Featured Posts

ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-2)

தௌபா – பாவமீட்சி தேடல்

இறைமார்க்க அறிஞர்கள் கூறுவர்: அனைத்துப் பாவங்களில் இருந்தும் பாவமீட்சி தேடுவது கடமையாகும். மனித உரிமையுடன் தொடர்பில்லாமல் – மனிதனுக்கும் இறைவனுக்கும் மத்தியிலான பாவமாக இருந்தால் அதிலிருந்து மீட்சி பெறுவதற்கு மூன்று நிபந்தனைகள் உள்ளன.

  • அந்தப் பாவத்திலிருந்து முற்றாக விடுபடுதல்
  • அதனைச் செய்தது குறித்து வருந்துதல்
  • இனி எப்போதும் அந்தப் பாவத்தைத் திரும்பச் செய்வதில்லை என்று உறுதி கொள்ளல்

இந்த மூன்று நிபந்தனைகளில் ஒன்று விடுபட்டால் அவனது பாவமீட்சி நிறைவேறாது. மனித உரிமையுடன் தொடர்பான பாவமாக இருந்தால் அதிலிருந்து மன்னிப்புத் தேடுவதற்கு நான்கு நிபந்தனைகள் உள்ளன. நான்காவதாக அந்த மனிதனின் உரிமையி(னைப் பாதிக்கும் தீங்கி)லிருந்து விடுபடல் வேண்டும். அது பணமாகவோ பொருளாகவோ இருந்தால் அதனை அவனிடம் திருப்பிக் கொடுத்திட வேண்டும். அவதூறு சுமத்தியதற்கான தண்டனை போன்றதாக இருந்தால் அந்தத் தண்டனையை ஏற்றிடும் வகையில் அவனிடம் தன்னை ஒப்படைத்திட வேண்டும். அல்லது அதனை மன்னித்து விடுமாறு அவனிடம் கோரிட வேண்டும். புறம் பேசிய பாவமாக இருந்தால் அதனைப் பொறுத்துக் கொள்ளுமாறு அவனிடம் கேட்க வேண்டும்.

அனைத்துப் பாவங்களை விட்டும் மீட்சி பெறுவது கடமை. ஒரு மனிதன் சில பாவங்களிலிருந்து மட்டும் பாவமீட்சி தேடினால் சத்தியவான்களிடத்தில் அந்தப் பாவத்திலிருந்து மட்டும் தான் மீட்சி தேடியதாக ஆகும். மற்ற பாவங்கள் அப்படியே அவன் மீது படிந்திருக்கும்.

பாவமீட்சி தேடுவது கடமை என்பதற்கு குர்ஆன் மற்றும் நபிமொழிகளின் ஆதாரங்கள் ஏராளம் உள்ளன. சமுதாயத்தின் கருத்தொற்றுமையும் அதற்குண்டு. அல்லாஹ் கூறுகிறான்:

‘இறை நம்பிக்கையாளர்களே! நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பாவமன்னிப்புக் கோரி அல்லாஹ்வின் பக்கம் மீளுங்கள். நீங்கள் வெற்றி அடையக்கூடும்’(24:31)

வேறோரிடத்தில், ‘உங்கள் இரட்சகனிடம் பாவமன்னிப்புப் கோரி பிறகு அவன் பக்கம் மீளுங்கள்” (11:3)

இன்னோரிடத்தில், ‘இறை நம்பிக்கைகொண்டோரே! அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக் கோருங்கள். தூய்மையான பாவமன்னிப்பாக” (66:8)

தெளிவுரை

தௌபா எனும் அரபிச் சொல்லுக்கு அகராதியில் திரும்புதல் என்று பொருள். இறைமார்க்கத்தின் வழக்கில் அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறு செய்வதை விட்டும் திரும்பி, அவனுக்குக் கீழ்ப்படிவதாகும்.

பாவமீட்சி தேடுவதில் மிக முக்கியமானதும் கண்டிப்பானதும் யாதெனில், இறை நிராகரிப்பை விட்டும் இணைவைப்பை விட்டும் பாவமீட்சி தேடி இறைநம்பிக்கை கொள்வதாகும். ஏனெனில், இவை தான் மிகவும் கொடிய பாவச்செயல்களாகும்.

இறைமறை கூறுகிறது: (நபியே!) இறைநிராகரிப்பாளர்களிடம் கூறும்: (இப்போதேனும் அசத்தியத்தை விட்டும்) அவர்கள் விலகிக் கொள்வார்களாயின் அவர்கள் செய்த முந்தைய பாவங்கள் யாவும் மன்னிக்கப்படும். (8:38)

இரண்டாவதாக, பெரும் பாவங்களிலிருந்து மன்னிப்புத் தேடி மீளுவது. மூன்றாவதாக, சிறிய பாவங்களிலிருந்து மன்னிப்புத் தேடி மீளுவது. ஆக, ஒரு மனிதன் அனைத்துப் பாவங்களையும் விட்டொழித்து அல்லாஹ்வின் பக்கம் திரும்பி மன்னிப்புத் தேடுவது கடமையாகும்.

பாவமீட்சி தேடுவதற்கு இமாம் நவவி(ரஹ்) அவர்கள் குறிப்பிட்டது போன்று மூன்று நிபந்தனைகள் உள்ளன. மேலும் ஆராய்ந்தால் அவற்றுடன் இன்னும் இரு நிபந்தனைகள் வந்து சேருவதைக் காணலாம்.

முதலாவது நிபந்தனை: அல் இக்லாஸ் எனும் எண்ணத்தின் தூய்மை. தன்னுடைய பாவங்களை அல்லாஹ் மன்னிக்க வேண்டும். அவனது உவப்பை நாம் பெறவேண்டும் எனும் தூய எண்ணத்தின் அடிப்படையில் பாவமீட்சியை மேற்கொள்ள வேண்டுமே தவிர தன்னை தூய மனிதன் போல் ஊர் உலகுக்குக் காட்டிக்கொண்டு அதன் மூலம் மக்களிடம் செல்வாக்கும் மதிப்பும் பெறலாமெனும் உலகாயத நோக்கம் இருக்கக் கூடாது.

இரண்டாவது நிபந்தனை: செய்த பாவம் குறித்து மனம் வருந்துதல். இதுதான் அவன் பாவமீட்சி தேடுவது உண்மை என்பதற்கான அடையாளமாகும். தான் செய்தது தவறான செயலல்ல என்று அவன் அகந்தையுடன் இருந்திருந்தால் இவ்வாறு மனம் நொந்து கைசேதப்பட மாட்டான் என்பது வெளிப்படை.

மூன்றாவது நிபந்தனை: பாவத்திலிருந்து முற்றாக விலகுதல். இதுதான் மிகவும் முக்கியமானது! அல்லாஹ் விதித்த கடமைகளை நிறைவேற்றாமல் இருப்பதும் ஒருபாவமே! எனவே அதிலிருந்து மீட்சி பெறவேண்டுமானால் உடனே அவற்றை நிறைவேற்றத் தொடங்கிட வேண்டும்.

எடுத்துக்காட்டாக, ஜகாத் கொடுக்காமல் தட்டிக் கழித்துக் கொண்டிருக்கும் ஒருவன் அந்தப் பாவத்திலிருந்து மீட்சி பெறவேண்டுமானால் உடனே கடந்த காலத்திற்கும் சேர்த்துக் கணக்குப் பார்த்து ஜகாத் கொடுத்திட வேண்டும்.

இவ்வாறுதான் தொழுகையை நிறைவேற்றாமல் இருப்பது. பெற்றோரை நிந்திப்பது, ரத்தபந்தத்தை முறிப்பது, வட்டி வாங்கித் தின்பது, மது அருந்துவது, ஏமாற்றிப் பணம் பறிப்பது, புறம்பேசித் திரிவது போன்ற பாவச்செயல்களும். இவற்றிலிருந்து பாவமீட்சி பெற வேண்டுமானால் உடனே அவற்றை விட்டும் விலகிட வேண்டும்.

மாறாக அந்தப் பாவங்களைத் தொடர்ந்து செய்துகொண்டு நான் பாவமீட்சி தேடுகிறேன் என்றால் அது ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. மட்டுமல்ல அப்படிச் செய்வது அல்லாஹ்வைப் பரிகாசம் செய்த குற்றமாகவும் ஆகிறது.

உங்களுடன் கொடுக்கல்- வாங்கல் வைத்துள்ள ஒருவன் ஒரு விவகாரத்தில் தவறு செய்து விடுகிறான். பிறகு அது குறித்து நான் வருந்துகிறேன். இனிமேல் அப்படிச் செய்ய மாட்டேன் என்று சொல்லிக் கொண்டே தொடர்ந்து அந்தத் தவறைச் செய்தால் அது, உங்களைப் பரிகாசம் செய்வதாகத்தான் ஆகும். இது போன்றுதான் அல்லாஹ்வுடன் நடந்து கொள்வதும்.

இங்கு ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளவேண்டும். பாவங்கள் இரண்டு வகையில் உள்ளன. ஒன்று மனித உரிமையுடன் தொடர்புடையது. இரண்டாவது இறைச்சட்டங்களை- கடமைகளை மீறுதல் தொடர்பானது.

இரண்டாவது வகையைப் பொறுத்தவரையில் அதைப்பற்றி பிற மனிதர்களிடம் தெரியப்படுத்த வேண்டியதில்லை. இறைவனிடம் பாவமீட்சி தேடுவதே போதுமானது. தான் இப்படி ஒரு பாவத்தைச் செய்தேன் என்று பிறருக்குத் தெரியப்படுத்துவது, தன்னைத்தானே கேவலப்படுத்துவது போன்றதாகும். அப்படிச் செய்வது கூடாது. அல்லாஹ் அந்தப் பாவத்தை மக்களின் கண்களைவிட்டும் மறைத்து அந்த மனிதன் மீது உபகாரம் செய்திருக்கும்பொழுது அவனும் தனது தவற்றை உணர்ந்து பாவமீட்சி தேடிடும் போது பிறருக்குத் தெரிவிப்பதற்கு என்ன இருக்கிறது!

மட்டுமல்ல செய்த பாவத்தைப் பிறரிடம் சொல்லிக் காட்டுவதை நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு கண்டித்துள்ளார்கள்: ‘என் சமுதாயத்தினர் அனைவரும் மன்னிப்பைப் பெறக்கூடியவர்களே. ஆனால் (செய்த தவறுகளைப்) பகிரங்கப் படுத்துவோரைத் தவிர! ஒருவன் பாவம் செய்துவிட்டு காலையில் எழுந்து மக்களிடம் சென்று நான் இன்னின்ன பாவங்களைச் செய்தேன் என்று சொல்லிக்கொண்டு திரிவது (தான் பகிரங்கப் படுத்துவதாகும்)” புகாரி, முஸ்லிம்

ஆனால் தண்டனைக்குரிய பாவத்தை அவன் செய்திருந்தால் அதற்குப் பொறுப்பான அமீர் – தலைவரிடம் சென்று தெரியப்படுத்தித் தனது தண்டனையை நிறைவேற்றுமாறும் அந்தப் பாவத்திலிருந்து தன்னைத் தூய்மைப் படுத்துமாறும் கோருவது அவனுக்குக் கூடும். ஏனெனில் தண்டனைகள் பாவங்களுக்குப் பரிகாரமாக உள்ளன. ஆயினும் பிறரிடம் சொல்லி அதனை வெளிப்படுத்தாமல் இருப்பதே சிறந்ததாகும்.

மனித உரிமையைப் பாதிக்கும்படியான பாவத்தைப் பொறுத்த வரையில் -இமாம் நவவி (ரஹ்) அவர்கள் சுட்டிக்காட்டியது போன்று அதனை உரியவரிடம் திருப்பி ஒப்படைப்பதே பாவத்தில் இருந்து விடுபடுவதாகும்.

எடுத்துக்காட்டாக, வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்காமல் மறுத்தவன் பின்னர் அது பாவமென உணர்ந்து பாவமீட்சி தேடுகிறான் எனில் பாதிக்கப்பட்டவரிடம் சென்று உண்மையைச் சொல்லி அந்தப் பணத்தை ஒப்படைத்திட வேண்டும். அவர் இறந்து விட்டாரெனில் அவருடைய வாரிசுகளிடம் அதைக் கொடுத்திட வேண்டும். அவர் எங்கிருக்கிறார்? உயிருடன் உள்ளாரா? இறந்து விட்டாரா என்று அவரைப் பற்றிய தகவல் தெரியவில்லையெனில், வாரிசுகளும் இல்லையெனில், அவரது பெயரில் அந்தப் பணத்தைத் தர்மம் செய்திட வேண்டும். அவரைப்பற்றி அல்லாஹ் அறிவான். அந்தத் தர்மத்தின் கூலியை அவரிடம் சேர்த்திடுவான்.

அநியாயமாக ஒருவரை அடித்திருந்தால் அதற்குப் பகரமாக அவர் அடிப்பதற்காக அவரிடம் தன்னை ஒப்படைத்திட வேண்டும். அவரது உடலில் எந்த இடத்தில் அநியாயமாக அடிக்கப்பட்டதோ அதே இடத்தில் அவரும் அடித்துப் பழி தீர்த்துக் கொள்வார். முதுகிலெனில் முதுகில்., தலையிலெனில் தலையில்! அடிபட்டவர் அதனை மன்னித்து மனம் பொறுத்தால் அப்படிச் செய்யவேண்டியதில்லை.

இறைவன் கூறுகிறான்: ‘தீமையின் கூலி அதேபோன்ற ஒரு தீமையே ஆகும் ” அல்குர்ஆன் (42:401)

பிறிதோர் இடத்தில், ‘எனவே உங்களிடம் எவரேனும் வரம்பு மீறினால் அவர் எந்த அளவுக்கு உங்களிடம் வரம்பு மீறினாரோ அந்தஅளவுக்கு நீங்களும் அவருக்குப் பதிலடி கொடுங்கள்” (2:194)

புறம் பேசிய பாவம் தொடர்பாகச் சான்றோர் சிலர் மேலும் ஒரு விளக்கம் கொடுக்கிறார்கள்: புறம் பேசியதை அந்த மனிதர் அறிந்து விட்டாரெனில் அவரிடம் சென்று மன்னிப்புக் கோரிட வேண்டியதுதான். ஆனால் அது அவருக்குத் தெரியாது என்றால், அவருக்குத் தெரியப்படுத்த வேண்டியதில்லை. மாறாக, புறம் பேசியவர் அவருக்காக அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக் கேட்டிட வேண்டும். அவரைக் குறித்துப் புறம்பேசிய அதே சபையில் அவரது நற்குணத்தைப் புகழ்ந்து பேசிட வேண்டும். – நன்மை தீமையை அழித்து விடும் எனும் நியதிக்கேற்ப அமைவதாகும் இது!

ஆக பாவமீட்சி தேடுவது நிறைவேற வேண்டுமெனில் பாவங்களிலிருந்து முற்றாக விடுபடல் வேண்டும்.

நான்காவது நிபந்தனை: மீண்டும் அந்தப் பாவத்தைச் செய்வதில்லையென உறுதி கொள்வது. -சந்தர்ப்பம் கிடைத்தால் மீண்டும் பாவம் செய்யும் எண்ணத்துடன் இருந்தால் பாவமீட்சி ஒப்புக் கொள்ளப்பட மாட்டாது.

எடுத்துக்காட்டாக, ஒருமனிதன் மது, மாது, சூது என எல்லாப் பாவச் செயல்களிலும் பணத்தை விரயம் செய்தான். கஷ்டப்பட்டுச் சம்பாதித்த பணமெல்லாம் சில நாட்களிலேயே காலியானது. இப்பொழுது அவன் வறுமையின் பிடியில்! உடனே பக்தி மேலிட- யா அல்லாஹ்! என்னை மன்னித்துவிடு. என்னைத் தண்டித்து விடாதே! என்று பிரார்த்தனை செய்து பாவமீட்சி தேடுகிறான். ஆனாலும் அடிமனத்தில் ஓர்எண்ணம்: மீண்டும் கையில் பணம் வந்தால் ஒரு தடவையேனும் அவற்றை அனுபவிக்க வேண்டும் என்று! இப்படிப்பட்ட மனிதனின் பாவமீட்சி ஒப்புக்கொள்ளப்பட மாட்டாது. இவன் தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்கிறானே தவிர வேறில்லை!

ஐந்தாவது நிபந்தனை: பாவமீட்சியை அதற்குரிய காலகட்டத்தில் மேற்கொள்வதாகும். அதன் பிறகு பாவமீட்சி தேடினால் அது ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. இந்தக் காலகட்டம் இரண்டு வகையில் உள்ளது:

1) ஒவ்வொருவருக்கும் உரியது

2) எல்லோருக்கும் பொதுவானது

முதலாவது மரண நேரம். அதற்கு முன்பே பாவமீட்சி தேடிட வேண்டும். மரண நேரம் வந்த பிறகு பாவமீட்சி தேடினால் அது பயனளிக்காது.

அல்லாஹ் கூறுகிறான்; ‘எவர்கள் தீயசெயல்கள் செய்துகொண்டே இருக்கிறார்களோ – எதுவரையெனில், அவர்களில் ஒருவருக்கு மரண நேரம் நெருங்கினால் நான் இப்பொழுது பாவமீட்சி தேடுகிறேன் என்கிறாரோ – இத்தகையவர்களுக்குப் பாவமன்னிப்புக் கிடையாது” (குர்ஆன் 4:18)

மற்றோர் இடத்தில்: ‘அவர்கள் நமது தண்டனையைக் கண்டபொழுது ஏக இறைவனாகிய அல்லாஹ்வை நாங்கள் ஏற்றுக் கொண்டோம். அவனுக்கு இணையாக நாங்கள் ஏற்படுத்தியிருந்த தெய்வங்களை நிராகரித்தோம் என்று கூறினர். ஆனால் நமது தண்டனையைக் கண்ட பின்னால் அவர்கள் கொண்ட ஈமான் – நம்பிக்கை அவர்களுக்குச் சிறிதும் பயனளிக்காது போயிற்று! இது அல்லாஹ்வின் நியதி. அவனுடைய அடியார்களாகிய மனிதர்களிடையே என்றென்றும் நடைபெற்று வரக்கூடியது. மேலும் அந்நேரத்தில், நிராகரிப்பாளர்கள் நஷ்டமடைந்து விட்டார்கள்” (40:84 -85)

ஆம்! மரண நேரம் நெருங்கிய பிறகு ‘இப்பொழுது நாம் உலகத்தை விட்டுப் பிரியப் போகிறோம். இனி நமக்கு வாழ்வில்லை. ஐயோ! வசமாக மாட்டிக் கொண்டோம், இனி தப்பிக்க எதுவும் செய்யமுடியாது” என்ற நிலையில் தேடுகிற பாவமன்னிப்பு நிர்பந்த நிலையிலானது. அது எவ்விதப் பயனும் அளிக்காது!

எல்லோருக்கும் பொதுவான காலகட்டமெனும் இரண்டாவது வகையை பின்வரும் நபிமொழி விளக்குகிறது:

நபி(ஸல்) அவர்கள் அருளினார்கள்: ‘தௌபா-பாவமீட்சி தேடுவதற்கான கால அவகாசம் முடிவடையாதவரை ஹிஜ்ரத் முடிவடையாது. சூரியன் மேற்கிலிருந்து உதிக்காதவரையில் (அதாவது யுகமுடிவு நாள் வரையில்) பாவமீட்சி தேடுவது முடிவடையாது” நூல்: அபூதாவூத், அஹ்மத்

அல்லாஹ் கூறுகிறான்: ‘உம் இறைவனின் சான்றுகளில் சில, வெளிப்படும் நாளில் முன்னரே நம்பிக்கை கொள்ளாதவருக்கும் அல்லது நம்பிக்கை கொண்டிருந்தும் அதனுடன் யாதொரு நன்மையையும் சம்பாதிக்காதவருக்கும் – அவருடைய நம்பிக்கை எவ்விதப் பயனும் அளிக்கா! ” (குர்ஆன் 6: 158)

இறைவனின் சான்றுகளில் சில என்பதுதான் சூரியன் மேற்கிலிருந்து உதயமாவதாகும். -இவ்வாறே நபி(ஸல்) அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்கள்.

எதிரிகளின் சூழ்ச்சி வலை: இமாம் நவவி(ரஹ்) அவர்கள் குறிப்பிட்டது போன்று எல்லாப் பாவங்களில் இருந்தும் பாவமீட்சி தேடுவது கடமை என்பதற்கு நேரடியான ஆதாரங்கள் குர்ஆனிலும் நபிமொழிகளிலும் ஏராளம் உள்ளன. பாவமீட்சி தேடுவதன் சிறப்பும் அதன் நன்மையும் அவற்றில் விளக்கப்பட்டுள்ளன.

இமாம் நவவி(ரஹ்) அவர்கள் பின்வரும் இறைவசனத்தைக் கூறினார்கள்: ‘இறை நம்பிக்கையாளர்களே! நீங்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து பாவமீட்சி தேடி அல்லாஹ்வின் பக்கம் மீளுங்கள் ” (24:31)

இந்த வசனம், பார்வையைப் பேணுவது கடமையென உணர்த்தும் வசனத்தொடரின் இறுதியில் இடம் பெற்றுள்ளது. அது வருமாறு:

‘(நபியே!) இறைநம்பிக்கை கொண்ட ஆண்களிடம் அவர்கள் தங்கள் பார்வைகளைப் பேணிக் கொள்ளும்படியும் தங்களுடைய வெட்கத்தலங்களைப் பாதுகாத்துக்கொள்ளும்படியும் நீர் கூறும். இதுவே அவர்களுக்கு மிகத் தூய்மையான வழிமுறையாகும். அவர்கள் செய்யும் அனைத்தையும் திண்ணமாக அல்லாஹ் நன்கு தெரிந்தவனாக இருக்கிறான்.

மேலும் (நபியே!) இறைநம்பிக்கை கொண்ட பெண்களிடம் கூறும்; அவர்கள் தங்களுடைய பார்வைகளைப் பேணிக்கொள்ளட்டும். தங்களுடைய வெட்கத்தலங்களைப் பாதுகாத்துக் கொள்ளட்டும். தாங்கள் மறைத்து வைத்திருக்கும் தங்களது அழகை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக தங்களுடைய கால்களை(ப் பூமியில்) அடித்துக் கொண்டு நடக்க வேண்டாம். இறை நம்பிக்கையாளர்களே! நீங்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து பாவமீட்சி தேடி அல்லாஹ்வின் பக்கம் மீளுங்கள்! நீங்கள் வெற்றி பெறலாம்.” (அல்குர்ஆன் 24: 30 -31)

பார்வையைப் பேணாதிருப்பதும் வெட்கத்தலங்களைப் பாதுகாக்காதிருப்பதும் பாவச் செயல்களாகும். அவற்றில் இருந்து பாவமீட்சி தேடுவது கடமை என்பதை இந்த வசனம் உணர்த்துகிறது.

பார்வையைப் பேணாதிருப்பது என்றால் அதைக் கட்டுப் படுத்தாதிருப்பது – பார்க்கக் கூடாதவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டு திரிவது என்று பொருள். வெட்கத்தலத்தைப் பாதுகாக்காதிருப்பதென்றால் மானக் கேடான செயல் அதாவது விபச்சாரம் செய்வது என்று பொருள். இவை, பெரும் அழிவையும் நாசத்தையும் துன்பத்தையும் ஏற்படுத்தும் காரணிகளின் அப்பாற்பட்டவையாகும்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘எனக்குப் பின்னால் நான் விட்டுச் செல்கிற சோதனைகளில் ஆண்களின் மீது அதிகத் தீங்கு விளைவிக்கக் கூடிய சோதனை பெண்களின் சோதனையே” (நூல்: புகாரி) – மேலும் சொன்னார்கள்:

‘யூதர்களுக்கு நேர்ந்த ஆரம்ப சோதனை பெண்களின் விஷயத்தில் ஏற்பட்ட சோதனையே நூல்: முஸ்லிம்

இதனால் தான், முஸ்லிம்களை எப்படியேனும் பெண்களின் விஷயத்தில் சீரழித்திட வேண்டும் என்று எதிரிகள் தொடர்ந்து சூழ்ச்சி வலை பின்னுகிறார்கள். பர்தா அணிவதால் பெண்களின் சுதந்திரம் பறிபோகிறது என்று கூப்பாடு போட்டு, முஸ்லிம் சமுதாயத்துப் பெண்களைத் தூண்டி விடுகிறார்கள். ஆண்-பெண் சமத்துவம் என்கிற கோஷத்தை எழுப்பி அதன் மாயையில் முஸ்லிம் பெண்களையும் வீழ்த்தப் பார்க்கிறார்கள். பெண்களும் தங்களின் அழகைக்காட்டிக் கொண்டு வீதிக்கு வர வேண்டும் என்பதே அவர்களது திட்டம்! இதற்காகச் சர்வதேச அளவில் சதி வலை பின்னிச் செயல்படுத்துகிறார்கள்.

இதில் இவர்களின் எதிர்பார்ப்பு என்னவெனில், ஆண்களும் பெண்களும் எவ்விதக் கட்டுப்பாடுமின்றி பழகுகிற ஒழுக்கக் கேடான இந்த மேற்கத்திய கலாச்சாரத்தை முஸ்லிம்களிடையே எப்படியேனும் புகுத்திட வேண்டும் என்பதுதான்! அதன் மூலம் முஸ்லிம்களை – குறிப்பாக இளைஞர்களை வழிகெடுத்துச் சிற்றின்ப மோகத்தில் சிக்க வைத்து அவர்கனை உயிரற்ற சடலங்களாக்கி மூலையில் முடங்கிடச் செய்ய வேண்டும் என்பதுதான்!

பொதுவாக ஏகஇறைக் கொள்கையில் முஸ்லிம்கள் உறுதியுடன் உள்ளதையும் இஸ்லாமிய நெறிகளைப் பெரும்பாலும் பேணி வருவதையும் எதிரிகள் நன்கு அறிவர். எனவேதான் முஸ்லிம்களின் கொள்கைப்பற்றையும் கலாச்சாரத் தனித் தன்மையையும் எப்படியேனும் பலவீனப்படுத்திட வேண்டும்., மாற்றிட வேண்டும் என்று எதிரிகள் முனைப்புக் காட்டுகின்றனர். அதற்காக அவர்கள் தேடிக் கண்டுபிடித்த வழிதான் இது:

அதாவது, முஸ்லிம் சமுதாயத்தில் சமத்துவம் என்கிற பெயரில் அந்நிய ஆண்களும் பெண்களும் கட்டுப்பாடின்றி பழகும் நிலை வந்துவிட்டால் முஸ்லிம்கள் சிற்றின்ப வேட்கைக்குப் பலியாகி – ஒழுக்க வீழ்ச்சிக்கு உள்ளாகி இறைமார்க்கத்தின் நெறிமுறைகளைத் தாங்களாகவே கைகழுவி விடுவார்கள். இதுதான் எதிரிகளின் திட்டம்.

எனவே இது விஷயத்தில் அனைத்து முஸ்லிம்களும் – குறிப்பாக இளைஞர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மேலே சொன்ன இந்த வசனம் அதாவது, இறை நம்பிக்கையாளர்களே! நீங்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து பாவமீட்சி தேடி அல்லாஹ்வின் பக்கம் மீளுங்கள். நீங்கள் வெற்றி பெறலாம், என்கிற வசனம் முஸ்லிம் சமுதாயம் முழுவதையும் நோக்கி கட்டளை இடுகிறது!

எனவே தவறான பார்வை எனும் பாவத்தைத் தவிர்ப்பதில்- அதிலிருந்து பாவமீட்சி தேடுவதில் ஒருவருக்கொருவர் அறிவுரை கூறிக் கொண்டிருக்க வேண்டும். நம்முடைய சகோதரர் இந்தப் பாவத்திலிருந்து மீண்டாரா? இல்லை அதிலேயே மூழ்கித் தன்னைத்தானே அழித்துக் கொண்டிருக்கிறாரா? என்று ஒவ்வொருவரும் கண்காணித்திட வேண்டும். அதன் மூலம்தான் நாம் இவ்வுலகிலும் மறுவுலகிலும் வெற்றி பெறமுடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *