Featured Posts

குர்பானி – அறுத்து பலியிடுதல், சட்டங்கள். பகுதி 2

“ஹஜ்” பெருநாளை நெருங்கிக் கொண்டிருக்கும் முஸ்லிம்களுக்கு. குர்பானி – அறுத்து பலியிடுதலின் சட்ட விளக்கங்கள். ஆக்கம்: நண்பர் M.I. முஹம்மது சுலைமான்.

பகுதி:2

குர்பானி பிராணியை அறுக்கும் முன் கவனிக்க வேண்டியவை:

பிராணியை அறுக்கும் முன் கத்தியை கூர்மையாக்கி வைத்துக்கொள்ள வேண்டும். கூர்மையற்ற கத்தியினால் அறுத்து பிராணியை சித்திரவதைச் செய்யக் கூடாது.

எல்லா உயிரினங்களின் மீதும் நல்ல முறையில் நடந்து கொள்வதை அல்லாஹ் கடமையாக்கியுள்ளான். நீங்கள் (கிஸாஸ் – பழிக்குப் பழி) வாங்கும்போது கொலை செய்தால் அழகிய முறையில் கொலை செய்யுங்கள்! நீங்கள் பிராணிகளை அறுத்தால் அழகிய முறையில் அறுங்கள். உங்கள் கத்தியை நீங்கள் கூர்மையாக்கிக் கொள்ளுங்கள்! (விரைவாக) அறுப்பதன் மூலம் அதற்கு நிம்மதியைக் கொடுங்கள்! என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஹிதாத் இப்னு அவ்ஸ்(ரலி) ஆதார நூல்கள்: முஸ்லிம், அபூதாவூத், இப்னுமாஜா (3170)



ஆயிஷா கத்தியைக் கொண்டு வா! அதைக் கல்லில் கூர்மையாக்கு! என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்கள்: முஸ்லிம், அபூதாவூத், அஹ்மத்).

குர்பானி கொடுக்கும்போது குடும்பத்தினர் அனைவரும் கட்டாயம் வந்து நிற்க வேண்டும் என்பதற்கு ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் எதுவுமில்லை. இவ்வாறு குர்பானி கொடுக்கும்போது குடும்பத்தினர் அனைவரும் கட்டாயம் வந்து நிற்க வேண்டும் என்று ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் எதுவும் இல்லாவிட்டாலும், குடும்பத்தினர்கள் வந்து நின்றால் இது தவறாகாது. நபி(ஸல்) அவர்கள் குர்பானி கொடுத்தபோது அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் நின்றுள்ளார்கள். இதற்குரிய ஹதீஸை முன்னரே குறிப்பிட்டுள்ளோம்.

மேலும் குர்பானி பிராணியை கிப்லாவை முன்னோக்க வைத்து குர்பானி கொடுக்க வேண்டும் என்பதற்கு ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் இல்லை. இது சம்பந்தமாக ஆயிஷா (ரலி) அவர்கள் வழியாக ஒரு செய்தி அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் அது பலவீனமானது என்றும் பைஹகீ (ரஹ்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள். எனவே எந்தத் திசையில் வைத்தும் குர்பானி கொடுக்கலாம்.

குர்பானி கொடுக்கும்போது கூற வேண்டியவை:

பிராணியை அறுக்கும்போதே ‘வஜ்ஜஹத்து வஜ்ஹிய லில்லதீ” என்ற துஅவை சிலர் ஓதுகின்றனர். இதுபற்றி அபூதாவூத், பைஹகீ, இப்னுமாஜா ஆகிய நூல்களில் ஒரு ஹதீஸ் இடம்பெறுகிறது. எனினும் இந்த ஹதீஸ் பலவீனமானதாகும். இதன் அறிவிப்பாளர் வரிசையில் அபூ அய்யாஸ், முஹம்;மது இப்னு இஸ்ஹாக் ஆகிய இரு பலவீனமான அறிவிப்பாளர்கள் இடம்பெறுகின்றனர். எனவே இதை ஓத வேண்டிய அவசியமில்லை.

அறுக்கும்போது ‘பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பர் (அல்லாஹ்வின் பெயரால் அறுக்கிறேன். அல்லாஹ் பெரியவன்) என்றே கூற வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் கருப்பும், வெள்ளையும் கலந்த இரண்டு கொம்புள்ள ஆடுகளை குர்பானி கொடுத்தார்கள். அதைத் தன் கையால் அறுத்தார்கள் அப்போது பிஸ்மில்லாஹ்வும் தக்பீரும் கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ்(ரலி), நூகள்: புகாரி(5565) முஸ்லிம்).

முஸ்லிமின் மற்றொரு அறிவிப்பில் ‘பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பர்” என்ற வாசகம் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. நபி(ஸல்) அவர்கள் தங்கள் கரங்களாலேயே அறுத்துள்ளதால், குர்பானி கொடுப்பவர் அறுப்பதே சிறந்ததாகும்.

தொழுத பின்பே அறுக்க வேண்டும்:

ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை முடிந்தபின்பே குர்பானி கொடுக்க வேண்டும். தெரியாமல் தொழுகைக்கு முன் அறுத்துவிட்டால் தொழுத பின் மற்றொரு பிராணியை அறுக்க வேண்டும்.

இன்றைய நாளில் நாம் முதலாவது செய்வது தொழுகையாகும். பிறகு நாம் (வீட்டிற்கு) திரும்பிச் சென்று குர்பானி கொடுப்போம். யார் இப்படி நடந்து கொள்வாரோ அவர் நமது வழியில் நடந்து கொண்டார். யார் (தொழுமுன்) அறுத்தாரோ அவர் தன் குடும்பத்திற்காக மாமிசத்தை முற்படுத்திக் கொண்டார். அவருக்கு குர்பானியில் (நன்மை) எதுவும் கிடையாது என்ற நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அபூதர்தா இப்னு நியார்(ரலி) அவர்கள் (தொழுமுன்) அறுத்து விட்டிருந்தார். அவர் (நபி(ஸல்) அவர்களிடத்தில்) என்னிடத்தில் ‘முஸின்னாவை” விட சிறந்த ஆறுமாதக் குட்டி உள்ளது. (அதைக் குர்பானி கொடுக்கலாமா?) என்றார். அதை முன் அறுத்ததற்கு இதை பகரமாக்குவீராக! (அறுப்பீராக!) எனினும் உமக்குப் பிறகு வேறு எவருக்கும் இது (குர்பானி கொடுக்க) அனுமதியில்லை என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: பரா(ரலி), நூல்கள்: புகாரி (5560), முஸ்லிம்.

பெண்கள் அறுக்கலாமா? :

பெண்கள் அறுப்பதற்கு எவ்வித தடையும் ஹதீஸ்களில் இல்லை. மேலும் நபி(ஸல்) அவர்கள், ஒரு பெண் அறுத்ததை அங்கீகரித்துள்ளார்கள்.

ஒரு பெண்மணி (கூர்மையான) கல்லால் ஆட்டை அறுத்து விட்டார். இது பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்ட போது அதை சாப்பிடும்படி கட்டளையிட்டார்கள். (அறிவிப்பவர்: கஅபு இப்னு மாலிக் (ரலி), நூல்: புகாரி (5504).

எத்தனை நாட்கள் கொடுக்கலாம்?:

ஹஜ்ஜுப் பெருநாள் அன்றும், அதற்கு பிறகுள்ள மூன்று நாட்கள் வரை குர்பானி கொடுக்கலாம்.

தஷ்ரிக்குடைய நாட்கள் (துல்ஹஜ் 11, 12, 13) அனைத்தும் அறுப்பதற்குரியதாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜுபைர் இப்னு முத்இம்(ரலி), நூல்கள்: தாரகுத்னி, இப்னு ஹிப்பான், அஹ்மத்).

இந்த ஹதீஸைப் பற்றி ஹாபிழ் இப்னு ஹஜர்(ரஹ்) அவர்கள் ஃபத்ஹுல் பாரியில் அஹ்மதின் அறிவிப்பு தொடர்பு அறுந்ததாகும். தாரகுத்னியில் தொடர்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் அறிவிப்பாளார்கள் நம்பகமானவர்கள் என்று குறிப்பிடுகிறார்கள்.

எத்தனை பிராணிகள் கொடுக்கலாம்:

பெருமையை நாடாமல் ஏழைகளின் தேவைகளைக் கருதி எத்தனைப் பிராணிகளை வேண்டுமானாலும் குர்பானி கொடுக்கலாம். மாமிசம் வீண் விரயமாகாமல் இருக்க வேண்டும்.

நபி(ஸல்) அவர்கள் காலத்தல் குர்பானி கொடுப்பது எவ்வாறு அமைந்திருந்தது என்று அபூ அய்யூப்(ரலி) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கவர்கள் ‘ஒருவர் தமக்காகவும், தம் குடும்பத்தினருக்காகவும் ஒரு ஆட்டையே குர்பானி கொடுப்பார். அவர்களும் உண்பர். பிறருக்கும் உண்ணக் கொடுப்பார்கள். மக்கள் பெருமையடிக்க ஆரம்பித்து நீர் பார்க்கக்கூடிய இந்த நிலை ஏற்பட்டுவிட்டது என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அதா இப்னு யஸார். நூல்கள்: திர்மிதீ, இப்னுமாஜா (3147), தப்ரானீ.

இந்த ஹதீஸ் ஒருவர் தன் குடும்பத்திற்காக ஒரு ஆட்டைக் குர்பானி கொடுத்தால் போதுமானது என்றும், பெருமைக்காக அதிகம் கொடுக்கக்கூடாது என்றே கூறுகிறது. நபி(ஸல்) அவர்கள் இரண்டு ஆட்டைக் குர்பானி கொடுத்ததையும் நாம் முன்னர் குறிப்பிட்டுள்ளோம். நபி(ஸல்) அவர்கள் ஹஜ்ஜில் 63 ஒட்டகங்களைத் தன் கரத்தால் குர்பானி கொடுத்துள்ளார்கள். ஜாபர் (ரலி) அறிவிக்கும் இந்தச் செய்தி முஸ்லிமில் இடம் பெற்றுள்ளது. எனவே ஒன்றுக்கு மேல் பிராணி கொடுப்பதற்கு எந்தத் தடையுமில்லை.

பங்கிடுதல் குர்பானி கொடுத்த பிராணியின் மாமிசத்தை மூன்று பங்கு வைத்து ஒரு பங்கு தனக்காகவும், மற்றொன்று சொந்தக்காரர்களுக்கும், அடுத்தது ஏழைகளுக்கும் கொடுக்க வேண்டும்” என்று கூறுவதற்கு ஆதாரப்பூர்வமான எந்த ஹதீஸும் இல்லை. சொந்தம், ஏழை, யாசிப்பவர்கள் இப்படி யாருக்கும் எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கலாம். நிர்ணயம் எதுவுமில்லை.

‘அவற்றிலிருந்து (குர்பானி பிராணியிலிருந்து) நீங்களும் உண்ணுங்கள்! (வறுமையிலும் கையேந்தாமல், இருப்பதைக் கொண்டு) திருப்தியாய் இருப்போருக்கும், யாசிப்போருக்கும் உண்ணக் கொடுங்கள்! (அல்-குர்ஆன் அத்தியாயம் 22 ஸுரத்துல் ஹஜ் 36வது வசனத்தின் ஒரு பகுதி)

இந்த வசனத்தில் அல்லாஹ் இத்தனை சதவிகிதம் கொடுக்க வேண்டுமென கட்டளையிடவில்லை. பொதுவாக தர்மம் செய்யுங்கள் என்றே கூறுவதால் எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கலாம்.

நபி(ஸல்) அவர்கள் நூறு ஒட்டகங்களைக் குர்பானி கொடுத்து அதை அனைத்தையும் பங்கிட்டு ஏழைகளுக்கு வழங்குமாறு அலீ (ரலி) அவர்களுக்கு கட்டளையிட்ட செய்தி புகாரியில் (1717, 1718) பதிவு செய்யப்பட்டுள்ளது. முஸ்லிமின் அறிவிப்பில் ஒவ்வொரு ஒட்டகையிலும் ஒரு துண்டு எடுத்து அதைச் சமைத்துச் சாப்பிட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே குறிப்பிட்ட அளவில்லாமல் எவ்வளவு வேண்டுமானாலும் தர்மமாகக் வழங்கலாம்.

குர்பானி மாமிசத்தை நிராகரிப்பவர்களுக்கு (காஃபிர்களுக்கு)க் கொடுக்க எந்தத் தடையுமில்லை. குர்ஆனின் 22வது அத்தியாயம் ஸுரத்துல் ஹஜ்ஜின் 36வது வசனத்தில் பொதுவாக ஏழைகள் என்றும், யாசிப்பவர்கள் என்றும்தான் குறிப்பிடப்பட்டுள்ளது.

தோல்:

குர்பானி பிராணியின் தோலை, பிராணிகளை வெட்டி, உரித்தவருக்குக் கூலியாகக் கொடுக்கக் கூடாது. இதை தர்மமாக ஏழைகளுக்கு வழங்க வேண்டும்.

ஒரு ஒட்டகத்தைக் குர்பானி கொடுக்கும் பொறுப்பை என்னிடம் நபி(ஸல்) அவர்கள் ஒப்படைத்தார்கள். அதன் மாமிசத்தையும், தோலையும், அதன் மீது கிடந்த (கயிறு, சேனம் போன்றவை) களையும் தர்மமாக வழங்குமாறும் உரிப்பவருக்குக் கூலியாக அதில் எதனையும் வழங்கக் கூடாது என்றும் எனக்குக் கட்டளையிட்டனர். அதற்கானக் கூலியை நாங்கள் தனியாகக் கொடுப்போம். (அறிவிப்பவர்: அலி(ரலி), நூல்கள்: புகாரி (1716), முஸ்லிம்).

தோலை தர்மமாக வழங்கச் சொன்னதன் காரணமென்ன என்பதைச் சிந்தித்தால் ‘பெருநாள் அன்று ஏழைகள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்” என்பதற்கே நபி(ஸல்) அவர்கள் தர்மம் செய்ய வேண்டும் என்று கூறியிருப்பார்கள் என்பதை விளங்கலாம். எனவே இதைக் கருத்தில் வைத்து நமது ஊர்களில் உள்ள ஏழைகளுக்கேத் தோலை வழங்கி அவர்களை மகிழ்ச்சியாக வாழ வைக்க வேண்டும். மதரஸா, மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு இதை வழங்குவதை தவிர்ப்பது நன்று. தோல் அல்லாத மற்ற பணத்தைத் மேற்படி தொண்டு நிறுவனங்களுக்கு வழங்குவது நல்லது. மதரஸா மற்றும் தொண்டு நிறுவனங்கள் மொத்தமாகத் தோலை வாரிச்சென்று விடும்போது உள்ளுரில் உள்ள ஏழைகள் பாதிக்கப்படுவதை நாம் உணர வேண்டும்.

ஹாஜிகள் தனியாகக் குர்பானி கொடுக்க வேண்டுமா? :

ஹஜ்ஜுக்குச் சென்று துல்ஹஜ்ஜுப் பிறை பத்தாம் நாள் மினாவில் ஹாஜிகள் குர்பானி கொடுப்பார்கள். இவ்வாறு குர்பானி கொடுப்பவர்கள் தனியாக உள்ளுரில் குர்பானி கொடுக்க வேண்டுமா? இவ்வாறு கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்பதை நபி(ஸல்)அவர்களின் வழிமுறையிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம். ஏனெனில் நபி(ஸல்) அவர்களோ, அவர்களோடு வாழந்திருந்த அவர்களின் மற்றத் தோழர்களோ இவ்வாறு குர்பானி கொடுத்ததாக எந்த ஹதீஸ{ம் இல்லை. மேலும் நபி(ஸல்) அவர்கள் அவ்வாறு கொடுக்குமாறு கட்டளையிடவுமில்லை. எனவே ஹாஜிகள் மினாவில் கொடுக்கக் கூடிய குர்பானியே போதுமானதாகும்.

இறந்துவிட்டவர்கள் சார்பாக குர்பானி:

இறந்துவிட்டவர்கள் சார்பாக குர்பானி கொடுப்பதற்கு ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் எதுவுமில்லை. இறந்துவிட்டவர்கள் சார்பாக குர்பானி கொடுப்பதற்கு ஆதாரமாக எடுத்துக் காட்டப்படும் ஹதீஸ்கள் யாவும் பலவீனமானதாகவே உள்ளது. மேலும் நபி(ஸல்) அவர்கள் அறிவித்ததாக அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கும் கீழ்க்கண்ட ஹதீஸ் இறந்துவிட்டவர்கள் சார்பாக குர்பானி கொடுப்பதை தடுக்கிறது.

‘ஆதமின் மகன் இறந்துவிட்டால் மூன்று விஷயத்தைத் தவிர மற்ற எல்லாத் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டு விடுகின்றன. அவை 1. நிரந்தர தர்மம், 2. பயன்தரும் கல்வி, 3. தந்தைக்காகச் துஆச் செய்யும் நல்ல குழந்தை என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்).

இறந்து விட்டவர்களுக்கு நன்மை சேர்க்கும் வழி மேற்கண்ட ஹதீஸில் குறிப்பிடப்பட்ட அந்த மூன்று செயல்கள்தாம். இவை அல்லாத வேறு வழிகளில் நன்மை சேரும் என்றால் அதை நபி(ஸல்) அவர்கள் தெளிவாகச் சொல்லியிருப்பார்கள். மேலும் இறந்தவர்கள் சார்பாக குர்பானி கொடுக்கும் விஷயத்தில் நபி(ஸல்) அவர்கள் குர்பானி கொடுக்கும்படி கூறவில்லை. ஸஹாபாக்களும் கொடுத்ததில்லை.

நபி(ஸல்) அவர்கள் காலத்தில் ஒருவர் தனக்காகவும், தன் குடும்பத்தினருக்காகவும் ஒரு ஆட்டையே குர்பானி கொடுப்பர் என்று அபூ அய்யூப் (ரலி) அவர்களின் கூற்று (திர்மிதீ, இப்னுமாஜா) நபித்தோழர்கள் தங்கள் குடும்பத்திற்காக மட்டுமே குர்பானி கொடுத்துள்ளார்கள். இறந்தவர்களுக்காக குர்பானி கொடுக்கவில்லை என்பதைத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.

இறந்தவர்கள் சார்பாக குர்பானி கொடுக்கலாம் என்று கூறக்கூடியவர்கள் எடுத்துவைக்கும் ஹதீஸ்கள் யாவும் ஆதாரப்பூர்வமானது அல்ல.குர்பானியின் மூலம் அல்லாஹ் எதிர்பார்ப்பது இறையச்சம் மட்டுமே. இந்த இறையச்சத்தை, அவரவர் கொடுக்கும்போதுதான் வெளிப்படும். இறந்தவருக்காக நாம் கொடுப்பது அவர்களின் இறையச்சத்தை வெளிப்படுத்தாது.

( அல்லாஹ் மிக அறிந்தவன் )

One comment

  1. ஜசாகல்லாஹ் ஹைரன் (அல்லாஹ் உங்களுக்கு இதற்குறிய கூலியை கொடுப்பானாக!)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *