Featured Posts

ரியாளுஸ் ஸாலிஹீன் (1-9)

9. இருவரும் குற்றவாளிகளே!

அபூபக்ரா நுஃபையிப்னு ஹாரிஸ் (ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘ நபி(ஸல்)அவர்கள் அருளினார்கள்: இரண்டு முஸ்லிம்கள் தங்களின் வாட்களைக் கொண்டு மோதிக் கொண்டார்கள் எனில் கொல்பவனும் கொல்லப்படுபவனும் நரகம்தான் செல்வர். நான் கேட்டேன்: அல்லாஹ்வின் தூதரே! இவனோ கொலை செய்தவன். கொலை செய்யப்பட்டவனின் நிலை என்ன? (அவன் ஏன் நரகம் செல்லவேண்டும்?) அதற்கு நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்: நிச்சயமாக அவன் தன் சகோதரனைக் கொலை செய்யப் பெரிதும் ஆசைப்பட்டவனாக இருந்தான்” (நூல்: புகாரி, முஸ்லிம்)

தெளிவுரை

இரண்டு முஸ்லிம்கள் தங்களின் வாட்களைக்கொண்டு மோதிக் கொண்டால்… என்பதன் கருத்து இருவரும் பரஸ்பரம் கொலை செய்யும் எண்ணத்தில் வாளை உருவித் தாக்குதல் தொடுத்தனர் என்பதாகும். வாட்கள் என்று சொல்லப்பட்டிருப்பது ஓர் எடுத்துக்காட்டிற்காகவே! கத்தி, துப்பாக்கி, கைக்குண்டு போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்துவதையும் இது உள்ளடக்கும்.

கொலைக்குப் பயன்படுத்தப்படும் ஆயுதத்தைக் கையிலேந்தி முஸ்லிம்கள் இருவர் மோதிக்கொண்டு ஒருவர் மற்றவரைக் கொலை செய்தால், கொன்றவன் -கொல்லப்பட்டவன் இருவருமே நாளை மறுவுலகில் நரக வேதனை எனும் கொடிய தண்டனைக்கு ஆளாக நேரிடும்!

ஆனால் இங்கு ஒரு கேள்வி எழுகிறது: அதாவது கொலை செய்தவனுக்கு தண்டனை கொடுக்க வேண்டியதுதான். இதில் நியாயம் உண்டு. ஏனெனில் அவன் வேண்டுமென்றே ஓர் இறை நம்பிக்கையாளனைக் கொலை செய்துள்ளான். அதற்கான தண்டனையிலிருந்து அவன் தப்பிட முடியாதுதான்! குர்ஆனில் அல்லாஹ் கூறுகிறான்:

‘ஓர் இறைநம்பிக்கையாளரை ஒருவன் வேணடுமென்றே கொலை செய்து விட்டால் அவனுக்குரிய தண்டனை நரகமாகும். அதில் அவன் நிரந்தரமாக வீழ்ந்து கிடப்பான். மேலும் அல்லாஹ் அவன் மீது கோபம் கொண்டான். சபித்தான். மேலும் பெரியதொரு தண்டனையையும் அவனுக்காகத் தயார் செய்து வைத்துள்ளான்.” (4 : 93)

ஆனால் கொலை செய்யப்பட்டவனுக்கு ஏன் தண்டனை, மறுமையில்? இதுபற்றி நபி(ஸல்) அவர்களிடம் வினா எழுப்பினார்கள், அபூ பக்ரா (ரலி)- ‘இவனோ கொலை செய்தவன். கொலை செய்யப்பட்டவனும் ஏன் நரகம் செல்ல வேண்டும்?”
கொலை செய்யப்பட்டவன் நரகத்தில் வீசியெறியப்படுவான் என்பது தெளிவான – நியாயமான தீர்ப்பாகும். தெளிவான விஷயத்தை முதலில் ஏற்றுக் கொண்டு, அதன் பிறகு சந்தேகத்திற்கு விளக்கம் கேட்டுள்ளார், அபூ பக்ரா (ரலி) அவர்கள்!

இவ்விதத்தில் நம்மில் பெரும்பாலோரின் சிந்தனைப் போக்கு எப்படி இருக்குமெனில், ஐயோ! இவன் கொல்லப்பட்டு விட்டான். இவனுக்கு என்ன தண்டனை வேண்டிக் கிடக்கிறது? என்றுதான் சிந்திப்பார்கள். பலரும் – கொலை செய்தவன் மீதுதான் கோபம் கொள்வர். அவனைத் தண்டித்தேயாக வேண்டுமென்பார்கள். கொலை செய்யப்பட்டவன் மீது பெரிதும் இரக்கம் காட்டுவர்கள். ஐயோ பாவம் அவன் எனப் பரிந்தே பேசுவார்கள்.

ஆனால் நபி(ஸல்) அவர்கள் நியாயமான பதிலை அளித்தார்கள். அது அறிவுப்பூர்வமான தீர்ப்பும்கூட! அதன் காரணத்தையும் சொன்னார்கள்: ‘நிச்சயமாக அவன் தன் சகோதரனைக் கொல்வதற்குப் பெரிதும் ஆசை கொண்டிருந்தான்” -அதாவது தன்னுடைய சகோதரனைத் தீர்த்துக் கட்டிவிட வேண்டுமென துடித்துக் கொண்டிருந்தான். அதனால்தான் கொடுவாளைக் கையிலேந்தினான்! ஆனால் நடந்தது வேறு. இவனுடைய சகோதரன் முந்திக் கொண்டான். அவ்வளவுதான்!

எண்ணத்தின் அடிப்படையிலேயே செயல்கள் அனைத்தும் எடைபோடப்படும் என்பதற்கு இந்நபிமொழியில் – இந்தவாக்கியமே ஆதாரம். இதேவகையில்தான்-

‘எவர் தன் உயிரைக் காப்பதற்கான போரில் கொல்லப்பட்டாரோ அவர் ஷஹீத் – வீரமரணம் அடைந்தவர். எவர் தன் குடும்பத்தாரைக் காப்பதற்கான போரில் கொல்லப்பட்டாரோ அவரும் வீரமரணம் அடைந்தவர். எவர் தன் சொத்துக்களைப் பாதுகாப்பதற்கான போரில் கொல்லப்பட்டாரோ அவரும் வீர மரணம் அடைந்தவர்” எனும் நபிமொழியிலும் –

‘உனது சொத்துக்களை அபகரிப்பதற்காக வந்தவனை எதிர்த்து நீ போராடும்பொழுது அவன் உன்னைக் கொன்றுவிட்டால் நீ ஷஹீத் – வீரமரணம் அடைந்தவனாவயாய் ” என்கிற நபிமொழியிலும்,

-கொலையுண்டவனுக்கு உயர் அந்தஸ்து வழங்கப்பட்டிருப்பது நிய்யத்- எண்ணத் தூய்மையின் அடிப்படையிலேயே என்பதை எளிதில் புரிந்து கொள்ளலாம்.

ஏனெனில், உயிர், உடைமை, மானம் ஆகியவற்றிற்கு ஆபத்து நேர இருந்த சூழ்நிலையில்தான் இவர்கள் ஆயுதமேந்தினார்கள். தற்காப்புக்காக! இது ஆகுமான நடவடிக்கை மட்டுமல்ல. அவசியம் மேற்கொள்ள வேண்டிய கண்டிப்பான நடவடிக்கையும்கூட!

கொலை வெறியுடன் வீட்டினுள் நுழைந்த கொடியவனைச் சும்மா விட்டு வைக்க முடியுமா? கொள்ளையடிக்க வந்தவனையும் காமவெறியுடன் வீடு நுழைந்தவனையும் தாக்கி வீழ்த்தாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டா இருக்க முடியும்?

இவர்கள் ஆயுதமேந்தியது கட்டாயச் சூழ்நிலையில்! இந்த வகையில் இவர்களது எண்ணம் – நிய்யத் குற்றமற்றது. தூய்மையானது. இதனடிப்படையிலேயே இவர்களைக் குறித்து ஷஹீத் – நீதிக்காகப் போராடி மடிந்தவர்கள் என்று இந்நபிமொழியில் புகழ்ந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்த நபிமொழியில் – இன்னும் சில விஷயங்கள் தெரிய வருகின்றன: நபியவர்கள் அறிவுரை வழங்கும்பொழுது நபித்தோழர்கள் மிகுந்த ஆர்வத்துடனும் கருத்தூன்றியும் கேட்பார்கள். அதனால்தான் ஆய்வு ரீதியான சந்தேகங்கள் அவர்களின் உள்ளத்தில் எழுந்தன. அவைபற்றி உடனுக்குடன் நபியவர்களிடம் கேள்விகள் கேட்டு விளக்கம் பெற்றார்கள். பிறகுக்கும் கற்றுக் கொடுத்தார்கள்.

இந்தவகையில் இறைவசனங்கள் மற்றும் நபிமொழிகள் தொடர்பாக எழுகிற நியாயமான எந்த ஐயமானாலும் அதற்குரிய விளக்கம் குர்ஆன் -ஹதீஸ்களிலேயே நேரடியாக நமக்குக் கிடைத்து விடுகிறன. அல்லது நபித்தோழர்களால் இதுபோல் கேள்வி கேட்கப்பட்டு – பதிலளிக்கப்பட்ட ரீதியில் கிடைத்து விடுகின்றன!

எனவே எந்தவொரு சந்தேகமானாலும் அதற்கான விளக்கத்திற்கு முறையான ஆய்வை மேற்கொள்வது நமது கடமை. தீர்வு கிடைக்காத – காணமுடியாத சிக்கலான பிரச்னை என்று எதுவும் குர்ஆன் – ஹதீஸில் கிடையாது. எங்கேனும் தெளிவின்மை தொடர்கிறதெனில் நமது அறிவாற்றலின் பலவீனமே அல்லது ஆய்வாற்றலின் குறைபாடே அதற்குக் காரணமாகும்!

அறிவிப்பாளர் அறிமுகம் : நுஃபைய் பின் ஹாரிஸ் (ரலி) அவர்கள்

நுஃபைய் பின் ஹாரிஸ் (ரலி) அவர்களின் பட்டப்பெயர்தான் அபூ பக்ரா என்பது. இவரது தந்தை பெயர் மஸ்ரூஹ் என்றும் சொல்லப்பட்டுள்ளது. நபி(ஸல்) அவர்கள் தாயிப் நகரை முற்றுகையிட்டிருந்தபொழுது நுஃபைய் பின் ஹாரிஸ் (ரலி) அவர்கள் தண்ணீர் இறைக்கப்பயன்படும் கப்பியின் துணை கொண்டு கோட்டைச் சுவரிலிருந்து வெளியே வந்தார்கள்! (பக்ரா என்றால் தண்ணீர் இறைக்கும் கப்பி என்று பொருள்) அன்றிலிருந்து – தண்ணீர்க்கப்பியின் கயிற்றைப் பற்றியவர் என்ற பொருளில் அபூ பக்ரா என்று அழைக்கப்பட்டார்கள். இஸ்லாத்தைத் தழுவிய இவர்களுக்கு நபியவர்கள் விடுதலை அளித்தார்கள். சிறப்புக்குரிய நபித்தோழர்களில் ஒருவராகக் கணிக்கப்படும் நுஃபைய் (ரலி) அவர்கள் மரணம் அடைந்தது. ஹிஜ்ரி 51 அல்லது 52 ஆம் ஆண்டு பஸராவில்! இவர்களிடம் இருந்து 232 நபிமொழிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கேள்விகள்

1) முஸ்லிம்கள் தங்களிடையே போரிடுவதால் ஏற்படும் தீய விளைவுகளை விவரிக்கவும்.

2) இந்நபிமொழியில் – கொலை செய்யப்பட்டவனுக்கும் தண்டனை உண்டு என்று சொல்லப்பட்டதன் அடிப்படை என்ன?

3) ஒருவனது மனத்தில் தீமைசெய்யும் எண்ணம் வந்தது. ஆனால் செயலில் இறங்கவில்லை – இப்படிப்பட்டவனுக்குத் தண்டனை உண்டா?

4) இந்நபிமொழியின் படிப்பினைகள் சிலவற்றை எழுது.

5) அறிவிப்பாளர் குறித்து நீ அறிந்திருப்பதென்ன?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *