கள். (இதில் பாலஸ்தீன் அத்தாரிடி அதிகாரிகளுக்குக் கணிசமான பங்குண்டு.) ஆனால், மார்ச் 14, 2002 அன்று யு.எஸ்.ஏ. டுடேவுக்கு பேட்டியளித்த அல் அக்ஸா தற்கொலைப் பிரிவின் தலைவர், தாங்கள் யார் என்பதை மிகத்தெளிவாக வெளிப்படுத்திவிட்டார்.
‘நாங்கள் அல் ஃபத்தாவைச் சேர்ந்தவர்கள்தான். ஆனால், ஃபத்தாவின் பெயரில் நாங்கள் இயங்குவதில்லை. ஃபத்தாவின் ஆயுதப் பிரிவினர் நாங்கள். எங்களுக்கு ஃபத்தாவிலிருந்துதான் உத்தரவுகள் வரும். எங்களுக்கு யாசர் அராஃபத்தைத் தவிர, வேறு யாரும் கமாண்டர்கள் கிடையாது.”
இப்படியொரு ஒப்புதல் வாக்குமூலத்துக்குப் பிறகு, யார் என்ன செய்யமுடியும்?
பிரதமர் மம்மூத் அப்பாஸுடன் கருத்து வேறுபாடு, அடிக்கடி அவரை மட்டம் தட்டுதல், வெறுத்துப்போய் அவரே பதவி விலகும் அளவுக்குச் சூழ்நிலையை மோசமாக்கியது, போராளி இயக்கங்களுக்கு உதவும் பணியில் மும்முரமாக இருந்துவிட்டு, மக்களின் அடிப்படைத் தேவைகளைக்கூடத் தீர்த்து வைக்காமல் இருந்தது, பாலஸ்தீன் பள்ளிக்கூடப் பாட நூல்களில் இஸ்ரேல் என்றொரு தேசத்தை இருட்டடிப்புச் செய்து, இஸ்ரேல் மீது விரோதம் வளர்க்கும் விதமான வரிகளை திட்டமிட்டுச் சேர்த்தது (எழுபதுகளில் பாகிஸ்தான் பள்ளிகளில் இந்த வழக்கம் உண்டு. பள்ளிப்பாட நூல்களில் for Enemy என்று எழுதி எதிரே ஓர் இந்தியரின் படம் வரையப்பட்டிருக்கும்!), தொழில் வளர்ச்சிக்கு, விவசாய வளர்ச்சிக்கு உருப்படியான திட்டங்கள் எதையும் தீட்டாமல் விட்டது என்று பாலஸ்தீன் அத்தாரிடியின் ஆட்சிக்காலக் குறைகளைப் பட்டியலிட்டால், அது நீண்டுகொண்டேதான் போகும்.
ஆனால், இதையெல்லாம் காரணமாக வைத்து, பாலஸ்தீன் சுதந்திரத்துக்கு வேட்டுவைக்க நினைக்கமுடியாது. ஐம்பதாண்டு காலத்துக்கு மேலாக சுதந்திரத்துக்காகப் போராடிவரும் ஓர் இனம்; கல்வியிலோ பொருளாதாரத்திலோ வளர்ச்சி காணாத இனம், தொடர்ந்து பாதிக்கப்பட்டுக்கொண்டே வந்திருக்கும் இனம், யுத்தம் என்பதை தினசரிக் கடமையாக எண்ணியே செயல்பட்டுக்கொண்டிருந்த இனம், உதவி செய்வதற்கு ஒருவர் கூட முன்வராத நிலையில், தனக்குத் தெரிந்த வழிகளில் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றுகொண்டிருக்கும் இனம் என்கிற ரீதியில் கருணையுடன்தான் பார்த்தாக வேண்டும்.
நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 23 அக்டோபர், 2005