Featured Posts

69. (குடும்பச்) செலவுகள்

பாகம் 6, அத்தியாயம் 69, எண் 5351

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ இறைவனின் திருப்பொருத்தத்தை நாடி ஒரு முஸ்லிம் தம் குடும்பத்தாருக்குச் செலவிட்டால் அதுவும் அவருக்கு தர்மமாக மாறும் என அபூ மஸ்வூத் உக்பா இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.

அறிவிப்பாளர்களில் ஒருவர் (அப்துல்லாஹ் இப்னு யஸீத், அல்லது ஷுஅபா இப்னு ஹஜ்ஜாஜ்(ரஹ்)) கூறுகிறார்: நான் அபூ மஸ்வூத்(ரலி) அவர்களிடம், ‘இதை நீங்கள் நபி(ஸல்) அவர்களிடமிருந்து அறிவிக்கிறீர்களா? (அல்லது நீங்களாக இதைக் கூறுகிறீர்களா?’) என்று கேட்டதற்கு, அவர்கள் ‘நபி(ஸல்) அவர்களிடமிருந்தே (இதை அறிவிக்கிறேன்)’ என்று பதிலளித்தார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 69, எண் 5352

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ அல்லாஹ், ‘ஆதமின் மகனே! (-மனிதனே! மற்றவர்களுக்காகச்) செலவிடு; உனக்கு நான் செலவிடுவேன்’ என்று கூறினான் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 6, அத்தியாயம் 69, எண் 5353

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ (கணவனை இழந்த) கைம்பெண்ணுக்காகவும் ஏழைக்காகவும் பாடுபடுகிறவர், ‘இறைவழியில் அறப்போர் புரிபவரைப் போன்றவராவார்’ அல்லது ‘இரவில் நின்று வணங்கிப் பகலில் நோன்பு நோற்பவரைப் போன்றவராவார்’ என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 6, அத்தியாயம் 69, எண் 5354

ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அறிவித்தார். நான் மக்காவில் நோய்வாய்ப்பட்டிருந்த போது, நபி(ஸல்) அவர்கள் என்னை நலம் விசாரித்து வந்தார்கள். நான், ‘இறைத்தூதர் அவர்களே! என்னிடம் செல்வம் உள்ளது. என்னுடைய செல்வம் முழுவதையும் (தர்மத்திற்காக) நான் மரணசாசனம் செய்து விடட்டுமா?’ என்று கேட்டேன். அவர்கள், ‘வேண்டாம்’ என்று பதிலளித்தார்கள். நான் ‘பாதியை (மரணசாசனம் செய்து விடட்டுமா)?’ என்று கேட்டேன். அதற்கும் அவர்கள் ‘வேண்டாம்’ என்று கூறினார்கள்.

நான், ‘(அப்படியென்றால்,) மூன்றிலொரு பங்கை (நான் மரணசாசனம் செய்யட்டுமா)?’ என்று கேட்டேன். அதற்கவர்கள் ‘மூன்றிலொரு பங்கா! மூன்றிலொரு பங்கு கூட அதிகம் தான். நீங்கள் உங்கள் வாரிசுகளை மக்களிடம் கையேந்தும் ஏழைகளாக விட்டுச் செல்வதைவிட அவர்களைத் தன்னிறைவு கொண்டவர்களாக விட்டுச் செல்வதே சிறந்ததாகும். நீங்கள் (அவர்களுக்காக) எதைச் செலவு செய்தாலும் அது நீங்கள் செய்த தர்மமே எந்த அளவிற்கென்றால், நீங்கள் உங்கள் மனைவியின் வாயில் இடுகிற ஒரு கவளம் உணவும் கூட (தர்மமாகவே உங்களுக்கு எழுதப்படும்). அல்லாஹ் உங்களுக்கு நீண்ட ஆயுளை அளிக்கக்கூடும். அப்போது மக்கள் சிலர் உங்களால் பயன் அடைந்திடவும், வேறு சிலர் உங்களால் இழப்புக்குள்ளாகவும் கூடும்’ என்று கூறினார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 69, எண் 5355

அபூ ஸாலிஹ் தக்வான் அஸ்ஸம்மான்(ரஹ்) கூறினார். நபி(ஸல்) அவர்கள் ‘(ஒருவர் தமக்குத் தேவையானது போக மீதத்தை) தன்னிறைவான நிலையில் செய்யும் தர்மமே சிறந்த தர்மமாகும். மேலேயுள்ள (கொடுக்கும்) கைதான், தாழ்ந்துள்ள (வாங்கும்) கையை விடச் சிறந்ததாகும். உன் வீட்டாரிடமிருந்தே (உன் தர்மத்தை) நீ தொடங்கு!’ என்று கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) கூறிவிட்டு, ‘(கணவனிடம்) மனைவி, ‘எனக்கு உணவளி, அல்லது என்னை மணவிலக்குச் செய்துவிடு’ என்று கூறுகிறாள். அடிமை (தன் எசமானிடம்), ‘எனக்கு உணவளி. என்னிடம் நீ வேலை வாங்கிக் கொள்!’ என்று கூறுகிறான். மகன் (தன் தந்தையிடம்), ‘எனக்கு உணவளியுங்கள். (உங்களை விட்டால் வேறு) யார்தான் எனக்குப் பொறுப்பு?’ என்று கூறுகிறான்’ எனக் கூறினார்கள். மக்கள், ‘அபூ ஹுரைரா(ரலி) அவர்களே! இதையுமா நீங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றீர்கள்?’ என்று கேட்டனர். அதற்கு அவர்கள், ‘இல்லை; இது அபூ ஹுரைராவின் (என்னுடைய) கூற்றாகும்’ என்று கூறினார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 69, எண் 5356

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ தன்னிறைவு பெற்ற நிலையில் (தேவை போக எஞ்சியதை) வழங்குவதே சிறந்த தர்மம் ஆகும். உன் வீட்டாரிடமிருந்தே (உன்னுடைய தர்மத்தைத்) தொடங்கு என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 6, அத்தியாயம் 69, எண் 5357

மஅமர் இப்னு ராஷித்(ரஹ்) அறிவித்தார். சுஃப்யான் அஸ்ஸவ்ரீ(ரஹ்) என்னிடம், ‘தம் குடும்பத்தாருக்காக ஓர் ஆண்டுக்கான, அல்லது ஆண்டின் ஒரு பகுதிக்கான உணவை (முன்கூட்டியே) சேமித்து வைப்பவரைப் பற்றி நீங்கள் (ஏதேனும் ஹதீஸ்) கேள்விப்பட்டிருக்கிறீர்களா?’ என்று கேட்டார்கள். நான் ‘(அப்படியொரு ஹதீஸ்) எனக்கு நினைவில்லை’ என்று சொன்னேன். பிறகு, உமர்(ரலி) அறிவித்துள்ள ஒரு ஹதீஸ் என் நினைவில் வந்தது: நபி(ஸல்) அவர்கள் பனூ நளீர் குலத்தாரின் பேரீச்சந் தோட்டத்தை விற்றுத் தம் குடும்பத்தாருக்கு, அவர்களின் ஓர் ஆண்டுக்கான உணவை (முன்கூட்டியே) சேமித்து வைப்பவர்களாக இருந்தார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 69, எண் 5358

முஹம்மது இப்னு ஜுபைர் இப்னி முத்யிம்(ரஹ்) அறிவித்தார். நான் மாலிக் இப்னு அவ்ஸ்(ரலி) அவர்களிடம் சென்று (‘ஃபதக்’ சொத்து தொடர்பான பிரச்சினை குறித்துக்) கேட்டேன். அவர்கள் கூறினார்கள்: நான் (‘கலீஃபா) உமர்(ரலி) (அழைத்தன் பேரில் அவர்கள்) இடம் சென்றேன். (சிறிது நேரம் அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தேன்.) அப்போது உமர்(ரலி) அவர்களின் மெய்க்காவலர் ‘யர்ஃபஉ’ என்பவர் அவர்களிடம் வந்து, ‘உஸ்மான் இப்னு அஃப்பான்(ரலி), அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி), ஸ¤பைர் இப்னு அவ்வாம்(ரலி), ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) ஆகியோர் (தங்களைச் சந்திக்க) அனுமதி கேட்கிறார்கள். தாங்கள் அவர்களுக்கு அனுமதியளிக்கிறீர்களா?’ என்று கேட்டார். உமர்(ரலி), ‘சரி’ என்று கூறி, அவர்களுக்கு (தம்மைச் சந்திக்க) அனுமதியளித்தார்கள். அவர்கள் (அனைவரும்) உள்ளே வந்து, சலாம் (முகமன்) சொல்லி அமர்ந்தார்கள். பிறகு சற்று நேரம் கழித்து யர்ஃபஉ (வந்து) உமர்(ரலி) அவர்களிடம், ‘அலீ(ரலி) அவர்களையும் அப்பாஸ்(ரலி) அவர்களையும் சந்திக்கத் தங்களுக்கு விருப்பமுண்டா?’ என்று கேட்டதற்கு உமர்(ரலி), ‘ஆம்’ என்று அவ்விருவருக்கும் (தம்மைச் சந்திப்பதற்கு) அனுமதியளிக்க, அவ்விருவரும் உள்ளே நுழைந்தனர். இருவரும் சலாம் சொல்லி அமர்ந்தனர்.

அப்பாஸ்(ரலி), ‘இறை நம்பிக்கையாளர்களின் தலைவரே! எனக்கும் இவருக்கும் (அலீக்கும்) இடையே தீர்ப்பளியுங்கள்’ என்று கூறினார்கள். அப்போது உஸ்மான்(ரலி) அவர்களும் அவர்களின் நண்பர்களும் அடங்கிய குழுவினர், ‘இறை நம்பிக்கையாளர்களின் தலைவரே! (இந்த) இருவரிடையே தீர்ப்பளித்து, ஒருவரின் பிடியிலிருந்து மற்றவரை விடுவித்து விடுங்கள்’ என்று கூறினார்கள். அதற்கு உமர்(ரலி), ‘பொறுங்கள். எந்த அல்லாஹ்வின் கட்டளையால் வானமும் பூமியும் நிலை பெற்றிருக்கின்றனவோ அவன் பொருட்டால் உங்களிடம் கேட்கிறேன். ‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘(நபிமார்களான எங்களுக்கு) யாரும் வாரிசாக மாட்டார். நாங்கள் விட்டுச் செல்வதெல்லாம் தர்மமே!’ என்று இறைத்தூதராகிய தம்மைக் குறித்துச் சொன்னதை நீங்கள் அறிவீர்களா?’ என்று (அக்குழுவினரிடம்) கேட்டார்கள். அந்தக் குழுவினர், ‘அவ்வாறு நபி(ஸல்) அவர்கள் சொல்லத்தான் செய்தார்கள்’ என்று பதிலளித்தார்கள்.

பிறகு உமர்(ரலி) (வாதியும் பிரதிவாதியுமான) அலீ(ரலி) அவர்களையும் அப்பாஸ்(ரலி) அவர்களையும் நோக்கி, ‘அல்லாஹ்வின் பொருட்டால் உங்கள் இருவரிடமும் கேட்கிறேன்: இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அவ்வாறு சொன்னதை நீங்கள் அறிவீர்களா?’ என்று கேட்டார்கள். அவ்விருவரும், ‘(ஆம்) அவ்வாறு நபி(ஸல்) அவர்கள் சொல்லியிருக்கிறார்கள்’ என்று பதிலளித்தார்கள். உமர்(ரலி), ‘அவ்வாறெனில், உங்களிடம் நான் இந்தப் பிரச்சினைக் குறித்துப் பேசுகிறேன். (போரிடாமல் கிடைத்த) இந்த (ஃபய்உ) செல்வத்திலிருந்து சிறிதைத் தன் தூதருக்கு உரியதாக அல்லாஹ் ஆக்கியிருந்தான். அவர்களைத் தவிர வேறெவருக்கும் அவன் அதை அளிக்கவில்லை’ (என்று கூறிவிட்டு,) ‘அல்லாஹ் எச்செல்வத்தை (எதிரிகளான) அவர்களின் பிடியிலிருந்து விடுவித்துத் தன் தூதரிடம் திருப்பி அளித்தானோ அச்செல்வம், உங்கள் குதிரைகளையும் ஒட்டகங்களையும் (அறப்போரிடுவதற்காக) நீங்கள் ஓட்டிச் சென்றதால் கிடைத்தன்று. மாறாக, அல்லாஹ், தான் நாடுகிறவர்களின் மீது தன்னுடைய தூதர்களுக்கு அதிகாரம் வழங்குகிறான். மேலும், அல்லாஹ் அனைத்தின் மீதும் பேராற்றல் உள்ளவனாக இருக்கிறான்’ எனும் (திருக்குர்ஆன் 59:6 வது) இறைவசனத்தை ஓதினார்கள்.

தொடர்ந்து, ‘எனவே இது இறைத்தூதருக்கென ஒதுக்கப்பட்ட செல்வமாகும். அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களைவிட்டுவிட்டு அதை நபி(ஸல்) அவர்கள் தமக்காகச் சேகரித்துக் கொள்ளவில்லை. அதை உங்களைவிடப் பெரிதாகக் கருதவுமில்லை. அதை உங்களுக்கு வழங்கவே செய்தார்கள். உங்களிடையே வழங்கவே செய்தார்கள். உங்களிடையே அதைப் பரவலாகப் பங்கிட்டார்கள். இறுதியில் (இறைத்தூதர் நிதியான) அதிலிருந்து இச்செல்வம் மட்டுமே மீதமாயிற்று. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இச்செல்வத்திலிருந்து தம் வீட்டாரின் வருடச் செலவை அவர்களுக்கு வழங்கி வந்தார்கள். அப்படிக் கொடுத்த பிறகு மீதமுள்ளதை எடுத்து, அல்லாஹ்வின் (பாதையில் செலவிடும்) செல்வத்தை எந்த இனங்களில் செலவிடுவார்களோ அவற்றில் (சேமநல நிதியாக வைத்துச்) செலவிட்டு வந்தார்கள். இவ்வாறே இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் வாழ்நாளில் செயல்பட்டுவந்தார்கள். எனவே, அல்லாஹ்வின் பொருட்டால் உங்களை கேட்கிறேன்: இதை நீங்கள் அறிவீர்களா?’ என்று கேட்டார்கள்.

அதற்கு (அங்கிருந்த குழுவினரான) அவர்கள், ‘ஆம் (அறிவோம்)’ என்று பதிலளித்தார்கள். (பிறகு) அலீ(ரலி) அவர்களிடமும் அப்பாஸ்(ரலி) அவர்களிடமும், ‘உங்கள் இருவரையும் அல்லாஹ்வின் பொருட்டால் கேட்கிறேன்: நீங்கள் இதை அறிவீர்களா?’ என்று கேட்க, அவர்களிருவரும் ‘ஆம் (அறிவோம்)’ என்று பதிலளித்தார்கள். (தொடர்ந்து உமர்(ரலி),) ‘பிறகு அல்லாஹ் தன் தூதரை அழைத்துக் கொண்டான். அப்போது (ஆட்சித் தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட) அபூ பக்ர்(ரலி), ‘நான் அல்லாஹ்வின் தூதருடைய (ஆட்சிக்குப்) பிரதிநிதியாவேன்’ என்று கூறி அ(ந்தச் செல்வத்)தைத் தம் கைவசம் எடுத்துக் கொண்டார்கள். அது விஷயத்தில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் செயல்பட்டதைப் போன்றே தாமும் செயல்பட்டார்கள்’ (என்று கூறிவிட்டு,) அலீ(ரலி) அவர்களையும் அப்பாஸ்(ருலி) அவர்களையும் நோக்கி உமர்(ரலி), ‘அப்போதும் நீங்கள் இருவரும் அபூ பக்ர்(ரலி) இப்படி இப்படி(ச் சொல்கிறார்கள்; இறைத்தூதர் நிதியான எங்களுடைய சொத்தைத் தர மறுக்கிறார்கள்)’ என்று சொன்னீர்கள்! (ஆனால்,) அபூ பக்ர்(ரலி) அந்த விஷயத்தில் உண்மையே கூறினார்கள்; நல்ல விதமாக நடந்து கொண்டார்கள்; நேர்வழி நடந்து வாய்மையையே பின்பற்றினார்கள் என்பதை அல்லாஹ் அறிவான். பிறகு அபூ பக்ர்(ரலி) அவர்களையும் அல்லாஹ் அழைத்துக்கொண்டான்.

அப்போது (ஆட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்ட) நான் ‘அல்லாஹ்வின் தூதரு(டைய ஆட்சி)க்கும் அபூ பக்ர்(ரலி) அவர்களுக்கும் பிரதிநிதியாவேன்’ என்று கூறி அ(ந்தச் செல்வத்)தை என்னுடைய ஆட்சிக் காலத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு என் கைவசம் எடுத்துக்கொண்டேன். இறைத்தூதர்(ஸல்) அவர்களும் (அவர்களுக்குப் பிறகு) அபூ பக்ர்(ரலி) அவர்களும் நடந்து கொண்ட முறைப்படி நானும் செயல்பட்டு வந்தேன். பிறகு நீங்கள் இருவரும் (இச்செல்வம் தொடர்பாகப் பேச) என்னிடம் வந்தீர்கள். உங்களிருவரின் பேச்சும் ஒன்றாகவே இருந்தது; இருவரின் நிலையும் ஒன்றுபட்டதாகவே இருந்தது. ‘(அப்பாஸே!) நீங்கள் என்னிடம் உங்கள் சகோதரர் புதல்வரிடமிருந்து (-நபியிடமிருந்து) உங்களுக்குச் சேரவேண்டிய (வாரிசுப்) பங்கைக் கேட்டபடி வந்தீர்கள்.

(இதோ!) இவரும் (அலீயும்) என்னிடம் தம் மனைவிக்கு அவரின் தந்தை (ஆகிய நபி)யிடமிருந்து கிடைக்க வேண்டிய பங்கைக் கேட்டபடி வந்தார். அப்போது (உங்கள் இருவரிடமும்) நான் ‘நீங்கள் இருவரும் விரும்பினால், அல்லாஹ்விடம் செய்த ஒப்பந்தமும் அவனுக்களித்த உறுதிமொழியும் உங்கள் பொறுப்பாக இருக்க, ‘அதன் விஷயத்தில், இறைத்தூதர்(ஸல்) அவர்களும், அபூ பக்ர்(ரலி), செயல்பட்டவாறும், நான் ஆட்சிக்கு வந்ததிலிருந்து செயல்பட்டபடியுமே நீங்கள் இருவரும் செயல்பட வேண்டும்’ எனும் நிபந்தனையின் அடிப்படையில் உங்கள் இருவரிடமும் இச்செல்வத்தை ஒப்படைத்து விடுகிறேன். அவ்வாறில்லையாயின், இது தொடர்பாக என்னிடம் நீங்கள் இருவரும் பேச வேண்டாம்’ என்று சொன்னேன். அதற்கு நீங்கள் இருவரும் ‘அ(ந்)த (நிபந்தனையி)ன் அடிப்படையில் அதை எங்களிடம் ஒப்படைத்துவிடுங்கள்’ என்று சொன்னீர்கள். அதன்படியே அ(ச்செல்வத்)தை உங்கள் இருவரிடமும் நான் ஒப்படைத்தேன்’ என்று கூறினார்கள்.

பிறகு (அங்கிருந்த குழுவினரிடம்), ‘அல்லாஹ்வின் பெயரால் உங்களிடம் கேட்கிறேன்: நான் அ(ச் செல்வத்)தை இவர்கள் இருவரிடமும் அ(ந்)த (நிபந்தனையி)ன்படியே ஒப்படைத்தேனா? (இல்லையா?)’ என்று கேட்க, அதற்கு அக்குழுவினர் ‘ஆம்’ என்றார்கள். அலீ(ரலி) அவர்களையும் அப்பாஸ்(ரலி) அவர்களையும் நோக்கி உமர்(ரலி), ‘நான் உங்கள் இருவரையும் அல்லாஹ்வின் பொருட்டால் கேட்கிறேன்: நான் அ(ச் செல்வத்)தை உங்கள் இருவரிடமும் அ(ந்)த நிபந்தனையி)ன் படியே ஒப்படைத்தேனா? (இல்லையா?)’ என்று கேட்க, அவ்விருவரும் ‘ஆம்’ என்று பதிலளித்தார்கள். உமர்(ரலி) ‘இதைத் தவிர வேறொரு தீர்ப்பை நீங்கள் என்னிடம் கோருகிறீர்களா? எவனுடைய கட்டளையால் வானமும் பூமியும் நிலைபெற்றுள்ளனவோ அவன் மீது சத்தியமாக! நான் இந்த விஷயத்தில் இதைத் தவிர வேறெந்த தீர்ப்பையும் மறுமை நாள் நிகழும்வரை அளிக்கமாட்டான். உங்கள் இருவராலும் அதைப் பராமரிக்க முடியாவிட்டால், என்னிடம் அதை ஒப்படைத்து விடுங்கள். அதை உங்களுக்கு பதிலாக நானே பராமரித்துக் கொள்வேன்’ என்று கூறினார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 69, எண் 5359

ஆயிஷா(ரலி) அறிவித்தார். (ஒரு முறை) ஹிந்த் பின்த் உத்பா(ரலி) (நபி(ஸல்) அவர்களிடம்) வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! (என் கணவர்) அபூ சுஃப்யான் கருமியான ஒருவர்; அவருக்குரிய (செல்வத்)திலிருந்து எங்கள் பிள்ளைகளுக்கு நான் உணவளித்தால் அது என் மீது குற்றமாகுமா?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் ‘நியாயமான அளவு தவிர (அவ்வாறு செய்ய) வேண்டாம்’ என்று பதிலளித்தார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 69, எண் 5360

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ ஒரு பெண், தன் கணவனின் சம்பாத்தியத்திலிருந்து அவனுடைய உத்தரவின்றி (அறவழியில்) செலவிட்டால், அதன் பிரதிபலனில் பாதி அவனுக்கும் கிடைக்கும் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 6, அத்தியாயம் 69, எண் 5361

அலீ(ரலி) அறிவித்தார். (என் துணைவி) ஃபாத்திமா திருகை சுற்றுவதால் தம் கையில் ஏற்பட்ட காய்ப்பு குறித்து (தம் தந்தை) நபி(ஸல்) அவர்களிடம் முறையிடுவதற்காகச் சென்றார்கள். ஏனெனில், (போர்க் கைதிகளான) அடிமைகள் சிலர் நபி(ஸல்) அவர்களிடம் வந்திருப்பதாக அவருக்குச் செய்தி வந்திருந்தது. ஆனால், ஃபாத்திமா நபி(ஸல்) அவர்களைக் காணவில்லை. தாம் வந்த நோக்கத்தை ஆயிஷா(ரலி) அவர்களிடம் ஃபாத்திமா கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் (வீட்டிற்கு) வந்தபோது, ஆயிஷா(ரலி) நபி(ஸல்) அவர்களிடம் விவரத்தைத் தெரிவிக்கவே, நபி அவர்கள் எங்களிடம் வந்தார்கள். அப்போது நாங்கள் எங்கள் படுக்கைக்குச் சென்று விட்டிருந்தோம். (நபியவர்களைப் பார்த்த) உடனே, நாங்கள் எழுந்திருக்கப் போனோம். அவர்கள், ‘நீங்கள் இருவரும் உங்கள் இடத்திலேயே இருங்கள்’ என்று சொல்லிவிட்டு, அவர்களே வந்து எனக்கும் ஃபாத்திமாவுக்கும் இடையே அமர்ந்தார்கள். அவர்களின் பாதங்கள் என் வயிற்றில் பட்டு அதன் குளிர்ச்சியை நான் உணரும் அளவுக்கு (நெருக்கமாக அமர்ந்தார்கள்.) அப்போது அவர்கள், ‘நீங்கள் இருவரும் கேட்டதைவிடச் சிறந்ததை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? ‘நீங்கள் இருவரும் உங்கள் படுக்கைக்குச் செல்லும்போது’ அல்லது ‘உங்கள் விரிப்புக்குச் செல்லும் போது’ முப்பத்து மூன்று முறை ‘சுப்ஹானல்லாஹ்’ (அல்லாஹ் தூயவன்) என்றும், முப்பத்து மூன்று முறை ‘அல்ஹம்துலில்லாஹ்’ (அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்) என்றும், முப்பத்து நான்கு முறை ‘அல்லாஹு அக்பர்’ (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்றும் சொல்லுங்கள். அது உங்களுக்குப் பணியாள் ஒருவர் இருப்பதை விடச் சிறந்ததாகும்’ என்று கூறினார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 69, எண் 5362

அலீ இப்னு அபீ தாலிப்(ரலி) அறிவித்தார். ஃபாத்திமா அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் பணியாள் ஒருவரைக் கேட்டுச் சென்றார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘அதைவிடச் சிறந்த ஒன்றை நான் உனக்கு அறிவிக்கட்டுமா? நீ உறங்கும்போது முப்பத்து மூன்றுமுறை ‘சுப்ஹானல்லாஹ்’ (அல்லாஹ் மிகத் தூயவன்) என்றும், முப்பத்து மூன்று முறை ‘அல்ஹம்துலில்லாஹ்’ (அல்லாஹுவுக்கே புகழ் அனைத்தும்) என்றும், முப்பத்து நான்கு முறை ‘அல்லாஹு அக்பர்’ (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்றும் சொல்’ என்று கூறினார்கள்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுஃப்யான் இப்னு உயையனா(ரஹ்) கூறினார்: இந்த மூன்றில் (ஏதோ) ஒன்று முப்பத்து நான்கு (முறை ஓத வேண்டியது) ஆகும். (தொடர்ந்து அலீ(ரலி)) ‘இவற்றை (நபி(ஸல்) அவர்களிடம் கேட்ட) பின்னால் (ஒரு நாளும் ஓதாமல்) நான் விட்டதில்லை’ என்று கூறினார்கள். அவர்களிடம், ‘ஸிஃப்பீன்’ போரின் இரவில் கூடவா விட்டதில்லை? என்று கேட்கப்பட்டது. அவர்கள், ‘ஆம்; ஸிஃப்பீன் போரின் இரவில் கூடத்தான்’ என்று பதிலளித்தார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 69, எண் 5363

அஸ்வத் இப்னு யஸீத்(ரஹ்) அறிவித்தார். நான் ஆயிஷா(ரலி) அவர்களிடம் ‘நபி(ஸல்) அவர்கள் வீட்டில் என்ன (வேலை) செய்து வந்தார்கள்?’ என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா(ரலி), ‘நபி(ஸல்) அவர்கள் தம் வீட்டாருக்காக (வீட்டு) வேலைகளைச் செய்து வந்தார்கள். தொழுகை அறிவிப்பை (பாங்கு சப்தத்தை)ச் செவிமடுத்தால் (தொழுகைக்காகப்) புறப்பட்டு விடுவார்கள்’ என்று பதிலளித்தார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 69, எண் 5364

ஆயிஷா(ரலி) அறிவித்தார். (ஒரு முறை) ஹிந்த் பின்த் உத்பா(ரலி), நபி(ஸல்) அவர்களிடம் ‘இறைத்தூதர் அவர்களே! (என் கணவர்) அபூ சுஃப்யான் கருமியான ஒருவர். எனக்கும் என் குழந்தைக்கும் போதுமான (பணத்)தை அவர் தருவதில்லை. நான் அவரிடமிருந்து அவருக்குத் தெரியாமல் எடுத்துக் கொண்டதைத் தவிர (போதுமான தொகையை அவராகத் தரமாட்டார்)’ என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், ‘உனக்கும் உன் குழந்தைக்கும் போதுமானதை நியாயமான அளவுக்கு நீ எடுத்துக்கொள்!’ என்று கூறினார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 69, எண் 5365

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ ‘ஒட்டகத்தில் பயணம் செய்த (அரபுப்) பெண்மணிகளிலேயே சிறந்தவர்கள் குறைஷிப் பெண்களேயாவர் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

(அறிவிப்பாளர்களில் இப்னு தாவூஸ், அபுஸ்ஸினாத் ஆகிய இருவரில்) ஒருவரின் அறிவிப்பில் காணப்படுவதாவது: இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: (ஒட்டகத்தில் பயணம் செய்த அரபுப் பெண்களிலேயே சிறந்தவர்கள்) நல்ல குறைஷிக் குலப் பெண்களாவர். அவர்கள் குழந்தைகளின் மீது அதிகப் பாசம் கொண்டவர்கள்; தம் கணவனின் செல்வத்தை அதிகமாகப் பேணிக் காப்பவர்கள் ஆவர்.

முஆவியா(ரலி) மற்றும் இப்னு அப்பாஸ்(ரலி) ஆகியோரிடமிருந்து இவ்வாறே அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகம் 6, அத்தியாயம் 69, எண் 5366

அலீ(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் எனக்குக் கோடு போட்ட பட்டு அங்கி ஒன்றை (அன்பளிப்பாக) வழங்கினார்கள். எனவே, அதை நான் அணிந்து கொண்டேன். (இதைக் கண்ட) நபி(ஸல்) அவர்களின் முகத்தில் கோபக் குறியை பார்த்தேன். உடனே, அதைப் பல துண்டுகளாக்கி எங்கள் (குடும்பப்) பெண்களிடையே பங்கிட்டுவிட்டேன்.

பாகம் 6, அத்தியாயம் 69, எண் 5367

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். என் தந்தை (உஹுதுப் போரில்) இறந்து விட்டார்கள். (இறக்கும்போது) ‘ஏழு பெண் குழந்தைகளை’ அல்லது ‘ஒன்பது பெண் குழந்தைகளை’ விட்டுச் சென்றார்கள். எனவே, (கன்னி கழிந்த) ஒரு பெண்ணை நான் மணமுடித்துக் கொண்டேன். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம், ‘ஜாபிரே! நீ மணமுடித்துக் கொண்டாயா?’ என்று கேட்டார்கள். நான் ‘ஆம்’ என்று சொன்னேன். அவர்கள், ‘கன்னிப் பெண்ணையா? கன்னி கழிந்த பெண்ணையா (யாரை மணந்தாய்)?’ என்று கேட்டார்கள். நான், ‘இல்லை; கன்னி கழிந்த பெண்ணைத் தான் (மணந்தேன்)’ என்று பதிலளித்தேன். நபி(ஸல்) அவர்கள், ‘கன்னிப் பெண்ணை மணந்து, நீ அவளுடனும் அவள் உன்னுடனும் கூடிக் குலாவி விளையாடலாமே; நீ அவளுக்கும் அவள் உனக்கும் மகிழ்வூட்டலாமே!’ என்று கூறினார்கள்.

அதற்கு நான் நபி(ஸல்) அவர்களிடம், ‘(என் தந்தை) அப்துல்லாஹ்(ரலி), பல பெண் மக்களை விட்டுவிட்டு இறந்து விட்டார்கள். (வயதில்) அந்தப் பெண் மக்களைப் போன்ற ஒரு (இளம் வயதுப்) பெண்ணை (மணமுடித்து) அவர்களிடம் அழைத்துச் செல்வதை நான் விரும்பவில்லை. எனவே, நான் அவர்களைப் பராமரித்துச் சீராட்டி வளர்க்கும் (அனுபவமுள்ள) ஒரு பெண்ணை மணந்து கொண்டேன்’ என்றேன். அப்போது நபி(ஸல்) அவர்கள், அல்லாஹ் உனக்கு ‘சுபிட்சத்தை அளிப்பானாக’ அல்லது ‘நன்மையைப் பொழிவானாக’ என்று கூறினார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 69, எண் 5368

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, ‘நான் அழிந்து விட்டேன்’ என்ற கூறினார். நபி(ஸல்) அவர்கள் ‘ஏன் (என்ன நடந்தது)?’ என்று கேட்டார்கள். அவர், ‘நான் ரமளான் மாதத்தில் (பகலில்) என் மனைவியுடன் தாம்பத்திய உறவு கொண்டு விட்டேன்’ என்று கூறினார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘ஓர் அடிமையை விடுதலை செய்து விடுவீராக’ என்று கூறினார்கள். அதற்கு அவர் ‘என்னிடம் அடிமை இல்லையே!’ என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள் ‘அப்படியென்றால், தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பு நோற்பீராக’ என்று கூறினார்கள். அதற்கு அவர், ‘அது என்னால் இயலாது’ என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், ‘அப்படியென்றால், அறுபது ஏழைகளுக்கு உணவளிப்பீராக’ என்று கூறினார்கள். அம்மனிதர், ‘என்னிடம் வசதி இல்லையே!’ என்று கூறினார். அப்போது நபி(ஸல்) அவர்களிடம் பேரீச்சம் பழம் உள்ள ஒரு கூடை (அரக்) கொண்டு வரப்பட்டது. உடனே அவர்கள், ‘கேள்வி கேட்டவர் எங்கே?’ என்று கேட்டார்கள். அவர், ‘இதோ! நானே அது’ என்று பதிலளித்தார். நபி(ஸல்) அவர்கள், ‘இதை தர்மம் செய்யுங்கள்’ என்று கூறினார்கள். அதற்கு அவர் ‘எங்களை விட அதிகத் தேவையுள்ள ஒருவருக்கா தர்மம் செய்யச் சொல்கிறீர்கள்? இறைத்தூதர் அவர்களே! உங்களை சத்தியத்துடன் அனுப்பிய (இறை)வன் மீது ஆணையாக! மதீனாவின் இரண்டு மலைகளுக்கிடையே எங்களைவிட அதிகத் தேவையுள்ள குடும்பத்தார் எவரும் இல்லை’ என்று கூறினார். உடனே நபி(ஸல்) அவர்கள் தம் கடைவாய்ப் பற்கள் தெரியச் சிரித்தார்கள். பிறகு, ‘அப்படியென்றால் நீங்கள்தாம் (அதற்கு உரியவர்கள்)’ என்று கூறினார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 69, எண் 5369

(நபி(ஸல்) அவர்கள் துணைவியாரான) உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார். (நபி(ஸல்) அவர்களிடம்) நான், ‘இறைத்தூதர் அவர்களே! என் (முதல் கணவரான) அபூ ஸலமாவின் பிள்ளைகளுக்குச் செலவழிப்பதால் எனக்கு நன்மை உண்டா? நான் அவர்களை இன்னின்னவாறு (தேவை உள்ளவர்களாக) விட்டுவிட விரும்பவில்லை. அவர்களும் என் பிள்ளைகளே!’ என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், ‘ஆம்! அவர்களுக்காக நீ செலவிட்டா(ல் அ)தற்கான நன்மை உனக்கு உண்டு’ என்று பதிலளித்தார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 69, எண் 5370

ஆயிஷா(ரலி) அறிவித்தார். (அபூ சுஃப்யான்(ரலி) அவர்களின் துணைவியாரான) ஹிந்த் பின்த் உத்பா(ரலி) (நபி(ஸல்) அவர்களிடம் வந்து) ‘இறைத்தூதர் அவர்களே! அபூ சுஃப்யான் கருமியான ஒருவர். எனக்கும் என் குழந்தைக்கும் போதுமான (பணத்)தை அவரின் செல்வத்திலிருந்து நான் எடுத்துக்கொள்வதால் என்மீது குற்றம் உண்டாகுமா?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் ‘நியாயமான அளவிற்கு நீ எடுத்துக்கொள்’ என்று கூறினார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 69, எண் 5371

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். கடன்பட்ட நிலையில் இறந்துவிட்ட ஒருவர் (உடைய ஜனாஸா) இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டால், ‘இவர் தம் கடனை அடைக்கப் பொருள் எதையும் விட்டுச் சென்றுள்ளாரா?’ என்று கேட்பது வழக்கம். ‘அவர் (தம் கடனை அடைக்கத்) தேவையானதை விட்டுச் சென்றுள்ளார்’ என்று தெரிவிக்கப்பட்டால், (அவருக்கு ஜனாஸா) தொழுகை நடத்துவார்கள். இல்லையென்றால், முஸ்லிம்களிடம் ‘உங்கள் தோழருக்காகத் தொழுங்கள்’ என்று கூறி விடுவார்கள். நபி(ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் பல வெற்றிகளை அளித்தபோது அவர்கள், ‘நான் இறை நம்பிக்கையாளர்களுக்கு அவர்களின் உயிர்களைவிட நெருக்கமானவன் ஆவேன். எனவே, இறை நம்பிக்கையாளர்களில் (தம் மீது) கடனை விட்டுவிட்டு இறந்து விடுகிறவரின் கடனை அடைப்பது என் பொறுப்பாகும். ஒரு செல்வத்தை விட்டுச் செல்கிறவரின் வாரிசுகளுக்கு அது உரியதாகும்’ என்று கூறினார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 69, எண் 5372

நபி(ஸல்) அவர்களின் துணைவியாரான உம்மு ஹபீபா(ரலி) கூறினார். நான் (ஒரு முறை) ‘இறைத்தூதர் அவர்களே! என் சகோதரியான அபூ சுஃப்யானின் புதல்வியைத் தாங்கள் மணந்துகொள்ளுங்கள்’ என்று (நபி(ஸல்) அவர்களிடம்) சொன்னேன். நபி(ஸல்) அவர்கள், ‘இதை நீயே விரும்புகிறாயா?’ என்று கேட்டார்கள். நான், ‘ஆம்! (மனைவியென்று) தங்களுக்கு நான் ஒருத்தி மட்டும் இல்லையே! (தங்களுக்குத் துணைவியாகும்) பாக்கியத்தில் என்னுடன் என் சகோதரிக்கும் பங்கு கிடைப்பதை நான் பெரிதும் விரும்புகிறேன்’ என்று சொன்னேன்.

அதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘அ(வளை மணப்ப)து எனக்கு அனுமதிக்கப்பட்டதன்று என்றார்கள். நான், ‘இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்வின் மீதாணையாக! தாங்கள் அபூ ஸலமாவின் மகள் ‘துர்ரா’வை மணந்து கொள்ள விரும்புகிறீர்கள் என்று நாங்கள் பேசிக் கொண்டிருக்கிறோமே!’ என்று சொன்னேன். அதற்கு அவர்கள், ‘(அதாவது என் துணைவியார்) உம்மு ஸலமாவுக்கு (முந்தைய கணவன் மூலம்) பிறந்த மகளையா?’ என்று கேட்க, நான் ‘ஆம்’ என்று சொன்னேன். அவர்கள், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! அவள் (-உம்முஸலமாவின் மகள்-) என்னுடைய மடியில் வளர்ப்பு மகளாக (இருந்து வருகிறாள். அப்படி) இல்லாவிட்டாலும் கூட, அவளை நான் மணக்கமுடியாது. (ஏனெனில்,) அவள் என் பால்குடி சகோதரரின் புதல்வியாவாள். எனக்கும் (அவளுடைய தந்தை) அபூ ஸலமாவிற்கும் ‘ஸ¤வைபா’ (எனும் அடிமைப் பெண்) பாலூட்டியிருக்கிறார். எனவே, உங்கள் பெண் மக்களையோ உங்கள் சகோதரிகளையோ (மணந்து கொள்ளும்படி) என்னிடம் கோராதீர்கள்!’ என்று கூறினார்கள்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) உர்வா(ரஹ்) கூறினார்: (ஸ¤வைபா, அபூ லஹபின் அடிமைப் பெண் ஆவார்.) ஸுவைபாவை அபூ லஹப் விடுதலை செய்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *