Featured Posts

89. (குற்றங்கள் புரியுமாறு) நிர்ப்பந்தித்தல்

பாகம் 7, அத்தியாயம் 89, எண் 6940

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் (ஒரு முறை) தொழுகையில், ‘இறைவா! அய்யாஷ் இப்னு அபீ ரபீஆ, ஸலமா இப்னு ஹிஷாம், வலீத் இப்னு வலீத் ஆகியோரைக் காப்பாற்றுவாயாக! இறைவா! (மக்காவிலுள்ள) ஒடுக்கப்பட்ட இறை நம்பிக்கையாளர்களையும் நீ காப்பாற்றுவாயாக! இறைவா! (கடும் பகை கொண்ட) முளர் குலத்தார் மீது உன்னுடைய பிடியை இறுக்குவாயாக! யூசுஃப் (அலை) அவர்கள் காலத்தில் நீ அனுப்பிய (பஞ்சமான) ஆண்டுகளைப் போன்று இவர்களுக்கும் (பஞ்சம் நிறைந்த) ஆண்டுகளை அனுப்புவாயாக!’ என்று பிரார்த்தித்தார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 89, எண் 6941

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். எவரிடம் மூன்று தன்மைகள் இருக்கின்றனவோ அவர் ஈமான் எனும் இறைநம்பிக்கையின் சுவையை அடைவார். (அவை:) 1. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் அவருக்கு மற்ற எல்லாவற்றையும் விட அதிக நேசத்திற்குரியோராவது. 2. ஒருவரை நேசிப்பதானால் அல்லாஹ்வுக்காகவே நேசிப்பது. 3. தாம் நெருப்பில் வீசப்படுவதை வெறுப்பதைப் போன்று இறைமறுப்பிற்குத் திரும்புவதை அவர் வெறுப்பது என அனஸ்(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 89, எண் 6942

கைஸ் இப்னு அபீ ஹாஸிம்(ரஹ்) அவர்கள் அறிவித்தார். (கூஃபா பள்ளிவாசலொன்றில் கூடியிருந்த மக்களிடம்) ஸயீத் இப்னு ஸைத்(ரலி) கூறினார்: நான் இஸ்லாத்தை ஏற்றதற்காக உமர் அவர்கள் என்னைக் கட்டி வைத்(து தண்டித்)த (அனுபவத்)தை நான் கண்டுள்ளேன். உஸ்மான்(ரலி) அவர்களுக்கு நீங்கள் செய்த (துரோகத்)தைக் கண்டு (மனம் தாளாமல்) ‘உஹுத்’ மலை தகர்ந்து போனால் அதுவும் சரியானதே!

பாகம் 7, அத்தியாயம் 89, எண் 6943

கப்பாப் இப்னு அல்அரத்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கஅபாவின் நிழலில் தம் சால்வை ஒன்றைத் தலையணையாக வைத்துச் சாய்த்துக் கொண்டிருந்தபோது அவர்களிடம், (இஸ்லாத்தின் எதிரிகள் எங்களுக்கிழைக்கும் கொடுமைகளை) நாங்கள் முறையிட்டபடி ‘எங்களுக்காக இறைவனிடம் நீங்கள் உதவி கோரமாட்டீர்களா? எங்களுக்காகப் பிரார்த்திக்கமாட்டீர்களா?’ என்று கேட்டோம். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘உங்களுக்கு முன்னிருந்தவர்களிடையே (ஓரிறைக் கொள்கையை ஏற்று இறைத்தூதரை நம்பிய) ஒருவர் பிடிக்கப்பட்டு, அவருக்காக மண்ணில் குழி தோண்டப்பட்டு, அவர் அதில் நிறுத்தப்படுவார். பின்னர் ரம்பம் கொண்டுவரப்பட்டு அவரின் தலையில் வைக்கப்பட்டு, அது இரண்டு பாதியாகப் பிளக்கப்படும. (பழுக்கக் காய்ச்சிய) இரும்புச் சீப்புகளால் அவர் (மேனி) கோதப்பட, அது அவரின் தசையையும் எலும்பையும் கடந்து சென்றுவிடும். ஆயினும் அ(ந்தக் கொடுமையான)து, அவரை (அவர் ஏற்றுக் கொண்ட) அவரின் மார்க்கத்திலிருந்து பிறழச் செய்யவில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! இந்த (இஸ்லாத்தின்) விவகாரம் முழுமைப்படுத்தப்படுவது உறுதி. எந்த அளவிற்கென்றால் வானத்தில் பயணம் செய்யும் ஒருவர் (யமனிலுள்ள) ‘ஸன்ஆவிலிருந்து ‘ஹளரமவ்த்’ வரை பயணம் செல்வார். (வழியில்) அல்லாஹ்வையும் தவிர வேறெதற்கும் (வேறெவருக்கும்) அவர் அஞ்சமாட்டார். ஆயினும், (தோழர்களே!), நீங்கள் தாம் (கொடுமை தாளாமல் பொறுமை குன்றி) அவசரப்படுகின்றீர்கள்’ என்றார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 89, எண் 6944

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நாங்கள் பள்ளிவாசலில் இருந்து கொண்டிருந்தபோது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து, ‘யூதர்களை நோக்கிச் செல்லுங்கள்’ என்று கூறினார்கள். உடனே நாங்கள் அவர்களுடன் புறப்பட்டுச் சென்று ‘பைத்துல் மித்ராஸ்’ எனுமிடத்தை அடைந்தோம். அங்கு நபி(ஸல்) அவர்கள் நின்றுகொண்டு, ‘யூதர்களே! இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். (இவ்வுலகிலும் மறு உலகிலும்) நீங்கள் சாந்தி அடைவீர்கள்’ என்று அவர்களுக்கு அழைப்பு விடுத்தார்கள். அதைக் கேட்ட யூதர்கள், ‘அபுல் காசிமே! நீங்கள் சொல்ல வேண்டியதைச் சொல்லி விட்டீர்கள்’ என்று கூறினார்கள். ‘இ(ந்த ஒப்புதல் வாக்குமூலத்)தைத்தான் நான் எதிர்பார்க்கிறேன்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறிவிட்டுப் பிறகு மீண்டும் (இஸ்லாத்தை ஏற்க அழைப்பு விடுத்து) அவ்வாறே கூறினார்கள். அப்போதும் யூதர்கள், ‘அபுல் காசிமே! நீங்கள் சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டீர்கள்’ என்று கூறினர். பிறகு மூன்றாம் முறையும் (அவ்வாறே) நபி(ஸல்) அவர்கள் கூறிவிட்டு, ‘பூமி அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் உரியது என்பதை அறிந்து கொள்ளுங்கள். நான் உங்களை (இந்த ஊரிலிருந்து) நாடு கடத்திட விரும்புகிறேன். உங்களில் யார் தம் (அசையாச்) சொத்துக்கு பதிலாக ஏதேனும் (விலையைப்) பெற்றால் அச்சொத்தை அவர் விற்று விடட்டும். இல்லையேல், பூமியானது அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் உரியது என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்’ என்றார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 89, எண் 6945

கன்ஸா பின்த் கிதாம் அல் அன்சாரிய்யா(ரலி) அறிவித்தார். கன்னி கழிந்த பெண்ணாயிருந்த என்னை என் தந்தை (ஒருவருக்கு) மணமுடித்து வைத்தார்கள். எனக்கு அதில் விருப்பமில்லை. எனவே, நான் நபி(ஸல்) அவர்களிடம் சென்றேன். (என் தந்தை முடித்துவைத்த) அத்திருமணத்தை நபி(ஸல்) அவர்கள் ரத்துச் செய்தார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 89, எண் 6946

ஆயிஷா(ரலி) அறிவித்தார். நான், ‘இறைத்தூதர் அவர்களே! பெண்களிடம் அவர்களின் திருமணம் தொடர்பாக யோசனை கேட்கப்படவேண்டுமா?’ என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், ‘ஆம்’ என்றார்கள். நான், ‘அவ்வாறாயின் கன்னிப் பெண்ணிடம் யோசனை கேட்கப்படும்போது அவள் வெட்கப்பட்டுக்கொண்டு மெளனமாக இருப்பாளே?’ என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், ‘அவளுடைய மெளனமே சம்மதமாகும்’ என்றார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 89, எண் 6947

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். அன்சாரிகளில் ஒருவர் (தமக்குச் சொந்தமான) ஓர் அடிமையை தம் ஆயுட்காலத்திற்குப் பிறகு விடுதலை செய்து விடுவதாக அறிவித்தார். அப்போது அவரிடம் அந்த அடிமையைத் தவிர வேறெந்தச் செல்வமும் இருக்கவில்லை. இந்த விஷயம் இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு எட்டியது. அவர்கள், ‘இந்த அடிமையை என்னிடமிருந்து விலைக்கு வாங்குபவர் யார்?’ என்று கேட்டார்கள். அப்போது அவனை நுஐம் இப்னு நஹ்ஹாம்(ரலி) அவர்கள் எண்ணூறு வெள்ளிக் காசுகள் (திர்ஹம்) கொடுத்து விலைக்கு வாங்கினார்கள். அந்த  அடிமை (விற்கப்பட்ட) முதல் ஆண்டிலேயே இறந்து விட்டான்.

பாகம் 7, அத்தியாயம் 89, எண் 6948

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். (அறியாமைக் காலத்தில்) ஒருவர் இறந்துவிட்டால் அவரின் வாரிசுகளே அவரின் மனைவியின் மீது அதிக உரிமை உடையவர்களே இருந்துவந்தனர். அவர்களில் சிலர் விரும்பினால் அவளைத் தாமே மணந்துகொள்ளவும் செய்வார்கள்; நினைத்தால் (வேறெவருக்காது) அவளை மணமுடித்துக் கொடுத்துவிடுவார்கள். நினைத்தால் மணமுடித்துக் கொடுக்கா(மல் அப்படியே விட்டு விடுவார்கள்; வாழ அனுமதிக்க)மாட்டார்கள். ஆக, அவளுடைய வீட்டாரைவிட (இறந்துவிட்ட கணவனின் வாரிசுகளான) அவர்கள் தாம் அவளின் மீது அதிக உரிமையுடையவர்களாக இருந்தார்கள்.

அப்போதுதான் இது தொடர்பாக ‘இறை நம்பிக்கையாளர்களே! (விதவைப்) பெண்களை நீங்கள் பலவந்தமாக அடைவது அனுமதிக்கப்பட்டதன்று’ எனும் (திருக்குர்ஆன் 04:19 வது) இறைவசனம் அருளப்பெற்றது.

பாகம் 7, அத்தியாயம் 89, எண் 6949

ஸஃபிய்யா பின்த் அபீ உபைத்(ரஹ்) அவர்கள் அறிவித்தார். (என் கணவருடைய தந்தை கலீஃபா உமர்(ரலி) அவர்களின் காலத்தில்) அரசாங்க அடிமைகளில் ஒருவன் (ஆட்சியாளர் அதிகாரத்திற்குட்பட்ட) குமுஸ் நிதியிலுள்ள ஓர் அடிமைப் பெண்ணை பலவந்தப்படுத்தி கற்பழித்துவிட்டான். எனவே, உமர்(ரலி) அவர்கள் அவனுக்கு (ஐம்பது) கசையடி கொடுத்து (ஆறு மாத காலத்திற்கு) அவனை நாடு கடத்தவும் செய்தார்கள். ஆனால், அந்த அடிமையினால் பலவந்தப்படுத்தப்பட்டாள் என்பதால் அந்த அடிமைப் பெண்ணுக்கு அவர்கள் கசையடி தண்டனை வழங்கவில்லை.

அடிமையல்லாத ஒருவன் கற்பழித்து விட்ட கன்னியான அடிமைப் பெண் குறித்து ஸுஹ்ரீ(ரஹ்) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: கன்னி கழியாதிருந்த அந்த அடிமைப் பெண்ணுக்குரிய விலையை நீதிபதி நிர்ணயி(த்து கன்னி கழிந்ததால் ஏற்பட்ட இழப்பீட்டைக் கற்பழித்தவனிடமிருந்து வசூலி)ப்பார். மேலும், கற்பழித்த) அவனுக்குக் கசையடி தண்டனை வழங்கப்படும். ஆனால், கன்னி கழிந்த அடிமைப் பெண்ணுக்கு இழப்பீடு ஏதும் வழங்க வேண்டுமன்று அறிஞர்களின் தீர்ப்புகளில் காணப்படவில்லை. ஆயினும், அவளைக் கற்பழித்தவனுக்குத் தண்டனை உண்டு.

பாகம் 7, அத்தியாயம் 89, எண் 6950

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (இறைத்தூதர்) இப்ராஹீம்(அலை) அவர்கள் தம் துணைவியாரான சாரா அவர்களுடன் தம் தாயகத்தைத் துறந்து சென்றார்கள். ‘மன்னன் ஒருவன்’ அல்லது கொடுங்கோலன் ஒருவன்’ இருந்த ஓர் ஊருக்குள் அவர்கள் இருவரும் நுழைந்தார்கள். (இச்செய்தியறிந்த) அவன் இப்ராஹீம்(அலை) அவர்களிடம் ஆளனுப்பி ‘(உம்முடனிருக்கும்) அப்பெண்ணை என்னிடம் அனுப்பிவை’ என்று கூறினான். (இப்ராஹீம்(அலை) அவர்களும் (வேறு வழியின்றி) அவ்வாறே சாரா அவர்களை அனுப்பிவைத்தார்கள். அவன் (தவறான எண்ணத்துடன்) சாரா அவர்களை நோக்கி எழுந்து வந்தான். சாரா அவர்கள் எழுந்து அங்கசுத்தி (உளூ) செய்து, தொழுதுவிட்டு, ‘அல்லாஹ்வே நான் உன்னையும் உன்னுடைய தூதரையும் நம்பிக்கை கொண்டிரு(ப்பது உண்மையாக இரு)ந்தால் இந்த நிராகரிப்பாளன் என்னை ஆட்கொள்ள விடாதே’ என்று பிரார்த்தித்தார்கள். உடனே அவள் கீழே விழுந்து (வலிப்பினால்) கால்களால் உதைத்துக் கொண்டான் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 89, எண் 6951

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரன் ஆவான். அவனுக்கு அநீதியிழைக்கவும் மாட்டான்: அவனை (பிறரின் அநீதிக்கு ஆளாகும்படி) கைவிட்டுவிடவுமாட்டான். தன் சகோதரனின் தேவையை நிறைவு செய்வதில் ஈடுபடுகிறவரின் தேவையை நிறைவு செய்வதில் அல்லாஹ்வும் ஈடுபடுகிறான் என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 89, எண் 6952

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். (ஒரு முறை) இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘உன் சகோதரன் அக்கிரமக்காரனாக இருக்கும் நிலையிலும் அக்கிரமத்துக்குள்ளானவனாக இருக்கும் நிலையிலும் அவனுக்கு நீ உதவி செய்’ என்றார்கள். அப்போது ஒருவர், இறைத்தூதர் அவர்களே! அக்கிரமத்திற்கு உள்ளானவனுக்கு நான் உதவுவேன். (அதுதான்.) அக்கிரமக்காரனுக்கு எப்படி நான் உதவுவேன்? கூறுங்கள்!’ என்றார். நபி(ஸல்) அவர்கள், ‘அவனை அக்கிரமம் செய்ய விடாமல் நீ தடுப்பாயாக! இதுவே நீ அக்கிரமக்காரனுக்குச் செய்யும் உதவியாகும்’ என்றார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *