தடை செய்யப்பட்டவைகள்:
ஹஜ் அல்லது உம்றாவுக்காக இஹ்ராம் அணிந்துவிட்ட ஒருவர், எக்காரணம் கொண்டும் இஹ்ராமைத் தடைசெய்யக்கூடிய காரியங்களைச் செய்யக்கூடாது.
நகம்வெட்டுதல், முடிவெட்டுதல், மழித்தல்:
அல்லாஹ் தனது திருமறையில் கூறுகின்றான்:
‘ஹத்யு (குர்பான் செய்யப்படும்) இடத்தை அடைவதற்கு முன் உங்கள் தலைமுடிகளைக் களையாதீர்கள்..’.
ஒரு இக்கட்டான நிலையில், ஒருவர் இதனைச் செய்துவிட்டால், அதற்குப் பரிகாரமாக அவர் பிராணி ஒன்றைப் பலியிடவேண்டும்.
கஃப் இப்னு உஜ்ரா (ரலி) அவர்களிடம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உனது தலையில், பேன் இருக்குமானால், (இத்தகைய நிலையில்) அவன் நோயாளி. அது உன்னைப் பாதிக்குமென்றிருக்குமானால்; (தலைமுடியை) மழித்துவிடு, பின் மூன்று நாட்கள் நோன்பிருக்க வேண்டும் அல்லது ஆறு நபர்களுக்கு உணவளிக்க வேண்டும் அல்லது ஒரு ஆட்டை அறுத்துப் பலியிட வேண்டும் (புகாரி, முஸ்லிம்).
உடலுறவு, பிறரை ஏசுவது அல்லது சாபமிடுவது, மற்றும் தேவையில்லாத வாக்குவாதம் புரிவது:
‘ஹஜ்ஜுக்குரிய காலம் குறிப்பிடப்பட்ட மாதங்களாகும். எனவே, அவற்றில் எவரேனும் (இஹ்ராம் அணிந்து) ஹஜ்ஜை தம்மீது கடமையாக்கிக் கொண்டால், ஹஜ்ஜின் காலத்தில் உடலுறவு, கெட்ட வார்த்தைகள் பேசுதல், சண்டை – சச்சரவு செய்தல் ஆகியன கூடாது’ (அல்குர்ஆன்).
பிறரை கெட்ட அல்லது அசிங்கமான வார்த்தைகளால் திட்டுவதும், சாபமிடுவதும் பாவமான செயல்களாகும் என்று புகாரியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிராணிகளை வேட்டையாடுவது:
பிராணிகளை வேட்டையாடுவதும், அல்லது வேட் டையாட உதவுவதும் தடை செய்யப்பட்டதாகும். ஆனாலும், யாரோ ஒருவரால் வேட்டையாடப்பட்ட பிராணியின் மாமிசத்தை உண்பது ஆகுமானதே! அல்லாஹ் தனது திருமறையிலே கூறுகின்றான் :
‘நீங்கள் இஹ்ராம் கட்டியிருக்கும் போது தரையில் வேட்டையாடுவது உங்கள் மீது தடைசெய்யப்பட்டுள்ளது’ (அல்குர்ஆன்).
ஆனாலும் கடலில் மீன் பிடிப்பது தடைசெய்யப்பட்டதல்ல, எப்பொழுதும் – இஹ்ராமினுடைய நிலையிலும்கூட, கடலில் வேட்டையாடலாம், அதனை உண்ணவும் செய்யலாம்.
ஆடை சம்பந்தமாகத் தடை செய்யப்பட்டவைகள்:
இஹ்ராம் அணிந்திருக்கின்ற ஒருவர், அந்த இஹ்ராமைத் தவிர்த்து வேறு எந்த ஆடைகளையும் அணிவதற்குத் தடைசெய்யப்பட்டுள்ளது. வெண்மையான, மூட்டப்படாத ஆடைகள் கிடைக்காதவர், பேண்ட் போன்றவைகளை அணிந்து கொள்வதில் தவறில்லை. இன்னும் செருப்பு போன்ற காலணிகள் கிடைக்கவில்லை என்றாலும், ஸாக்ஸ் போன்ற தோலினால் ஆன சூக்களையும் அணிந்து கொள்ளலாம் என்பதை புகாரி, முஸ்லிம் ஆகிய நபிமொழி நூல்களில் வெளிவந்துள்ள ஹதீஸ்களின் மூலம் அறிந்து கொள்ள முடிகின்றது.
மேலாடை, பட்டன், ஊக்கு, கயிறு போன்றவை கொண்டு முடிச்சிட்டுக் கட்டிக் கொள்ளக் கூடாது:
கீழாடையை, வார்ப்பட்டை (பெல்ட்) அல்லது இது போன்ற எதனைக் கொண்டும் கட்டிக்கொள்வதில் தவறில்லை. தற்பொழுது உபயோகிக்கப்படுகின்ற பெல்ட் போன்றவைகள், தங்களது சொந்த உபயோகப் பொருட்கள், பணம் மற்றும் பயணத்திற்குரிய பத்திரங்கள் போன்றவற்றைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவும் கூட அவை பயன்படுகின்றன, இதனை ஆயிஷா (ரலி) மற்றும் இப்னு அப்பாஸ் (ரலி) ஆகியோர்களினால் அறிவிக்கப்பட்ட நபிமொழிகள் அனுமதியளிக்கப்பட்டதென்றே உறுதி செய்கின்றன.
தலைப்பாகை, தொப்பி போன்றவற்றை அணிந்து கொள்ளத் தடைசெய்யப்பட்டுள்ளது:
பெண்களைப் பொறுத்தவரை முகத்தை மூடுவதும், கைகளுக்கு உறைகளை அணிந்து கொள்வதும் தடைசெய்யப்பட்டுள்ளன. (ஆனால் ஆண்களின் பார்வை நேரடியாகப் படும்படியாக வலம் வருவது உகந்ததல்ல, தங்களது பார்வையை சற்றுத் தாழ்த்தி, முகத்தையும் முந்தானைகளால் மறைத்துக் கொள்வது நல்லது).
வாசனைத் திரவியங்கள் மற்றும் மேக்அப் சாதனங்கள் உபயோகிப்பது:
இயற்கை மற்றும் செயற்கையான அனைத்து வாசனைத் திரவியங்களையும் ஆண் மற்றும் பெண்கள் இருவருமே, இஹ்ராமினுடைய நிலையில் தவிர்த்துக் கொள்ள வேண்டும். இதனை உடல் மற்றும் ஆடைக்கு இட்டுக் கொள்வதும் தடை செய்யப்பட்டுள்ளது, கண்களுக்குச் சுறுமா இட்டுக் கொள்வதும் தடைசெய்யப்பட்டுள்ளது.
நகத்தைப் பொறுத்தவரை, நகக்கண் உடைந்து அதனை வெட்டி எடுத்து விடுவதுதான் சிறந்தது என்ற நிலையைத் தவிர மற்ற நிலைகளில் நகத்தை வெட்டுதல் கூடாது.
எண்ணெய் மற்றும் கிரீம்களை மருத்துவ காரணங்களுக்காக உபயோகிக்கலாம். மருத்துவக் காரணங்கள் இல்லாது அவற்றை உபயோகிப்பது கூடாது.
ஆயிஷா (ரலி) அவர்களின் அறிவிப்பின்படி, பெண்கள் மருதாணி அணிந்து கொள்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
திருமணம் சம்பந்தப்பட்டவைகள்:
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘ஒருவர் இஹ்ராத்தோடு இருக்கும்போது அவர் திருமணம் செய்யக்கூடாது, இன்னொருவர் திருமணம் செய்து கொள்வதற்கும் உதவக் கூடாது அல்லது இன்னொருவரிடம் திருமணம் சம்பந்தமாகப் பேசவும் கூடாது’ (முஸ்லிம்).
திருமணம் நடைபெறும் பொழுது செய்விக்கப்படுகின்ற ஒப்பந்தங்களுக்குச் சாட்சியாளராகவும் இருக்கக் கூடாது.
இஹ்ராம் அணிந்திருக்கின்ற நிலையில் உடலுறவில் ஈடுபடக்கூடிய கணவன், மனைவி ஆகிய இருவரின் ஹஜ்ஜும் செல்லுபடியற்றதாகிவிடும். அவர்கள், அவர்களது ஹஜ்ஜைத் தொடரும் அதே வேளையில், வரக்கூடிய வருடம் இந்த ஹஜ்ஜை திரும்பவும் செய்து பூர்த்தி செய்தாக வேண்டும்.
ஹஜ்ஜை அதற்குரிய சட்டங்களுடன் நிறைவேற்றாமலோ, ஹஜ்ஜைப் பூர்த்தி செய்யாமலோ அல்லது அதில் தடுக்கப்பட்டுள்ள அம்சங்களைச் செய்துவிட்டாலோ அவர் கண்டிப்பாக அதற்கான குற்றப்பரிகாரத்தை நிறைவேற்ற வேண்டியவராக இருக்கின்றார். எனவே, அவர் செய்த தவறின் அடிப்படையில் அந்தப் பரிகாரம் அமையும் என்பதால், அதற்கான விபரத்தை அறிஞர் பெருமக்களிடம் கேட்டு, அதனை நிறைவேற்றுவது சிறந்ததும், அவசியமானதுமாகும்.
இஹ்ராம் அணிந்திருக்கின்ற நிலையில், இரத்தம் குத்தி எடுப்பது அல்லது இரத்ததானம் வழங்குவது ஆகியவற்றைச் செய்து கொள்ளமுடியும். இது தடுக்கப்பட்டதல்ல.
பாதுகாப்பு நிமித்தமாக..
ஹஜ்ஜின்போது தங்களது பயண ஆவணங்கள், பணம் போன்றவற்றை பைகளில் வைத்திருப்பதும், அதனை கழுத்தில் தொங்கவிட்டுக் கொள்வதும் ஆகுமானதே!
இன்னும் மரத்தின் அடியில் நிழலுக்காகவும், வெயிலின் சூட்டிலிருந்து தப்பிப்பதற்காக குடையை உபயோகிப்பதும் ஆகுமானதே.
ஹஜ்ஜின் பொழுது ஹாஜிகள் வியாபாரத்திலும் ஈடுபட அனுமதி உண்டு:
‘(ஹஜ்ஜின் போது) உங்கள் இறைவனுடைய அருளை நாடுதல் (அதாவது வியாபாரம் போன்றவற்றின் மூலமாக நேர்மையான பலன்களை அடைதல்) உங்கள்மீது குற்றமாகாது’ (அல்குர்ஆன்).
மனிதர்களுக்கு ஊறுவிளைவிக்கும் பிராணிகளைக் கொல்லுதல்:
மனிதர்களுக்குத் தொந்தரவு தரக்கூடிய பிராணிகளைக் கொல்லும்படி இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியிருக்கின்றார்கள் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அதாவது எலி, தேள், நாய் போன்றவைகளாகும் (புகாரி, முஸ்லிம்).
எனவே, உணவுக்காக அல்லாமல், பாதுகாப்பு நிமித்தம் பிராணிகளைக் கொல்வது ஆகுமானதே. இதன் மூலம் ஹஜ்ஜுச் செய்ய வருகின்றவர்கள் பாதுகாப்பாக வருவதும், இந்தப் பிராணிகளின் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பும் பெறுகின்றனர் என்பதைப் புரிந்து கொள்ள முடிகின்றது. (அல்லாஹ்வே மிகவும் அறிந்தவன்).
இஹ்ராம் அணியும் ஒருவர் உள்ளாடை அணியலாமா?