மக்காவாழ் காஃபிர்களின் நம்பிக்கையும், நபி (ஸல்) அவர்களும்
இஸ்லாம் அல்லாஹ்வை மாத்திரம் வணங்குமாறு பணிக்கின்ற மார்க்கமாகும். அதற்காகவே மனித, மற்றும் ஜின் இனத்தினர் படைக்கப்பட்டுள்ளனர், உலகில் முதல் மனிதராக படைக்கப்பட்ட நபி ஆதம் (அலை) அவர்களின் காலம் முதல் கிட்டதட்ட பத்து நூற்றாண்டுகள் வரை மனிதர்கள் ஓரிறைக்கொள்கையிலேயே இருந்து வந்துள்ளனர் என இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள். (இப்னு கஸீர்).
இந்தக்காலமும் கடந்து, அக்கால மக்களும் மரணித்த பின்னால் அவர்களின் வழித்தோன்றல்களாக வந்த மனிதர்கள் அவர்களிலுள்ள ‘வத்து’ ‘சுவா’ ‘யகூஸ்’ ‘யஊக்’ ‘நஸ்ர்’ போன்ற நல்லடியார்களின் உருவங்களை தீட்டி தமது தேவைகளை நிறைவேற்றும் கடவுள்களாக எண்ணி வணங்கி, வழிபட எப்போது ஆரம்பித்தார்களோ அப்போதிருந்தே அதிலிருந்து அம்மக்களைத்தடுத்து நிறுத்துவதற்காக உலகில் முதல் தூதரான நூஹ் (அலை) அவர்கள் இப்பூமியில் அல்லாஹ்வால் அனுப்பிவைக்கப்பட்டார்கள்.
இவ்வாறு மனிதர்கள் ஒவ்வொரு காலத்திலும் தத்தமது கற்பனைகளில் உதிக்கின்றவற்றை தாமாக வணங்கி, வழிபட தலைப்பட்டுள்ளனர். ஒரு சிலர் வானவர்களையும், மற்றும் சிலர் நபிமார்களையும், நல்லடியார்களையும், வேறு சிலர் ஜின்களையும், இன்னும் சிலர் மாட்டையும் வணங்கி வந்தனர்.
மக்கா வாழ் காஃபிர்கள், அல்லாஹ்தான் இவ்வுலகைப் படைத்தவன், வானங்களில் இருந்து மழை பொழிவிப்பவன், அதிலிருந்து உணவளிப்பவன் என்று ஏற்றுக் கொண்டாலும் தமது வணக்க வழிபாடுகளில் அல்லாஹ்வுக்கு இணைகற்பித்த காரணத்தால் அல்லாஹ் அவர்களை காஃபிர்களே! எனக் கூறி அழைக்கின்றான்.
وَلَئِنْ سَأَلْتَهُمْ مَنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ لَيَقُولُنَّ اللَّهُ قُلِ الْحَمْدُ لِلَّهِ بَلْ أَكْثَرُهُمْ لَا يَعْلَمُونَ
வானங்களையும் பூமியையும் படைத்தவன் யார் என (முஹம்மதே) நீர் அவர்களிடம் கேட்டால் நிச்சயமாக அல்லாஹ்தான் என்பார்கள். (லுக்மான். வச: 25)
وَلَئِنْ سَأَلْتَهُمْ مَنْ خَلَقَهُمْ لَيَقُولُنَّ اللَّهُ فَأَنَّى يُؤْفَكُونَ
அவர்களைப் படைத்தவன் யார் என (நபியே!) நீர் அவர்களிடம் கேட்டால் நிச்சயமாக ‘அல்லாஹ்’ எனப் பதிலளிப்பார்கள். (அஸ்ஸுக்ருஃப். வச: 87)
இவர்களை நோக்கி அல்லாஹ்வை நீங்கள் நேரடியாக அழைத்தால் என்ன? அவனுக்கும் உங்களுக்கும் இடையில் தரகர்களை ஏன் ஏற்படுத்திக் கொள்கின்றீர்கள்? மரணித்த மனிதர்களுக்காக ஏன் நேர்ச்சை செய்கின்றீர்கள்? சிலைகளை மரம் மட்டைகளை ஏன் வணங்குகின்றீர்கள் ? அவற்றை ஏன் பூஜிக்கின்றீர்கள் ? நன்மை தீமைகளை அவைகளிடம் ஏன் ஆதரவு வைக்கின்றீர்கள்? எனக் கேட்டால் அவர்கள் என்ன பதில் கூறுவார்கள் என்பதை அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான்.
وَالَّذِينَ اتَّخَذُوا مِنْ دُونِهِ أَوْلِيَاءَ مَا نَعْبُدُهُمْ إِلَّا لِيُقَرِّبُونَا إِلَى اللَّهِ زُلْفَى
அவனை (அல்லாஹ்வை) அன்றி பாதுகாவலர்களை எடுத்துக்கோண்டோர், (இணைதெய்வங்களான) அவர்கள் எம்மை அல்லாஹ்வின் பக்கம் மிகவும் நெருக்கமாக்குவார்கள் என்பதற்காகவே தவிர நாம் அவர்களை வணங்கவில்லை (எனக் கூறுகின்றனர்) (அஸ்ஸுமர்: வச:3)
قَالُوا وَجَدْنَا آَبَاءَنَا لَهَا عَابِدِينَ
எமது முன்னோர்கள் அவைகளை வணங்கக் கண்டோம் (அல்அன்பியா. வச :53)
إِنَّا وَجَدْنَا آَبَاءَنَا عَلَى أُمَّةٍ وَإِنَّا عَلَى آَثَارِهِمْ مُقْتَدُونَ
‘எமது முன்னோர்களை ஒரு வழியில் நாங்கள் கண்டோம் நாங்கள் அவர்களின் அடிச்சுவடுகளை பின்பற்றுபவர்கள் என்றும், கூறுவர். (அல்ஸுக்ருஃப். வச: 23)
இதன் மூலம் ‘தவ்ஹீத் அல் உலூஹிய்யா’ வில் இவர்கள் இணை கற்பித்துள்ளதை அறியலாம். அது பற்றி இப்போது நோக்குவோம்.
இவை அனைத்தையும் விட்டுவிட்டு அல்லாஹ் ஒருவனை மாத்திரம் வணங்குமாறு சகல தூதர்களும் அவர்களின் சமுதாயத்தினரை ‘லாயிலாஹ இல்லல்லாஹ்’ என்ற வாசகத்தைக் கொண்டு இஸ்லாத்தின் பக்கம் அழைத்தது போல முஹம்மத் நபி (ஸல்) அவர்களும் அவர்களின் சமுதாயத்தவரை அழைத்தார்கள்.
‘உண்மையாக வணங்கி, வழிபட அல்லாஹ்வைத்தவிர வேறு யாரும் இல்லை’ என்ற அடிப்படையில் அமைந்த சத்தியப் பிரச்சாரத்தை இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் அவர்களிடம் கொண்டு சென்றபோது அவர்கள் அதை ஆச்சரியமாக நோக்கினார்கள், புதிய கொள்கையை நபி (ஸல்) அவர்கள் போதிப்பதாக மக்கள் மத்தியில் பொய்ப் பிரச்சாரமும் செய்தார்கள்.
أَجَعَلَ الْآلِهَةَ إِلَهاً وَاحِداً إِنَّ هَذَا لَشَيْءٌ عُجَابٌ ما سَمِعْنَا بِهَذَا فِي الْمِلَّةِ الْآخِرَةِ إِنْ هَذَا إِلَّا اخْتِلَاقٌ
இவர் ‘பல கடவுளர்களை ஒரு கடவுளாக்கிவிட்டாரா ? இது ஆச்சரியமான விஷயம்தான்! இது பற்றி நாம் நமது முன்னோர்களின் மார்க்கத்திலும் கேள்விப்பட்டதில்லையே! இது ஒரு புதிய கண்டுபிடிப்பே அன்றி வேறில்லை. (அத்தியாயம் 38: வசனங்கள்: 5-7 வது வசனங்கள்).
وَيَعْبُدُونَ مِنْ دُونِ اللَّهِ مَا لَا يَضُرُّهُمْ وَلَا يَنْفَعُهُمْ وَيَقُولُونَ هَؤُلَاءِ شُفَعَاؤُنَا عِنْدَ اللَّهِ قُلْ أَتُنَبِّئُونَ اللَّهَ بِمَا لَا يَعْلَمُ فِي السَّمَاوَاتِ وَلَا فِي الْأَرْضِ سُبْحَانَهُ وَتَعَالَى عَمَّا يُشْرِكُونَ
அவர்களுக்கு தீங்கிழைக்காததையும், (எவ்விதப்) பயன்தராததையும் அவர்கள் வணங்குகின்றனர். மேலும், இவர்கள் அல்லாஹ்விடம் நமது பரிந்துரையாளர்கள் என்றும் கூறிக் கொள்கின்றன்றனர். வானங்களிலோ, பூமியிலோ அல்லாஹ் அறியாதிருப்பதைப் பற்றி (அவனுக்கு) நீங்கள் அறிவிக்கின்றீர்களா? அவர்கள் இணைவைப்பதை விட்டும் அவன் தூயவன். (யூனுஸ்: வச: 18)
إِنَّ الَّذِينَ تَدْعُونَ مِن دُونِ اللّهِ عِبَادٌ أَمْثَالُكُمْ فَادْعُوهُمْ فَلْيَسْتَجِيبُواْ لَكُمْ إِن كُنتُمْ صَادِقِينَ
அல்லாஹ்வை விட்டுவிட்டு நீங்கள் அழைப்போர் உங்களைப் போன்ற அடியார்களே அன்றி வேறில்லை, எனவே அவர்களை நீங்கள் அழையுங்கள், நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்கள் உங்களுக்கு பதில் கூறட்டும். (அஃராப் 7. வச: 194)
وَالَّذِينَ تَدْعُونَ مِنْ دُونِهِ مَا يَمْلِكُونَ مِنْ قِطْمِيرٍ
إِنْ تَدْعُوهُمْ لَا يَسْمَعُوا دُعَاءَكُمْ وَلَوْ سَمِعُوا مَا اسْتَجَابُوا لَكُمْ وَيَوْمَ الْقِيَامَةِ يَكْفُرُونَ بِشِرْكِكُمْ وَلَا يُنَبِّئُكَ مِثْلُ خَبِيرٍ
அல்லாஹ்வை அன்றி, நீங்கள் அழைப்பவர்கள் (வித்தின்மீதிருக்கும்) தொலியைக் கூட சொந்தமாக்கிக் கொள்ளாதவர்கள். நீங்கள் அவர்களை அழைப்பீர்களாயின் அவர்கள் உங்கள் அழைப்பை செவியேற்மாட்டார்கள், (வாதத்திற்கு) அவ்வாறு அவர்கள் செவியேற்றாலும் உங்களுக்கு (எந்தவிதமான பதிலும்) தரமாட்டார்கள். மறுமையில் உங்களது இணைவைப்பை மறுத்துரைப்பார்கள். நன்கறிந்தவனை (அல்லாஹ்வைப்) போல உமக்கு (வேறு எவரும்) அறிவித்துத்தரமாட்டார்கள். (ஃபாதிர்: 13-14).
இவ்வாறு நூற்றுக்கணக்கான வசனங்கள் மரணித்தவர்களை நெருங்கி எதையும் கேட்காதே என்று சொல்வதுடன், அதைத்தடுப்பதற்காகவே நபிமார்கள் வந்தார்கள் எனக் குறிப்பிடுவதைப்பார்க்கலாம்.
இன்ஷா அல்லாஹ் தொடரும்..