கிழக்கு பதிப்பகம் வெளியீடு, நாகூர் ரூமியின் ”இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம்” புத்தகத்தின் சில கருத்துக்கள் இஸ்லாத்திற்கு உடன்பாடில்லை என்றாலும், இஸ்லாத்தைப் பற்றிய அனைத்துத் தவறான பிரச்சாரத்திற்கும் நேர்த்தியான விளக்கங்களை வழங்கியிருக்கிறார்.
பெண்ணினக் கொடுமைக்குத் துணை போகிறது என மாற்றாரால் விமர்சிக்கப்படும் போலிப் பிரச்சாரத்திற்கு அழுத்தனமான விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது.
”இஸ்லாமும் பெண்களும்” என்ற தலைப்பின் கீழ்:
இஸ்லாத்துக்கு முன் பெண்களின் நிலை.
இஸ்லாமும் பலதார மணமும்.
நபி (ஸல்) அவர்களின் பலதார மணங்கள்.
விவாகரத்து, ஜீவனாம்சம், திருமணக் கொடை.
முஸ்லிம் பெண்களின் ஆடைகள் (ஹிஜாப்)
ஷாபான் வழக்கு விபரம், பெண்களும் கல்வியும்.
இப்படி பலக் கிளைத் தலைப்பாக, இஸ்லாத்தில் பெண்களின் நிலைப்பாடு என்ன? என்பது பற்றி மேலதிக விளக்கம் தேவையில்லாத அளவிற்கு ஆணித்தரமாக இஸ்லாத்தின் கருத்தோட்டத்தை நாகூர் ரூமி பதித்திருக்கிறார்.
”இஸ்லாமும் அடிமைத்தனமும்” என்று இஸ்லாத்திற்கும் – அடிமைகளுக்கும் உள்ள உறவை அருமையாக படம் பிடித்துக் காட்டி, இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் காலத்திற்கு முன்பே மனிதனுக்கு மனிதன் அடிமைத்தனம் வழக்கில் இருக்கிறது என்ற வரலாற்று ஆவணங்களை முன் வைத்திருக்கிறார்.
ஸைத் (ரலி) அவர்களுக்கும், ஸைனப் (ரலி) அவர்களுக்கும் நடந்த திருமணம் அன்றைய சமூக அமைப்பில் புரட்சிகரமானத் திருமணமகாவே கருதப்பட்டது. ஒரு அடிமைக்கும் உயர் குலப்பெண்ணுக்கும், நடந்த ”திருமணப் புரட்சி” யை குறிப்பிட்டு, இஸ்லாம் மனிதர்களிடையே வேற்றுமையை வகுக்கவில்லை என்பதையும் தெளிவுபடுத்தியிருக்கிறார்.
”இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம்” முழு புத்தகத்தையும் விமர்சிக்கும் நோக்கமில்லை. புத்தகத்திலிருந்து மாற்றாரால் விமர்சிக்கப்பட்டக் கருத்துக்களில் நேர்மையில்லை என்பதை இங்கே சொல்லிக்கொள்கிறேன்.
தவிர்க்க வேண்டியவை.
74:30ம் வசனத்திற்காக, புத்தகத்தில் சுமார் 24பக்கங்களுக்கு விளக்கமளித்திருப்பதைத் தவிர்த்திருக்கலாம். இஸ்லாத்தின் அடிப்படை ஆதாரம் குர்ஆன், சுன்னா மட்டுமே என்று சொல்லிவிட்டு, 74:30ம் வசனத்திற்கு குர்ஆன், சுன்னா அல்லாத ஆதாரங்களை நிரப்பி, நாகூர் ரூமி தனக்குத் தானே முரண்பட்டிருக்கிறார்.
அரபுமொழி புகழ்ச்சியையும் தவிர்த்திருக்கலாம்.
——————————-
சகோதரர் நாகூர் ரூமியின் ”கற்காலம்” கட்டுரையின் சுட்டியை அனுப்பி, இது பற்றிய “இஸ்லாத்தின் கருத்தென்ன? என்பதை முடிந்தால் விளக்குங்கள்” என்று நண்பரொருவர் கேட்டிருந்தார். கற்காலம் கட்டுரைப் பற்றிய கருத்துப்பறிமாற்றத்தில் சில விளக்கம் கேட்டு நாளை பதிவு செய்வேன். சகோதரர் நாகூர் ரூமி அவர்கள் கண்டிப்பாக கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன்
அபூ முஹை