625. (ஒருநாள்) இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (சொற்பொழிவு மேடையில் அமர்ந்து) ‘இறைவன் உங்களுக்காக வெளிக் கொணரும் பூமியின் வளங்களைத் தான் உங்களின் விஷயத்தில் நான் அதிகம் அஞ்சுகிறேன்” என்றார்கள். ‘பூமியின் வளங்கள் எவை?’ என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் ‘(கனிமப் பொருள்கள், ஆடை அணிகலன்கள், பயிர் வகைகள் ஆகிய இவ்வுலகக் கவர்ச்சிப் பொருள்கள் (தாம் அவை)” என்று பதிலளித்தார்கள். அப்போது ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் ‘(செல்வம் எனும்) நன்மை தீமையை உருவாக்குமா?’ என்று வினவியதற்கு (பதிலளிக்காமல்) நபி (ஸல்) அவர்கள் மௌனமாக இருந்தார்கள். எந்த அளவிற்கென்றால், அவர்களுக்கு வேத அறிவிப்பு (வஹீ) அருளப்படுகிறதோ என்று நாங்கள் நினைத்தோம். பிறகு, தம் நெற்றியைத் துடைக்கலானார்கள். பின்னர் ‘கேள்வி கேட்டவர் எங்கே?’ என்று வினவினார்கள். அம்மனிதர் ‘(இதோ) நான் (இங்கிருக்கிறேன்)” என்று கூறினார். (அவர் கேள்வி கேட்டதையடுத்து மக்களுக்குப் பயனளிக்கும்) அந்த பதில் வெளிப்பட்டதற்காக அவரை நாங்கள் மெச்சினோம். நபி(ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: நன்மையால் நன்மையே விளையும் இந்த (உலகின்) செல்வம் பசுமையானதும் இனிமையானதுமாகும். வாய்க்கால் மூலம் விளைகிற (பயிர்கள்) ஒவ்வொன்றும் (கால்நடைகளை,) வயிறு புடைக்கத் தின்னவைத்துக் கொன்று விடுகின்றன அல்லது கொல்லும் அளவுக்குச் சென்றுவிடுகின்றன. பசுமையான புல்லைத் தின்னும் கால்நடைகளைத் தவிர. (அவை மடிவதில்லை. ஏனெனில்,) அவை (புல்லைத்) தின்று வயிறு நிரம்பிவிடும்போது சூரியனை நோக்கி(ப் படுத்து)க் கொண்டு அசை போடுகின்றன. (இதனால் நன்கு சீரணமாகி) சாணமும் சிறுநீரும் வெளியேறுகின்றன. பின்னர் (வயிறு காலியானவுடன்) மறுபடியும் சென்று மேய்கின்றன.இந்த (உலகின்) செல்வம் இனிமையானதாகும். இதை உரிய முறையில் சம்பாதித்து உரிய முறையில் செலவிடுகிறவருக்கு அது நல்லுதவியாக அமையும். இதை முறையற்ற வழிகளில் சம்பாதிக்கிறவர் உண்டும் வயிறு நிரம்பாதவரைப் போன்றவராவார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
626.ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் மிம்பரில் அமர்ந்தார்கள். நாங்களும் அவர்களைச் சுற்றி அமர்ந்தோம். அப்போது அவர்கள் ‘என் வாழ்விற்குப் பின், உங்களுக்கிடையே உலக வளங்களும் அதன் கவர்ச்சிப் பொருட்களும் தாராளமாகத் திறந்து விடப்படுவதைப் பற்றியே நான் அஞ்சுகிறேன்’ எனக் கூறினார்கள். ஒருவர் ‘இறைத்தூதர் அவர்களே! (செல்வம் என்ற) நன்மை தீயதை உருவாக்குமா?’ எனக் கேட்டதும் நபி (ஸல்) அவர்கள் மௌனமானார்கள். உடனே அந்த நபரிடம், ‘என்ன ஆனது உம்முடைய நிலைமை? நீர், நபி (ஸல்) அவர்களிடம் பேசுகிறீர்; ஆனால், நபி (ஸல்) அவர்களோ உம்மிடம் பேசாமாலிருக்கிறார்களே!’ எனக் கேட்கப்பட்டது. நாங்கள் நபி (ஸல்) அவர்களுக்கு வஹீ (இறைச்செய்தி) அருளப்படுகிறது எனக் கருதினோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் வியர்வையைத் துடைத்துவிட்டு, ‘கேள்வி கேட்டவர் எங்கே?’ என அவரைப் பாராட்டுவது போன்று கேட்டார்கள். பிறகு, ‘நன்மையானது தீயதை உருவாக்காதுதான்; நிச்சயமாக, நீர்நிலைகளின் கரைகளில் விளைகிற தாவரங்களில் சில, (தம் நச்சுத் தன்மையால் அவற்றை மேய்கின்ற) கால்நடைகளைக் கொன்று விடுகின்றன. அல்லது மரணத்தின் விளிம்புக்கே (அவற்றைக்) கொண்டு போகின்றன… பசுமையான (நல்ல வகைத்) தாவரங்களைத் தின்பவற்றைத் தவிர! அவற்றைக் கால்நடைகள் வயிறு புடைக்கத் தின்று சூரிய ஒளியை முன்னோக்குகின்றன. மேலும், சாணம் போட்டு, சிறுநீர் கழித்து மீண்டும் மேய்கின்றன. (இது போன்றே உலகிலுள்ள) இச்செல்வம் பசுமையானதும் இனிமையானதும் ஆகும். எனவே, ஒரு முஸ்லிம், தன்செல்வத்திலிருந்து ஏழைகளுக்கும் அனாதைகளுக்கும் வழிப்போக்கர்களுக்கும் கொடுத்துக் கொண்டிருக்கும்வரை அது அவனுக்குச் சிறந்த தோழனாகும். யார் முறையின்றி அதை எடுத்துக் கொள்கிறானோ… அவன் உண்டும் வயிறு நிரம்பாதவனைப் போன்றவனாவான். மேலும், மறுமை நாளில் அச்செல்வம் அவனுக்கு எதிராக சாட்சி சொல்லும்” எனக் கூறினார்கள்.