மார்க்கத்தைப் புரிந்து கொள்ள சில அடிப்படைகள்
மார்க்கத்தில் மனித விருப்பு வெறுப்பிற்கு இடமில்லை
இஸ்லாம் பரிபூரணமான வாழ்க்கை நெறியாகும். மலசலம் கழிப்பது முதல் அரசியல் விவகாரம் வரையுள்ள சகலவிதமான அம்சங்களையும் அது தெளிவுபடுத்தி விட்டது. அதில் கூடுதல், குறைவு செய்யவோ, அல்லது அதை மூதாதையர் மயமாக்கல் செய்யவோ எவருக்கும் அதிகாரம் கிடையாது. இதை அல்லாஹ்வின் திருமறை வசனங்களும், அவனது இறுதித்தூதரின் போதனைகளும் உறுதி செய்கின்றன.
وَلَوْ تَقَوَّلَ عَلَيْنَا بَعْضَ الْأَقَاوِيلِ لَأَخَذْنَا مِنْهُ بِالْيَمِينِ ثُمَّ لَقَطَعْنَا مِنْهُ الْوَتِينَ
(நபியாகிய) இவர் நம்மீது சில வார்த்தைகளையேனும் இட்டுக்கட்டிக் கூறுவாரானால் அவரை நாம் வலக்கரத்தினால் பிடிப்போம், பின்னர் அவரது நாடி நரம்பை தறிப்போம். (அத்: 69. வசனங்கள் : 44 – 46)
َيا أَيُّهَا النَّبِيُّ لِمَ تُحَرِّمُ مَا أَحَلَّ اللَّهُ لَكَ تَبْتَغِي مَرْضَاتَ أَزْوَاجِكَ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ
நபியே அல்லாஹ் உமக்கு ஆகுமாக்கியதை நீர் ஏன் விலக்கிக் கொள்கின்றீர்? உமது மனைவியரின் பொருத்தங்களை விரும்புகின்றீரோ? அல்லாஹ் மிக்க மன்னிப்போனும், நிகரற்ற அன்புடையோனமாவான். (66: வச: 01)
நபி (ஸல்) அவர்களுக்குக்கூட அல்லாஹ்வின் அனுமதியின்றி அவர்களின் விருப்பத்தின் அடிப்படையில் மார்க்கத்தில் இல்லாததைக் கூறவோ, ஒரு ஹராத்தை ஹலாலாக்கவோ உரிமை தரப்படவில்லை என்றால் நமது நிலை எப்படி! என்பதை சிந்திக்க வேண்டும். மேற்படி வசனங்களின் கருத்தில் அமைந்த பல வசனங்கள் இதை இன்னும் உறுதி செய்கின்றன.