582.அன்ஸார்களில் அபூ தல்ஹா (ரலி) அதிக வசதி படைத்தவராக இருந்தார். அவருக்குப் பேரீச்ச மரங்கள் அதிகம் இருந்தன. அவரின் செல்வங்களில் பைருஹா என்ற தோட்டமே அவருக்கு மிகவும் விருப்பமானதாக இருந்தது. அது மஸ்ஜிது(ன்னபவி)க்கு எதிரில் இருந்தது. நபி (ஸல்) அவர்கள் அத்தோட்டத்திற்குள் சென்று அங்குள்ள நல்ல தண்ணீரைக் குடிப்பது வழக்கம். ‘நீங்கள் நேசிக்கும் பொருட்களிலிருந்து தானம் செய்யாத வரை நீங்கள் நன்மையை அடையவே மாட்டீர்கள்” என்ற (திருக்குர்ஆன் 03:92) இறைவசனம் அருளப்பட்டதும். அபூ தல்ஹா (ரலி), நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! அல்லாஹு தஆலா, ‘நீங்கள் நேசிக்கும் பொருட்களிலிருந்து தர்மம் செய்யாதவரை நீங்கள் நன்மையைப் பெறவே மாட்டீர்கள்’ எனக் கூறுகிறான். என் செல்வங்களில் நான் மிகவும் நேசிக்கும் பொருள் பைருஹா என்னும் தோட்டமேயாகும். அது அல்லாஹ்விற்காக தர்மம் ஆகட்டும்! நான் அதன் மூலம் அல்லாஹ்விடம் நன்மையையும் அது (அவனிடம் என்னுடைய மறுமை வாழ்வின் நலனுக்கான) சேமிப்பாக இருக்க வேண்டுமென்றும் விரும்புகிறேன். எனவே ‘இறைத்தூதர் அவர்களே! அதை அல்லாஹ் உங்களுக்குக் காட்டிய வழியில் பயன்படுத்திக் கொள்ளுங்கள்’ எனக் கூறினார். நபி (ஸல்) அவர்கள் ‘ஆஹா! இது அதிக லாபம் தரக்கூடிய செல்வமாயிற்றே! இது அதிக லாபம் தரக்கூடிய செல்வமாயிற்றே! நீர் கூறியதை நான் நன்றாகவே செவியேற்று விட்டேன். நீர் அதை உம்முடைய நெருங்கிய உறவினர்களுக்குப் பங்கிட்டு விடுவதை நான் பொருத்தமாகக் கருதுகிறேன்’ எனக் கூறினார்கள். அதற்கு அபூ தல்ஹா (ரலி) ‘இறைத்தூதர் அவர்களே! நான் அவ்வாறே செய்கிறேன்!’ எனக் கூறிவிட்டு, அத் தோட்டத்தைத் தம் நெருங்கிய உறவினருக்கும் தம் தந்தையுடன் பிறந்தவரின் குழந்தைகளுக்கும் பங்கிட்டு விட்டார்.
583.நான் ஓர் அடிமை பெண்ணை விடுதலை செய்தேன். ஆனால் நபி (ஸல்) அவர்களிடம் அதற்காக அனுமதி கேட்கவில்லை. என்னிடம் நபி (ஸல்) அவர்கள் தங்குகின்ற முறை வந்தபோது அல்லாஹ்வின் தூதரே! அடிமைப் பெண்னை விடுதலை செய்துவிட்டேனே அறிவீர்களா? என்று கேட்டேன். அகற்கு நபி (ஸல்)அவர்கள் நீ (விடுதலை) செய்து விட்டாயா? என்று கேட்க நான் ஆம் (விடுதலை செய்து விட்டேன்) என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள் நீ உன் தாயின் சகோதரர்களுக்கு (தாய் மாமன்களுக்கு அன்பளிப்பாக) அவளைக் கொடுத்து விட்டிருந்தால் உனக்குப் பெரும் நற்பலன் கிடைத்திருக்கும் என்று கூறினார்கள்.
584.நான் பள்ளிவாயிலில் இருந்தபோது நபி (ஸல்) அவர்கள், ‘பெண்களே! உங்களின் ஆபரணங்களிலிருந்தேனும் தர்மம் செய்யுங்கள்’ எனக் கூறினார்கள். நான் என் (கணவர்) அப்துல்லாஹ் (ரலி)வுக்கும் மற்றும் என் அரவணைப்பிலுள்ள அனாதைகளுக்கும் செலவழிப்பவளாக இருந்தேன். எனவே என் கணவரிடம், நான் உங்களுக்காகவும் என்னுடைய அரவணைப்பில் வளரும் அனாதைகளுக்காகவும் என்னுடைய பொருளைச் செலவழிப்பது ஸதாகாவாகுமா என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டு வாருங்கள் எனக் கூறினேன். அப்துல்லாஹ் (ரலி) அல்லாஹ்வின் தூதரிடம் நீயே கேள் எனக் கூறிவிட்டார். எனவே நான் நபி (ஸல்) அவர்கள் சென்றேன். அவர்கள் வீட்டு வாயிலில் ஓர் அன்ஸாரிப் பெண் இருந்தார். அவரின் நோக்கமும் என்னுடைய நோக்கமாகவே இருந்தது. அப்போது எங்களிடையே பிலால் (ரலி) வந்தார். அவரிடம் நான் என்னுடைய கணவருக்கும் என்னுடைய பராமரிப்பிலுள்ள அனாதைகளுக்கும் நான் செலவழிப்பது தர்மமாகுமா? என்று நபி (ஸல்) அவர்களிடம் கேளுங்கள்; நாங்கள் யார் என்பதைத் தெரிவிக்கவேண்டாம் எனக் கூறினோம். உடனே அவர் நபி (ஸல்) அவர்களிடம் சென்று கேட்டபோது நபி (ஸல்) அவர்கள், ‘அவ்விருவரும் யார்? எனக் கேட்டதற்கு அவர் ‘ஸைனப்’ எனக் கூறினார். நபி (ஸல்) அவர்கள் ‘எந்த ஸைனப்?’ எனக் கேட்டதும் பிலால் (ரலி), ‘அப்துல்லாஹ்வின் மனைவி’ எனக் கூறினார். உடனே நபி (ஸல்) ‘ஆம்! ஸைனபுக்கு இரண்டு நன்மைகளுண்டு. ஒன்று நெருங்கிய உறவினரை அரவணைத்ததிற்குரியது. மற்றொன்று தர்மத்திற்குரியது” எனக் கூறினார்கள்.
585.(நபி (ஸல்) அவர்களிடம்) நான், ‘இறைத்தூதர் அவர்களே! என் (முதல் கணவரான) அபூ ஸலமாவின் பிள்ளைகளுக்குச் செலவழிப்பதால் எனக்கு நன்மை உண்டா? நான் அவர்களை இன்னின்னவாறு (தேவை உள்ளவர்களாக) விட்டுவிட விரும்பவில்லை. அவர்களும் என் பிள்ளைகளே!” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ‘ஆம்! அவர்களுக்காக நீ செலவிட்ட(ல் அ)தற்கான நன்மை உனக்கு உண்டு” என்று பதிலளித்தார்கள்.
586.இறைவனின் திருப்பொருத்தத்தை நாடி ஒரு முஸ்லிம் தம் குடும்பத்தாருக்குச் செலவிட்டால் அதுவும் அவருக்கு தர்மமாக மாறும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
587.என்னிடம், என் தாயார் அல்லாஹ்வின் தூதருடைய காலத்தில் வந்திருந்தார்கள். அப்போது அவர்கள் இணைவைப்பவராக இருந்தார்கள். நான் அல்லாஹ்வின் தூதரிடம், ‘என் தாயார் என்னிடம் ஆசையுடன் வந்துள்ளார். என் தாயிடம் அவரின் உறவைப் பேணி நல்லமுறையில் நடந்து கொள்ளட்டுமா?’ என்று கூறி மார்க்கத் தீர்ப்பு கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ‘ஆம். நீ உன் தாயின் உறவைப் பேணி அவருடன் நல்ல முறையில் நடந்து கொள்” என்று கூறினார்கள்.