பல்லாயிரக்கணக்கான உயிர்களை பலிகொண்ட சுனாமி அலையால் பெருமளவில் பாதிக்கப்பட்டது நாகப்பட்டினம். உள்ளூர் சன் டிவி முதல் பிபிசி, சி.என்.என் வரை நிருபர்கள் கடற்கரையில் நின்று கையில் மைக் பிடித்து ‘.. நாகப்பட்டினத்திலிருந்து’ என்று செய்தி வாசிக்கிறார்கள். பிரதமர், முதல்வர், கட்சித்தலைவர்கள் அனைவரும் எங்கள் ஊரை வந்து எட்டிப்பார்த்துவிட்டு செல்கிறார்கள். பல வெளி நாட்டு தினசரிகளில், இந்திய வரைபடத்தில் நாகப்பட்டினத்தை தனியாக குறிப்பிடுகிறார்கள். நாகப்பட்டினத்திலிருந்து வரும் செய்திகள், புகைப்படங்கள் தலைப்புச் செய்திகளாக இடம்பெறுகின்றன. ஒருமணி நேரத்தில் உலகப்புகழ் பெற்று விட்டது எங்கள் ஊர். ஆனால், இந்தப்புகழுக்கா ஆசைப்பட்டோம்?
ஒருவகையில் இத்தகைய புகழ் நாகைக்கு புதியது அல்ல.
விசுவின் ஏதோ ஒரு படத்தில் ஒரு காட்சி வரும்.. அது பற்றி நினைவில் இருப்பதை சொல்கிறேன்,
வீட்டு புரோக்கர்: “இந்த வீட்டிலே எல்லா வசதியும் இருக்கு சார். ஆனா.. காத்து வர்றதுததான் பிரச்னை.. ஜன்னலே கிடையாது”
வீடு பார்க்க வந்தவர்: “எனக்கு இந்த மாதிரி வீடுதான் வேணும். இந்த காத்தே வேணாம்னுதானே நாகப்பட்டினத்துலேருந்து ஓடி வந்திருக்கேன்!”
..அப்போதுதான் நாகப்பட்டினத்தில் பெரும் புயலடித்து ஓய்ந்திருந்தது.
11 நவம்பர் 1977 அன்று மாலை சீறலாக ஆரம்பித்த காற்று, அன்று இரவு கடும் உக்கிரத்துடன் ஊரையே புரட்டிப்போட்டது. பெரும் மழையும் சேர்ந்து கொண்டது. புயல் எழுப்பிய ஓசை குலை நடுங்க வைத்தது. வீட்டுக்கூறையின் ஓடுகள் பறந்து விழுந்தன. பல வீடுகளில் முற்றத்திற்கு மேல் தென்னங்கூரையால் காற்றுப்பந்தல் போட்டிருப்பார்கள். அவையெல்லாம் பிய்த்துக்கொண்டு பறந்தன. முழு காற்றுப்பந்தலும் பறந்து போய் வேறிடத்தில் விழுந்ததும் நடந்தது. இரும்பால் ஆன மின்சார கம்பங்கள் குச்சிகளைப்போல் உடைக்கப்பட்டதும், வளைக்கப்பட்டதும், ‘காற்றிற்கு இவ்வளவு வலிமை உண்டா?’ என்று மலைக்க வைத்தது.
ஒட்டு மொத்த இந்தியாவும் நாகப்பட்டினத்தை அறிந்தது அப்போதுதான் என்று நினைக்கிறேன்.
அதன் பிறகு புயல் நாகையின் அழையா விருந்தாளியாக ஆகிப்போனது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் தகவல் சொல்லி விடும், ‘ நான் வரப்போகிறேன்’ என்று. சில முறை வந்து ‘சும்மா நலம் விசாரித்து விட்டு’ செல்லும். வேறு சில முறை வரும் வழியிலேயே திசை மாறி ஆந்திரா பக்கம் சென்று விடும். எப்படியோ புயல் என்பது நாகப்பட்டினத்தின் ஒரு அடையாளமாகவே மாறிப்போனது!
இந்த முறை கடலும் தன் பங்குக்கு வந்து, இருந்து, விருந்து சாப்பிட்டுவிட்டு சென்றிருக்கிறது. இனி ‘சுனாமி’ என்றாலும் நாகப்பட்டினம் நினைவுக்கு வரும்!
இருக்கட்டுமே! அணுகுண்டு தாக்குதலுக்கு பிறகு இரு ஜப்பானிய நகரங்கள் புத்துயிர் பெற்று எழவில்லையா? அது போல் நாகப்பட்டினமும் வீறு கொண்டு எழ வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திப்போம். அதற்கு முன், உறவுகளையும், உடமைகளையும் இழந்து தவிக்கும் நெஞ்சங்கள் ஆறுதல் பெற வேண்டியும் பிரார்த்திப்போம்.
வணக்கம் நாகப்பட்டினக்காரரே!
அங்கே மக்கள் எல்லோரும் பழைய நிலைக்கும், வாழ்க்கைக்கும் திரும்பியாச்சா?
நல்ல பதிவு! இன்னும் எழுதுங்கள்!
என்றும் அன்புடன்,
துளசி.
நன்றி துளசி!
நான் தற்போது வசிப்பது சிங்கப்பூரில். நினைவலைகள் மட்டும் என்றும் நாகையில். அங்கிருந்து வரும் செய்திகளைக்கொண்டு மக்கள் பழைய நிலைக்கும் வாழ்க்கைக்கும் திரும்பிக்கொண்டிருப்பதாக அறிகிறேன்.
அன்புடன்
சலாஹ¤த்தீன்
dont use blogs to spread islam and defend idealogies of islam…this place exclusively for Tamilians irrespective of religion…talk about happenings of tamil community or literature and world news.