மனதால் கொள்கையில் மாறுபட்டவர்கள் மண வாழ்க்கையில் இணைந்தால்..?
அனைத்திற்கும் ஒரே, ஒரு இறைவன் மட்டுமே இருக்கிறான் என்பதே இஸ்லாம் மார்க்கத்தின் இறைக் கொள்கை. இந்தக் கொள்கையால் மற்ற மதங்களிலிருந்து இஸ்லாம் வேறுபடுகிறது. மட்டுமல்ல, சட்ட திட்டங்கள், வணக்க வழிபாடுகள், கொள்கைகள் என எல்லா விஷயங்களிலும், பிற மதங்களிலிருந்து இஸ்லாம் தனிவழி கொண்டிருக்கிறது.
இல்லறத் துணை என்பது மனித வாழ்வில் மிக முக்கியத் தேவை. இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட ஆண், பெண் முஸ்லிம்களுக்கு, தமது வாழ்க்கை துணையை தேர்ந்தெடுத்துக் கொள்வதில் வரம்புகளை விதிக்கிறது இஸ்லாம். அது பற்றய திருக்குர்ஆனின் வசனங்கள்…
2:221.(அல்லாஹ்வுக்கு) இணைவைக்கும் பெண்களை – அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை – நீங்கள் திருமணம் செய்து கொள்ளாதீர்கள். இணை வைக்கும் ஒரு பெண், உங்களைக் கவரக்கூடியவளாக இருந்தபோதிலும், அவளைவிட முஃமினான ஓர் அடிமைப் பெண் நிச்சயமாக மேலானவள். ஆவாள், அவ்வாறே இணைவைக்கும் ஆண்களுக்கு – அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை (முஃமினான பெண்களுடன்) நீங்கள் திருமணம் செய்து வைக்காதீர்கள். இணை வைக்கும் ஆண் உங்களுக்குக் கவர்ச்சியூட்டுபவனாக இருந்த போதிலும், ஒரு முஃமினான அடிமை அவனைவிட மேலானவன். (நிராகரிப்போராகிய) இவர்கள், உங்களை நரக நெருப்பின் பக்கம் அழைக்கிறார்கள். ஆனால் அல்லாஹ்வோ தன் கிருபையால் சுவர்க்கத்தின் பக்கமும், மன்னிப்பின் பக்கமும் அழைக்கிறான். மனிதர்கள் படிப்பினை பெருவதற்காக தன் வசனங்களை அவன் தெளிவாக விளக்குகிறான்.
இதே கருத்து 60:10 வசனத்திலும் சொல்லப்படுகிறது.
முஸ்லிமான ஆண்கள், பெண்கள், இஸ்லாமல்லாத பிறமதத்தைச் சேர்ந்தவர்களுடன் திருமணம் சம்பந்தம் வைத்துக் கொள்வதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை. மாறாக தடை விதிக்கிறது. இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட முஸ்லிம்கள் தமது சமுதாயத்திலேயே வாழ்க்கைத் துணையை தேர்வு செய்து கொள்ள வலியுறுத்துகிறது. இது, இஸ்லாம் மனிதர்களிடையே உயர்வு தாழ்வைக் கற்பிக்கிறது என்று சிலருக்குத் தோன்றினாலும் சற்று நடுநிலையோடு சிந்தித்தால் மனிதர்களின் நன்மைக்காகவே பிற மதத்தில் மணம் செய்வதைத் தடை செய்கிறது என்பதை விளங்கலாம்.
வாழ்க்கைத் துணையாக இணைய ஒரு ஆண், பெண் இருந்தால் போதும். – இருவரும் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்களாகவோ, அல்லது ஒருவர் மதம் சார்ந்தவராகவும் இன்னொருவர் மதம் சாராதவராகவும் இருந்தாலும் இருவரும் மனமொப்ப மணம் செய்து கொண்டால், – இல்லறம் நடத்த என்ன தடை இருக்கிறது? இந்தக் கேள்வி நியாயமாகப்பட்டாலும். இதிலுள்ள போலித் தனத்தை இஸ்லாம் ஏற்றுக் கொள்ளவில்லை.
கொள்கையால் இருவேறு துருவங்கொண்ட ஆண், பெண் இல்வாழ்க்கையில் இணைந்து கொள்ள சம்மதித்துத் திருமணம் செய்து கொள்கிறார்கள் என்றால், தான் கொண்ட கொள்கையில் அவர்கள் உறுதியாக இல்லை! இன்னும் சொல்வதென்றால் இருவரிடமும் கொள்கை என்பதே இருந்திருக்கவில்லை! கொள்கையுடன் இருந்திருந்தால் மாறுபட்ட கொள்கையுடைய நாம் எப்படி வாழ்க்கையில் ஒன்றுபட முடியும் என்பதை சிந்தித்திருப்பார்கள்.
ஆண், பெண் இருவரில் ஒருவர் கடவுள் நம்பிக்கை கொண்டவர், மற்றவர் கடவுள் நம்பிக்கை இல்லாதவர். இந்த இருவரும் வாழ்க்கையில் இணைந்தால் ஒருவர் நம்பிக்கையை மற்றவர் ஆதாரிக்கிறார். அதாவது, கடவுள் உண்டு என்பதும் சரிதான், கடவுள் இல்லை என்பதும் சரிதான் என்ற இந்த ரெண்டுங்கெட்டான் தன்மை எதிர்காலத்தில் ஏதாவது ஒருபக்கம் சாய்ந்துவிட வைத்துவிடும்.
மண வாழ்வில் அடியெடுத்து வைப்பது எல்லா வகையிலும் சந்தோஷங்களை பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கு. வாழ்க்கையில் இணையும் மணமக்கள் இருவரும் ஒரே மதத்தைச் சார்ந்தவர்களாக, அல்லது இருவரும் மதத்தைச் சேராதவர்களாக இருந்தால் மதக் கொள்கையில் எதுவும் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பில்லை.
மாறாக இரு வேறுபட்ட கொள்கைகளைக் கொண்டவர்கள் வாழ்க்கையில் இணைந்தால், குழந்தைக்கு என்ன பெயர் வைப்பது..? எப்படி வளர்ப்பது? எந்த மத அடிப்படையில் சொத்துக்களைப் பிரிப்பது என்பது போன்ற பலப் பிரச்சனைகளை சந்திப்பது மட்டுமல்லாமல் நிம்மதியான வாழ்க்கையும் சீர் குலைந்துவிடும்.
அந்தந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் தமது மதத்திலேயே வாழ்க்கைத் துணையை அமைத்துக் கொள்வதுதான் எல்லா வகையிலும் சரியாக இருக்கும். ஒரு கடவுட்க் கொள்கையுடையவர் பல கடவுட்க் கொள்கையுடையவருடனும், அல்லது கடவுளே இல்லை என்ற கொள்கையுடையவருடனும் நீண்ட நாள் ஒத்துப் போக இயலாது. (இது உறுதியான கொள்கையிருப்பவர்களுக்குப் பொருந்தும்.)
ஏக இறைவனுக்கு இணைவைக்கும் ஆண், பெண் என்னதான் கவர்ச்சியூட்டக்கூடியவர்களாக இருந்தாலும், அதைவிட ஏக இறைவனை மட்டும் நம்பிக்கை கொண்ட அடிமையே மேலானவர் என்று திருக்குர்ஆன் சொல்கிறது. இங்கு கொள்கையளவிலுள்ள வித்தியாசங்களே சுட்டிக் காட்டப்படுகின்றன. ஜாதிகள் அடிப்படையில் மனிதர்களிடம் வேற்றுமையைக் குறிப்பிட்டுச் சொல்லவில்லை.
மேலும் ”அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை” என்று இறைவன் கூறுகிறான். ஏக இறைவனை நம்பிக்கை கொண்டு இஸ்லாத்தில் நுழைந்து விட்டால் அந்தக் கணமே திருமணம் முடித்து கொள்ளத் தடையில்லை என்றும் 2:221வது இறைவசனம் கூறுவதால், உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற ஜாதியின் அடிப்படையேக் காரணம் என்ற தவறானக் கருத்தையும் தகர்த்து விடுகிறது இஸ்லாம்.
”இவர்கள், உங்களை நரக நெருப்பின் பக்கம் அழைக்கிறார்கள்.”
இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றுக் கொண்டபின், இஸ்லாத்தில் இருந்து கொண்டே, இறைவனுக்கு இணைவைக்கும் மதத்தில் திருமணம் செய்யக் கூடாது என்ற இறைக் கட்டளையை மீறி, ஒரு முஸ்லிமான ஆண் – பெண் இணைவைப்பவரைத் திருமணம் செய்து கொண்டால், இந்த இறைக் கட்டளையைப் புறக்கணித்த அவருக்கு மாற்று மதக் குடும்பத்தோடு திருமண உறவு ஏற்பட்ட பின், அக்குடும்பத்தாரைத் திருப்திபடுத்துவதற்காக வேறு சில விஷயங்களிலும் இறைவனின் வரம்புகளை மீறுவது சாதாரணமாகிவிடும்.
அது அப்படியே பரிணாமமடைந்து இறைவனுக்கு இணைவைப்பதும் அந்த முஸ்லிமிற்கு மிகச் சாதாரணமாகி, அச்செயல்பாடுகள் அவரை நரகத்தில் சேர்த்துவிடும். ‘இவர்கள், உங்களை நரக நெருப்பின் பக்கம் அழைக்கிறார்கள்.” என்றால், நரகத்தைப் பற்றிய நம்பிக்கை இல்லாதவரின் திருமண அழைப்பை – நரகம் உண்டென்று கண்டிப்பாக நம்பும் ஒரு முஸ்லிம் – ஏற்று மணமுடித்துக் கொண்டால் அதனால் ஏற்படும் பின் விளைவுகள், மறுமையைவிட இவ்வுலக வாழ்க்கைக்கு முக்கியத்துவம் வழங்கும் நிலையேற்பட்டு, ஏக இறைவனுக்கு இணைவைக்கும் நிலையையுமடைந்து நரகத்துக்குச் செல்ல நேரிடும். அதுவே இங்கு ”நரக நெருப்பின் பக்கம் அழைக்கிறார்கள்” என்று இலக்கியத்தோடு சொல்லப்படுகிறது.
எனவே முஸ்லிம்கள் தங்கள் குடும்பத்தில் எவரேனும் மாற்று மதத்தவருடன் திருமண உறவுக்குத் தயாரானால், அச்செயல் நரகத்தில் சேர்த்துவிடும் என்பதால், அவரை நரகத்திலிருந்து காப்பாற்ற வேண்டிய பொறுப்புணர்வை அக்குடும்பத்தின் மீது சுமத்தியிருக்கிறது என்பதை கீழ்காணும் வசனத்திலிருந்து விளங்கலாம்.
முஃமின்களே! உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் (நரக) நெருப்பிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள். (திருக்குர்ஆன், 66:6)
அன்புடன்,
அபூ முஹை
அற்புதமான தொகுப்பு.. எல்லாம் வல்லோன் உமக்கு மேலும் ஆற்றலை அள்ளி வழங்கட்டும்!!