Featured Posts

[பாகம்-14] முஸ்லிமின் வழிமுறை.

கணவன் மீது மனைவிக்குரிய கடமைகள்.

மனைவி விஷயத்தில் பின்வரும் ஒழுக்கங்களை மேற்கொள்வது கடமையாகும்.

1. அவளுடன் நல்லமுறையில் வாழ்க்கை நடத்தவேண்டும். “அவர்களோடு நல்லமுறையில் வாழ்க்கை நடத்துங்கள்” என்று அல்லாஹ் கூறுகிறான். (அல்குர்ஆன்: 4:19)

அவன் உண்ணும்போது அவளுக்கும் உண்ணக் கொடுக்க வேண்டும். அவன் ஆடை அணியும்போது அவளுக்கும் அணியக் கொடுக்க வேண்டும். தனக்கு அவள் மாறு செய்து விடுவாளோ என்று அஞ்சினால் அவளை எவ்வாறு பக்குவப்படுத்த வேண்டுமென்று அல்லாஹ் கட்டளையிட்டுள்ளானோ அவ்வாறு அவளை பக்குவப்படுத்த வேண்டும்.

முதலில் அவளைத் திட்டாமல், ஏசாமல், கேவலப்படுத்தாமல் அவளுக்கு அறிவுரை கூறவேண்டும். அதற்கவள் கட்டுப்படவில்லையென்றால் படுக்கையிலிருந்து அவளை ஒதுக்கி வைக்க வேண்டும். அதற்கும் கட்டுப்படவில்லை என்றால் காயம் ஏற்படாதவாறு அவளை அடிக்க வேண்டும். முகத்தில் அடிக்கக்கூடாது. அடிக்கும்போது இரத்தம் வந்து விடக் கூடாது. அவையங்களுக்குக் கேடு வந்து அவை செயல்பாடுகளை இழந்துவிடக் கூடாது.
அல்லாஹ் கூறுகிறான்: எந்தப் பெண்கள் குறித்து அவர்கள் (தம் கணவருக்கு) மாறு செய்வார்கள் என்று நீங்கள் அஞ்சுகின்றீர்களோ அந்தப் பெண்களுக்கு நல்லறிவு புகட்டுங்கள்,  படுக்கைகளிலிருந்து அவர்களை ஒதுக்கி வையுங்கள், மேலும் அவர்களை அடியுங்கள், ஆனால் அவர்கள் உங்களுக்குக் கீழ்படிந்து விட்டால் பிறகு அவர்களுக்கு எதிராக வேறு வழியைத் தேடாதீர்கள். (அல்குர்ஆன்: 4:34)

எங்கள் மீது எங்கள் மனைவிக்குரிய கடமை என்ன? என்று நான் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டபோது, நீ உண்ணும்போது அவளுக்கும் உண்ணக் கொடு. நீ ஆடை அணியும்போது அவளுக்கும் அணியக்கொடு. அவளை முகத்தில் அடிக்காதே. அவளை கேவலமாகப் பேசாதே. அவளை வெறுப்பதாக இருந்தால் வீட்டிலேயே வெறுத்துக் கொள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: முஆவியா பின் ஹைதா (ரழி), நூல்; அபூதாவூத்

அறிந்து கொள்ளுங்கள்! உங்கள் மீது உங்கள் மனைவியருக்குரிய கடமைகள் அவர்களுக்கு நீங்கள் அழகிய முறையில் உணவளிப்பதும் உடையளிப்பதுமே! என்பது நபிமொழி. அறிவிப்பவர்: அம்ர் பின் அஹ்வஸ் (ரழி),- திர்மிதி

ஒரு முஃமினான ஆண் முஃமினான தன் மனைவியை வெறுத்துவிட வேண்டாம். அவளது ஒரு குணத்தை அவன் வெறுத்தால் அவன்  விரும்பக்கூடிய வேறு குணத்தை அவளிடம் அவன் காணலாம் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி), நூல்: முஸ்லிம்

2. அவளுக்கு அத்தியாவசியமான மார்க்க விஷயங்களை அவன் கற்றுக் கொடுக்க வேண்டும்- அவற்றை அவள் தெரியாமலிருந்தால். அவற்றைக் கற்றுக் கொள்வதற்காக நற்போதனை நடக்கின்ற கூட்டங்களில் கலந்து கொள்வதற்கு அவளை அனுமதிக்க வேண்டும். ஏனெனில் உண்பதற்கும் பருகுவதற்குமுரிய தேவையை விட மார்க்கத்தை அறிந்து கொள்வதற்கான தேவை குறைந்ததல்லவே!

அல்லாஹ் கூறுகிறான்: இறைநம்பிக்கை கொண்டவர்களே! மனிதர்களும் கற்களும் எரிபொருளாகக்கூடிய அந்த நரக நெருப்பிலிருந்து உங்களையும் உங்கள் மனைவி, மக்களையும் காத்துக் கொள்ளுங்கள். (அல்குர்ஆன்: 66:6)

3. இஸ்லாமிய நற்போதனைகளை அவள் நடைமுறைப்படுத்த வலியுறுத்த வேண்டும். அழகையும் அலங்காரத்தையும் காட்டிக்கொண்டு செல்வது, அந்நிய ஆண்களுடன் கலந்திருப்பது போன்றவற்றை விட்டும் அவளை அவன் தடுக்க வேண்டும். காரணம் ஆண்தான் பொறுப்பாளன்; சட்டப்படி அவளைப் பாதுகாக்கக் கடமைப்பட்டவன்.

“ஆண்களே பெண்களை நிர்வகிப்போர் ஆவர்.” (அல்குர்ஆன்: 4:34)…ஒரு ஆண் தனது குடும்பத்தார்களுக்குப் பொறுப்பாவான். அவன் தனது பொறுப்பு பற்றி விசாரிக்கப்படுவான்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்; இப்னு உமர்(ரழி), நூல்: புகாரி, முஸ்லிம்.

நூல்: முஸ்லிமின் வழிமுறை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *