Featured Posts

[தொடர் 10] இஸ்லாத்தின் பெயரால் தோன்றிய பிரிவுகள்

Articleமரணித்தவர்களும், மார்க்கமும்

மனிதனாக படைக்கப்பட்ட அனைவரும் ஒருநாள் மரணத்தை சுவைத்தே தீரவேண்டும். அகிலங்களின் அதிபதியும், அர்ஷின் இரட்சகனுமாகிய அல்லாஹ் மாத்திரமே என்றும் நிலையானவன், நித்தியஜீவன்.

இறுதித்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் ஒரு முஸ்லிமின் ஜனாஸாவிற்கு என்ன கடமைகள் செய்யப்பட வேண்டும் என கட்டளையிட்டார்களோ, அது விஷயத்தில் அவர்கள் எவ்வாறு நடந்து கொண்டார்களோ, மேலும் எவற்றை எல்லாம் அவர்கள் செய்யாது மௌனமாக இருந்தார்களோ அவை அனைத்தையும் நாமும் அப்படியே நடைமுறைப்படுத்த வேண்டும். இந்த வகையில் மரணித்த மனிதர்கள் பற்றிய இஸ்லாத்தின் நிலைப்பாடு என்ன? நல்லடியார்களுக்காக கப்ர்களில் கட்டடம் கட்டுதல், அவர்களிடம் தேவைகளை வேண்டுதல், அவர்களுக்காக கந்தூரி நடத்துதல் கூடுமானதுதானா? என்பன போன்ற பல அம்சங்கள் பற்றி இங்கு சுருக்கமாக நோக்குவோம்.

الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ دِينًا

இன்றைய தினம் உங்களது மார்க்கத்தை உங்களுக்காகப் பூரணப்படுத்தி விட்டேன். எனது அருட்கொடையை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான (பொது) மார்க்மாகவும் பொருந்திக் கொண்டேன். (அல்மாயிதா: வச:3)

இந்த வசனத்தை அறிந்திருந்த ஒரு யூதன் உமர் (ரழி) அவர்களிடம், “அமீருல் முஃமினீன் அவர்களே! உங்கள் வேதத்தில் ஒரு வசனத்தை நீங்கள் ஓதி வருகின்றீர்கள். அது யூதர்களாகிய எம்மீது இறக்கப்பட்டிருக்குமானால் அந்த நாளை பெருநாள் தினமாக எடுத்திருப்போம்” என்றார். அது என்ன வசனம் என உமர் (ரழி) அவர்கள் கேட்ட போது இன்றைய தினம் உங்களது மார்க்கத்தைப்பூரணப்படுத்தி எனது அருட் கொடையை முழுமைப்படுத்தி இஸ்லாத்தை மார்க்கமாப் பொருந்திக் கொண்டேன். (5:3) என்ற பொருளுடைய வசனம் எனக் கூறினார். அதற்கு அந்த நாளையும் அது இறக்கப்படட்ட இடத்தையும் நாம் அறிவோம் எனக் கூறிய உமர் (ரழி) அவர்கள் ‘அரஃபாத் திடலில் ஒரு ஜும்ஆத்தினத்தில் அவ்வசனம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இறங்கியது’ எனப் பதிலளித்தார்கள். (புகாரி)

عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ أَحْدَثَ فِي أَمْرِنَا هَذَا مَا لَيْسَ فِيهِ فَهُوَ رَدٌّ.

எவர் ஒருவர் எமது மார்க்கத்தில் இல்லாத ஒன்றை தோற்றுவிக்கின்றாரோ அது நிராகரிக்கப்படும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (புகாரி: ஹதீஸ் இல:2697).

இதன் மூலம் இஸ்லாமிய மார்க்கம் முழுமைப்படுத்தப்பட்டுள்ளது என்பதை அறியலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *