நபித்தோழர்கள், நபியின் குடும்பத்தினர்.
ஒரு முஸ்லிம் அவர்களை நேசிக்க வேண்டும். அல்லாஹ்வும் அவன் தூதரும் அவர்களை நேசிப்பதால்.
அவர்கள் ஏனைய முஃமின்கள், முஸ்லிம்களை விடச் சிறந்தவர்கள் என நம்ப வேண்டும்.
ஏனெனில் அல்லாஹ் கூறுகிறான்: “(இஸ்லாத்தின் அழைப்புக்கு) முதன் முதலில் பதிலளித்த முஹாஜிர்கள், அன்ஸாரிகளைக் குறித்தும், அவர்களை யார் நேர்மையோடு பின்பற்றினார்களோ அவர்களைக் குறித்தும் அல்லாஹ் திருப்திக் கொண்டான். அவர்களும் அவனைக் குறித்து திருப்தியடைந்தார்கள்.” (அல்குர்ஆன்: 9:100)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘என்னுடைய தோழர்களைத் திட்டாதீர்கள். ஏனெனில் (உங்களில்) ஒருவர் உஹத் மலை அளவு தங்கத்தை (இறைவழியில்) செலவு செய்தாலும், அவர்களில் ஒருவர் செலவு செய்த ஒரு முத்து அல்லது அதில் பாதி அளவைக் கூட அவரால் அடைந்து விட முடியாது.’ அறிவிப்பவர்: அபூ ஸயீத் (ரலி), நூல்: புகாரி, முஸ்லிம்.
பொதுவாக ஸஹாபாக்களில் சிறந்தவர் அபூபக்கர் (ரலி) அடுத்தடுத்து உமர் (ரலி), உஸ்மான் (ரலி), அலீ (ரலி) என்று கருத வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் உயிரோடி இருக்கும்போது (ஸஹாபாக்களில் சிறந்தவர்கள்) முதலில் அபூபக்கர் (ரலி), பிறகு உமர் (ரலி), பிறகு உஸ்மான் (ரலி) அதன் பிறகு அலீ (ரலி) என்று தான் நாங்கள் கூறி வந்தோம். இது நபி (ஸல்) அவர்களுக்குத் தெரிய வந்ததும் அவர்கள் இதை மறுக்கவில்லை. அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: புகாரி.
அவர்களின் தவறுகளை எடுத்துச் சொல்வதும் அவர்களுக்கிடையே நடந்த கருத்து வேறுபாடுகளைக் கூறுவதும் கூடாது.
நபி (ஸல்) அவர்களின் மனைவியரின் கண்ணியத்தையும் நம்ப வேண்டும். அவர்கள் பரிசுத்தமானவர்கள்; (அவதூறுகளை விட்டும்) தூய்மைப்படுத்தப்பட்டவர்கள். மேலும் அவர்களில் சிறந்தவர் கதீஜா (ரலி), ஆயிஷா (ரலி) என்றும் கருத வேண்டும்.
நூல்: முஸ்லிமின் வழிமுறை