Featured Posts

புனித ஹஜ் பயணம் ஓர் வர்ணனை, பகுதி 1

சில ஆண்டுகளுக்கு முன்னால் ஹஜ் என்ற அந்தப் பெரும் கடமையை நிறைவேற்றிய நண்பர் எ- அப்துஸ்ஸலாம் மஸ்தூக்கா அவர்கள் ஹஜ் செய்பவர்களுக்கு வழிகாட்டியாக அமையும் விதத்தில் அந்தப் பயணத்தை உணர்ச்சிப்பூர்வமாக தொகுத்து ‘நேர்முக வர்ணனை”யாக வழங்குகிறார். கட்டுரையின் பெயரிலேயே இந்த அனுபவக் கட்டுரை பல ஆண்டுகளுக்கு முன்னால் புத்தகமாகவும் வந்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

குறிப்பு, இஸ்லாத்தின் மீதானக் குற்றச்சாட்டுக்களுக்கான விளக்கத்தை ”ஹஜ் பெருநாள் கழிந்த பின் தொடர்வேன். அதுவரை ”புனித ஹஜ் பயணத்தின் நேர்முக வர்ணனை” தொடர்ந்து கொண்டிருக்கும்.

அன்புடன்

அபூ முஹை

——————————————–

பகுதி: ஒன்று



புனித ஹஜ்ஜின் நேர்முக வர்ணனை.

சமத்துவ மார்க்கம் இஸ்லாம்.இஸ்லாம் ஓர் உலக மார்க்கம். இதன் அனைத்து வணக்க வழிபாடுகளும் உலகளாவிய அளவில் மனித குலத்தை ஒன்றுபடுத்துவதாக இருக்கும். திருமறை குர்ஆனின் போதனைகளும் திரு நபி (ஸல்) அவர்களின் செயல் பாடுகளும் இந்த இனிய மார்க்கத்தின் வழிகாட்டிகள்.

இந்த இனிய இஸ்லாம் இவ்வுலகிற்கு சமத்துவத்தைத் தந்தது. சகோதரத்துவத்தை போதித்தது. முழு மனித சமுதாயத்தையும் ஓரணியில் ஒன்றுபடுத்தும் உன்னத வழியைக் காட்டியது.

இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகளில் ஒன்றான தொழுகை, வெறும் குனிதலையும், சிரம் பணிதலையும், உதட்டளவில் மந்திரங்கள் மொழிவதையும், கொண்ட சடங்கு அல்ல. நாள் ஒன்றுக்கு ஐந்து நேரம், படைத்த இறைவனை வணங்க பள்ளிவாசலில் ஒன்று கூடும்போது – அங்கு ஏழை, செல்வந்தன் என்னும் ஏற்றத் தாழ்வு களையப் படுகின்றது. உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்னும் வேற்றுமை வேரறுக்கப் படுகின்றது. முதலில் வந்தவர் முதலில். அடுத்தடுத்து வந்தவர் அடுத்தடுத்த வரிசைகளில். அரசனும் ஆண்டியும் அருகருகில். அவரவர் பகுதியில் உள்ள பள்ளிவாசல்களில் ஐந்து நேரமும் ஒன்று கூடும்போது அங்கே ஒரு சமத்துவம்.

வாரம் ஒருமுறை வெள்ளிக் கிழமைத் தொழுகையில் ஊரே ஒன்று கூடும்போது அதைவிட சற்று அதிக சமத்துவம்.

ஆண்டுக்கு ஒரு முறை புனித மக்காவின் அரபாத் பெருவெளியில், உலக முஸ்லிம்கள் ஒன்று திரளும்போது மாபெரும் சமத்துவம். இதைவிடப் பெரிய சமத்துவம் இப்பாருலகில் வேறு எங்குமே இல்லை.வேறு எதுவுமே இல்லை. இது தான் ஹஜ்.இனத்தால், குலத்தால், நிறத்தால், தேசத்தால், உண்ணும் உணவால், உடுத்தும் உடையால், பேசும் மொழியால், பின்பற்றும் கலாச்சாரத்தால், வேறு பட்ட அனைவரும், ஒரே இடத்தில் ஒன்று திரண்டு, ஒரே உடை அணிந்து, ஒரே மறையைப் பின்பற்றி, ஒரே இறையை இறைஞ்சும் உன்னதப் பண்பாடு. இது தான் ஹஜ்.

உலகின் அனைத்து கண்டங்களும் இங்கே சங்கமம்.

உலகின் அனைத்து நாடுகளும் இங்கே சங்கமம்.

உலகின் அனைத்து மொழிகளும் இங்கே சங்கமம்.

உலகின் அனைத்து நிறங்களும் இங்கே சங்கமம்.

உலகின் அனைத்து மனிதர்களும் இங்கே சரிசமம்.

ஆம் இது தான் ஹஜ்.

——————————————–

புண்ணிய சீலர்கள் வருகை.

மக்காவில் ‘கஃபா” என்னும் புனித இறையாலயத்தை இறைவனின் தோழர் நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களும், அவர்களின் அருமந்த மைந்தர், நபி இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் புணர் நிர்மாணம் செய்து முடித்த போது, புனித ஹஜ்ஜூக்குப் புறப்பட்டு வருமாறு மக்களை அழைக்கும் படி, இறைவன் கூறினான்.

‘மக்களுக்கு ஹஜ்ஜைப் பற்றி அறிவிப்பீராக! அவர்கள் நடந்தும் ஒவ்வொரு மெலிந்த ஒட்டகத்தின் மீதும் உம்மிடம் வருவார்கள். அவை அவர்களைத் தொலைவிலுள்ள ஒவ்வொரு பாதையிலிருந்தும் கொண்டு வந்து சேர்க்கும்” என்று கூறினோம். (திருக் குர்ஆன் 22 27)

நடந்தும், ஒட்டகங்களில் சவாரி செய்தும் வந்திறங்கிய காலம் போக- இப்போது- கார்களிலும் பஸ்களிலும் தரை மார்க்கமாக-கப்பல்களில் கடல் மார்க்கமாக- விமானங்களில் ஆகாய மார்க்கமாக-

புனித ஹஜ்ஜை நிறைவேற்ற, உலகின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் மக்கள் திரள் திரளாக வந்துக் கொண்டிருக்கின்றனர். துல் கஅதா மாதம் தொடங்கிவிட்டால் போதும், நாளுக்கு நாள் இறைவனின் விருந்தினர்கள் எண்ணிக்கை, அதிகரித்துக் கொண்டே போகின்றது.

ஜித்தா ‘இஸ்லாமியத் துறைமுகம்” கப்பல்களால் நிரம்பி வழிகின்றது. தீவுகளே இடம் பெயர்ந்து, நீலத் திரைக் கடலில் நீந்தி வந்தனவோ! என வியக்கும் வண்ணம், பெரும் பெரும் கப்பல்களில் புண்ணிய சீலர்கள் வந்திறங்குகின்றனர்.

ஜித்தா, மன்னர் அப்துல் அஜீஸ் சர்வதேச விமான தளத்தில், ஆகா! இவையென்ன? பறவைகளின் அணிவகுப்பா? இல்லை இல்லை. பறந்து வந்த விமானங்களின் அணிவகுப்பு.

அகில உலகத்தையும் ஆட்டிப் படைக்கும் அமெரிக்காவிலிருந்து –

ஒரு காலத்தில் சூரியனே அஸ்தமிக்காத நிலப்பரப்பை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த இங்கிலாந்திலிருந்து –

காணும் இடமெல்லாம் காடுகளை உள்ளடக்கிய ஆப்பிரிக்காவிலிருந்து –

காரல் மார்க்ஸின் கம்யூனிஸ தேசங்களிலிருந்து –

முஸ்லிம்கள் எண்ணிக்கையில் முதலிடம் வகிக்கும் இந்தோனேசியாவிலிருந்து –

மனங்குளிரும் மரியாதைக்குப் பேர் போன மலேசியாவிலிருந்து –

செல்வச் செழிப்பு மிக்க சிங்கப்பூரிலிருந்து –

இதயம் கவரும் பசுமை நிறைந்த இலங்கையிலிருந்து –

வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியாவிலிருந்து –

பச்சைப் பிறைக் கொடி பாகிஸ்தானிலிருந்து –

பங்காளி நாடாம் வங்காள தேசத்திலிருந்து –

இன்னும் இவை போன்ற எண்ணற்ற தேசங்களிலிருந்து –

வண்ண வண்ணப் பறவைகளாய் வானவெளிப் பாதையில் பறந்து வந்த விமானங்களிலிருந்து – இலட்சக் கணக்கான இலட்சிய வாதிகள் புனித ஹஜ்ஜை நிறைவேற்ற வந்திறங்குகின்றனர்!

——————————————–

திக்கெட்டும் தல்பிய்யா முழக்கம்.

செங்கடலின் மணமகள்” என வார்த்தைகளால் வர்ணிக்கப் படும் ஜித்தா நகரம் விழாக் கோலம் பூண்டுள்ளது.

ஆகாய மார்க்கமாகவும் கடல் மார்க்கமாகவும் வந்திறங்கிய ஹாஜிகள், பயணக் களைப்புத் தீரச் சற்று ஓய்வெடுத்து விட்டு, புனித மக்காவை நோக்கி பயணிக்கின்றனர்.

ஜித்தாவுக்கும் புனித மக்காவுக்கும் இடைப்பட்ட தூரம் சுமார் 65 கிலோ மீட்டர். அகன்று விரிந்த அதிவிரைவுச் சாலைகளில் கார்களும் பஸ்களும் சீறிப் பாய்கின்றன.

அண்டை நாடுகளாம் அரபு நாடுகளின் அனைத்து சாலைகளும் மக்காவை நோக்கி! அகன்ற சாலைகளில் அணி அணியாக வந்துக் கொண்டிருக்கும் அனைத்து வாகனங்களும் மக்காவை நோக்கி!

தரை மார்க்கமாக ஹஜ்ஜுக்கு வருபவர்கள் – அலை கடலெனத் திரண்டு வந்த வண்ணம் உள்ளனர். எல்லாத் திசைகளிலிருந்தும் வருகின்ற ஹாஜிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள், நேரத்துக்கு நேரம், கூடிக் கொண்டே போகின்றது. நூறுகள் ஆயிரங்களாக, ஆயிரங்கள் இலட்சங்களாக, கணிப் பொறியின் கணக்கு கூடிக் கொண்டே போகின்றது. அத்தனை இலட்சம் பேரையும் ஆண்டு தோறும் அரவணைக்கின்றது மக்கத் திரு நகரம்.

அனைவரின் இதயங்களிலும் ஆண்டவனின் பக்தி!

அனைவரின் முகங்களிலும் ஹஜ் செய்யும் மகிழ்ச்சி!

அனைவரின் நாவுகளிலும் தல்பிய்யா என்னும் மந்திரம்!

லப்பைக்- அல்லாஹும்ம லப்பைக்

லப்பைக்- லாஷரீக்க லக லப்பைக்

இன்னல் ஹம்த- வந் நிஃமத்த லக வல் முல்க்

லா ஷரீக்க லக்

என்பது நபி (ஸல்) அவர்களின் தல்பிய்யாவாக இருந்தது.அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) ஆதாரம்: திர்மிதி (755)

இலட்சக் கணக்கான ஹாஜிகளின் திரு வாய்கள் அனைத்தும், இரவும் பகலும், இருபத்து நான்கு மணி நேரமும் முழங்கிக் கொண்டிருக்கும் மூல மந்திரத்தின் பொருள் இது தான்.

வந்தேன் இறைவா! வந்தேன் இறைவா!

உன் அழைப்பை ஏற்று இதோ வந்தேன் இறைவா!

உனக்கு நிகரானவர் எவருமில்லை

அருளும் ஆட்சியும் புகழும் உனக்கே!

உனக்கு நிகரானவர் எவருமில்லை.

ஆகா! இந்தத் தாரக மந்திரத்தை ஹாஜிகள் உச்சரிக்கும் போது அவர்களின் உள்ளங்கள் குளிர்கின்றன. கேட்கும் போது நம் செவிகள் குளிர்கின்றன.ஒரு முறையா? இரு முறையா? ஓராயிரம் முறையா? இல்லை. இதற்கு எண்ணிக்கையே இல்லை. புனித ஹஜ்ஜுக்குப் புறப்பட்டதிலிருந்து, பகலிலும், இரவிலும், காலையிலும், மாலையிலும், நிற்கும் போதும் நடக்கும் போதும் வாய் மொழிகின்றது. உறங்கும் போது கூட உள்ளங்கள் மொழிகின்றனவோ?

அவரவர் இல்லங்களிலிருந்து, புனித ஹஜ்ஜுக்குப் புறப்பட்டது முதல் மொழியத் தொடங்கிய ‘தல்பிய்யா” முழக்கம், புனித மக்காவுக்கு வருகின்ற வழி நெடுகிலும், வந்து சேர்ந்த பின்னரும், புனித ஹஜ்ஜின் புண்ணியத் தலங்கள் முழுவதும், எட்டுத் திக்கும் எதிரொலித்துக் கொண்டே இருக்கின்றது.

——————————————–

ஹஜ்ஜின் வகைகள்.

ஹஜ் கடமையை மூன்று வகையாக நிறைவேற்றலாம்.

1.ஹஜ்ஜை மட்டும் நிறைவேற்றுவதாக முடிவு செய்து அதை நிறைவேற்றுதல். (இது இப்ராத் எனப்படும்)

2.ஹஜ்ஜுடன் உம்ரா என்னும் கடமையையும் சேர்த்து ஒரே இஹ்ராமில் நிறைவேற்றுதல்.(இது கிரான் எனப்படும்)

3.முதலில் உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்து அதை நிறைவேற்றியவுடன் மக்காவில் தங்கியிருந்து, ஹஜ்ஜுடைய நேரம் வந்ததும், மறுபடியும் இஹ்ராம் அணிந்து ஹஜ்ஜை நிறைவேற்றுதல்.(இது தமத்துவ் எனப்படும்)

———————————————————–

இஹ்ராம் உடையுடுத்திய ஏந்தலர்கள்.

ஹஜ் அல்லது உம்ராச் செய்ய, புனித மக்காவுக்கு வரும்போது ஒவ்வொரு வழியிலும் ஒரு எல்லையை நபி (ஸல்) அவர்கள் நிர்ணயம் செய்திருக்கிறார்கள். இந்த எல்லைக்கு ‘மீக்காத்” என்று பெயர்.

ஹஜ் அல்லது உம்ராச் செய்ய வருபவர்கள், இந்த எல்லையை அடையும் போது ‘இஹ்ராம்” உடை அணிந்து தான் நுழைய வேண்டும். ஆகாய மார்க்கமாக வருபவர்கள், ‘மீக்காத்” எல்லையைக் கடந்தே வரவேண்டியிருப்பதால், புறப்படும் இடத்திலிருந்தே குளித்து இஹ்ராம் அணிந்து வந்து விடுகின்றனர்.

கடல் மார்க்கமாக, கப்பலில் வருபவர்கள், ‘மீக்காத்” எல்லையை அடையும் போது, கப்பல் நிறுத்தப் பட்டு அறிவிப்பு செய்யப் படுகின்றது. ஹாஜிகள் கப்பலிலேயே குளித்து இஹ்ராம் உடை அணிந்து தயாராகி விடுகின்றனர்.

தரை மார்க்கமாக வருபவர்கள், அவரவர் வரும் வழியில் உள்ள ‘மீக்காத்” எல்லையில் குளித்து இஹ்ராம் அணிய வசதியாக, ஒவ்வொரு ‘மீக்காத்” எல்லையிலும், பல நூற்றுக் கணக்கில், நவீன வசதிகளுடன் கூடிய குளியலறைகள் கட்டப் பட்டு, வசதிகள் செய்யப் பட்டுள்ளன.

உள் நாட்டிலிருந்தும், அண்டை நாடுகளிலிருந்தும், தரை மார்க்கமாக ஹஜ்ஜின் நாட்களுக்கு முன்னதாகவே புனித மக்காவுக்கு வரும் ஹாஜிகள் இந்த எல்லையை அடைந்ததும் குளித்து இஹ்ராம் உடை தரித்து, முதலில் உம்ராச் செய்வதற்கு தயாராகின்றனர்.

எல்லையைக் கடந்து வரும் எல்லோரும் இது வரை அணிந்திருந்த ஆடம்பர ஆடைகளைக் களைந்து ‘இஹ்ராம்” என்னும் இரு வெண் துணிகளை ஆண்கள் அணிந்துக் கொள்கின்றனர். (பெண்கள் அவரவர் வழக்கமாக உடுத்தும் உடைகளை உடுத்திக் கொள்ளலாம்)

நபி (ஸல்) அவர்கள் இஹ்ராமுக்காக தையல் இல்லாத ஆடையை அணிந்ததை நான் பார்த்துள்ளேன். மேலும் (இஹ்ராமுக்கு முன்னால்) குளித்தார்கள்.அறிவிப்பவர்: ஸைத் பின் தாபித் (ரலி) ஆதாரம்: திர்மிதி (760)

இஹ்ராம் உடையை அணிந்தவர்களாக-

இவ்வுலக இன்பங்களைத் துறந்தவர்களாக-

நித்திய வாழ்க்கையை நினைத்தவர்களாக-

இறை பக்தியை இதயத்தில் தேக்கியவர்களாக-

இறைவனின் அருளுக்கு ஏங்கியவர்களாக-

ஈருலக நற்பேற்றுக்கு இறைஞ்சியவர்களாக-

இறைவனிடம் இரு கரம் ஏந்தியவர்களாக-

புறப்பட்டு விட்டனர், புண்ணிய சீலர்கள், புனித மக்காவை நோக்கி! மீள ஒலிக்கிறது ‘தல்பிய்யா” முழக்கம், முன்னை விட பன்மடங்கு உயர்ந்த தொணியில்.

லப்பைக்- அல்லாஹும்ம லப்பைக்லப்பைக்- லா ஷரீக்க லக லப்பைக்இன்னல் ஹம்த வந் நிஃமத்த லக வல் முல்க்

லா ஷரீக்க லக்.

‘என்னிடம் ஜிப்ரீல் (அலை) வந்து தல்பிய்யாவின் போதும், இஹ்ராம் கட்டும் போதும், உரத்த குரலில் கூறுமாறு என் தோழர்களுக்குக் கட்டளையிடக் கூறினார்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்: ஸாயிப் (ரலி) ஆதாரம்: திர்மிதி (759)

மக்காவை நோக்கி வரும் மாபெரும் சாலைகளில் வாகனங்கள் அசுர வேகத்தில் பறக்கின்றன. வாகனங்களின் வேகத்தை விட, வந்திருப்போரின் இதயத்தின் வேகம் இப்போது அதிகம்.

மக்காவை நோக்கி வரும் அனைத்து பிரதான சாலைகளிலும் மக்கா நகர எல்லைக்கு வெளியே பரிசோதனை மையங்கள் அமைக்கப் பட்டுள்ளன. அனைத்து வாகனங்களும் நிறுத்தப் பட்டு அனைவரும் ஹஜ்ஜை நிறைவேற்றுவதற்கு முறையான அனுமதி பெற்றுள்ளனரா? என பரிசோதிக்கப் படுகின்றனர்.

சமீப காலம் வரை உள் நாட்டிலிருந்தும் அண்டை நாடுகளிலிருந்தும், தரை மார்க்கமாக ஹஜ்ஜூக்கு வருபவர்கள் அவரவர் தம் சொந்த வாகனங்களில் வந்து கொண்டிருந்தனர். இதனால் மக்கா நகரின் சாலைகளில் போக்கு வரத்து நெரிசல் ஏற்படுகின்றது.

மக்கா நகரப் போக்கு வரத்துத் துறை – சகல வசதிகளையும் செய்திருந்தாலும் கூட, பல்லாயிரக் கணக்கான வாகனங்கள் ஒரே சமயத்தில் மக்காவின் உள்ளே நுழைந்தால் கட்டுப் படுத்துவது கடினமானக் காரியம் அல்லவா?எனவே சில ஆண்டுகளுக்கு முன்பு, சவூதி அரசு ஒரு புதிய ஏற்பாட்டை நடை முறைக்குக் கொண்டு வந்தது. அதன்படி மக்கா நகர எல்லைக்கு வெளியே ஒவ்வொரு வழியிலும் ‘கார் நிறுத்துமிடங்கள்” அமைத்து சிறிய வாகனங்கள் அனைத்தும் இங்கேயே நிறுத்திவிட ஏற்பாடு செய்யப் பட்டது.

இந்தக் கார் நிறுத்துமிடங்களில் அனைத்து சிறிய வாகனங்களும் வரிசை வரிசையாக ஒரு ஒழுங்கு முறையுடன் நிறுத்தப் பட்டு, உரிமையாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப் படுகின்றது. ஹஜ்ஜின் அனைத்து செயல்களையும் முடித்து விட்டு இங்கு வந்து, தமது அடையாள அட்டையைக் காண்பித்து உரிமையாளர்கள் தங்கள் வாகனங்களை எடுத்துச் செல்ல வேண்டும்.

இந்தத் தீவுத் திடல் முழுவதும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை கார்கள் மயம். உலகின் அனைத்து நாட்டுத் தயாரிப்புக் கார்களும், அனைத்து மாடல்களும், இங்கே அணிவகுத்து நிறுத்தப் பட்டிருக்கும் அழகே அழகு.

இந்த இடத்திற்கு அப்பால், பெரிய வாகனங்கள்- பேருந்துகள் மட்டுமே அனுமதிக்கப்படும். சிறிய வாகனங்களில் வந்து – தங்களது வாகனங்களை இங்கே நிறுத்தியவர்கள் – இங்கிருந்து புறப்படும் அரசுப் பேருந்துகளில் மக்காவை நோக்கிப் பயணிக்கின்றனர்.மீண்டும் தொடங்குகிறது பயணம்!மீள ஒலிக்கிறது தல்பிய்யா முழக்கம்!

லப்பைக்- அல்லாஹும்ம லப்பைக்

லப்பைக்- லாஷரீக்க லக லப்பைக்

இன்னல் ஹம்த வந்நிஃமத்த லக வல் முல்க்

லா ஷரீக்க லக்.

——————————————–

(நேர்முக வர்ணனை தொடரும்)

2 comments

  1. நேரில் காண்பதுபோலவே உள்ளது வர்ணனைகள். நல்ல பதிவு, பாராட்டுக்கள். புத்தகத்தின் விபரங்களை(எந்த பதிப்பகம்) வெளியிட்டால் நல்லது.
    இஸ்மாயில், சிங்கை.

  2. ஹஜ் நேர்முக வர்ணனையை கண்ணுற்றேன், இருளில் நுழைந்திடும் ஒளிக் கீற்றாய் – ஒவ்வொரு வரிதனிலும் விழியின் ஒழித்திரையில் ஹஜ்ஜின் காட்சிகளை கண் முன் காட்டிய அபூ முஹை அவர்களுக்கு எனது பாராட்டுக்கள். இப்பதிவிற்கு உறுதுணையாக இருக்கும் அனைத்து சகோதரர்களுக்கும், இறைவன் அருள் புரிவானாக!

    அன்புடன்
    சுபஹான்,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *