Featured Posts

பத்ர் தரும் படிப்பினைகள்

இஸ்லாமிய எழுச்சியின் மைல்கல்லாகத் திகழ்ந்த தியாக நிகழ்ச்சியே ‘பத்ர்’ப் போராகும். போதிய முன்னேற்பாடுகள் இல்லாத சுமார் 313 பேர்கள், 1000 பேர் கொண்ட யுத்த படையை களத்தில் எதிர் கொண்டு ஈமானிய பலத்தாலும், தியாக குணத்தாலும் அல்லாஹ்வின் உதவியைப் பெற்று சிதறடித்த நிகழ்ச்சி அதுவாகும். இந்த ‘பத்ர்’ போர் வரலாற்றின் மூலம் நாங்கள் வேறு படிப்பினைகளைப் பெறலாம். அவற்றைச் சுருக்கமாக முன்வைப்பதே இவ்வாக்கத்தின் நோக்கமாகும்.

சுருக்கமான தகவல்

(ஹிஜ்ரி 2-ஆம் ஆண்டு ரமளான் பிறை 17-ல் நடந்த) ‘பத்ர்’ போர் குறித்த ஒரு சுருக்கமான தகவலை முதலில் முன்வைப்பது பொருத்தமென நினைக்கின்றேன். அபூ சுப்யான் மிகப் பெரும் வர்த்தகப் பொருட்களுடன் மதீனாவை அண்டிய பகுதியால் வருகின்றார் என்ற செய்தி நபி(ஸல்) அவர்களுக்குக் கிடைக்கின்றது. அந்த வியாபாரக் குழுவை மடக்கிப் பிடிப்பதற்காக நபி(ஸல்) அவர்கள் ஒரு கூட்டத்தை அழைத்துக்கொண்டு செல்கின்றார்கள். அபூ சுப்யான் உளவு பார்த்ததில் நபி(ஸல்) அவர்கள் தன்னைப் பிடிக்கக் கூடும் என்று அறிந்து மக்காவுக்கு செய்தி அனுப்புகின்றார். இதுதான் சந்தர்ப்பம் என நினைத்த மக்காவாசிகள் முஸ்லிம்களைப் பூண்டோடு அழிப்பதற்காகப் படைதிரட்டி வருகின்றனர்.

பின்னர் அபூ சுப்யான் வேறு வழியாக மக்கா சென்றுவிட முஸ்லிம்கள் ஆயுதக்குழுவுடன் மோதும் நிலை ஏற்படுகின்றது! ஈற்றில் இந்தப் போரில் முஸ்லிம்கள் வெற்றி பெருவதுடன் அபூ சுப்யான், அபூலஹப் போன்ற போரில் பங்கெடுக்காத குறைஷித் தலைவர்கள் போக மீதி முக்கியஸ்தர்கள் அனைவரும் ‘பத்ரி’ல் கொல்லப்பட்டு குறைஷிக் கூட்டம் வலு இழக்கச் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியிலிருந்து நாம் பெறவேண்டிய படிப்பினைகளை நோக்குவோம்.

அல்லாஹ்வின் கழாவை ஏற்றுக்கொள்ளல்:

‘வானங்கள், பூமியைப் படைப்பதற்கு 50 ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே படைப்பினங்களின் ‘கத்ரை’ (விதியை) அல்லாஹ் விதித்துவிட்டான்’ என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அம்ரிப்னுல் ஆஸ்(ரலி).
நூல் : முஸ்லிம்

‘பத்ர்’ யுத்தம் அல்லாஹ்வின் ‘கத்ரின்’ வல்லமையை மிகத்தெளிவாக உணர்த்தும் ஒரு நிகழ்ச்சியாகும். நபித் தோழர்கள் வியாபாரக் கோஷ்டியை இலக்கு வைத்தனர். அல்லாஹ் அவர்கள் யுத்தக் குழுவுடன் மோத முடிவுசெய்துவிட்டான். எனவே, இவர்கள் எத்தனை திட்டங்கள் போட்டாலும் அவர்களால் அல்லாஹ்வின் நாட்டத்தை மீறி வியாபாரக் குழுவைப் பிடிக்க முடியவில்லை.

‘(அபூ சுப்யான் தலைமையில் வரும் வியாபாரக் கூட்டம், அபூ ஜஹ்லின் தலைமையில் வரும் படையினர் ஆகிய) இரு கூட்டங்களில் (ஏதேனும்) ஒரு கூட்டத்தை (வெற்றி கொள்ளும் வாய்ப்பு) உங்களுக்கு உண்டு என்று, அல்லாஹ் வாக்களித்ததை நினைவு கூறுங்கள். ஆயுத பாணிகளாக இல்லாத (வியாபாரக் கூட்டம் கிடைக்க வேண்டுமென) நீங்கள் விரும்பினீர்கள். (ஆனால்,) அல்லாஹ் தன் திருவாக்குகளால் சத்தியத்தை நிலைநாட்டவும், காஃபிர்களை வெறுக்கவுமே நாடுகிறான்’. (8:7)

‘மேலும், குற்றவாளிகள் வெறுத்த போதிலும், அல்லாஹ் பொய்யை அழித்து (ஹக்கை) உண்மையை நிலை நாட்டவே (நாடுகிறான்)’ (8:8).

இங்கே அல்லாஹ்வின் நாட்டம் தான் நடைபெற்றது. இதுகுறித்து கஃப் இப்னு மாலிக் குறிப்பிடும் போது,

நபி(ஸல்) அவர்கள் குறைஷி களின் வியாபாரக் கூட்டத்தை இலக்கு வைத் துத்தான் வெளியேறினார்கள். எனினும் எவ்வித முன் ஏற்பாடோ, சந்திக்கும் நேரம் குறித்த பேச்சுக்களோ இல்லாது அல்லாஹ் அவர்களையும், காபிர்களையும் பத்ரில் ஒன்று சேர்த்தான்

எனக் குறிப்பிடுகின்றார்கள் (புகாரி).

இது குறித்து அல்லாஹ் குறிப்பிடும் போது,

‘(பத்ர் போர்க்களத்தில் மதீனா பக்கம்) பள்ளத்தாக்கில் நீங்களும், (எதிரிகள்) தூரமான கோடியிலும், (குறைஷி வியாபாரிகளாகிய) வாகனக்காரர்கள் உங்கள் கீழ்ப் புறத்திலும் இருந்தீர்கள். நீங்களும் அவர்களும் (சந்திக்கும் காலம், இடம் பற்றி) வாக்குறுதி செய்திருந்த போதிலும், அதை நிறைவேற்றுவதில் நிச்சயமாக கருத்துவேற்றுமை கொண்டிருப்பீர்கள். ஆனால், செய்யப்பட வேண்டிய காரியத்தை அல்லாஹ் நிறைவேற்றுவதற்காகவும், அழிந்தவர்கள் தக்க முகாந்தரத்துடன் அழிவதற்காகவும், தப்பிப்பிழைத்தவர்கள் தக்க முகாந்தரத்தைக் கொண்டே தப்பிக்கவும் (இவ்வாறு அவன் செய்தான்). நிச்சயமாக அல்லாஹ் செவியேற்பவனாகவும், அறிபவனாகவும் இருக்கின்றான்.’ (8:42)

அருகருகில் இருந்தும் நீங்கள் வியாபாரக்குழுவை சந்திக்கவில்லை. முன்னரே முறைப்படி யுத்தம் செய்வதாக முடிவுசெய்து திட்டமிட்டிருந்தால் கூட குறித்த நேரத்தில் குறித்த இடத்திற்கு வருவதில் உங்களுக்கிடையில் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கும். எனினும், அல்லாஹ்வின் விதி அதற்கான சூழலை ஏற்படுத்தி உங்களை ஒன்றுசேர்த்தது என்ற கருத்தை இந்த வசனம் தருகின்றது.

எனவே, வாழ்வில் ஏற்படும் இன்பமோ, துன்பமோ இரண்டுமே அல்லாஹ்வின் விதி என்பதை ஏற்று இன்பத்தில் தலைகால் தெரியாது ஆட்டம் போடாது, துன்பத்தில் துவண்டு போகாது இரண்டையும் சமமாக ஏற்று வாழும் பக்குவத்தைப் பெறவேண்டும். அதே நேரத்தில், விதி வரைந்த பாதை வழியே வாழ்க்கை போகும் என்று முயற்சி செய்யாமல் முடங்கிக் கிடக்கவும் கூடாது!

நபி(ஸல்) அவர்களின் திட்டமிடல் முனைப்புடனான செயற்பாடுகள் இதை எமக்குணர்த்துகின்றன.

கலந்தாலோசித்தலின் அவசியம்

மார்க்க விவகாரங்களில் அறிஞர்களுடனும், உலக விவகாரங்களில் குறித்த துறையில் ஆற்றல் உள்ளவர்களிடமும் ஆலோசனை செய்வது அல்லாஹ்வின் உதவியும், முஸ்லிம்களின் உலகியல் விவகாரங்களில் நன்மை நடப்பதற்கும் வாய்ப்பை ஏற்படுத்தும் முக்கிய அம்சமாகும்.

நபி(ஸல்) அவர்கள் போருக்கு முன்னர் நபித்தோழர்களிடம் ஆலோசனை கேட்டார்கள். தாம் விரும்பும் முடிவை சில தோழர்கள் முன் வைத்தனர். அப்போது கூட அவர்கள் திடீர் முடிவு செய்யாது மதீனத்து தோழர்களின் முடிவை அறியும் ஆர்வத்தில் தொடர்ந்தும் ஆலோசனை செய்தார்கள். அவர்களின் ஆலோசனையும் சாதகமாக அமைந்த பின்னரே போர் செய்யும் முடிவை எடுத்தார்கள். இது ஆலோசனை செய்வதின் அவசியத்தை உணர்த்து கின்றது.

மற்றுமொரு நிகழ்ச்சியையும் இதற்கு உதாரணமாகக் கூறலாம்.

‘நபி (ஸல்) அவர்கள் ‘பத்ர்’ களம் சென்று மதீனா பகுதிக்கு நேராக இருக்கும் முதலாவது கிணற்றுக்கருகில் தமது கூடாரங்களை அமைத்துக் கொள்ளுமாறு உத்தரவிட்டார்கள். அப்போது ஹுபாப் இப்னுல் முன்தீர் என்ற நபித்தோழர் ‘அல்லாஹ்வின் தூதரே! இந்த இடத்தில் நாம் கூடாரமிடவேண்டும் என்பது அல்லாஹ்வின் கட்டளையா? அப்படியாயின் நாம் இதை விட்டும் ஒரு அடி முன்னாலோ, பின்னாலோ நகர மாட்டோம்! அல்லது உங்களது சொந்த அபிப்பிராயப்படி நீங்கள் தீர்மானித்த இடம் என்றால், என்னிடம் மாற்று அபிப்பிராயம் உள்ளது!’ என்றார். நபி(ஸல்) அவர்கள் தனது சொந்த முடிவு என்றதும், ‘அல்லாஹ்வின் தூதரே! இதற்கு பின்னரும் தொட்டிகள் உள்ளன. நாம் முன்னேறிச் சென்று அவற்றையும் எம் வசப்படுத்திக்கொள்ள வேண்டும். அதைத் தாண்டியிருக்கும் சிறிய நீர் தொட்டிகளிலிருந்து தண்ணீரை நாம் எடுத்துக் கொள்வோம். அப்போது நாம் தண்ணீர் குடிக்க அவர்கள் தாகத்தோடு போராடுவார்கள்’ என்று தனது அபிப்பிராயத்தைக் கூற அது போர்த்தந்திரத்திற்கும், எதிரிகளைப் பலவீணப்படுத்தவும் ஏற்ற யுக்தியாகத் திகழ்ந்ததால் நபி(ஸல்) அவர்கள் தனது முடிவை மாற்றி அவர் கருத்துப்படி செயற்பட்டார்கள்’
(அஸ்ஸீரதுன்னபவிய்யா-இப்னு ஹிஸாம்., அத் தபகாத்-இப்னு ஸஃத்).

நபியவர்கள் சுய கௌரவம் பாராது அடுத்தவர் கருத்தையும் மதித்து நடந்ததால், முஸ்லிம்களுக்கு நன்மை விளைந்தது. இது கலந்தாலோசனை செய்வதன் சிறப்பை எடுத்துக் காட்டுகின்றது.

எதிரிகள் குறித்த விழிப்புணர்வு

நபி(ஸல்) அவர்கள் மதீனாவில் இருக்கும் போதும் எதிரிகளின் நடமாட்டம் குறித்து புலனாய்வு செய்தார்கள். ‘பத்ர்’ களம் வந்த போதும் பலரை அனுப்பி புலணாய்வுத் தகவல் களைத் திரட்டினார்கள். ஒரு முறை அவர்களும் அபூபக்கர்(ரலி) அவர்களும் சேர்ந்து, களத்தில் தகவல் அறியச் சென்றனர். மற்றொரு முறை அலி, சுபைர் இப்னுல் அவ்வாம், ஸஃத் இப்னு அபீவக்காஸ் ஆகிய நபித்தோழர்களை அனுப்பி அவர்கள் மூலம் குறைஷிகளுக்கு தண்ணீர் இறைக்கும் இளைஞர்களைக் கைது செய்து அவர்கள் மூலம் எதிரிகளின் எண்ணிக்கை, படைபலம், முக்கிய தளபதிகள் குறித்த தகவல்கள் என்பவற்றை அறிந்து கொண்டார்கள்.

இந்நிகழ்ச்சி எதிரிகளின் செயல்திட்டங்கள், பலம், பலவீனம் பற்றிய அறிவின் அவசியத்தைத் உணர்த்துகின்றது. இந்த விழிப்புணர்வு முஸ்லிம்களிடம், அதிலும் குறிப்பாக சமூகத் தலைவர்களிடம் அவசியம் இருந்தாக வேண்டும்.

அல்லாஹ்வின் உதவியில் நம்பிக்கை வைத்தல்:

உலகியல் ரீதியில் முடிந்த வரை முயற்சி செய்யும் அதேவேளை ஆயுதத்திலோ, ஆட்பலத்திலோ நம்பிக்கை கொள்ளாமல் அல்லாஹ்வின் மூலமே உதவி கிடைக்கும் என்ற ஈமானிய பலத்தில் நாம் நம்பிக்கை வைக்க வேண்டும்.

நபித் தோழர்களிடம் போதிய யுத்த சாதனங்கள் இருக்கவில்லை. 70 ஒட்டகங்களும், 60 கேடயங்களும் சுபைர் இப்னுல் அவ்வாம்(ரலி), மிக்தாத் இப்னு அஸ்வர் ஆகிய இருவரிடம் மட்டும் இரு குதிரைகளும் இருந்தன (அப்பிதாயா வன்னிஹாயா).

பௌதீக காரணிகளை வைத்து ஆராய்ந்தால் முஸ்லிம்கள் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அறவே இல்லை என்று தான் கூற வேண்டும். ஆனால், இந்த சிறுகூட்டம் அந்தப் பெரும் கூட்டத்தை சிதறடித்தது.

‘உங்கள் இருதயங்கள் திருப்தியடைவதற்காகவும், ஒரு நன்மாராயமாகவும் (இந்த வெற்றியை) அல்லாஹ் ஆக்கினான். அல்லாஹ்விடம் இருந்தே தவிர உதவி இல்லை. நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்’ (8:10).

‘எத்தனையோ சிறு கூட்டத்தார்கள், பெருங் கூட்டத்தாரை அல்லாஹ்வின் (அருள் மிக்க) அனுமதி கொண்டு வென்றிருக்கின்றார்கள். மேலும் அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்’ என்று கூறினார்கள். (2:249)

எனவே, முஸ்லிம்களின் முழுமையான நம்பிக்கை அல்லாஹ்வின் மீதே இருக்க வேண்டும். இந்தப் போரின் போது மழை பொழிந்து அது முஸ்லிம்களுக்குச் சாதகமாகவும், காஃபிர் களுக்குப் பாதகமாகவும் அமைந்து, மலக்குகள் முஸ்லிம்களுக்குத் துணையாகப் போரிட்டனர் என்பதை குர்ஆன் குறிப்பிடுகின்றது.
(பார்க்க 8:9-12., 8:17).

கட்டுப்படுதலும் தூய பிரார்த்தனையும் உதவியைப் பெற்றுத்தரும்:

போர் நிகழ முன்னரே நபி(ஸல்) அவர்கள் அதிகமதிகம் அழுதழுது அல்லாஹ்விடம் பிரார்த்தித்தார்கள். அவர்கள் அழுததால் ஏற்பட்ட உடல் அசைவினால் அவர்களது தோலில் போட்டிருந்த போர்வை கீழே விழ, அபூபக்ர் (ஸல்) அவர்கள் அதை எடுத்து அவர்களின் தோலில் போட்டவாறு ஆறுதல் கூறுவார்கள். (முஸ்லிம்)

இவ்வாறே நபித்தோழர்களும் அல்லாஹ் விடம் துஆ செய்தார்கள்.

‘(நினைவு கூறுங்கள்) உங்களை இரட்சிக்குமாறு உங்களிறைவனின் உதவியை நாடியபோது ‘(அணி அணியாக உங்களைப்) பின்பற்றி வரக்கூடிய ஓராயிரம் மலக்குகளைக் கொண்டு நிச்சயமாக உங்களுக்கு உதவி புரிவேன்’ என்று இறைவன் உங்களுக்கு பதிலளித்தான்.’ (8:9).

இவ்வகையில் பிரார்த்தனை முஃமீனின் பலமான ஆயுதமாகும். எனவே, இஹ்லாசுடன் அல்லாஹ்விடம் இரு கரம் ஏந்துவோமாக!

இஸ்லாத்தின் எதிரிகளுடன் நேச உறவு இல்லை

‘பத்ர்’ யுத்தம், கொள்கை உறவு தொப்புள் கொடி உறவை விட பலம் வாய்ந்தது என்ற உண்மையை உலகுக்கு உணர்த்திய ஒரு நிகழ்வாகும். தந்தை, பிள்ளை, சகோதரன் என்ற பாசம் இன்றி சத்திய கொள்கைக்கும், அசத்திய கோட்பாடுகளுக்குமிடையில் நடந்த போர் இது. தந்தை சத்தியத்தில்-தனயன் அசத்தியத்தில், தனயன் சத்தியத்தில்-தந்தை அசத்தியத்தில் என்ற நிலையில் இடம்பெற்ற இப்போரில் கொள்கையை இலட்சியமாகக் கொண்டு உறவுகள் எடுத்தெறியப்பட்டன. இஸ்லாத்தை எதிர்ப்போர் நெருங்கிய உறவினர்களாக இருப்பினும் அவர்களிடம் நேச உறவு இருக்கக்கூடாது என்ற கோட்பாட்டை இது முஸ்லிம் உலகுக்கு வழங்கியது.

கருத்துவேறுபாட்டின் போது குர்ஆன் சுன்னாவின் பால் மீளுதல்:

‘பத்ர்’ போர் முடிந்த போது முஸ்லிம்கள் மத்தியில் ‘கனீமத்’ பொருள் பற்றிய கருத்து வேறுபாடு எழுந்தது. இது முதல் போர், முதல் ‘கனீமத்’ என்பதால் இது குறித்து என்ன முடிவு எடுப்பது என்று தெரியாது கருத்து வேறுபாடு கொண்டனர். சிலர் ‘கனீமத்’தைப் பொறுக்கினர். அவர்கள் அவை தமக்குரியது என எண்ணினர். சிலர் இதில் கவனம் செலுத்தாது போரிட்டனர். மற்றும் சிலர் நபி(ஸல்) அவர்களுக்குப் பாதுகாப்பாக இருந்தனர். இவர்களுக்கு எதுவும் இல்லை என்ற நிலை ஏற்பட்டது. இது குறித்து கருத்து வேறுபாடு ஏற்பட்டபோது,

‘போரில் கிடைத்த வெற்றிப் பொருள் (அன்ஃபால்) களைப் பற்றி உம்மிடம் அவர்கள் கேட்கிறார்கள். (அதற்கு நபியே!) நீர் கூறுவீராக. ‘அன்ஃபால்’ அல்லாஹ்வுக்கும், (அவனுடைய) தூதருக்கும் சொந்தமான தாகும். ஆகவே, அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள். உங்களிடையே ஒழுங்குடன் நடந்து கொள்ளுங்கள். நீங்கள் முஃமீன்களாக இருப்பின் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள்’ (8:1).

என்ற வசனம் இறங்கியது. இதன் அடிப் படையில் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டது! எனவே, எமக்குள் ஏற்படும் பிணக்குகளையும், குர்ஆன், சுன்னா ஒளியில் தீர்த்துக்கொள்ள நாம் முயல்வோம்.

‘நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்குக் கீழ்ப் படியுங்கள், இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும், உங்களில் (நேர்மையான) அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்ப்படியுங்கள். உங்களில் ஏதாவது ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படுமானால் – மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புபவர்களாக இருப்பின் -அதை அல்லாஹ்விடமும், (அவன்) தூதரிடமும் ஒப்படைத்து விடுங்கள். இதுதான் (உங்களுக்கு) மிகவும் சிறப்பான, அழகான முடிவாக இருக்கும்’ (4:59).

அறிவின் முக்கியத்துவம்:

‘பத்ர்’ போரில் கைதிகளாக 70 காஃபிர்கள் பிடிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் 3 அல்லது 4 ஆயிரம் திர்கங்களை ஈட்டுத் தொகையாகக் கொடுத்து அல்லது 10 முஸ்லிம் சிறுவர்களுக்கு எழுத வாசிக்கக் கற்றுக்கொடுத்து விட்டு விடுதலை பெறலாம் என்று நபி(ஸல்) அறிவித்தார்கள். இவ்வாறு எழுத வாசிக்கக் கற்றுக்கொண்டவர்களில் ஒருவர் தான் ஸைத் பின் தாபித்(ரலி) அவர்களாவார்கள்’ (அத்தபகா துல் குப்ரா – இப்னு ஸஅத் 2116).

ஷைத்தான் தன் தோழர்களுக்கு சதி செய்வான்:

ஷைத்தான் மனிதனது பகிரங்க விரோதியாவான். அவன் எம்மை எப்படியும் நரகத்தில் தள்ளவே முயற்சி செய்வான். ‘பத்ர்’ யுத்தத்தில் இது தான் நடந்தது. காபிர்களின் உள்ளத்தில் கர்வத்தையும், மமதையையும் தூண்டி உங்களை யாராலும் ஜெயிக்க முடியாது என்ற எண்ணத்தை ஷைத்தான் ஏற்றினான். இறுதியில் ‘பத்ர்’ களத்தில் மலக்குகளைக் கண்ட போது, நீங்கள் பார்க்காததையெல்லாம் நான் பார்க்கின்றேன் எனக்கூறி தன்னைப் பின்பற்றியவர்களைக் கை விட்டு விட்டான்.

‘அவர்கள் தங்களிறைவன் அவர்களுக்கு அளித்ததை (திருப்தியுடன்) பெற்றுக் கொள்வார்கள். நிச்சயமாக அவர்கள் இதற்கு முன்னர் நன்மை செய்வோராகவே இருந்தனர்.’ (51:16)

என்ற வசனமும் இதை உணர்த்து கின்றது. எனவே ஷைத்தானை அறிந்து விழிப்புடன் இருக்கவேண்டும். மறுமையிலும் ஷைத்தான் தன் தோழர்களைக் கைவிட்டுவிடுவான்.

‘(மறுமையில் இவர்கள் பற்றித்) தீர்ப்புக் கூறப்பெற்றதும் ஷைத்தான் (இவர்களை நோக்கி)

”நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு உண்மையானதையே வாக்களித்திருந்தான். ஆனால், நான் உங்களுக்கு வாக்களித்திருந்தேன் என்றான். நான் உங்களுக்குக் கொடுத்த வாக்கில் மாறுசெய்துவிட்டேன். நான் உங்களை அழைத்தேன். அப்போது நீங்கள் என் அழைப்பை ஏற்றுக்கொண்டீர்கள் என்பதைத் தவிர எனக்கு உங்கள் மீது எந்த அதிகாரமுமில்லை. ஆகவே, நீங்கள் என்னை நிந்திக்காதீர்கள். உங்களை நான் காப்பாற்றுபவனில்லை. நீங்களும் என்னைக் காப்பாற்றுகிறவர்களில்லை. நீங்கள் முன்னால் என்னை (அல்லாஹ்வுக்கு) இணையாக்கிக் கொண்டிருந்ததையும், நிச்சயமாக நான் நிராகரித்து விட்டேன். நிச்சயமாக அக்கிரமக் காரர்களுக்கு நோவினை தரும் வேதனை உண்டு” என்று கூறுவான்.’ (14:22)

எனவே, ஷைத்தானை எமது பகிரங்க எதிரியாகவே எடுத்து அவனை விட்டு விலகி வாழ முயற்சிப்போமாக!

நபியவர்களே அழகிய முன்மாதிரி:

‘அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன் மாதிரி உங்களுக்கு இருக்கிறது’ (33:21).

நபியவர்களே எமது முன்மாதிரியாவார்கள். அவர்களின் அழகிய முன்மாதிரியை நாம் ‘பத்ர்’ போரின் போது பல அடிப்படையிலும் காணமுடிகின்றது.

‘பத்ர்’ போரின் போது மூவருக்கு ஒரு ஒட்டகம் என்ற அடிப்படையில் பங்கு செய்யப் பட்டது. இதன்படி அபூலுபாபா, அலி, நபி(ஸல்) ஆகிய மூவருக்கும் ஒரு ஒட்டகம் கொடுக்கப்பட்டது.

‘ஒருவர் ஏறிவர, இருவர் நடந்து வர வேண்டும்’ என்று சுழற்சி முறையில் நபி(ஸல்) அவர்கள் நடந்துவர நேரிட்டபோது, இவ்விருவரும் ‘அல்லாஹ்வின் தூதரே நாம் நடந்தே வருகின்றோம். நீங்கள் ஒட்டகத்தில் ஏறி வாருங்கள்’ என்று கூறினர். அதற்கு நபி(ஸல்) அவர்கள், நீங்கள் இருவரும் என்னை விடப் பலமிக்கவர்களுமல்லர்; உங்களைவிட நன்மையைத் தேடிக்கொள்ளும் விடயத்தில் நான் தேவையற்றவனுமல்ல’ எனக் கூறினார்கள்’ (அஹ்மத்).

குளிரூட்டப்பட்ட அறைகளில் இருந்து கொண்டு கட்டளையிடும் தளபதியாக அவர் இருந்ததில்லை. தோழர்களுடன் தோழனாக அவர்களைப் போன்றே சிரமங்களைத் தாங்கிக்கொண்டு களத்திலிருந்த தலைவர் அவர்கள்.

இவ்வாறு, ‘பத்ர்’ களத்தில் நபி(ஸல்) அவர்களின் அழகிய முன்மாதிரிகளுக்கான பல்வேறு உதாரணங்களையும் காணலாம். எனவே, முஹம்மத்(ஸல்) அவர்களே எமது முன்மாதிரியாவார்கள். அவரின் முன்மாதிரியை முழு வாழ்விலும் எடுத்து அவரைப் பின்பற்றுவது எமது தலையாய கடமையாகும்.

இவ்வாறு நோக்கும்போது, பத்ர் யுத்தமும் அதில் முஸ்லிம்கள் பெற்ற வெற்றியும் எமக்குப் பல்வேறு படிப்பினைகளைத் தருகின்றன. இவ்வாறே, இஸ்லாமிய வரலாறு நெடுகிலும் படிப்பினைகள் நிறைந்தே உள்ளன. அவற்றையெல்லாம் சிந்தித்து, எமது நிகழ்காலத்தையும் எதிர் காலத்தையும் எழுச்சி மிக்கதாக மாற்றிக் கொள்ள முயல்வோமாக!

நன்றி: உண்மை உதயம் மாதஇதழ் 2007

பெரிதாகப் பார்க்க, படத்தின் மீது கிளிக் செய்யவும்

பத்ர் யுத்தம் (விளக்கப் படம்)

படம்: அஹ்லுஸ் ஸுன்னா சிற்றிதழ்

___________________________________________________________________
Published on: 3rd Sep, 2009
Republished on: 26th Jun, 2016

3 comments

  1. good article, may this be a reminder for our muslim society.

  2. I am looking for similar articles to post it in my website mentioned above.

  3. நிர்வாகி

    Source தளத்தின் சுட்டியினை கொடுத்து மீள்பதிவு செய்வதற்கு யாரிடமும் அனுமதி பெறவேண்டுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *