Featured Posts

பல ஒற்றுமைகளில் சில வேற்றுமைகள் (அறிமுகம்)

[தொடர் 1 : பல ஒற்றுமைகளில் சில வேற்றுமைகள்]
وَاللَّهُ خَلَقَ كُلَّ دَابَّةٍ مِنْ مَاءٍ فَمِنْهُمْ مَنْ يَمْشِي عَلَى بَطْنِهِ وَمِنْهُمْ مَنْ يَمْشِي عَلَى رِجْلَيْنِ وَمِنْهُمْ مَنْ يَمْشِي عَلَى أَرْبَعٍ يَخْلُقُ اللَّهُ مَا يَشَاءُ إِنَّ اللَّهَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ
ஒவ்வொரு உயிரினத்தையும் அல்லாஹ் நீரினால் படைத்தான். அவற்றில் தங்கள் வயிற்றால் நடப்பவைகளும் உள்ளன. தங்கள் இரு கால்களினாலும் நடப்பவைகளும் உள்ளன. நான்கு கால்களினால் நடப்பவையும் உள்ளன. நாடியதை அல்லாஹ் படைப்பான். அல்லாஹ் ஒவ்வொன்றின் மீதும் ஆற்றல் உடையவன். (அல்குர்ஆன் 24 :45)

அல்லாஹ் இந்த உலகத்தில் உயிரினங்களை பல்வேறுவிதமாக விலங்குகளாகவும், தாவரங்களாகவும், பறவைகளாகவும், ஊர்வன மற்றும் நீர் வாழ் உயிரினங்ளாகவும் படைத்துள்ளான். இவை அனைத்தையும் ஒரு பொதுவான நியதியின் அடிப்படையில் படைத்திருப்பினும் கூட அவற்றில் சிலவற்றை முற்றிலும் வித்தியாசமான விதிவிலக்கான ஒன்றாக படைத்து இறைவன் தன் வல்லமையும் ஆற்றலையும் வெளிப்படுத்துகின்றான்.

பாலூட்டிகளுக்கு (MAMMAL) குட்டி போட்டு பால் கொடுக்கும் அமைப்பை வைத்து முட்டையிட்டு பால் கொடுக்கக்கூடிய ‘எகிட்னா'(ECHIDNA), ‘பிளாட்டிபஸ்’ (PLATYPUS) இவைகளை படைத்த இறைவன் மிகத்தூய்மையானவன். பறவையைப் போன்று பறக்கும் தன்மையை கொண்ட பாலூட்டி ‘வவ்வாலை’ (BAT) படைத்தான்.

தாவரங்களில் அயல் மகரந்தச் சேர்க்கையை (DIOECISM) வைத்த இறைவன் தன் மகரந்தச் சேர்க்கையையும் (MONOECISM) வைத்தான். பல்கிப் பெருக ஆண்-பெண் அமைப்பை வைத்த இறைவன் நகரக்கூடிய உயிர்களில் ஈரின உறுப்புக்களை ஒருங்கே அமையப் பெற்ற ஒருசெல் உயிர் ‘அமீபா’வையும் (AMOEBA) தாவர வகைகளில் ஒருசெல் பாசியான ‘கிளாமிடோ மோனஸையும்’ (CHLAMYDOMONAS) படைத்த இறைவன் அனைத்தின்மீதும் ஆற்றல் நிறைந்தவன்.

ஆறு மணி நேரத்தில் முட்டையிலிருந்து வெளி வந்து, பறக்கக்கூடிய சக்தியைப் பெற்று, இனப்பெருக்கத்தில் ஈடுபட்டு, முட்டையிட்டு இறப்பெய்தக்கூடிய ‘மேஃபிலையை’ (MAYFLY) படைத்தானே அவன் நாடியதைச் செய்யக்கூடியவன். எந்தக் குஞ்சும் தன் தாயைக் கண்டதில்லை. எந்த தாயும் தன் குஞ்சை காண இயலாத சொற்ப நேர வாழ்க்கை. இதுவும் இறைவனின் வியப்பூட்டும் சான்றுகள்தான்.

Turtle
அதே இறைவன்தான் 400 ஆண்டுகள் வரை வாழக்கூடிய ‘கடல் ஆமைகளையும்’ (TURTLE), தாவரத்தில் 5000 ஆண்டுகள் வரை வாழக்கூடிய ‘பிரிஸ்டிலேகோன்பைன்’ (BRISTLECONE PINE) மரத்தினையும் படைத்தான். கண் கொண்டு காண முடியாத சிறிய தாவர வகைகளைப் படைத்த இறைவன் 83 மீட்டர் வரை வானளாவி வளரக்கூடிய ‘ஜெய்ன்ட் சிகோயா’ (GIANT SEQUOIA) மரத்தினையும் நாட்டியுள்ளான்.

அடுத்து நீர் வாழ் உயிரினங்களை பார்ப்போம். மீன்களுக்கு நுரையீரல் அமைப்பு கிடையாது. தண்ணீரில் உள்ள ஆக்ஸிஜனை தங்கள் செவுள்களின் மூலம் சுவாசிக்கின்றன. இவைகளின் சுவாச அமைப்பு தண்ணீரில் உள்ளபோதுதான் ஆக்ஸிஜனை கிரகிக்க இயலும். கரையில் இவைகளினால் சுவாசிக்க இயலாது. உடனே இறந்துவிடும். அதே தண்ணீரில் வாழக்கூடிய திமிங்கிலத்திற்கு தண்ணீரில் உள்ள ஆக்ஸிஜனை கிரகிக்கும் அமைப்பு கிடையாது. இவை நுரையீரல் அமைப்புக் கொண்டுள்ளதால் நீர் பரப்பிற்கு மேல் வந்துதான் ஆக்ஸிஜனை சுவாசிக்க இயலும். இதுவும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் உள்ளதாகும்.

மிகவீரியமிக்க விஷத்தன்மை வாய்ந்தது ‘ராஜநாக’த்தினுடைய (KING COBRA) விஷமாகும். இவைகள் ஒரு முறை பிரயோகம் செய்யும் விஷம் மிகப்பெரிய யானையையே சில மணித்துளிகளில் மரணிக்கச் செய்யப் போதுமானதாகும். இவ்வளவு வீரியமிக்க இவற்றின் விஷம் மிகச்சிறிய ‘கீரிப்பிள்ளை’யை (MONGOOSE) கொல்லச் சக்தியில்லை என்றுச் சொன்னால் இந்தத்தன்மையில் சிந்திக்கக்கூடிய அம்சங்கள் ஏராளம். இதுவும் ஒரு அதிசயமிக்க விதிவிலக்கான அம்சம்தான்.

பறவைகளைப் பொறுத்த வரை வானில் பறந்து செல்லக்கூடிய ஆற்றலை பெற்றுள்ளன. அவை பறக்கும் தன்மையை பெற்றிருப்பதனால் தான் பறவைகள் என்று அழைக்கின்றோம். மிகமிகச் சிறிய ‘மொனார்க்’ வண்ணத்துப் பூச்சி (MONARCH) கனடாவிலிருந்து மிக நீண்டதொரு பயணத்தை மேற்கொண்டு அமெரிக்காவின் டெக்ஸாஸ், ‘ப்ளோரிடா’, ‘கலிபோர்னியா’ ஆகிய பகுதிகளுக்கு கிட்டதட்ட 2900 கிலோ மீட்டர்களைக் கடந்து தங்கள் கோடை வாசஸ்தலங்களுக்கு வருகை புரிகின்றன. இறைவன் தான் நாடியவைகளுக்கு ஆற்றலை அதிகப்படுத்துபவன். 2.4 மீட்டர் (மனிதர்களை விட உயரம்) உயரமும் 150 கிலோ எடையும் கொண்ட ‘ஆஸ்ட்ரிச்’ (OSTRICHES) பறக்கும் தன்மையில்லாத பறவையாகும். ஆனால், இவை மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடக்கூடியவை.

இது போன்று அல்லாஹ்வின் அத்தாட்சிகளை அடுக்கிக்கொண்டே போகலாம். இருப்பினும் சுருக்கத்தை கருத்தில் கொண்டு விதிவிலக்காக படைக்கப்பட்டுள்ள அத்தகைய உயிரினங்களைப்பற்றியும் அவற்றின் அமைப்புகள் மற்றும் செயல்பாடுகளைப் பற்றியும் எந்த அம்சங்களில் மற்றவற்றுடன் வேறுபட்டுள்ளன என்பதைப் பற்றியும் தொடராக இப்பகுதியில் காண்போம்.

இந்த வரிசையிலே முதலாவதாக பாலூட்டி இனத்திலுள்ள விதிவிலக்கில் அடங்கக்கூடிய ‘எகிட்னா’ (ECHIDNA) என்று அழைக்கப்படும் எறும்புத்தின்னியைப் பற்றி இன்ஷா அல்லாஹ் அடுத்த தொடரில் பார்ப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *