Featured Posts

75. நோயாளிகள்

பாகம் 6, அத்தியாயம் 75, எண் 5640

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஒரு முஸ்லிமைத் தைக்கும் முள் உள்பட அவருக்கு நேரிடும் துன்பம் எதுவாயினும் அதற்கு பதிலாக அல்லாஹ் அவரின் பாவங்களை மன்னிக்காமல் இருப்பதில்லை. இதை நபி(ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

பாகம் 6, அத்தியாயம் 75, எண் 5641

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஒரு முஸ்லிமைத் தைக்கும் முள் உள்பட அவருக்கு நேரிடும் துன்பம், நோய், துக்கம், கவலை, தொல்லை, மனவேதனை ஆகிய எதுவாயினும் அதற்கு பதிலாக அவரின் பாவங்களிலிருந்து சிலவற்றை அல்லாஹ் மன்னிக்காமல் இருப்பதில்லை. இதை அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அவர்களும் அபூ ஹுரைரா(ரலி) அவர்களும் அறிவித்தார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 75, எண் 5643

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். இறை நம்பிக்கையாளரின் நிலை, இளம் தளிர்ப் பயிருக்கு ஒப்பானாதாகும். அதைக் காற்று ஒரு முறை சாய்த்து, மறுமுறை நிமிர்ந்து நிற்கச் செய்யும். நயவஞ்சகனின் நிலை தேவதாரு மரத்திற்கு ஒப்பானதாகும். அது ஒரேயடியாக வேரோடு சாயும்வரை (தலை சாயாமல்) நிமிர்ந்து நிற்கும். இதை கஅப் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். இந்த ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர்வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகம் 6, அத்தியாயம் 75, எண் 5644

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். இறை நம்பிக்கையாளரின் நிலையானது, இளம் பயிர் போன்றதாகும். காற்றடிக்கும்போது அதைக் காற்று (தன் திசையில்) சாய்த்துவிடும். காற்று நின்றுவிட்டால், அது நேராக நிற்கும். சோதனையின்போது (இறை நம்பிக்கையாளரின் நிலையும் அவ்வாறே). தீயவன், உறுதியாக நிமிர்ந்து நிற்கும் தேவதொரு மரத்தைப் போன்றவன். அல்லாஹ், தான் நாடும்போது அதை (ஒரேடியாக) உடைத்து (சாய்த்து) விடுகிறான் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 6, அத்தியாயம் 75, எண் 5645

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். யாருக்கு அல்லாஹ் நன்மையை நாடுகிறானோ அவரை (சத்திய) சோதனைக்கு உள்ளாக்குகிறான் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 6, அத்தியாயம் 75, எண் 5646

ஆயிஷா(ரலி) கூறினார். இறைத்தூதர்(ஸல்) அவர்களை விடக் கடுமையாக நோய்வாய்ப்பட்ட வேறெவரையும் நான் கண்டதில்லை. இந்த ஹதீஸ் இரண்டு வழிகளில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகம் 6, அத்தியாயம் 75, எண் 5647

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) கூறினார். நபி(ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டுக் கடும் காய்ச்சலால் சிரமப்பட்டுக் கொண்டிருந்தபோது நான் அவர்களிடம் சென்றேன். ‘தாங்கள் கடும் நோயால் சிரமப்படுகிறீர்களே (இறைத்தூதர் அவர்களே!), தங்களுக்கு இதனால் இரண்டு (மடங்கு) நன்மைகள் கிடைக்கும் என்பதாலா?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘ஆம்; எந்தவொரு முஸ்லிமுக்கு எந்தத் துன்பம் நேர்ந்தாலும் அதற்கு பதிலாக, மரத்தின் இலைகள் உதிர்வதைப் போன்று அவரின் பாவங்களை அல்லாஹ் உதிரச் செய்யாமல் இருப்பதில்லை’ என்று கூறினார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 75, எண் 5648

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) கூறினார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் காய்ச்சலால் சிரமப்பட்டுக் கொண்டிருந்தபோது அவர்களிடம் நான் சென்றேன். ‘இறைத்தூதர் அவர்களே! தாங்கள் கடும் காய்ச்சலால் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறீர்களே!’ என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், ‘ஆம்; உங்களில் இரண்டு மனிதர்கள் காய்ச்சலால் அடைகிற துன்பத்தை (ஒரே மனிதனாகிய) நான் அடைகிறேன்’ என்று கூறினார்கள். நான், ‘(இந்தத் துன்பத்தின் காரணமாகத்) தங்களுக்கு இரண்டு (மடங்கு) நற்பலன்கள் கிடைக்கும் என்பதாக இதற்குக் காரணம்?’ என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், ‘ஆம்; அது அப்படித்தான். ஒரு முஸ்லிமைத் தைக்கும் ஒரு முள்ளாயினும், அதற்கு மேலான துன்பம் எதுவாயினும் அதற்கு பதிலாக, மரம் தன் இலைகளை உதிர்த்து விடுவதைப் போன்று அவரின் பாவங்களை அல்லாஹ் (உதிரச் செய்து) மன்னிக்காமல் விடுவதில்லை’ என்று கூறினார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 75, எண் 5649

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். பசித்தவருக்கு உணவளியுங்கள்; நோயாளியை(ச் சந்தித்து) உடல் நலம் விசாரியுங்கள்; (போர்க்) கைதியை (எதிரியிடமிருந்து விடுவியுங்கள் என அபூ மூஸா அல்அஷ்அரீ(ரலி) அறிவித்தார்.

பாகம் 6, அத்தியாயம் 75, எண் 5650

பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அவர்கள் கூறினார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எங்களுக்கு ஏழு விஷயங்களைக் (கடை பிடிக்கும்படி) கட்டளையிட்டு ஏழு விஷயங்களைத் தடை செய்தார்கள்: (ஆண்கள்) தங்கமோதிரம், சாதாரணப்பட்டு, அலங்காரப் பட்டு தடித்தப்பட்டு ஆகியவற்றை அணிய வேண்டாமென்றும், பட்டு கலந்த (எகிப்திய) பஞ்சாடை, மென்பட்டுத் திண்டு (மீஸரா) ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டாமென்றம் எங்களுக்குத் தடை விதித்தார்கள். ஜனாஸாக்களைப் பின்தொடர்ந்து செல்லும் படியும் நோயாளியை நலம் விசாரிக்கும் படியும் சலாமைப் பரப்பும்படியும் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 75, எண் 5651

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) கூறினார். நான் கடுமையாக நோய் வாய்ப்பட்டிருந்தேன். என்னை உடல் நலம் விசாரிக்க நபி(ஸல்) அவர்களும் அபூ பக்ர்(ரலி) அவர்களும் நடந்தே என்னிடம் வந்தார்கள். அப்போது நான் மயக்கம் அடைந்திருக்கக் கண்டார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள் அங்கசுத்தி (உளூ) செய்துவிட்டு அங்கசுத்தி செய்த தண்ணீரை என் மீது ஊற்றினார்கள். உடனே நான் மயக்கம் தெளிந்(து கண் விழித்)தேன். அங்கே (என் முன்னே) நபி(ஸல்) அவர்கள் இருந்தார்கள். நான், ‘இறைத்தூதர் அவர்களே! என் செல்வத்தை நான் என்ன செய்ய வேண்டும்? என் செல்வத்தில் விஷயத்தில் என்ன முடிவு செய்ய வேண்டும்?’ என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள் எனக்கு பதிலேதும் கூறவில்லை. இறுதியில் வாரிசுரிமைச் சட்டம் தொடர்பான இறைவசனம் அருளப்பட்டது.

பாகம் 6, அத்தியாயம் 75, எண் 5652

அதாஉ இப்னு அபீ ரபாஹ்(ரஹ்) கூறினார். இப்னு அப்பாஸ்(ரலி) என்னிடம், ‘சொர்க்கவாசியான ஒரு பெண்மணியை உங்களுக்குக் காட்டட்டுமா?’ என்று கேட்டார்கள். நான், ‘ஆம்; (காட்டுங்கள்)’ என்று சொன்னேன். அவர்கள், இந்தக் கறுப்பு நிறப் பெண்மணிதாம் அவர். இவர் (ஒரு முறை) நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ‘நான் வலிப்பு நோயால் (அடிக்கடிப்) பாதிக்கப்படுகிறேன். அப்போது என் (உடலிலிருந்து ஆடை விலகி) உடல் திறந்து கொள்கிறது. எனவே, எனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்’ என்றார். நபி(ஸல்) அவர்கள், ‘நீ நினைத்தால் பொறுமையாக இருக்கலாம். (இதற்கு பதிலாக) உனக்கு சொர்க்கம் கிடைக்கும். நீ விரும்பினால் உனக்குக் குணமளிக்கும்படி அல்லாஹ்விடம் நான் பிரார்த்திக்கிறேன்’ என்று கூறினார்கள். இந்தப் பெண்மணி, ‘நான் பொறுமையாகவே இருந்து விடுகிறேன். ஆனால், (வலிப்பு வரும்போது ஆடை விலகி) என் உடல் திறந்து கொள்கிறது. அப்படித் திறந்து கொள்ளாமல் இருக்க அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்’ என்று கூறினார். அவ்வாறே நபி(ஸல்) அவர்கள் இப்பெண்ணுக்காகப் பிரார்த்தனை செய்தார்கள்.

அதாஉ இப்னு அபீ ரபாஹ்(ரஹ்) கூறினார். நான் உம்மு ஸுஃபரைப் பார்த்தேன். அவர் தாம் கஅபாவின் திரை மீது (சாய்ந்த படி அமர்ந்து) உள்ள கறுப்பான உயரமான இப்பெண் ஆவார்.

பாகம் 6, அத்தியாயம் 75, எண் 5653

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ் கூறினான். நான் என் அடியானை, அவனுடைய பிரியத்திற்குரிய இரண்டு பொருட்களை(ப் பறித்து)க் கொண்டு சோதித்து, அவன் பொறுமை காப்பானேயானால், அவற்றுக்கு பதிலாக சொர்க்கத்தை நான் அவனுக்கு வழங்குவேன். (‘அவனுடைய பிரியத்திற்குரிய இரண்டு பொருள்கள்’ என்பது) அவரின் இரண்டு கண்களைக் குறிக்கும் என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகம் 6, அத்தியாயம் 75, எண் 5654

ஆயிஷா(ரலி) கூறினார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (மக்காவைத் துறந்து) மதீனாவுக்கு வந்தபோது அபூ பக்ர்(ரலி) அவர்களுக்கும் பிலால்(ரலி) அவர்களுக்கும் காய்ச்சல் கண்டிருந்தது. அவ்விருவரிடமும் நான் சென்று, ‘என் தந்தையே! எப்படியிருக்கிறீர்கள்? பிலால் அவர்களே எப்படியிருக்கிறீர்கள்?’ என்று (நலம்) விசாரிப்பேன். அபூ பக்ர்(ரலி) தமக்குக் காய்ச்சல் காணும்போது (பின்வரும் கவிதையைக்) கூறுவார்கள்.

காலை
வாழ்த்துக் கூறப்பெற்ற
நிலையில்
ஒவ்வொரு மனிதனும்
தம் குடும்பத்தாரோடு
காலைப் பொழுதை அடைகிறான்..
(ஆனால்,)
மரணம் – அவன் செருப்பு வாரைவிட
மிக அருகில் இருக்கிறது (என்பது
அவனுக்குத் தெரிவதில்லை).

பிலால்(ரலி) காய்ச்சல் விட்டதும்,

‘இத்கிர்’ (நறுமணப்) புல்லும்
‘ஜலீல்’ கூரைப் புல்லும்
என்னைச் சூழ்ந்திருக்க…
(மக்காவின்) பள்ளத்தாக்கில்
ஓர் இராப் பொழுதையேனும்
நான் கழிப்பேனா…?
‘மிஜன்னா’ எனும்
(மக்காவின் இனிப்புச் சுவை) நீரை
ஒரு நாள் ஒரு பொழுதாவது
நான் பருகுவேனா…?
(மக்கா நகரின்)
ஷாமா, தஃபீல் மலைகள்
(இனி எப்போதேனும்)
எனக்குத் தென்படுமா…?

என்று (கவிதை) கூறுவார்கள். உடனே, நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து, (அவர்கள் இருவருடைய நிலையைத்) தெரிவித்தேன். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘இறைவா! நாங்கள் மக்காவை நேசித்தது போல்,  அல்லது அதைவிட அதிகமாக மதீனாவை எங்கள் நேசத்திற்குரியதாக ஆக்குவாயாக! இறைவா! மேலும் இவ்வூரை ஆரோக்கியமானதாகவும் ஆக்குவாயாக!  அதன் (அளவைகளான) ‘ஸாஉ’, ‘முத்(து)’  ஆகியவற்றில் (-எங்கள் உணவில்) எங்களுக்கு நீ சுபிட்சத்தை வழங்குவாயாக! இங்குள்ள காய்ச்சலை இடம் பெயரச் செய்து அதை ‘ஜுஹ்ஃபா’ எனுமிடத்தில் (குடி) அமர்த்தி விடுவாயாக’ என்று பிரார்த்தனை செய்தார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 75, எண் 5655

உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார். நபி(ஸல்) அவர்களின் புதல்வியார் (ஸைனப்(ரலி) அவர்கள் தங்களின் மகள் (அல்லது மகன்) இறக்கும் தறுவாயில் இருப்பதாகவும், எனவே அங்கு வந்து சேர வேண்டும் என்றும் நபி(ஸல்) அவர்களுக்குச் செய்தி அனுப்பினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்களுடன் நானும் ஸஅத் இப்னு உபாதா(ரலி) அவர்களும் இருந்தோம். உபை இப்னு கஅப்(ரலி) அவர்களும் இருந்ததாகவே நாங்கள் கருதுகிறோம். உடனே நபி(ஸல்) அவர்கள் தம் புதல்விக்கு சலாம் (முகமன்) சொல்லி அனுப்பியதோடு, ‘அல்லாஹ் எடுத்துக் கொண்டதும் கொடுத்ததும் அவனுக்கே உரியது. ஒவ்வொன்றுக்கும் அவனிடம் ஒரு குறிப்பிட்ட தவணை உண்டு. எனவே, நன்மையை எதிர்பார்ப்பாயாக் பொறுமையைக் கைக்கொள்வாயாக’ எனக் கூறியனுப்பினார்கள். அப்போது அவர்களின் புதல்வியார் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு (கண்டிப்பாக வரவேண்டுமென மீண்டும்) கூறியனுப்பினார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள் எழுந்தார்கள். நாங்களும் அவர்களுடன் எழுந்தோம். (தம் புதல்வியின் வீட்டுக்குச் சென்ற) நபி(ஸல்) அவர்களின் மடியில் சுவாசிக்க முடியாமல் மூச்சுத் திணறிக் கொண்டிருந்த குழந்தை கிடத்தப்பட்டது. அப்போது நபி(ஸல்) அவர்களின் இரண்டு கண்களும் நீர் சொரிந்தன. உடனே அவர்களிடம் ஸஅத் இப்னு உபாதா(ரலி) ‘இறைத்தூதர் அவர்களே! என்ன இது? (அழுகிறீர்களே!)’ என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘இது அல்லாஹ் தன் அடியார்களில் தான் நாடியவர்களின் உள்ளங்களில் அமைத்துள்ள இரக்க உணர்வாகும். அல்லாஹ் தன் அடியார்களில் இரக்கமுடையவருக்கே இரக்கம் காட்டுகிறான்’ என்று கூறினார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 75, எண் 5656

இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார். நபி(ஸல்) அவர்கள் (நோயுற்றிருந்த) ஒரு கிராமவாசியிடம், அவரை உடல் நலம் விசாரிக்கச் சென்றார்கள். நபி(ஸல்) அவர்கள் ஒரு நோயாளியிடம் உடல் நலம் விசாரிக்கச் சென்றால் அந்த நோயாளியிடம், ‘கவலைப் படவேண்டாம். இறைவன் நாடினால், (இது உங்கள் பாவத்தை நீக்கி உங்களைத்) தூய்மைப்படுத்திவிடும்’ என்று கூறுவார்கள். (தம் அந்த வழக்கப்படி நபி(ஸல்) அவர்கள் கிராமவாசியிடம் கூறியபோது) அந்தக் கிராமவாசி, ‘நான் தூய்மை பெற்று விடுவேன் என்றா சொன்னீர்கள்! (சாத்தியம்) கிடையாது. இதுவோ வயது முதிர்ந்த பெரியவரைப் பீடிக்கிற சூடாகித் தகிக்கிற காய்ச்சலாகும். இது அவரை மண்ணறைகளைச் சந்திக்க வைக்கும்’ என்று கூறினார். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘அப்படியென்றால் ஆம் (அவ்வாறே நடக்கும்)’ என்று கூறினார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 75, எண் 5657

அனஸ்(ரலி) கூறினார். யூதர்களின் அடிமையொருவர் நபி(ஸல்) அவர்களுக்கு ஊழியம் செய்துவந்தார். அவர் நோயுற்றுவிட்டார். அவரை உடல் நலம் விசாரிக்கச் சென்ற நபி(ஸல்) அவர்கள் ‘இஸ்லாத்தை ஏற்றுக் கொள்’ என்று கூறினார்கள். அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்டார்.

முஸய்யப் இப்னு ஹஸ்ன்(ரலி) கூறினார். (தம் பெரிய தந்தை) அபூ தாலிப் அவர்களுக்கு மரண வேதனை வந்தபோது நபி(ஸல்) அவர்கள் அவரிடம் சென்றார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 75, எண் 5658

ஆயிஷா(ரலி) கூறினார். நபி(ஸல்) அவர்கள் நோயுற்றிருந்தபோது அவர்களை உடல் நலம் விசாரிப்பதற்காகச் சிலர் வந்தனர். (அப்போது தொழுகை நேரம் வந்துவிடவே) நபி(ஸல்) அவர்கள் உட்கார்ந்தபடியே அவர்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். மக்களோ நின்றபடி தொழலாயினர். அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘உட்காருங்கள்’ என்று மக்களுக்கு சைகை செய்தார்கள். தொழுகை முடிந்தபோது, ‘(தொழுகையை முன்நின்று நடத்தும்) இமாம் பின்பற்றப்பட வேண்டியவராவார். எனவே, அவர் (தொழுகையில்) குனிந்தால் நீங்களும் குனி(ந்து ‘ருகூஉ’ செய்)யுங்கள். அவர் (தம் தலையை) உயர்த்தினால் நீங்களும் (தலையை) உயர்த்துங்கள். அவர் அமர்ந்து தொழுதால் நீங்களும் அமர்ந்தே தொழுங்கள்’ என்று கூறினார்கள்.

ஹுமைதி(ரஹ்) கூறினார். இந்த ஹதீஸ் கூறப்பட்டுள்ள சட்டம் மாற்றப்பட்டுவிட்டது. ஏனெனில், நபி(ஸல்) அவர்கள் கடைசியாகத் தொழுதபோது மக்கள் அவர்கள் பின்னால் நின்று கொண்டு தொழ, அவர்கள் மட்டும் உட்கார்ந்து தொழு(வித்)தார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 75, எண் 5659

ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) கூறினார். நான் மக்காவில் கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்தேன். நபி(ஸல்) அவர்கள் என்னை உடல் நலம் விசாரிப்பதற்காக என்னிடம் வந்தார்கள். நான், ‘அல்லாஹ்வின் நபியே! நான் செல்வத்தைவிட்டுச் செல்கிறேன். (ஆனால்,) ஒரேயொரு மகளைத்தான் நான் (என் வாரிசாக)விட்டுச் செல்கிறேன். எனவே, என் செல்வத்தில் இரண்டிலொரு பங்கை (தானம் செய்யும்படி) மரணம் சாசனம் செய்துவிட்டு (வாரிசான என் மகளுக்கு) மூன்றிலொரு பங்கை மட்டும்விட்டுச் செல்லட்டுமா?’ என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், ‘வேண்டாம்’ என்று கூறினார்கள். நான், ‘பாதியை மரண சாசனம் செய்துவிட்டுப் பாதியை (என் மகளுக்கு)விட்டுச் செல்லட்டுமா?’ என்று கேட்டேன். அதற்கும் நபி(ஸல்) அவர்கள், ‘வேண்டாம்’ என்று கூறினார்கள். நான், ‘அப்படியென்றால் மூன்றிலொரு பங்கு (தானம் செய்யும்படி) மரண சாசனம் செய்துவிட்டு இரண்டிலொரு பங்கை அவளுக்காகவிட்டுச் செல்லட்டுமா?’ என்று கேட்டேன். நபி(ஸல) அவர்கள், ‘மூன்றிலொரு பங்கா? மூன்றிலொரு பங்கே அதிகம்தான்’ என்று கூறினார்கள். பிறகு தம் கையை என் நெற்றியின் மீது வைத்துப் பிறகு அதை என் வயிற்றின் மீதும் என் முகத்தின் மீதும் தடவினார்கள். பின்னர், ‘இறைவா! ஸஅதுக்குக் குணமளிப்பாயாக. அவரின் ஹிஜ்ரத்தை முழுமைப்படுத்துவாயாக!’ என்று பிரார்த்தித்தார்கள். அவர்களின் (கரத்தின்) குளிர்ச்சியை என் ஈரலில் இப்போதும் கூட நான் உணர்வதைப் போன்று இருக்கிறது.

பாகம் 6, அத்தியாயம் 75, எண் 5660

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) கூறினார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கடும் காய்ச்சலால் சிரமப்பட்டுக்கொண்டிருந்தபோது நான் அவர்களிடம் சென்று அவர்களை என் கையால் தொட்டு, ‘இறைத்தூதர் அவர்களே! தாங்கள் கடும் காய்ச்சலால் சிரமப்படுகிறீர்களே!’ என்று கேட்டேன். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘ஆம்; உங்களில் இருவர் காய்ச்சலால் அடையும் துன்பத்தைப் போன்று நான் (ஒருவனே) அடைகிறேன்’ என்று கூறினார்கள். நான், ‘(இந்தத் துன்பத்தின் மூலம்) தங்களுக்கு இரண்டு (மடங்கு) நன்மைகள் கிடைக்கும் என்பதாக இதற்குக் காரணம்?’ என்று கேட்டேன். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ‘ஆம்’ என்று கூறிவிட்டுப் பிறகு, ‘ஒரு முஸ்லிமுக்கு ஏற்படும் நோயாயினும், அது அல்லாத வேறு துன்பமாயினும் (அதற்கு ஈடாக), மரம் தன் இலைகளை உதிர்த்து விடுவதைப் போன்று அவரின் பாவங்களை அல்லாஹ் உதிர்க்காமல் விடுவதில்லை’ என்று கூறினார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 75, எண் 5661

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) கூறினார். நபி(ஸல்) அவர்களுக்கு நோய் கண்டிருந்தபோது அவர்களிடம் நான் சென்று அவர்களை(ப் பரிவோடு) தொட்டேன். அவர்கள் கடும் காய்ச்சலால் சிரமப்பட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது நான், ‘தாங்கள் கடும் காய்ச்சலால் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறீர்களே! (இந்தத் துன்பத்தின் காரணமாக) தங்களுக்கு இரண்டு (மடங்கு) நன்மைகள் உண்டுதானே!’ எனக் கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், ‘ஆம். ஒரு முஸ்லிமுக்கு எந்தத் துன்பம் நேர்ந்தாலும் (அதற்கு ஈடாக), மரத்தின் இலைகள் உதிர்வதைப் போன்று அவரின் தவறுகள் அவரைவிட்டு உதிராமல் இருப்பதில்லை’ என்று கூறினார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 75, எண் 5662

இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (நோயுற்றிருந்த கிராமவாசி) ஒருவரை ஒடல் நலம் விசாரிக்கச் சென்றார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘கவலைப்பட வேண்டாம். இறைவன் நாடினால் (இது உங்கள் பாவத்தைக் கழுவி உங்களைத்) தூய்மைப்படுத்தி விடும்’ என்று கூறினார்கள். அதற்கு அந்த மனிதர், ‘நான் தூய்மை பெற்றுவிடுவேனா? இது நடக்கப் போவது) இல்லை. இதுவோ வயது முதிர்ந்த பெரியவரைப் பீடிக்கிற சூடாகித் தகிக்கிற காய்ச்சல் ஆகும். இது அ(ம் முதிய)வரை மண்ணறைகளைச் சந்திக்க வைக்கும் வரை (ஓயாது)’ என்று கூறினார். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘அப்படியென்றால், ஆம் (நீர் நினைத்தது போன்றே நடக்கும்)’ என்று கூறினார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 75, எண் 5663

உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார். நபி(ஸல்) அவர்கள் கழுதையொன்றில் சேணம் விரித்து, அதன் மீது ‘ஃபதக்’ நகர் முரட்டுத் துணி விரித்து, அதன் மீது அமர்ந்து தமக்குப் பின்னால் என்னை அமர்த்திக் கொண்டு (நோய்வாய்ப்படடிருந்த) ஸஅத்பின் உபாதா(ரலி) அவர்களை உடல் நலம் விசாரிக்கச் சென்றார்கள். இது பத்ருப் போருக்கு முன்னால் நடந்தது. அப்போது ஓர் அவையைக் கடந்து சென்றார்கள். அதில் (நயவஞ்சகர்களின் தலைவர்) அப்துல்லாஹ் இப்னு உபை இப்னி சலூல் இருந்தார் – அவர் தம்மை முஸ்லிம் என்று காட்டிக் கொள்ளும் முன் இது நடந்தது. அந்த அவையில் முஸ்லிம்கள், சிலை வணங்கிகளாக இணை வைப்பாளர்கள், யூதர்கள் ஆகிய பல்வேறு வகுப்பாரும் இருந்தனர். அதே அவையில் (கவிஞர்) அப்துல்லாஹ் இப்னு ரவாஹா(ரலி) அவர்களும் இருந்தார்கள்.

(எங்கள்) வாகனப் பிராணியி(ன் காலடியி)லிருந்து கிளம்பிய புழுதி அந்த அவையைச் சூழ்ந்தபோது (நயவஞ்சகர்) அப்துல்லாஹ் இப்னு உபை தம் மேல் துண்டால் தம் மூக்கைப் பொத்திக் கொண்டார். பிறகு, ‘எங்களின் மீது புழுதி கிளப்பாதீர்’ என்று கூறினார். அப்போது நபி(ஸல்) அவர்கள் சலாம் (முகமன்) கூறினார்கள். (தம் வாகனத்தை) நிறுத்தி இறங்கி, அல்லாஹ்வின் (மார்க்கத்தின்) பால் அவர்களை அழைத்தார்கள். மேலும், அவர்களுக்குக் குர்ஆனை ஓதிக் காட்டினார்கள். இதைக் கேட்ட அப்துல்லாஹ் இப்னு உபை (நபி(ஸல்) அவர்களை நோக்கி) ‘மனிதரே! நீர் கூறுகிற விஷயம் உண்மையாயிருப்பின், அதைவிடச் சிறந்தது வேறொன்றுமில்லை. (ஆனால்,) அதை எங்களுடைய (இது போன்ற) அவையில் (வந்து) சொல்லி எங்களுக்குத் தொல்லை தராதீர். உங்கள் இருப்பிடத்திற்குச் செல்லுங்கள். உம்மிடம் வருபவர்களிடம் (அதை) எடுத்துச் சொல்லுங்கள்’ என்றார். (அங்கிருந்த) அப்துல்லாஹ் இப்னு ரவாஹா(ரலி), ‘ஆம். இறைத்தூதர் அவர்களே! அதை நம் அவைகளுக்கு வந்து எங்களுக்கு எடுத்துரையுங்கள். ஏனெனில், நாங்கள் அதை விரும்புகிறோம்’ என்று கூறினார்கள்.

இதைக் கேட்ட முஸ்லிம்களும் இணைவைப்பாளர்களும் யூதர்களும் (ஒருவரையொருவர்) ஏசத் தொடங்கி பரஸ்பரம் தாக்கிக் கொள்ளும் அளவுக்குச் சென்று விட்டனர். அப்போது நபி(ஸல்) அவர்கள், மெளனமாகும்வரை மக்களை அமைதிப்படுத்திக் கொண்டேயிருந்தார்கள். பிறகு நபி(ஸல்) அவர்கள் தங்களின் வாகனத்திலேறி (உடல் நலமில்லாமல் இருந்த) ஸஅத் இப்னு உபாதா(ரலி) அவர்களிடம் சென்று, ‘சஅதே! அபூ ஹுபாப் – அப்துல்லாஹ் இப்னு உபை சொன்னதை நீங்கள் செவியுறவில்லையா? (அவர் இன்னின்னவாறு கூறினார்)’ என்றார்கள். ஸஅத் இப்னு உபாதா(ரலி), ‘இறைத்தூதர் அவர்களே! அவரை மன்னித்து விட்டுவிடுங்கள். தங்களுக்கு அல்லாஹ் வழங்கிய (மார்க்கத்)தை வழங்கிவிட்டான். (தாங்கள் மதீனா வருவதற்கு முன்பு) இந்நகர வாசிகள் அப்துல்லாஹ்வுக்குக் கிரீடம் அணிவித்து அவரைத் தலைவராக்க முடிவு செய்திருந்தார்கள். (இந்நிலையில்) அல்லாஹ் தங்களுக்கு அளித்த சத்திய(மார்க்க)த்தின் மூலம் அ(ப்பதவியான)து மறுக்கப்பட்டபோது அதைக் கண்டு அவர் ஆத்திரமடைந்துள்ளார். இதுவே தாங்கள் பார்த்தபடி அவர் நடந்து கொண்டதற்குக் காரணம்’ என்று கூறினார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 75, எண் 5664

ஜாபிர்(ரலி) கூறினார். நபி(ஸல்) அவர்கள் (நான் நோயுற்றிருந்த போது) என்னை உடல் நலம் விசாரிக்க வந்தார்கள். அப்போது அவர்கள் கோவேறு கழுதையின் மீது பயணம் செய்தபடியும் வரவில்லை. குதிரையின் மீது பயணம் செய்தபடியும் வரவில்லை. (மாறாக, நடந்தே வந்தார்கள்.)

பாகம் 6, அத்தியாயம் 75, எண் 5665

கஅப் இப்னு உஜ்ரா(ரலி) கூறினார். (உம்ராவுக்காக இஹ்ராம் கட்டியிருந்த சமயம் ஹுதைபிய்யாவில்) நான் (சமையல் பாத்திரத்தின் கீழிருந்து தீ மூட்டிக் கொண்டிருந்தபோது நபி(ஸல்) அவர்கள் என்னைக் கடந்து சென்றார்கள். அப்போது, ‘(கஅபே!) உங்கள் தலையிலுள்ள பேன்கள் உங்களுக்குத் தொந்தரவு தருகின்றனவா?’ என்று கேட்டார்கள். நான், ‘ஆம்’ என்று சொன்னேன். உடனே நபி(ஸல்) அவர்கள் நாவிதரை அழைத்தார்கள். நாவிதர் என்னுடைய தலை முடியை மழித்தார். பிறகு என்னை (இஹ்ராமுடைய நிலையில் தலை மழித்துக் கொண்டதற்காக)ப பரிகாரம் செய்யும்படி நபியவர்கள் கட்டளையிட்டார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 75, எண் 5666

காசிம் இப்னு முஹம்மத் இப்னி அபீ பக்ர் அஸ்ஸித்தீக்(ரஹ்) கூறினார். (ஒருமுறை கடுமையான தலைவலியினால் சிரமப்பட்ட) ஆயிஷா(ரலி), ‘என் தலை(வலி)யே!’ என்று சொல்ல, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , நான் உயிரோடிருக்கும் போதே உனக்கு அது (-இறப்பு-) ஏற்பட்டுவிட்டால் உனக்காக நான் (அல்லாஹ்விடம்) பாவமன்னிப்புக் கோரி உனக்காக (மறுமை நலன் கோரி) பிரார்த்திப்பேன்’ என்று கூறினார்கள். ஆயிஷா(ரலி), ‘அந்தோ! அல்லாஹ்வின் மீதாணையாக! நான் (விரைவில்) இறந்து போய்விடுவதையே நீங்கள் விரும்புகிறீர்கள் என்று எண்ணுகிறேன். நான் இறந்துவிட்டால் அந்த நாளின் இறுதியிலேயே (என்னுடைய இல்லம் சென்று) நீங்கள் உங்களுடைய (மற்ற) துணைவியரில் ஒருவருடன் மணவறை காண்பீர்கள். (என்னை மறந்து விடுவீர்கள்)’ என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் (புன்னகைத்துவிட்டு) ‘இல்லை (உனக்கு ஒன்றும் ஆகாது); நான்தான் (இப்போது) ‘என் தலை(வலி)யே!’ என்று சொல்ல வேண்டியுள்ளது. (உண்மையில் உன் மீதும் உன் குடும்பத்தார் மீதும் அதிக மதிப்பு வைத்துள்ளேன். எனவேதான் உன் தந்தை) அபூ பக்ருக்கும் அவரின் புதல்வருக்கும் ஆளனுப்பி (வரவழைத்து எனக்குப் பின் என் பிரதிநியாகச் செயல்படும்படி) அறிவித்து விட விரும்பினேன். (தாம் விரும்பியவரை கலீஃபா என) யாரும் சொல்லிவிடவோ, (தாமே கலீஃபாவாக ஆகவேண்டும் என) எவரும் ஆசைப்பட்டுவிடவோ கூடாது என்பதற்காகவே (இவ்வாறு விரும்பினேன்). ஆனால், பின்னர் (அபூ பக்ரைத் தவிர வேறொருவரைப் பிரதிநிதியாக்க) அல்லாஹ் அனுமதிக்கமாட்டான்; இறைநம்பிக்கையாளர்களும் (அதை) ஏற்கமாட்டார்கள் என (எனக்கு நானே) சொல்லிக்கொண்டேன். (எனவேதான் அறிவிக்கவில்லை)’ என்று கூறினார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 75, எண் 5667

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) கூறினார். நபி(ஸல்) அவர்கள் காய்ச்சல் கண்டு சிரமப்பட்டுக்கொண்டிருந்தபோது அவர்களிடம் நான் சென்று அவர்களை(ப் பரிவோடு) தொட்டேன். அப்போது நான், ‘தாங்கள் கடும் காய்ச்சலால் சிரமப்படுகிறீர்களே!’ என்றேன். நபி(ஸல்) அவர்கள், ‘ஆம்; உங்களில் இருவர் காய்ச்சலால் அடையும் துன்பத்தைப் போன்று (நான் ஒருவனே அடைகிறேன்)’ என்றார்கள். நான் ‘(இத்துன்பத்தின் காரணமாக) உங்களுக்கு இரண்டு (மடங்கு) நன்மைகள் கிடைக்குமா?’ என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், ‘ஆம். ஒரு முஸ்லிமுக்கு ஏற்படும் நோயாயினும், அது அல்லாத வேறு துன்பமாயினும் (அதற்கு ஈடாக), மரம் தன் இலைகளை உதிர்த்துவிடுவதைப் போன்று அவரின் பாவங்களை அல்லாஹ் உதிர்க்காமல் இருப்பதில்லை’ என்றார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 75, எண் 5668

ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) கூறினார். ‘விடைபெறும்’ ஹஜ்ஜின்போது மிகக் கடுமையாக நோயுற்றிருந்த என்னை உடல் நலம் விசாரிப்பதற்காக இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எங்களிடம் வந்தார்கள். அப்போது நான், ‘(இதோ) தாங்கள் காண்கிறீர்களே இந்த நோய் என்னைப் பீடித்துவிட்டது. நான் ஒரு செல்வந்தன். (நான் இறந்துவிட்டால்) என் ஒரே மகள் தவிர வேறெவரும் என(து சொத்து)க்கு வாரிசாக மாட்டார்கள். எனவே என்னுடைய செல்வத்தில் மூன்றில் இரண்டு பங்கை தானம் செய்து விடட்டுமா?’ என்று கேட்டேன்.

நபி(ஸல்) அவர்கள், ‘வேண்டாம்’ என்று கூறினார்கள். நான் ‘(என்னுடைய செல்வத்தில்) பாதியை (யாவது தானம் செய்யட்டுமா)?’ என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள் (அப்போதும்) வேண்டாம் என்று கூறினார்கள். நான் மூன்றிலொரு பங்கை(யாவது தானம் செய்துவிடட்டுமா)?’ என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், ‘(மூன்றிலொரு பங்கா?) மூன்றிலொரு பங்கே அதிகம் தான். நீங்கள் உங்கள் வாரிசுகளைத் தன்னிறைவுடையவர்களாகவிட்டுச் செல்வது, அவர்களை மக்களிடம் கையேந்தும் ஏழைகளாகவிட்டுச் செல்வதைவிடச் சிறந்ததாகும். நீங்கள் இறைவனின் திருப்தி கருதிச் செய்யும் (தான தர்மம், குடும்பச்) செலவு எதுவாயினும் அதற்காக உங்களுக்கு நற்பலன் அளிக்கப்படாமல் இருப்பதில்லை. அது நீங்கள் உங்கள் மனைவியின் வாயில் ஊட்டும் (ஒரு கவளம்) உணவாயினும் சரியே (அதற்கும் நற்பலன் உண்டு)’ என்று கூறினார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 75, எண் 5669

இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார். இறைத்தூதர்(ஸல்) அவர்களின் வீட்டில் உமர் இப்னு கத்தாப்(ரலி) உட்பட மக்கள் பலரும் இருக்க, நபியவர்களுக்கு இறப்பு நெருங்கிவிட்டது. அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘வாருங்கள். நான் உங்களுக்கு ஒரு மடலை எழுதித் தருகிறேன். அதன் பிறகு நீங்கள் (ஒருபோதும்) வழி தவறமாட்டீர்கள்’ என்று கூறினார்கள். அப்போது உமர்(ரலி), ‘நபி(ஸல்) அவர்களுக்கு (நோயின்) வேதனை மிகைத்துவிட்டது (அவர்களை எழுதித் தருமாறு தொந்தரவு செய்யாதீர்கள்.) உங்களிடம் தான் குர்ஆன் இருக்கிறதே. (நபியவர்களுக்கு அருளப்பெற்ற அந்த) இறைவேதமே நமக்குப் போதும்’ என்று கூறினார்கள்.

உடனே அங்கு வீட்டிலிருந்தோர் கருத்து வேறுபட்டு சச்சரவிட்டுக் கொண்டார்கள். அவர்களில் சிலர், (நபியவர்கள் கேட்ட எழுது பொருளை அவர்களிடம்) கொண்டுவந்து கொடுங்கள். உங்களக்கு ஒரு மடலை அவர்கள் எழுதுவார்கள். அதன் பிறகு நீங்கள் ஒருபோதும் வழிதவறி(ச் சென்றி)ட மாட்டீர்கள்’ என்று கூறினார்கள். வேறு சிலர் உமர்(ரலி) கூறியதையே கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் அருகில் மக்களின் கூச்சலும் சச்சரவு மிகுந்தபோது, ‘(என்னிடமிருந்து) எழுந்திருத்து விடுங்கள்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான உபைதுல்லாஹ் இப்னு அப்தில்லாஹ்(ரஹ்) கூறினார். (இந்த ஹதீஸை அறிவித்துவிட்டு) இப்னு அப்பாஸ்(ரலி), ‘மக்கள் கருத்து வேறுபட்டு கூச்சலிட்டுக் கொண்டதனால் இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கும் அவர்கள் (எழுதித் தர நினைத்த) மடலுக்கும் இடையே குறுக்கீடு ஏற்பட்டது தான் சோதனையிலும் பெரும் சோதனையாகும்’ என்று கூறிவந்தார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 75, எண் 5670

சாயிப் இப்னு யஸீத்(ரலி) கூறினார். (நான் குழந்தையாயிருந்த போது) என்னை என் தாயாரின் சகோதரி இறைத்தூதர்(ஸல) அவர்களிடம் கொண்டு சென்று, ‘இறைத்தூதர் அவர்களே! என் சகோதரி மகன் (பாதங்களில்) நோய் கண்டுள்ளான்’ என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் என் தலையை வருடிக் கொடுத்து என் சுபிட்சத்திற்காகப் பிரார்த்தித்தார்கள். பிறகு, அங்கசுத்தி (உளூ) செய்தார்கள். அவர்கள் அங்சுத்தி செய்து மிச்சம் வைத்த தண்ணீலிருந்து நான்சிறிது பருகிறேன். அவர்களின் முதுகுக்குப் பின்னால் நான் நின்றுகொண்டு அவர்களின் இரண்டு தோள்களுக்கிடையில் இருந்த நபித்துவ முத்திரையைப் பார்த்தேன். அது மணவறைத் திரையில் பொருத்தப்படுகிற பித்தானைப் போன்றிருந்தது.

பாகம் 6, அத்தியாயம் 75, எண் 5671

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். உங்களில் எவரும் தமக்கு நேர்ந்த எந்தத் துன்பத்தின் காரணத்தினாலும் மரணத்தை விரும்பிட வேண்டாம். அவ்வாறு அவர் ஏதேனும் செய்தேயாக வேண்டும் என்றிருந்தால், ‘இறைவா! (நான்) உயிர் வாழ்வது எனக்கு நன்மையாக இருப்பின், என்னை உயிர் வாழச் செய்வாயாக! நான் இறந்து போய்விடுவதே எனக்கு நன்மையாக இருப்பின் எனக்கு இறப்பைத் தருவாயாக!’ என்று கேட்கட்டும்..என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

பாகம் 6, அத்தியாயம் 75, எண் 5672

கைஸ் இப்னு அபீ ஹாஸிம்(ரஹ்) கூறினார். நாங்கள் கப்பாப் இப்னு அரத்(ரலி) அவர்களை உடல் நலம் விசாரிக்கச் சென்றோம். (கடும் வயிற்று வலிக்கு சிகிச்சை பெறுவதற்காகத் தம் வயிற்றில்) அவர்கள் ஏழு முறை சூடு போட்டிருந்தார்கள். அப்போது அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள: முன்சென்றுவிட்ட எம் தோழர்கள் தம(து நன்மைகளு)க்கு இவ்வுலகம் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தி விடாத நலையில் (சிரமத்துடன் வாழ்ந்து) மறைந்துவிட்டார்கள். (ஆனால், அவர்களுக்குப் பின்) நாங்கள் (வீடு கட்ட) மண்ணுக்குச் செலவழிப்பதைப் தவிர வேறு தேவையே இல்லாத அளவுக்கு(ச் செல்வத்தை)ப் பெற்றுள்ளோம். நபி(ஸல்) அவர்கள் மரணத்தை வேண்டிப் பிரார்த்தனை செய்ய வேண்டாமென எங்களுக்குத் தடை விதித்திருக்காவிட்டால் அதை வேண்டி நான் பிரார்த்தனை புரிந்திருப்பேன். (அந்த அளவுக்கு இப்போது நான் நோயினால் சிரமப்படுகிறேன்.) மற்றொரு முறை நாங்கள் கப்பாப்(ரலி) அவர்களிடம் சென்றிருந்தோம். அப்போது தம் (வீட்டுச்) சுவரைக் கட்டிக்கொண்டிருந்த அவர்கள் ‘ஒரு முஸ்லிம், தாம் செய்கிற எல்லாச் செலவினங்களுக்காகவும் பிரதிபலன் அளிக்கப்படுவார்; (தேவைக்கு அதிகமாக வீடுகட்ட) இந்த மண்ணில் அவர் செய்கிற செலவைத் தவிர’ என்று கூறினார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 75, எண் 5673

அபூ ஹுரைரா(ரலி) அவாக்ள் கூறினார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘எவரையும் அவரின் நற்செயல் சொர்க்கத்தில் ஒருபோதும் நுழைவிக்காது(; மாறாக, அல்லாஹ்வின் தனிபெரும் கருணையாலேயே எவரும் சொர்க்க புகமுடியும்)’ என்று கூறினார்கள். மக்கள், ‘தங்களையுமா (தங்களின் நற்செயல் சொர்க்கத்தில் நுழைவிப்பதில்லை), இறைத்தூதர் அவர்களே?’ என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘(ஆம்) என்னையும் தான்; அல்லாஹ் (தன்னுடைய) கருணையாலும் அருளாளலும் என்னை அரவணைத்துக் கொண்டால் தவிர’ என்று கூறிவிட்டு, ‘எனவே, நீங்கள் நேர்மையோடு (நடு நிலையாகச்) செயல்பாடுங்கள். நிதானமாக நடந்துகொள்ளுங்கள். உங்களில் எவரும் மரணத்தை விரும்பிட வேண்டாம். ஒன்று அவர் நல்லவராக இருப்பார்; அவர்(உயிர் வாழ்வதன் மூலம்) நன்மையை அதிகமாக்கிக் கொள்ளலாம். அல்லது அவர் தீயவராக இருப்பார்; அவர் (உயிர் வாழ்வதால்) மனம் திருந்தக்கூடும்’ என்று கூறினார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 75, எண் 5674

ஆயிஷா(ரலி) கூறினார். நபி(ஸல்) அவர்கள் (இறப்பதற்கு முன்பு) என் மீது சாய்ந்தபடி, ‘இறைவா! எனக்கு மன்னிப்பளிப்பாயாக. எனக்குக் கருணை புரிவாயாக. மிக்க மேலான தோழர்களுடன் (சொர்க்கத்தில்) என்னைச் சேர்த்தருள்வாயாக’ என்று பிரார்த்திப்பதை செவியுற்றேன்.

பாகம் 6, அத்தியாயம் 75, எண் 5675

ஆயிஷா(ரலி) கூறினார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ‘ஒரு நோயாளியிடம் (உடல் நலம் விசாரிக்கச்) சென்றால்’ அல்லது ‘நோயாளி ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டால்’ அவர்கள், ‘அத்ஹிபில் பாஸ் ரப்பந் நாஸ் இஷ்ஃபி, வ அன்த்தஷ் ஷாஃபி, லா ஷிஃபாஅ இல்லா ஷிஃபாஉக்க, ஷிஃபாஅன் லா யுஃகாதிரு சகமன்’ என்று பிரார்த்திப்பார்கள். (பொருள்: மனிதர்களைப் படைத்துப் பராமரிப்பவனே! நோயைப் போக்கி அறவே நோயில்லாதவாறு குணமளிப்பாயாக. நீயே குணமளிப்பவன். உன் நிவாரணத்தை தவிர வேறு நிவாரணம் இல்லை.)

மற்றோர் அறிவிப்பில் ‘நோயாளி நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டால்’ என்றும், இன்னோர் அறிவிப்பில், ‘நபி(ஸல்) அவர்கள் ஒரு நோயாளியிடம் சென்றால்’ என்றும் இடம்பெற்றுள்ளது.

பாகம் 6, அத்தியாயம் 75, எண் 5676

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) கூறினார். நபி(ஸல்) அவர்கள் நான் நோய்வாய்ப்பட்டிருந்தபோது என்னிடம் வந்து அங்கசுத்தி (உளூ) செய்தார்கள். பின்னர் ‘(அங்கசுத்தி செய்த நீரை) என் மீது ஊற்றினார்கள்’ அல்லது ‘இவர் மேல் (இந்த நீரை) ஊற்றுங்கள் என்று கூறினார்கள்’ (அவ்வாறு ஊற்றிய) உடன் நான் மயக்கத்திலிருந்து தெளிந்தேன். அப்போது நான், ‘இறைத்தூதர் அவர்களே! நேரடி ஆண் வாரிசுகள் அல்லாதவர்கள் தாம் எனக்கு வாரிசாகிறார்கள். (இந்நிலையில்) சொத்துப் பங்கீடு எவ்வாறு அமையும்?’ என்று கேட்டேன். அப்போதுதான் பாகப் பிரிவினைச் சட்டம் குறித்த வசனம் அருளப்பெற்றது.

பாகம் 6, அத்தியாயம் 75, எண் 5677

ஆயிஷா(ரலி) கூறினார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (மக்காவைத் துறந்து மதீனாவுக்கு) வந்தபோது அபூ பக்ர்(ரலி) அவர்களுக்கும் பிலால்(ரலி) அவர்களுக்கும் காய்ச்சல் கண்டிருந்தது. அவ்விருவரிடமும் நான் சென்று, ‘என் தந்தையே! எப்படியிருக்கிறீர்கள்? பிலால் அவர்களே! எப்படியிருக்கிறீர்கள்?’ என்று (நலம்) விசாரித்தேன். அபூ பக்ர்(ரலி) தமக்குக் காய்ச்சல் காணும்போது (பின்வரும் கவிதையைக்) கூறுவார்கள்:

காலை
வாழ்த்துக் கூறப்பெற்ற
நிலையில்
ஒவ்வொரு மனிதனும்
தம் குடும்பத்தாரோடு
காலைப் பொழுதை அடைகிறான்..
(ஆனால்,)
மரணம் – அவன் செருப்பு வாரைவிட
மிக அருகில் இருக்கிறது (என்பது – அவனுக்குத் தெரிவதில்லை).

பிலால்(ரலி) காய்ச்சல் விட்டதும் வேதனைக்குரல் எழுப்பி,
‘இத்கிர்’ (நறுமணப்) புல்லும்
‘ஜலீல்’ கூரைப் புல்லும்
என்னைச் சூழ்ந்திருக்க..
(மக்காவின்) பள்ளத்தாக்கில்
ஓர் இராப் பொழுதையேனும்
நான் கழிப்பேனா?…
‘மிஜன்னா’ எனும்
(மக்காவின் இனிப்புச் சுனை) நீரை
ஒரு நாள் ஒரு பொழுதாவது
நான் பருகுவேனா…?
(மக்கா நகரின்)
ஷாமா, தஃபீல் மலைகள்
(இனி எப்போதேனும்)
எனக்குத் தென்படுமா…?
என்று (கவிதை) கூறுவார்கள்.

உடனே, நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து (அவர்கள் இருவருடைய நிலையைத்) தெரிவித்தேன். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘இறைவா! நாங்கள் மக்காவை நேசித்தது போல், அல்லது அதைவிட அதிகமாக மதீனாவை எங்கள் நேசத்திற்குரியதாக ஆக்குவாயாக! மேலும் இவ்வூரை ஆரோக்கியமானதாகவும் ஆக்குவாயாக! இதன் (அளவைகளான) ‘ஸாஉ’, ‘முத்(து) ஆகியவற்றில் (-எங்கள் உணவில்) எங்களுக்கு நீ சுபிட்சத்தை வழங்குவாயாக! இங்குள்ள காய்ச்சலை இடம் பெயரச் செய்து அதை ‘ஜுஹ்ஃபா’ எனுமிடத்தில் (குடி) அமர்த்தி விடுவாயாக’ என்று பிரார்த்தனை செய்தார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *